2021

2021

ஆப்கானிஸ்தான் பாடசாலைகளில் பெண்கள் உயர்தரம் கற்க தடை – தலிபான்கள் அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உயர்தரங்களில் கல்வி கற்பதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு அந்த நாட்டின் பாடசாலை மாணவிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தங்களது கல்வியை தொடர முடியாமல் போனமையானது மரண தண்டனையைப் போல் உணர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் வெளியேறியதை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இதனையடுத்து அங்கு ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கு மாத்திரம் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

விரைவில் உயர்தர மாணவிகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என தலிபான்கள் உறுதியளித்த போதிலும், காபூல், நங்ஹகார் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள உயர்தர வகுப்புகள் அடங்கிய மகளிர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு மற்றும் வறுமை காரணமாக பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தயங்குவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியனின் ஆயுதங்கள் !

மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார்.
1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:-
தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார்’ என்றார்.
நெப்போலியனின் இந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது. பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது.
ஆனால் ஜெனரல் மனைவி தனது கடனை அடைப்பதற்காக வாளை விற்றுள்ளார் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு – அனுமதியளித்துள்ள அரசாங்கம் !

சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அந்த இயந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதுதான்.

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம் || Death  Pod to commit suicide without pain in Switzerlandசுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த எந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த எந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம். அடுத்தாண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தென்னாபிரிக்க அரசியல்தலைவர் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார் !

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.

இந்திய வம்சாவழியினரான இவர், நேற்று தனது 85ஆவது வயதில் காலமானார். சர்வதேச உறவுகளுக்கான பிரதி அமைச் சராக இருந்த இவர் சர்வதேச ரீதியாக தமி ழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற பல பேச்சுகளிலும் பங்கேற்றிருந்தவர்.

இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்பட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி  அமைச்சர் காலமானார்! - தமிழ்வின்

1990களில் இலங்கை வந்த அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998ஆம் ஆண்டு தென்னாபிரிக்க பாராளுமன்றக் குழுவுடன் இலங்கை வந்த அவர் யாழப்பாணத்துக்கும் விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உறுப்பினரான இப்ராஹிம் நிறவெறி அரசாங்கத்துக்கு எதிராகப் போராடியவராவார். இதற்காக அவர் ராபன் தீவுச் சிறையில் 15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தார். 1994இல் நிறவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வார வேலை நாட்கள் வெறும் 4½ நாட்கள் மட்டுமே – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு !

அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களை உள்ளிட்டக்கிய முடியாச்சி பாராக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கி வருகிறது. இதன் தலைநகரமாக அபுதாபி இருந்து வருகிறது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அதன்படியே ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.

அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருக்கிறது. அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல தனியார் நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் இதையே பின்பற்றுகின்றன.

இந்த நிலையில் தற்போது இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் 6-ல் இருந்து 4½ நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மேற்கத்திய நாடுகளை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்கள் ஆகும். அதிலும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாக கருதப்படுவதால் அன்று ½ நாள் மட்டுமே வேலை நாள் ஆகும்.

இந்த புதிய நடைமுறை குறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1-ந்தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது. அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும், வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட 2½ நாட்கள் விடுமுறையாகும்.

வேலை-வாழ்க்கை சமநிலையை அதிகரிப்பதற்கும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

உலகளவில் வேலை நாட்கள் 5 ஆக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாட்களை வேலை நாட்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை.” – இம்ரான் கான்

இஸ்லாமின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

சியல்கொட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடிப்படைவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற  பாகிஸ்தானியருக்கு கிடைத்த கௌரவம் (வீடியோ) - ஐபிசி தமிழ்

பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகள் சுற்றிவளைத்திருந்த போது அவரை பாதுகாப்பதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து போராடியிருந்த மாலிக் அத்னன் என்பவரின் செயலை பாராட்டி சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான்,

