2021

2021

“தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் எதிர்த்து போரிட முடியும்.” – கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்த மக்களை கண்டித்து அஷ்வின் ட்வீட் !

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்குப் பின், அணியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவதற்கான விலகினார்.
300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து: சென்னையில் மக்கள் சாலை மறியல்| Dinamalar
நேற்று ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்கான சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஒன்றாக கூடி ஒருவருக்கொரும் இடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளார்.
முன்னாள் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சார்கள் மற்றும் பிசிசிஐ நடுவரான ராஜேந்திரசின் ஜடேஜா கொரோனா தொற்றால் உயிரழந்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அஷ்வின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை இல்லாதது குறித்து டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் முண்டியடித்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அஷ்வின் ‘‘பயமாக இருக்கிறது. பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என அனைவரும் சொல்கிறார்கள். தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் இந்த தொற்றை எதிர்த்து போரிட முடியும். இந்த வைரஸை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது அவசியம்.
உங்களுடைய பயத்தை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நான் அருகில் இருந்து கவனித்துள்ளேன். உங்களுக்கும், எனக்கும் சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்துள்ளது. அனைத்து முன்நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், ஏராளமானோர் இந்த கொடிய நோயின் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை.” – அமெரிக்காவில் அறிவிப்பு !

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது:

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம். இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல்  இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்ற நிலையில் இலங்கையின் யோர்க்கர் நாயகன் லசித் மாலிங்கவை மீண்டும் அணிக்குள் இணைத்துக்கொள்ள இலங்கை அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றார். எனினும், ரி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தேர்வில் லசித் மாலிங்க இருப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோர்னிங் ஸ்போட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மாலிங்கவை இவ்வருடம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைக்க எதிர்பார்த்துள்ளோம். அவர் எமது அணித் தேர்வில் உள்ளார். இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் !

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியிருந்தது. இந்த அளவுக்கு வைரஸ் வேகமாக பரவுவதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் தான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான். கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியதுடன், அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது.

உலக அளவில் 16 கோடியை தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – இலங்கையில் 133,484 !

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.80 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இலட்சத்து 06 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இலங்கையில் இதுவரையில் 133,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எழுவர் மீதான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுடைய இளமை காலம் முழுவதையும் சிறையிலேயே இவர்கள் கழித்துவருகிறார்கள்.

பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் விடுதலை நாடகமே நீதிக்கு சவால் -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

எழுவர் விடுதலை செய்ய தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து சட்ட ரீதியான போராட்டங்கள் தற்போதுவரை நடைபெற்றுவருகிறது.

எழுவர் விடுதலை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் திக தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலைச் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகவும் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் இருந்தார். பின்னர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வராகக் கடந்த 7-ம் திகதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளனுடைய அம்மா அற்புதம்மாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை கோரி 30.12.2015ல் அளித்த கோரிக்கை மனு மீதான ஆளுநர் நடவடிக்கைகள் மர்மமானதாகவே நீடிக்கிறது. இதுகுறித்த அறிவின் RTI விண்ணபங்களுக்கு ஆளுநர் அலுவலகம் இன்று வரை செவி சாய்க்க மறுக்கிறது.புகார் மனுக்களை மாநில தகவல் ஆணையம் இன்னமும் விசாரணைக்கு பட்டியலிடாமல் இருப்பதும் வேதனையே” என பதிவிட்டிருந்தார். அதேபோல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய அணி அறிவிப்பு !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லோர்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் திகதி முதல் ஜூன் 22-ம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான டெஸ்ட் அணியில், விராட் கோலி (தலைவர்), ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
பேக் அப் வீரர்களாக கே எல் ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக (Standby players) அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கூகுளின் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞன் – பரிசு வழங்கி பாராட்டிய கூகுள் நிறுவனம் !

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.

அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு அந்நிறுவனம் பரிசு தொகை வழங்கியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். பொறியியல் பட்டதாரியான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார். அவரின் இந்த சேவையை அங்கீகரித்துள்ள கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவரின் பெயரை கூகுளின் Hall of Fameல் இணைத்து மரியாதை அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீராம்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடி !

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தீவிர பரவலால் வீரர்கள் பலர் பாதிப்பு – ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கால வரையறையின்றி காலவரையின்றி ஒத்திவைப்பு !

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - போட்டி அட்டவணை வெளியீடு | Kuruvi

சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.