2021

2021

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு !

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்  இருந்த  தோல்வியடைந்தார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7-ம் திகதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு-டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்கள் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை முடக்கின.
டொனால்டு டிரம்பின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர். இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. ஆனால், பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டொனால்டு-டிரம்ப் கூறுகையில், 2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது, தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என தெரிவித்துள்ளார்.

பயணத்தடை நாட்களிலும் 2000க்கு குறையாத தொற்றாளர்கள் – 2இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று – ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை ?

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை. 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கே அரசு நாட்டை முழுமையாக பல மாதங்கள் முடக்கியது. ஆனால் நாளாக நாளாக அது தொடர்பாக கவனம் செலுத்தப்படாமலேயே போய்விட்டது.

50,000 தொற்றாளர்களை அண்மித்த போதே இலங்கை மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள் பலரும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமுல்படுத்துமாறு வேண்டிய போதும் கூட பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசு முடக்க பின்வாங்கியது.

ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 600 ஆக பதிவாகி வந்த தொகை ஒரு கட்டத்துடன் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. பின்பு நாளொன்றுக்கு 1000 தொற்றாளர்களும் அதனை தொடர்ந்து 2000 , 3000 என தொற்றாளர்கள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

May be an image of motorcycle, road and street

இந்த கட்டத்தில் கூட அரசு சுதாகரித்துக்கொண்டதாக தெரியவில்லை. பயணத்தடை அமுலில் இருப்பதாக கூறுப்படுகிறதே தவிர அது முழுமையான நடைமுறையில் என்பதே உண்மை. இங்கு காட்டப்பட்டுள்ள இந்தப்படம்  வெள்ளவத்தையில் எடுக்கப்பட்ட படமாகும். நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பல படங்களை காண முடிந்தது. இவ்வளவுக்கு அலட்சியமாக தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது இலங்கையின்  இந்த பயணத்தடை.

 

இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,656 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை விதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களை அண்மிக்கின்ற நிலையில் கூட தொற்றாளர்களின் தொகை 2000க்கு குறைந்தபாடில்லை. அப்படியானால் ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை என்ற வினா எழுகின்றது.

எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை போலவே கொரோனா கட்டுப்படுத்தல் என்ற விடயத்தில் அரசு தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். பாராளுமன்ற தேர்தலை அண்மித்த காலம் வரை அவ்வளவு கட்டுப்பாடாக கொரோனா தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இன்று எல்லா விடயங்களும் கண்துடைப்பாக மாறிப்போயுள்ளது. இந்த பயணத்தடை கூட கண்கெட்ட பிரகான சூரியநமஸ்காரம் போன்றதே.

அதிலும் கொடுமை இரண்டாவது கொரோனா அலைக்கு காரணமான ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாகும். பலரும் ஆடைத்தொழற்சாலைகளை மூடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் அரசு கவனம் செலுத்தியதாய் தெரியவில்லை. செலுத்தப்போவதாயுமில்லை. தடுப்பூசி விடயத்தில் கூட முன்களப்பணியாளர்களான வைத்தியசாலைத்தாதியர்களை அரசு கவனத்தில் கொண்டதாய் தெரியவில்லை.  இதனாலேயே அவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சருடைய நகர்வுகள் இன்னும் கேலிக்குரியதாக மாறிவருகின்ற நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. களனியில் கொரோனாவை விரட்ட சடங்கு செய்தமை , சித்தவைத்தியரின் கொரோனாப்பாணியை ஆதரித்தமை மற்றும் அதனால் அங்கு அலை மோதிய மக்கள் கூட்டம் என பல முன்யோசனையற்ற செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பு கூற வேண்டியவர். ஆனாலும் அவர் புரிந்து கொள்வதாயில்லை. அண்மையில் கூட அவரை குறித்த பொறுப்பிலிருந்து மாற்றுமாறு சில வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

