2021

2021

அதிகரிக்கும் தற்கொலைகள் – இதற்கான தீர்வு என்ன ..?

செய்தி – நேற்றைய தினம் வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

…………………………………………………………………………………………………………………………………..

தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் மீட்பு என்பது .., வெளியே நின்று பார்த்தால் சாதாரணமான ஒரு தற்கொலையாகவோ அல்லது ஒரு சாதாரண செய்தியாகவோ  தெரியலாம். ஆனால் அந்த முடிவுக்கு அவர் வருவற்கு அவரை தள்ளிய சூழல் பற்றி நாம் அனைவரு் சிந்திக்க மறந்து விடுகின்றோம். அண்மைய நாட்களில் கிடைக்கின்ற அதிக தற்கொலை தொடர்பான செய்திகள் குடும்பங்களுடன் தொடர்புடையனவாகவே இருக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த தகவல்களின் படி 2016ஆம் ஆண்டில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருந்தது. இப்போதும் கூட இந்த தரவுகளின் பட்டியலில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் தான் இருக்கின்றதாம். இங்கு நடக்கின்ற அதிகமான தற்கொலைகளுக்கு பிரதானமான காரணம் 03 தான் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

01. மன அழுத்தம். (Depression) :- இது கடன் தொல்லை, காதல் தோல்வி, குடும்பத்தகராறு என்று பட்டியல் நீண்டு செல்லும்.

02. மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல். இதனுடன் சேர்த்து ஏனைய போதைப்பொருள் பாவனையும் காரணங்களாகும்.

03. பெற்றோர் கண்காணிப்பு இன்மை மற்றும் தனிமை.

முக்கியமாக இந்தத்தற்கொலைகள் கூட இலங்கையில் இந்துக்களிடமும் பௌத்தர்களிடமுமே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமியரிடையே இது மிக்ககுறைவாகவே காணப்படுகின்றமையும் நோக்கத்தக்கது. ஏனெனில் இஸ்லாமியருடைய மதம் அது தடுக்கப்பட்டது என கூறுவதும் மதம் மது உள்ளிட்ட போதைப்பொருட்களை அது புறக்கணிப்பதாலுமு் அதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் காணப்படுவதாலும் ஒப்பீட்டளவில் ஏனைய மதத்தவர்களை காட்டிலும் இலங்கை வாழ் இஸ்லாமியரிடம் தற்கொலைகள் மிகச்சொற்பமானளவே அந்த  இடம்பெறுகின்து. இது ஏனைய மதங்களின் பீடங்களால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

தற்கொலை என்பது உடனடியாக எடுக்கப்படுகின்ற முடிவு போல தோன்றினாலும் அது தூண்டப்படுகின்றது. ஒரு ஒரு விலைமதிப்பற்றது. மனித உறவுகளுடைய பெறுமதியை இங்கு யாரும் உணர்ந்து கொள்வதில்லை. யாரும் நமக்கில்லை என்ற விரக்தியின் உச்சமே இந்த தற்கொலைகளின் முக்கிய புள்ளி என நினைக்கின்றேன். இங்கு எல்லோரும் குடும்பமாக ஒரு வீட்டில்தான் இருக்கிறோம். ஆனால் தனியாக பிரிந்து இருக்கின்றோம். யாரும் யாருடனும் உரையாடத்தயாராக இல்லை. கேவலம் தொலைபேசியுடன் செலவிடும் நேரத்தை கூட சக வீட்டு மனிதர்களுடன் நாம் செலவிடத்தயாராகவில்லை என்பதே இன்றைய தேதியின் ஆகக்கேவலமான உண்மை.

தற்கொலைகள் எவையுமே தற்கொலைகள் அல்ல. அவை தற்கொலை செய்பவரின் சூழலால் உருவாக்கப்படுகின்றது. ஒருவனுடைய பிரச்சினையை கேட்கக்கூட அவரைச்சுற்றி யாரும் இல்லை என்ற நிலையே இவற்றிற்கான அடித்தளம்.