2014 ஆம் ஆண்டு பெசாவரில் பாடசாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முழு நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று பட்டதைப் போல, சியல்கொட் சம்பவத்தை அடுத்து முழு பாகிஸ்தானும் இனி இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறக்கூடாது என்பதில் ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த கொடூரம் இடம்பெற்ற போது தமது உயிரைப் பற்றி கவலைபடாமல், மாலிக் அத்னன் பிரியந்த குமாரவை பாதுகாக்க முயற்சித்தமை சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக அவருக்கு “தம்ஹா ஐ சுஜாத்“ என்ற அதி உயர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உணவில் போதை மருந்து கொடுத்து 17 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை முகாமையாளர்கள் !

இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் 17 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலைகளின் முகாமையாளர்கள் இருவரை கைதுசெய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 18 ஆம் திகதியன்று இரவு, செயன்முறை பரீட்சையென கூறி மேற்படி 17 மாணவிகளை, சந்தேகநபர்களான பாடசாலை முகாமையாளர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, அந்த மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்துகொடுத்து, மயக்கமடையசெய்த சந்தேக நபர்கள், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்திற்கு மறுநாள் குறித்த மாணவிகள் பாடசாலைக்குச் செல்ல மறுத்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது, இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையை அடுத்து சந்தேக நபர்களான பாடசாலை முகாமையாளர்கள் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தலிபான்களால் கொலை செய்யப்படும் முன்னாள் அரசபடை வீரர்கள் – அமெரிக்கா கண்டனம் !

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியின்போது பாதுகாப்புப் படைகளில் பணியாற்றியவர்கள் ரகசியமாக படுகொலை செய்யப்படுவது மற்றும் அவர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது குறித்து மனித உரிமைக் கண்காணிப்பு (ஹெச்.ஆர்.டபிள்யூ) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

இத்தகைய நடவடிக்கைள் மோசமான மனித உரிமை மீறலாகும். மேலும், முன்னாள் அரசுப் படையினருக்கு ஏற்கெனவே தலிபான்கள் அளித்துள்ள பொதுமன்னிப்புக்கு விரோதமானதாகும்.

எனவே, தலிபான்களின் அனைத்து நிலைகளையும் சேர்ந்தவர்கள் பொதுமன்னிப்பு அறிவிப்பு முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

முன்னாள் படையினரின் படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் குறித்து வெளிப்படையான, முறையான, பொறுப்புணர்வுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இத்தகைய உறுதியான நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பிரிவினருக்கும் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், பொதுமன்னிப்புக்கு எதிராக முன்னாள் அரசப் படையினர் கொல்லப்படுவதும் காணாமல் போவதும் தடுக்கப்படும். ஆப்கனைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்துதான் அவர்களை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கூறியிருந்தோம். அந்த நிலைப்பாடு இன்னும் தொடர்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், கனடா, நியூஸிலாந்து, ரோமேனியா, உக்ரைன் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

சகோதரியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட தாயும் மகனும் கைது !

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயதான சகோதரியை அவரது இளைய சகோதரன் (17) தலை துண்டித்துக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் துண்டிக்கப்பட்ட தலையுடன் சிறுவனும் அவரது தாயும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  கைப்பேசியிலிருந்து குறித்த புகைப்படம் நீக்கப்பட்டு, பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்களான சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்தச் சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றினை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த செயலைச் செய்துள்ளதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் கடந்த ஜூன் மாதம் 20 வயதான இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும், வீட்டை விட்டு வௌியேறி காதல் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களைக் கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர்.

திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் அவர்கள் இருவரும் சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளதுடன், அதன்போது குறித்த பெண்ணின் பின்புறமாகச் சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் தாயும் மகனுமாகச் சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

மேலும் அந்தச் சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன், அவர் அவ்விடத்தை விட்டு வௌியேறி உயிர் தப்பித்துக் கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொலை செய்யப்படும் போது குறித்த பெண் கர்ப்பம் தரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் !

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் திகதி அந்நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியன்மார் நீதிமன்றம், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.