சரி மக்களாவது பொறுப்புடன் நடந்து கொள்கிறார்களா என்றால் சிறிதளவு கூட சிந்திப்பதாயில்லை. ஒரு நாள் பயணத்தடை எடுத்தால் கூட கடைகளில் குவிந்து மொய்த்து விடுகிறார்கள். சரி என்னிடம் ஓரளவு பயணத்தடை நாட்களை தாக்குப்பிடிக்க கூடியளவிற்கு பொருட்கள் உள்ளன. போதும் என்ற திருப்தியில் யாராவது இருக்கிறார்களா என்றால் .., ஆகச்சிலரே நிலையயை உணர்ந்து செயற்படுகின்றனர். ஏனையோர் கொரோனாவை ஒரு விடயமாகவே பொருட்படுத்தவேயில்லை. சரி நம்மில் எத்தனை பேர் முகக்கவசங்களையேனும் முறையாக அணிகின்றோம்..,? நாம் முகக்கவசம் அணிவதும் , தலைக்கவசம் அணிவதும் பொலிஸாருக்காகவே தவிர நமது நன்மைக்காக என நாம் எண்ணும் வரை சில விடயங்கள் மாறப்போவதில்லை.

அரசியல் தலைமைகளும் மக்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவோராயில்லை. முடியுமானவரை வழமையான காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனரே தவிர மக்களை விழிப்பூட்டுவதாயில்லை.

அண்மையில் “கொரோனா பரவலின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமானது” என சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தனித்து அரசாங்கத்தை மட்டுமே விமர்சிப்பவர்களாயிராது நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம் சார்ந்தவர்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள். அரசாங்கங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். நம் சார்ந்த அன்பானவர்கள் பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும். ஆகவே பொறுப்புடன் செயற்படுவோம்..!

சுயநலம் காப்பது  பொதுநலன் பேணுதற்கே..!

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Rage as Nigerians report Buhari's "genocidal tweet" en masse

மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது.

இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

இலங்கையின் வரலாற்றில் இல்லாத சுற்றுச்சூழல் அனர்த்தம்! இரு வாரங்களாகியும் அணையாத தீ!!

எம்வி எக்ஸ் பிரஸ் பேர் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இரு வாரங்களாகியும் தொடர்ந்தும் எரிந்துகொண்டும் கடலுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டும் உள்ளது. இலங்கை – இந்திய கரையோர கடற்படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதும் பல முயற்சிகளை எடுத்த போதும் கப்பல் தொடர்ந்தும் எரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இலங்கையயை நோக்கி விசுகின்ற பருவக்காற்று இத்தீயை கட்டுப்படுத்த பெரும் தடையாக இருந்து வருகின்றது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 25 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் கப்பலில் ஏற்றி வரப்பட்ட ஆபத்தான இரசாயணப் பொருட்கள் மற்றும் 300 தொன் எரிபொருட்கள் என்பன அளவிட முடியாத சேதத்தை இலங்கையின் கடற்பரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் மேற்கு கரையான நீர்கொழும்பு களுத்துறையைச் சுற்றியுள்ள 50 மைல் பிரதேசம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நுண் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள்: நைற்றிக் அமிலம், சோடியம் குளோரைட் என்பன கடலில் கலப்பதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதுடன் அயலில் உள்ள பகுதிகளிலும் மக்கள் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே கோவிட் இனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் நெருக்கடியால் மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

“கடலுக்குள் செல்லாமல் வியாபாரத்தைச் செய்யாமல் எப்படி தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றார். டேவிட் பெர்னான்டோ. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நீர்கொழும்புப் பகுதி மீனவர். இந்த அனர்த்தத்தால் சிறிது காலத்திற்கு மக்கள் கடல் உணவுகளை தவிர்க்கவே விரும்புவார்கள் என்று சொல்லும் டேவிட் பெர்னான்டோ அவர்கள குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர்கள் கடலுணவை சாப்பிடத் தயங்குவது நியாயம்தானே என்றும் டேவிட் பெர்னான்டோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

கடற்பரப்பில் கடந்த இரு வாரங்களாக தொடரும் இந்த அனர்த்தம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரையொதுங்கும் கழிவுகள் எதனையும் தொட வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தை கட்டுப்படுத்தவும் கரையொதுங்கும் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றவும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் பாதுகாப்பு அங்கிகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை, பிரித்தானியாவின் பயண அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டது!