2020ல்  கிளிநொச்சிக்கருகில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  உண்மையிலேயே அது தற்கொலை அல்ல அது ஒரு கொலை. அவர்கள் நன்றாக படித்தவர்கள். ஆகவே நல்ல நட்பு வட்டமும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுடைய பிரச்சியை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத அளவிற்கு அவர்களை சுற்றியிருந்த நண்பர்கள் வட்டம் தூரமாகியிருந்துள்ளது என்பதே வேதனைக்குறிய விடயம். என்னைக்கேட்டால் அந்த தற்கொலைக்கு அவர்களுடைய நண்பர்களே காரணம்.

அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற சுயநலமான சிந்தனையும் நம்முள் அதிகம் ஊறிப்போய்விட்டதும் தற்கொலைகளுக்கான காரணம் தான். சுயநலசிந்தனையை விடுத்து மனித உயிரினுடைய பெறுமதியை அறிந்து கொள்ளுங்கள். அடுத்தவன் ஏதாவது பிரச்சினை என உங்களிடம் சொல்ல முற்பட்டால் அதனை முதலில் பொறுமையாக காதுகொடுத்து கேளுங்கள். உங்களால் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆறுதலான வார்த்தைகளை சரி கூற முற்படுங்கள். அதுவாவது ஆறுதலளிக்கும்.

இந்த தற்கொலைகளில் சினிமாவுக்கு இருக்கின்ற பங்களிப்பும் காத்திரமானது. முக்கியமாக நாம் பார்க்கக்கூடிய சினிமாக்களில் பாதி பிரச்சினைகளுக்கு தீர்வாக தற்கொலைகளையே தீர்வாக முன்வைப்பபதை காணமுடியும். அது கண் வழி சென்று மூளையில் பதிந்து அவர்களும் அது போன்றதான ஒரு பிரச்சினையை எதிர் கொள்ளும் போது அதுதான் தீர்வு என எண்ணும் நிலைக்கு அவர்களை தள்ளி விடுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயனுடைய நடிப்பில் வெளிவந்திருந்த ஹீரோ என்ற படத்தில் ஒரு மாணவி கல்வி வாழ்க்கையில் தோல்வியடைந்ததும் மனமுடைந்து புகையிரதத்தில் இருந்து கீழே குதித்து இறப்பது போன்றதான ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கும்.  இவர்களுடைய உழைப்பு என்ற விடயத்துக்காக ஏதோ ஒரு உளவியல் தாக்கத்தை திணிக்கிறார்கள் போலவே தோன்றுகிறது. சமூகம் சார்ந்த நோக்கத்தில் அந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தால் குறித்த மாணவி முயற்சி செய்து தன்னை மீள ஏதோ வகையில் உருவாக்கி வாழ்வில் முன்னேறுவது போலவும் தற்கொலை தீர்வல்ல என்பது போலவும் காட்டியிருக்கலாம். ஆனால் இன்று வரை பல சினிமாக்கள் அதை செய்யத்தவறிவிடுகின்றன.

கடந்த இரு வருடங்களில் கூட அதிகளவிலான பாடசாலை மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அதிகம் பதிவாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளும் – பெற்றோருடய முறையான கவனிப்புக்கள் இல்லாமையும் அந்தச்சிறுவர்கள் தற்கொலை செய்ய கரணமாகிவிடுகிறது. பெற்றோர்கள் பணம் – பணம் என ஓடிக்கொண்டிருக்கிறார்களே தவிர அந்தப்பணத்தை ஏன் சேர்க்கிறோம்..? யாருக்காக சேர்க்கிறோம் என எண்ணுவதில்லை.

கல்வி மட்டுமே வாழ்க்கைக்கான திறவுகோள் என திணிக்காதீர்கள். மற்றவருடன் பிள்ளைகளை ஒப்பிட்டு நோக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுடன் மனது விட்டு பேசுங்கள். ஏதோ கட்டுக்கொப்பாக வளர்ப்பது போல காட்டி வன்முறையை கக்காதீர்கள். அவர்களுக்கு என நுரம் ஒதுக்கி நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்யை கொடுங்கள். பிரச்சினைகள் பற்றி ளெிப்படையாக உரையாடுங்கற் உண்மையிலேயே மாற்றம் இருக்கும்.

