2021

2021

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது – அமெரிக்காவில் 03 கோடி !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.08 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 350-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.45 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு !

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

இணையம் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” – நாடாளுமன்றில் பேராசிரியர் ஹரினி அமரசூரிய

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என தேசிய மக்கள் சக்தியின் (மக்கள் விடுதலை முன்னணி) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டு, பெற்றுக்கொண்ட கடனை செலுத்தமுடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

மேலும் நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2,8மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24இலட்சத்தி 38ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200பெண்கள் வரை நுண்கடன் திட்டத்தில் சிக்கிக் கொண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் மிகவும் மோசமான முறையில் பெண்களை இலக்குவைத்து இந்த கடன் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இலாபத்தைவிடவும் பாரிய சூரையாடலையே மேற்கொள்கின்றன.

அதனால் நுண்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றின் சட்ட முறைகள் தொடர்பாக கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்ற செயற்குழுவில் ஆராய்ந்து முறையான செயற்திட்டங்களை ஏற்படுத்தவேண்டும்.

அதேபோன்று நுண்கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு கடன் நிவாரணங்களை வழங்குவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டபோதும் அந்த நிவாரணங்கள் இதுவரை அந்த பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு! 

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு!

சமூகப் போராளி வயிதீஸ்வரன் சிவஜோதியின் நினைவு நிகழ்வு இன்று [ஞாயிறு மார்ச் 7ம் திகதி] இடம்பெற்றது.

கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மக்கள் சிந்தனைக் கழகமும் லிற்றில் எய்ட் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமரர் சிவஜோதி மக்கள் சிந்தனைக் கழகத்தின் உருவாக்கத்தில் சிவஜோதி முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவஜோதி 2017 முதல் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகப் பணியாற்றி அதன் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். இன்று எல்லோர் மனங்களிலும் சமூகப்போராளியாக ஒரு முன்ணுதாரணமாக வாழ்கின்றார்.

இந்நிகழ்வில் ‘சிவஜோதி எனும் ஆளுமை…’ என்ற தலைப்பிலான சிவஜோதியின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டத்தை பற்றிய நினைவுகளைத் தாங்கிய நூல்  வெளியிடப்பட்டது. இந்த நினைவு நூலினை சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது

இந்நூலுக்கான பதிப்பு அனுசரணையை யா. விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பொறுப்பேற்றிருந்ததுடன் இந்நூலை லிற்றில் எய்ட் நிறுவனம் சார்பாக சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்கள் வெெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சமூகசெயற்பாட்டாளர்கள், பாடசாலை அதிபர்கள், கலை-இலக்கிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் லிட்டில் எய்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள், அமரர் சிவஜோதியின் பாடசாலை நண்பர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

சிவஜோதி எனும் ஆளுமை… நூலின் இணைப்பு:

ஆளுமை பற்றி…

‘சிவஜோதி எனும் ஆளுமை…’ ஒரு ஆளுமையாக எண்ணப்படுவதற்கு முதற்காரணம் அவ்வாளுமை தான் சார்ந்த சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கமே. இன்றைய காலகட்டத்தில் உலகத் தலைவர்களே கோமாளிகளாக, பொறுப்பற்றவர்களாக, வினைத்திறனற்றவர்களாக, ஏன், மோசடியாளர்களாகவும், பாதகம் செய்பவர்களாகவும் இருப்பதால் ஆளுமைகளை வரலாற்றில் தான் தேட வேண்டியுள்ளது. கீழைத்தேச நாகரிகத்தின் – இந்தியாவின் மோடியில் இருந்து, மேலைத்தேச நாகரீகத்தின் – அமெரிக்காவின் ட்ரம் வரை, இவர்களிடம் இருந்து எதைத்தான் நாளைய தலைவர்கள் கற்றுக் கொள்வது? இம்மண்ணில் பிறக்காத உயிரின் (pசழ டகைந) உரிமைக்காகப் போராடும் அமெரிக்கர்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் கொல்லப்படும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு கூடத் தயாரில்லை. பொறுப்பற்ற இந்த பொதுப்புத்தி மனிதர்களை நாம் ஆளுமைகளாகக் கொள்ள முடியாது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் பட்டினியில் வாடுகிறார்கள். பள்ளிச் சிறுமிகள் மாதவிடாய் அங்கிகளை வாங்குவதற்கு வசதியில்லாததால் பாடசாலைக்குச் செல்வதில்லை. ஆனால் பிரித்தானிய அரசு ஆயதத் தளபாடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது.