சில மணிநேரங்களுக்கு முன்னதாக பிரித்தானிய அரசு இலங்கையை தனது சிவப்பு அபாய பட்டியலில் சேர்த்துக்கொண்டது. பிரித்தானியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்வது என்ற முடிவை எடுப்பதற்கு வசதியாக வீதிப் போக்குவரத்து சமிஞை நிறப் பட்டியலை அறிமுகப்படுத்தியது. அதன்படி பச்சை நிறப்பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு பிரித்தானியர்கள் பெரும் கெடுபிடிகள் இல்லாமல் பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மஞ்சள் அல்லது அம்பர் நிறப் பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இம்முறையின் படி சிவப்பு நிறப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு அத்தியவசிய தேவையின்றி பயணிக்கக் கூடாது என பிரித்தானிய அரசு அறிவுறுத்துகின்றது. மேலும் இந்நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மீது நடைமுறை விதிகளும் கெடுபிடியாக இருப்பதுடன் இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் இடங்களில் இருவாரங்கள் வரை தனிமைப்படுத்தலுக்குள் வைக்கப்படுவர். பயணிகளே அதற்கான செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் சுற்றுலா மற்றும் பயணத்துறையயை பாரதூரமாகப் பாதிப்பதுடன், பயணிகளது பயணச் செலவையும் மிகவும் அதிகரித்துள்ளது. மே இறுதிப்பகுதியில் திருமண நிகழ்வுக்குப் பாரிஸ் சென்றிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (படம்) ஈரோ ஸ்ராருக்கு செலுத்திய £200 பவுண் பயணக் கட்டணத்துடன் கோவிட் பரிசோதணைகளுக்காக £305 பவுண்கள் செலுத்தியதாக தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரிவித்தார். பிரித்தானியாவை விட்டு நீங்குவதற்கு முன் கோவிட் இல்லை என்ற சான்றிதழைப் பெற £150 பவுண்கள் செலுத்தி உள்ளார். பின்னர் பாரிஸில் அதனைப் புதுப்பிக்க மேலும் £50 பவுண்களைச் செலுத்தி உள்ளார். ஏனெனில் முதற் சான்றிதழ் 72 மணிநேரங்களிற்கே செல்லுபடியாகும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்து 10 நாட்கள் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கோவிட் பரிசோதணைப் பொருட்களுக்காக £105 பவுண்கள் செலுத்தி உள்ளார். மொத்தத்தில் சஞ்சீவ்ராஜ் பாரிஸ் சென்று திரும்ப £505 பவுண்களைச் செலுத்தி உள்ளார். இதில் ஐந்தில் மூன்று பங்கு கோவிட் பரிசோதணைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

தற்போது இலங்கையும் அபாயப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் போகும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் இலங்கையில்; திரும்பி வரும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் என்று ஒவ்வொருவருடைய போக்குவரத்துக் கட்டணங்களும் இரு ஆயிரங்களைத் தொட்டு நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள: கோவிட் பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்தல் இடங்கள்; இதன்மூலம் கொள்ளை இலாபமீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் நிதி நேர்மையற்ற ஒருவராகக் கருதப்படுகின்றார். அவருடைய வீட்டுத் திருத்த வேலைகள் தொடர்பிலும் அவர் பொதுப்பணத்தில் கை வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி – 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகள் !

2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2023 – 2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரங்கள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்ந்து நடைபெறும். 9 அணிகள் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு இரு வருடங்கள் கழித்தும் இறுதிச்சுற்று நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

2027, 2031 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. எனவே 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கடைசியாக 10 அணிகள் பங்கேற்கும். 2003 உலகக் கிண்ண போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும். 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸில் மோதும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

டி20 உலகக் கிண்ண போட்டியில் 20 அணிகள் பங்கேற்கும்.