மனிதர்களிடையே அன்பை பரிமாறுங்கள் –  உங்கள் அருகிலுள்ள ஒருவனுடைய கடினமான நேரத்தில் பங்கெடுங்கள். அவனுக்கு நம்பிக்கையை கொடுங்கள். நாங்கள் இருக்கிறோம் எழுந்து வா என்ற தன்னம்பிக்கையை கொடுங்கள். சுய நல சிந்தனையை விடுத்து பொதுநலமாக சிந்திக்க ஆரம்பியுங்கள். இந்த பொது நல சிந்தனை தான் தற்கொலைகளை தடுக்கின்றன. உளவியல் வழிகாட்டல்களோ – முறையான உளவியல் வகுப்புக்களோ  தற்கொலைகளை குறைக்கப்போவதில்லை. இந்த பொது நல சிந்தனையும் அடுத்தவர் மீது நாம் காட்டுகின்ற மனித நேயமுமே தற்கொலைகளை தடுக்கும் சக்தி மிக்கன என்பதை புரிந்து கொணள்ளுங்கள். சமூகத்துக்கு போக வேண்டாம்.  வீடுகளில் இதனை தொடங்குங்கள்.  அன்பினாலான சிறு மாற்றம் பெருவெள்ளமாகட்டும்..!

 

அச்சுறுத்தலாகிக்கொண்டிருக்கும் சீனாவின் ஆணுவாயுதக்கிடங்குகள் – அமெரிக்கா கவலை !

வர்த்தகம், உளவு மற்றும் தொற்றுநோய் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய காலங்களில் மோசமடைந்துள்ளன. அது மட்டுமன்றி சீனாவின் வேகமான வளர்ச்சி ஏனைய உலக வல்லரசுகளை கதிகலங்க வைத்துள்ளது என்பதே உண்மை. அண்மையில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் கூட இது தொடர்பான கலந்துரையாடல்கள் அதி முக்கியம் பெற்றிருந்தது.

இந்நிலையில் சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றமையானது  கவலையளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனா 100க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,

‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’ என கூறினார்.

சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சீனாவில் சுமார் 100 ஏவுகணைகள் இருந்தன. ஆனால் வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இது ஒருபுறமிருக்க கொமினியூஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசியிருந்த சீன அதிபர் சீனாவை சீண்டினால் சீனப்பெருஞ்சுவரில் அடித்துக்கொள்வோம் என்பது போன்ற தொனியிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை சர்வதேச அளவில் மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் 65,000பேர்!

தஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போது 65,000பேர் காத்திருப்பு வரிசையில் உள்ளதாக அகதிகள் சபையில் பெற்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் சபையில் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் உட்துறை அலுவலகத்திலிருந்து புள்ளிவிபரங்கள் பெறப்பட்டது.

2020ஆம் ஆண்டில் ஒரு காலாண்டில் அதிகரித்த ஒரு பின்னடைவுக்கு தொற்றுநோய் பங்களித்திருப்பதாக நிறுவனத்தின் பகுப்பாய்வு காட்டுகிறது. எனினும், உடைந்த புகலிடம் முறையை சரிசெய்ய ஒரு திட்டம் இருப்பதாக உட்துறை அலுவலகம் கூறியுள்ளது.

மீட்கப்பட்ட பழங்குடியின பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் – நீதி கேட்டு விக்டோரியா மகாராணியின் சிலை தகர்ப்பு !

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தமையானது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அது கடுமையான  அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
கனடாவில் உள்ள பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றன. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கனடாவின் தேசிய தினத்தையொட்டி, பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், பழங்குடி சமூகங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காகவும் மானிட்டோபா தலைநகர் வின்னிபெக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சட்டமன்ற வளாகத்தில் விக்டோரியா மகாராணியின் முக்கிய சிலையை தகர்த்து கீழே தள்ளினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
பழங்குடியினர்பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பட்டதால், கனடா தினத்தன்று தேசிய கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தினர். இதனால் கனடா முழுவதிலும் உள்ள நகராட்சிகள் கொண்டாட்டங்களை ரத்து செய்தன.
போராட்டங்களின்போது, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுடன் தொடர்புடைய நபர்களின் சிலைகள் அழிக்கப்பட்டன. சில சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

கனடாவில் அதிகரித்துள்ள அதியுச்ச வெப்பம் – உருகும் தார் சாலைகள் – 400க்கும் அதிகமானோர் பலி !

வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் சமீபத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வரலாறு காணாத இந்த வெப்பத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்தனர். கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சாதனை

இங்கிலாந்து அணியுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய சாதனை ஒன்றை இலங்கை அணி படைத்துள்ளது.

இதன்படி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக இலங்கை அணி இடம்பிடித்துள்ளது.

1975ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இலங்கை அணி 860 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களைச் சந்தித்துள்ளது. அவற்றில் 390 ஆட்டங்களில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி 428 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்படி இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணி சந்தித்த தொடர்களில் 62 சதவீதமானவற்றில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதேவேளை இந்திய கிரிக்கெட் அணி 427 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் தோல்வியடைந்துள்ளதுடன் பாகிஸ்தான் அணி 414 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி

உயர்கல்வி மற்றும் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முற்பதிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இன்று (02) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமென கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்துக்குப் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவைத் தொடர்ந்து இரு நாள்களில் உரிய தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தி மூலம் உரிய திகதி மற்றும் இடம் தொடர்பான விடயங்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இனிமேல் டெல்டாவே ஆதிக்கம் செலுத்தப்போகின்றது.” – எச்சரிக்கின்றது உலக சுகாதார அமைப்பு !

உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ‘பி.1.617.2.’ ஆகும். இது டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட இந்த வைரஸ் இப்போது உலகமெங்கும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு, தனது கொரோனா வாராந்திர தொற்றுநோய் புதுப்பிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 டெல்டா வைரஸ் பாதிப்பினை 96 நாட்கள் தெரிவித்துள்ளன. இதன் மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசை முறை திறன்கள் குறைவாக இருப்பதால், இது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த நோய்த் தொற்று, பல நாடுகளில் தொற்று பரவல் அதிகரிப்புக்கும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரிப்புக்கும் காரணம் ஆகும்.
இந்த வைரஸ் பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக  டெல்டா வைரஸ் மற்ற வகைகளுடன் போட்டியிட்டு, இனி வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், தனிநபர் இடைவெளி பராமரிப்பு, சமூக அளவிலான கட்டுப்பாடுகள், தொற்று தொடக்கம் முதல் இருந்து வரும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள் ஆகியவை கொரோனா வைரஸ் உள்ளிட்ட கவலைக்குரிய வகைகளுக்கு எதிராக வலுவாக செயல்படும்.
புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம். குறிப்பாக குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு சூழலில், மேற்கூறிய பிற நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

“சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்.” – சீன அதிபர் முழக்கம் !

“சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.” என சீன அதிபர் ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

latest tamil news

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று (01.07.2021)  கொண்டாடப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி கடந்த 1921-ம் ஆண்டு ஜூலை 1-ந் திகதி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டு போருக்கு பிறகு அக்கட்சி 72 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி இன்று தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

சீன மக்களின் தேசிய இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கொண்டுள்ள பெரும் தீர்மானத்தையும், வலுவான விருப்பத்தையும், அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எங்கள் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை பாதுகாப்பதற்கான அதிக திறன் மற்றும் நம்பகமான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.

சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம். சீனாவை யாரும் அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

சீன மக்கள் ஒரு போதும் எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் தங்களை ஒடுக்கவோ அல்லது அடிபணியவோ அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களால் உருவாக்கப்பட்ட பெருஞ் சுவரில் மோத வைக்கப்படுவார்கள்.

தைவானை சீன நிலப்பரப்புடன் ஒருங்கிணைப்பது ஆளும் கட்சியின் வரலாற்று பணியாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை நாம் துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.