இன்று வல்லரசுகள் வைத்துள்ள அதிநவீன ஆயுதங்களால் ஒரு கொரோனா வைரஸைக் கூட சுட்டு வீழ்த்திவிட முடியாது. ஆனால் இந்த நவீன அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் பாதுகாக்கவும் இந்த வல்லரசுகள் பல பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மருத்துவர்களையும் தாதிகளையும் உருவாக்குவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கும் கூட இந்த உலகத் தலைவர்கள் தயாரில்லை.

இந்தக் கொரோனா தாக்கத்தினால் 270 மில்லியன் மக்களின் ஒரு நேர உணவே கேள்விக்குறியாகி இருக்க, 2200 பில்லியனெர்கள் 2020 ஏப்ரல் முதல் 2020 ஜூலை வரையான நான்கு மாதங்களில் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். இந்த சம்பாத்தியத்தில் வெறும் 20 பில்லியன் டொலர்களை வழங்கினால் அந்த 270 மில்லியன் மக்களின் வறுமையைப் போக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
அரசுகளும் அரசுத் தலைவர்களும் செய்ய முடியாத, செய்ய விரும்பாத விடயங்களை தனிநபர்கள் தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். சமூகம் என்ற கட்டமைப்பு ஒன்றில்லை, அவரவர் தங்கள் தங்கள் நன்மைகருதிச் செயற்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் தன்னலம்சார்ந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு; தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. சமூகம் என்பதன் அவசியம் இன்று உலகெங்கும் உணரப்படுகின்றது. இந்த சமூகத்தில் சராசரி மனிதர்கள் ஆற்றுகின்ற பங்கின் முக்கியத்துவம் உணர வைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில், கல்லூரியில், பல்கலையில் உயர்புள்ளி பெற்றவர்கள் எல்லாம் சமூகத்தைவிட்டு ஒதுங்க, சராசரியானவர்களே சமூகத்தின் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். அவ்வாறு சுமந்ததனாலும் அந்த சமூகத்திற்கு வழிகாட்டியதனாலுமே நாங்கள் இத்தன்னலமற்ற மனிதர்களை ஆளுமைகளாக கணிக்கின்றோம். அவ்வாறான ஆளுமைகளே மக்களோடு மக்களாக நின்று அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கின்றனர். அவ்வாறான ஒரு ஆளுமையே இந்த ‘சிவஜோதி எனும் ஆளுமை…’

சிவஜோதி தனது 49 ஆண்டுகால குறுகிய வாழ்க்கைக் காலத்தில் தனது பன்முக ஆளுமையை பல கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார். கலை, இலக்கியம், நாடகம், கல்வி, சமூக செயற்பாடுகள் என சிவஜோதி பதித்த தடங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தடங்களைப் பதிப்பதற்கு சாதி, மத, இன எல்லைகள் எதுவும் தடையாக இருக்கவில்லை. இந்த எல்லைகளைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் சிவஜோதி பயணித்தது குறிப்பிடத்தக்கது.

பொலார்ட் அதிரடி – தோல்வியுடன் தொடரை ஆரம்பித்தது இலங்கை! 