கடைசியாக 2017 இல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.

2024 – 2031 இல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்.

2024 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.

2025 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2026 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2027 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.
2028 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2029 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2030 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2031 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.

ஈரானின் பிரமாண்ட போர்க்கப்பல் ‘கார்க்’ தீப்பிடித்து கடலில் மூழ்கியது !

உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

U.S. defends the world's access to Strait of Hormuz | ShareAmerica

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.‌

இந்தநிலையில் ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரான் நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான ‘கார்க்’ என்கிற போர்க்கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் உள்ள ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த கப்பலில் நேற்று அதிகாலை 2:25 மணியளவில் திடீரென தீ பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் முழுவதிலும் பரவியது.‌

கப்பலில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிந்து கப்பலிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனிடையே தீயில் முற்றிலுமாக உருக்குலைந்த ‘கார்க்’ போர் கப்பல் கடலில் அப்படியே மூழ்கியது.‌ 20 மணி நேரம் தீயணைக்கும் பணி இறுதியில் தோல்வியில் முடிந்தது.

கப்பலில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததையும் அதனால் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்ததையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பதை ஈரான் கடற்படை உடனடியாக தெரிவிக்கவில்லை. எனவே இது எதேச்சையாக நடந்த விபத்தா ? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் கட்டப்பட்டு 1977-ம் ஆண்டு ஈரானிடம் ஒப்படைக்கப்பட்ட ‘கார்க்’ கப்பல் 1979 இஸ்லாமியப் புரட்சியை தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 1984-ல் ஈரான் கடற்படையில் சேர்க்கப்பட்டதும், இது ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘கார்க்’ கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது, ஈரான் கடற்படையில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு ஆகும். முன்னதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாஸ் துறைமுகத்துக்கு அருகே நடந்த ராணுவ பயிற்சியின் போது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை தவறுதலாக மற்றொரு போர்க்கப்பலை தாக்கியதில் 19 மாலுமிகள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

குழந்தைப் போராளியின் மீதான கூட்டுப் பாலியல்வல்லுறவு: புளொட் – தீப்பொறி கொட்டியவர்களை காட்டிக்கொடுங்கள்!!! : த ஜெயபாலன்

பாலியல் வல்லுறவு என்பது மன்னிக்க முடியாதவொரு கொடும் குற்றம். ஆனாலும் இந்தக் கொடும் குற்றத்திற்கு ஆளான பெண்கள் சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் ஏளனத்திற்கும் பயந்து மௌனமாக்கப்படுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை செய்த ஆணைத் தப்பிக்க வைக்கின்றது. இதனால் இந்தக் கொடுமையயைப் புரிந்த ஆண்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரானதாக முன்னெடுக்கப்பட்ட போதும் அப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட பலர்: பெண்களை, ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பிரதேசத்தவர்களை, ஏனைய மதத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும் மற்றையவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களை அரசியல் ரீதியில் வளம்படுத்தி மனித நேயர்களாக்குவதற்கான தேவையயை இயக்கங்கள் கொண்டிருக்கவலில்லை. அதற்கான கால அவகாசமும் அந்த இயக்கங்களுக்கு இருக்கவில்லை. சில அரசியல் வகுப்புகளினூடாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. இது அனைத்து தமிழ் விடுதலை அமைப்புகளிலும் காணப்பட்ட ஒரு குணாம்சம். அதனால் தான் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை இரண்டாம் தரமாக எண்ணும் போக்கு, பாலியல் துன்புறுத்தல்கள், ஏனையவர்களுக்கு எதிரான வன்மம், சித்திரவதைகள், கொலைகள் சர்வ சாதாரணமாக தமிழீழ விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ – தமிழீழ விடுதலை இயக்கம்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எந்த விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

