2021

2021

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சகலதுறை வீரரான இசுரு உதான !

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, 33 வயதான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திடம் அறிவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இடதுக்கை வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான, இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் 237 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதேபோல 34 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 விக்கெட்டுகளையும் 256 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

“தீவிரமாக பரவும் டெல்டா. இரண்டு தடுப்பூசிகளுமே பயனற்றவை.” – அமெரிக்கா அதிர்ச்சி அறிக்கை !

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையில் அதிக கைவரிசை காட்டியது.

டெல்டா வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் ,

“டெல்டா வைரஸ் பெரியம்மை போல எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள். இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ் ஆகும். இது பெரியம்மை போல தொற்றும். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.” என குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சி.டி.சி.யின். இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்குள்ளாகிறபோது, தடுப்பூசி போடாமல் தொற்று பாதிப்புக்குள்ளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள். சிற்றம்மை, பெரியம்மை போல மிகவும் பரவுகிற வைரஸ் டெல்டா வைரஸ். பள்ளிக்கூடங்களில், மாணவர்கள், ஊழியர்கள், வருகிறவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசத்தை எல்லா நேரமும் அணிந்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல் !

மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.

எனினும், திட்டமிட்டபடி கடந்த முதலாம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது. இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை ‘தலிபான்கள்’ தாக்கியதால் ஆப்கானிஸ்தான் பொலிஸார் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சில அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியாவில் களமிறக்கப்பட்ட இராணுவம் !

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவுவதற்காக அவுஸ்ரேலியா அரசாங்கம், சிட்னிக்கு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

ஜூன் மாதம் தொடங்கிய டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 3,000 தொற்றுநோய்களை உருவாக்கியது மற்றும் ஒன்பது இறப்புகளுக்கு வழிவகுத்தது.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள், திங்கட்கிழமை நிராயுதபாணியான ரோந்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் வார இறுதியில் பயிற்சி பெறுவார்கள். ஆனால், இராணுவ தலையீடு அவசியமா என்று பலர் கேள்வி எழுப்பினர்.

முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்தியாவசிய உடற்பயிற்சி, ஷாப்பிங், கவனிப்பு மற்றும் பிற காரணங்களைத் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வாரங்கள் முடக்கப்பட்ட போதிலும், நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அதிகாரிகள் 170 புதிய தொற்றுகளை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.

10 கிமீ (6.2 மைல்) பயண வரம்பை உள்ளடக்கிய விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய இராணுவ வீரர்கள் கண்கானிப்பில் ஈடுபடுவார்கள்.

“ஆப்கான் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.” – தலிபான்கள்

“ஆப்கான் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.” என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தீவிரப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை தலிபான்கள்  புதன்கிழமை சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆப்கன் நிலத்தை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த விடமாட்டோம் என்று தலிபான்கள்  உறுதி அளித்ததாகவும், ஆப்கன் விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த சீனா உதவும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதியளித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள்  கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“தலிபான்களும்  சாதாரணக் குடிமக்களே.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, ஈராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்க தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “தலிபான்களும்  சாதாரணக் குடிமக்களே. அவர்கள் இராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறும்போது,

”பாகிஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் தலிபான்கள் இனக்குழுவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தலிபான்கள் ராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல. அவர்களும் சாதாரணக் குடிமக்களே” என்று தெரிவித்தார்.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறதா? என்ற கேள்விக்கு,

“இதில் உண்மையில்லை. ஆப்கானில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். செப்டம்பர் இரட்டை கோபுரத் தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை” என்றார்.

“2 வாரங்களில் 20 கோடியை தொடவுள்ள கொரோனா.” – உலக சுகாதார அமைப்பு அச்சம் !

உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
கொரோனா அதிகரிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கொரோனா புதிய பாதிப்புகள் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது.

இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் 19.5 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 6.1 லட்சம் பேரும், இந்தியாவில் 4.22 லட்சம் பேரும், பிரேசிலில் 5.52 லட்சம் பேரும் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இருபது கோடியை அண்மிக்கும் உலக கொரோனா தொற்று – 41.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக  கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.59 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.41 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை கொன்று குவிக்கும் தலிபான்கள் – மீள உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. அடுத்த மாதம் 31-ந் திகதிக்குள் படைகள் முற்றிலும் வாபஸ் ஆகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள் நாட்டை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள்.

நாட்டின் பாதி இடங்கள் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளன. மற்ற பகுதிகளை காப்பாற்ற ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமெரிக்க அதிபருடன் பேசினார்.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு சில உதவிகளை செய்ய அமெரிக்கா முன் வந்துள்ளது. தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல இடங்களிலும் தலிபான்களின் முன்னேற்றத்தை ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் குண்டு வீசி தடுத்து வருகின்றன. அமெரிக்காவின் உதவி நீடிக்கும் என்று அறிவித்திருப்பதால் ஆப்கானிஸ்தான் விமானப்படை இன்னும் தாக்குதலை இன்னும் தீவிரமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் பல இடங்களிலும் எதிரிகளை கொன்று குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உள்ள கிராம மக்களை குறிவைத்து கொல்கிறார்கள்.

காசினி என்ற கிராமத்தில் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் 43 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் வீடுகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.

பல இடங்களில் அரசு ஊழியர்களை தலிபான்கள் கொன்றுள்ளனர். தலிபான்களின் இந்த தாக்குதலால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்கள் 100பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,

”காந்தஹார் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள் பொதுமக்கள் 100 பேரைக் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் ஆணைக்கு இணங்க  தலிபான்கள் செயல்படுகின்றனர். அப்பாவி ஆப்கன் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும்  தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்கள், இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.