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 இலக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில்  நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிசங்க 39 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கோய் 2 இலக்குகளையும் கெவீன் சின்க்ளாயார், எட்வட்ஸ், ஹோல்டர், பிராவோ மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.1 ஓவர்கள் நிறைவில் இலக்குகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 4 இலக்குகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் 38 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குறிப்பாக இப்போட்டியில் இலங்கையின் அணியின் அகில தனஞ்சய, ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

அத்துடன், இப்போட்டியில் கிய்ரன் பொலார்ட், இலங்கையின் அணியின் அகில தனஞ்சயவின் ஓவருக்கு ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ரி-20 கிரிக்கெட்டில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பொலார்ட் பதிவுசெய்தார். முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் இந்த சாதனையை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிய்ரன் பொலார்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

“எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு நான் சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கின்றேன்” – ஆரம்பமானது உண்ணாவிரத போராட்டம்!

பிரித்தானிய அரசிற்கும் ஐ.நா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை பிரித்தானியாவின் இலண்டனில் ஆரம்பித்துள்ளார் அம்பிகை செல்வகுமார் எனும் பெண்.

தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார்.

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்

நான் திருமதி அம்பிகை செல்வகுமார் தற்போது பிரித்தானியாவில் லண்டனில் வசித்து வருகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு விடுதலை , நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது குடும்பம் நீண்டகாலமாகவே சனநாயக களத்திலே எம்மால் முடிந்த பணிகளை நெஞ்சுக்கு நீதியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது.

அந்தவகையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி சிறீலங்காவின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை சிறீலங்கா பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் நான் வாழும் பிரித்தானியா நாட்டின் தலைமையில் சிறீலங்கா குறித்து இணைத்தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும்,  எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள்இ மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

எனவே எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு நான் சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நாளை 27 மாசி மாதம் 2021 ஆண்டு மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளேன்.

எனது இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் பயணத்திற்கு தாயகத்திலும்இ தமிழகத்திலும்இ புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழும் நான் உயிருக்கு நிகராக நேசிக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை ஏற்று நீங்கள் அனைவரும் அனைத்துலக சமுகத்தை நோக்கி தீவிரமாக குரல் கொடுத்து இந்தப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நிச்சயம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என்ற வேண்டுகையை உரிமையோடு உங்கள் குடும்பத்தில் ஒரு மகளாகஇ சகோதரியாக அனைவரிடத்திலும் சிரம் தாழ்த்தி வேண்டிக்கொண்டு எனது பயணத்தை தொடங்குகின்றேன். நான் பெரிது நீ பெரிது என்றில்லாது நாடு பெரிது எம் இனவிடுதலை பெரிது என்பதை மனதில் நிறுத்தி நம் நாட்டிற்கானஇ மக்களுக்கான விடுதலை நோக்கி எம் மனச்சாட்சிக்கும் பொதுநீதிக்கும் கட்டுப்பட்டு சனநாயக வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

“இலங்கை இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாகப் பேணுகின்றது” – ஜெனீவா அமர்வில் சீனா !

“சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும்” என சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் உரையாற்றுகையிலேயே ஜெனிவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிடப் பிரிதிநி ஷெங் ஹு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “இலங்கை அரசியல் ஸ்தீரத்தன்மை, இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாகப் பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புகின்றது.

மேலும், இலங்கையானது, தேசிய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான சாதனைகளை விரும்புகிறது. இதனை வாழ்த்துகின்றோம்.

அத்துடன், மனித உரிமைகளைத் தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற விடயங்களில் இலங்கையின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுகின்றோம்.

மனித உரிமைகள் மீதான அரசிய ல்மயமாக்கல் மற்றும் இரட்டை நிலைப்பாடு போன்றவற்றை சீனா எதிர்ப்பதோடு, ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இலங்கை குறித்த அமர்வில் சமர்பிக்கப்பட்டுள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை குறித்து கவலையடைகின்றோம். அத்துடன், இலங்கை வழங்கிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் உள்வாங்கப்படாமையிட்டு வருந்துகின்றோம்.