2020 இல் கூட பிரித்தானியாவில் 118 பெண்கள், ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குட்டித்தீவான இலங்கையில் 100,000 பேருக்கு 8 பாலியல் வல்லுறவு நடைபெறுகின்றது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாலியல் வல்லுறவு விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விகிதாசாரம் நான்கு மடங்கு அதிகம். இந்தியாவில் 100,000 பேருக்கு இருவரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான மயையான விம்பங்களுக்குள் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

1980க்களின் நடுப்பகுதி, தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலம். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ‘பொடியளின்’ கைகளில் இருந்தது. புளொட், ரெலோ, புலி ஆகிய மூன்று பிரதான இயக்கங்களே ஆள் மற்றும் ஆயுத பலத்தில் முன்நின்றனர். புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிசேர்த்து மிகப்பலமான ஆளணி உடைய அமைப்பாக இருந்தது.

அவ்வமைப்பின் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கு, இராணுவக் கட்டமைப்பிற்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு குழுவாதப் போக்கு என்பன விடுதலைக் கனவோடு அல்லது சாகசங்கள் நிகழ்த்த வந்த பலரையும் இயக்கத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை துரோகிகளாக கருதும் மனநிலை; தலைமைக்கு விசுவாசமான சிறுபிரிவினரிடம் இருந்தாலும்; பெரும்பாலானவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ்வாறான வெளியேற்றங்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணங்களில் தங்களை நம்பி இயக்கங்களுக்குள் வந்தவர்கள்; அல்லது தங்களால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பிச் சென்றுவிட முடியாது; என்ற எண்ணப்பாடும் முக்கியமானது. அதனை இங்கு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், நாம் நம்பி வந்த இயக்கத்தை அதற்குள் போராடியே திருத்தலாம் என்ற நம்பிக்கையிலும் சிலர் இருந்தனர்.

அதனால் புளொட்டை விட்டு வெளியேறிய குறிப்பாக தீப்பொறிக் குழுவினர் அனைவரும் முற்போக்கானவர்கள் புரட்சியாளர்களும் அல்லர் புளொட்டை விட்டு வெளியேறாத அனைவரும் புளொட் தலைமையின் விசுவாசிகளும், துரோகத்தை சுமந்தவர்களும் அல்லர். ஆகவே புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவினரோ அல்லது வெளியேறாமலே இருந்த புளொட் அமைப்பினரோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் என்ற முடிவுக்கு யாரும் ஒரு தலைப்பட்சமாக வந்துவிடமுடியாது. இருதரப்பிலுமே அடிப்படை நேர்மையும் மனிதத்துவமும் உடையவர்களும் அற்றவர்களும் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியிலேயே புளொட்டின் 17 வயதேயான பெண் குழந்தைப் போராளியயை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிலர் கூடியிருக்க வன்புணர்ந்த சம்பவத்தை நோக்க வேண்டும். இன்று அந்தப் பெண் போராளி எம்மத்தியில் இல்லை. அவருக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய குற்றத்தின் தாக்கத்தால் அவர் புலம்பெயர்ந்தும் தனது கொடிய நினைவுகளைவிட்டுப் புலன்பெயர முடியாமல் கொடூரத்திற்கு பிந்திய மனச்சிதைவுக்கு உள்ளாகி, இறுதியில் மரணம் அடைந்தார். 2011 மார்ச் 8 பெண்கள் தினத்தையொட்டி இச்சம்பத்தின் முக்கிய சாட்சியும் புளொட் அமைப்பின் மகளீர் அணியின் பொறுப்பாளராக இருந்தவருமான ஜெ ஜென்னி எழுதிய மூலக் கட்டுரையயையும் அதன் மீதான விவாதங்களையும் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்: https://www.padippakam.com/padippakam/document/EelamHistory/Janni/jnei04.pdf

இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இக்குற்றச்செயலை இழைத்த அக்குழுவினர் இன்றும் எம்மத்தியில் கௌரவத்தோடு வாழ்கின்றனர். அரசியல் செய்கின்றனர். முதலாளித்துவ சமூகமே சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏதோ யாருக்கோ நியாயம் பெற்றுக்கொடுக்க பல்லாண்டு பழமையான சம்பவங்களை தூசிதட்டி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முயலும் போது; எமக்கு விடுதலை பெற்றுத் தரப்போவதாகவும், சமூகத்தின் முற்போக்கானவர்களாக தங்களைக் கட்டமைத்தவர்களும் முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் அந்த வன்புணர்வுச் சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே எழுதி வாங்கி வைத்துள்ளார்.

இப்போது மீண்டும் இச்சம்பவம் எமது போராட்ட கனவான்களின் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது. அக்குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன்கள் அல்ல. இக்கொடுமையயைப் புரிந்தவர்கள் புளொட் அமைப்பினர் அல்லது அதிலிருந்து வெளியேறிய குறிப்பாக தீப்பொறி சார்ந்தவர்கள் என்பது அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி உறுதியாகின்றது. யாழ் கொக்குவில் பொற்பதியில், புளொட் செறிந்திருக்கின்ற இப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாற்று அமைப்புகள் எதுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதனால் ஒரு குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்களை புளொட் அமைப்பும் தீப்பொறியினரும் இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இக்கொடுமை தனி ஒருவரினால் மட்டும் இழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மைகளை தனியொருவர் மறைக்கவில்லை. ஒரு குழுவாகவே இந்த உண்மைகளை மறைக்கின்றனர்.

பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியல் இச்சையால் தூண்டப்பட்டு நடைபெறுகின்ற கொடுமை என்பது மிகவும் குறுகிய பார்வை. இக்குழந்தைப் போராளியின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையானது, பிற்காலத்தில் யாழ் புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையுடன் ஒப்பிடக் கூடியதே. குற்றத்தை இழைத்தவர்கள் வித்தியாவை நன்கு தெரிந்தவர்கள். வித்தியாவின் குடும்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பழிவாங்கல் மற்றும் பெண் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே இக்கொடுமையயைப் புரிந்தனர். இவ்விரு குழந்தைகளின் மீதும் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை அவதானிக்க முடியும்.

இவ்விரு பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொடுமையாளர்களின் ஒத்த மனநிலையயை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து இவ்வண்கொடுமையயைப் புரிந்துள்ளனர். வன்புணர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே அக்கொடுமையயைப் புரிந்துள்ளனர். மாணவி வித்தியாவின் தாயார் வன்புணர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் சாட்சி சொன்னதும், வித்தியா ஒருவனின் காதலை நிராகரித்ததும் வித்தியாவின் இக்கொடூர நிகழ்வுக்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது. அதேபோல் குழந்தைப் போராளியின் வன்புணர்விலும் அக்கொடுமையயைப் புரிந்தவர்கள் தங்களது உரையாடலை பதிவு செய்ததை கேட்டுள்ளனர் தங்களை வேவுபார்ப்பதை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் தங்களுடைய கொடிய செயலை நியாயப்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். ஒரு பெண்ணுடல் மீது ஆண் செலுத்தக் கூடிய அதிஉட்சபட்ச அதிகாரமே பாலியல் வன்புணர்வு. அவளைக் கொல்லாமல், விட்டுவைப்பது காலத்திற்கும் அவளைப் பழிதீர்க்கின்ற கட்டற்ற அதிகார வன்முறை. மாணவி வித்தியாவைக் கூட கொடியவர்கள் கொலைசெய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. இழைக்கப்பட்ட கொடுமையினால் அவர் உயிரிழந்தார். குழந்தைப் போராளியின் விடயத்தில் கொடியவர்கள், அவள் தனக்கு நிகழ்ந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலை சர்வதேச பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலையோடு ஒத்ததாகவே இருந்துள்ளது. 1970க்களில் அமெரிக்காவில் 50 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் அதனை ஒத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாச்சாரப் பினினணிகளுடன் இருந்தனர். ஆகவே இவ்வாறானவர்கள் தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் மற்றையவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. புரட்சியாளன் போர்வையில் இருப்பவனும் மற்றையவர்களும் யாரும் இக்கொடுமையயை நிகழ்த்த தயங்காதவர்கள்.