தலையீடு தடுப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச இலக்கிற்கான தடைகள் என்பவை இலங்கையின் உள்ளக விவகாரங்கள் மீதான தலையீட்டைத் தெளிவாகக் குறிப்பிடுவதுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையை மீறுவதுமாகவே உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் என்பன இலங்கை விடயத்தில் பக்கச்சார்பற்ற தன்மையையும் அரசியல் மயமாக்கப்படாத நிலைமையையும் உறுதியாகப் பின்பற்றும் என்று நம்புகின்றோம்.

அனைத்து நாடுகளினதும் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்தை மதித்தல், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை ஆதரித்தல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது அழுத்தங்களை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஷி ஜின்-பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இலங்கை தொடர்பான தீர்மானம் மற்றும் அறிக்கையின் தன்மை குறித்து சீனா நன்கு அறியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவும் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீக்கு ஆதரவைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைக் கூட்டாகப் பாதுகாக்க இலங்கையுடன் சீனா ஆதரவாக செயற்படும் என்பதைத் தெரிவிக்கின்றோம்.

மேலும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக வேகமான 400 விக்கெட்டுக்கள் – இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் சாதனை! 

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார்.

அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட்டில் முன்னதாக கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அஹமதாபாத்- நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் – இந்தியா அசத்தலான வெற்றி! 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 இலக்குகளை சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ஓட்டங்கள் சேர்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ஓட்டங்களில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ஓட்டங்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 இலக்குகளையும், ஜேக் லீச் 4 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் சுழலில் இங்கிலாந்து 81 ஓட்டங்களில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 இலக்குகளையும், அஷ்வின் 4 இலக்குகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 இலக்கையும் வீழ்த்தினர்.
81 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சுருண்டதால் 48 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் விளாசினர். இதனால் 7.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ஓட்டங்கள் எடுத்து இந்தியா 10 இலக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
அக்சார் பட்டேல் முதல் இன்னிங்சில் 6, 2-வது இன்னிங்சில் 5 என 11 இலக்குகள் சாய்த்தார். அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 2-வது இன்னிங்சில் 4 இலக்குகள் என 7 இலக்குகள் சாய்த்தார்.

“சமிந்தவாஸின் இராஜினாமா தொடர்பாக நான் அதிருப்தியடைகிறேன்” – விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்

சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் சமிந்த வாஸிற்கு ஏதேனும் நெருக்கடிகள் இருப்பின் அதனை கேட்கும் முறையொன்று உள்ளது. இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் வாஸ் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அப்பால், சுற்றுப்பயண கொடுப்பனவுகளையும் விட மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா வழங்க தீர்மானித்தும் அவர் நாளாந்தம் 200 டொலர்களை கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சமிந்த வாசின் திடீர் இராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

சமிந்த வாஸின் செயற்பாடுகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் நான் கவலையடைகின்றேன். அவர் மிகச்சிறந்த வீரர், அதேபோல் சிறந்த பயிற்சிவிப்பாளர். அவ்வாறான ஒருவர் தேசிய அணிக்கு கிடைக்காமல் போனமைக்காக நான் வருத்தப்படுகின்றேன். மறுபக்கம் அவர் வீரராக இருக்க முடியும் அல்லது பயிற்சிவிப்பாளராக இருக்க முடியும் ஆனால் அவரது ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு முறைமை உள்ளது.

பயிற்சிவிப்பாளராக அவருக்கென்ற சம்பளம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுப்பயணம் ஒன்று செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு மேலதிகமான கொடுப்பனவுகளும் வழங்கப்படும். இவை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றை அவர் செய்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அவருக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து தரக்கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு சுற்றுப்பயணம் செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு அப்பால் சுற்றுப்பயண கொடுப்பனவுகளும் வழங்கப்படும். அதற்கும் மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா அவருக்கு வழங்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட் நிருவாக சபையும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது தீர்மானம் குறித்து நான் எதனையும் கூற முடியாது, ஆனால் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் அவர் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன் என்றார்.