பொதுவாக பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும், தங்களைப் பற்றிய அதீத உணர்வுடையவர்களாகவும், தங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், பெண்களை மதிக்காதவர்களாக, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவபவர்களாக இருப்பர். பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் இச்சையைக் காட்டிலும் அதிகாரத்தை நிலைநிறுத்தவே அது பெரும்பாலும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் இளம் ஆண்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள் பெருமளவில் அவர்களால் அறியப்பட்ட பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலியல் வன்புணர்வாளர்கள் தெரியாத பெண்களை வன்புணர்வது அரிதாகவே நடைபெறுகின்றது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரினால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களாகவே உள்ளனர்.

குழந்தைப் போராளியின் மீதான பாலியல் வன்புணர்வைச் செய்த கொடியவர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் அவரினால் அல்லது அவரைச் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மற்றவர்கள் மீது கழிவிரக்கம் காட்டாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக, ஐயப்பாடு உடையவர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

கொடிய அச்சம்பவம் நடந்து நான்காவது தசாப்தத்தை எட்டுகின்ற நிலையிலும் கொடியவர்களை பாதுகாத்து வருகின்றோம். நட்புக்காக, உறவுக்காக ஒரு மிகப்பெரிய கொடுமையை மூடி மறைக்கின்றோம். இதில் தற்போது வெளிப்படையாக தங்களுடைய சாட்சியங்களை பதிவு செய்ய ஜெ ஜென்னியும் இச்சம்பவம் பற்றிய கேள்வியயை எழுப்பியுள்ள அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போதும் அவ்வமைப்புப் பற்றி என்றுமே ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் சம்பந்தமுடையதாக தொடர்புபடுத்தப்படும் தீப்பொறி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும். அதைவிடுத்து ஜென்னி மீதும் அசோக் மீதும் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்விதத்திலும் உதவாது. முதலாளித்துவ நீதித்துறையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள், தாங்கள் குற்றத்தை புரியவில்லை என்பதை நிரூபிக்க கோருகின்றது. அப்படியிருக்கும் போது விடுதலை வேண்டிப் போனவர்கள் அதே நோக்கத்திற்காகச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையின் உண்மையை வெளிகொணர கடந்த மூப்பதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக என்ன செய்கின்றார்கள்?

மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்: த ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

“விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார் . கைல் ஜேமிசன் அதில் சிக்கவில்லை.” – டிம் சவுத்தி பாராட்டு !

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ந்திகதி தொடங்குகிறது.
இதில் நியூசிலாந்து பந்து வீச்சை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ரோகித் சர்மா. விராட் கோலி, புஜாரா, ரகானே எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதே கேள்வி. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பெங்களூர் அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக பந்து வீசியும் அசத்தினார். பயிற்சியின்போது அவரிடம் இந்திய அணி தலைவர் கோலி டியூக் பந்தை கொண்டு தனக்கு பந்து வீச முடியுமா? என்று கேட்டார். அதற்கு ஜேமிசன், “நான் பந்து வீசினால் நீங்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை புரிந்துகொள்வீர்கள். அதனால் வீசமாட்டேன்.” என மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் விராட் கோலி விரித்த வலையில் கைல் ஜேமிசன் சிக்காததற்கு டிம் சவுத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி கைல் ஜேமிசனிடம் கேட்ட சம்பவம் உண்மை. ஆனால், அந்த பதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கானது. ஏன் அவர்கள் பந்து வீச்சை கவனிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் விராட் கோலி பந்து வீச்சை எதிர்கொள்ள இருப்பார். அவருக்கு பந்து வீசக்கூடாது என்பதை தெரிந்துள்ள கைல் ஜேமிசன் மிகப்பெரிய அறிவு தேவையில்லை’’ என்றார்.