2021

2021

ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா – அதிர்ச்சியில் அமெரிக்கா !

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது இராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது. அதன் ஒரு பகுதியாக வடகொரியா தொடர்ச்சியாக புதிய ஏவுகணைகளை சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா நேற்றுமுன்தினம் புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா இராணுவம் தெரிவித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டுமொரு ஏவுகணையை சோதித்தது. ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகராமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஹவாசாங்-8 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்றும் சோதனையின் போது ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். இந்த ஆயுத அமைப்பின் வளர்ச்சி எல்லா வகையிலும் தற்காப்புக்கான தேசத்தின் திறன்களை அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத ஏவுகணை சோதனையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

முதன்முறையாக துனிசியாவில் பிரதமராகும் பெண் !

வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டிற்கு முதல்முறையாக நஜ்லா பவுடன் ரோம்தனே என்ற பெண் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உயர் கல்வி அமைச்சகத்தின் இயக்குனரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர்.

கடந்த ஜூலை மாதம் நாட்டின் அதிபர் கயிஸ் சயித் முந்தைய அரசை கலைத்து உத்தரவிட்டதை அடுத்து 2 மாதங்களாக பாராளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா 10-வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

துனிசியாவின் ஜனாதிபதி புதன்கிழமை நாட்டின் முதல் பெண் பிரதமரை நியமித்தார், அவரது முன்னோடி பதவி நீக்கம் செய்யப்பட்டு பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த அவரை நியமித்தார்.

இந்த நடவடிக்கை பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திய இஸ்லாமிய கட்சியை ஒதுக்கி வைத்தது, மற்றும் துனிசியாவின் இளம் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் ஒரு சதி என்று விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாட்டை பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவது அவசியம் என்று சையத் கூறினார்.

கொங்கோ குடியரசில் 9 பெண்களை பலாத்காரம் செய்த 21 உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் !

ஆப்பிரிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 2018-ம் ஆண்டு எபோலா நோய் பரவியது. இதை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் சிகிச்சை குழுக்களை அனுப்பி வைத்தது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும், காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சிகிச்சை அளித்தனர். இவ்வாறு 100-க்கும் மேலான பணியாளர்கள் ஆங்காங்கே சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 2020-ம் ஆண்டு வரை இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதுபற்றிய தகவல் வந்தததையடுத்து தாமஸ் ராய்டர்ஸ் அறக்கட்டளை மற்றும் இன்னொரு அமைப்பு இணைந்து சுதந்திர விசாரணை மேற்கொண்டன.

அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பலாத்காரம் செய்தது உறுதியானது. 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.

இந்த செயல்களில் ஈடுபட்டதாக 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உலக சுகாதார நிறுவனத்தால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காங்கோ அரசும் தெரிவித்துள்ளது.

நானே கடைசி இறைத் தூதர் எனக்கூறிய பள்ளித் தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த பள்ளித் தலைமையாசிரியர் (பெண்) ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் லூகூர் நகரில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் தன்வீர். இவர் முகமது நபிகள் கடைசி இறைத் தூதர் இல்லை என்றும், நானே கடைசி இறைத் தூதர் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மதகுரு ஒருவர் 2003ஆம் ஆண்டு லாகூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் தன்வீர் மீது புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தன்வீரின் வழக்கறிஞர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தொடர்ந்து வாதாடி வந்தார். எனினும் அரசுத் தரப்பு வழக்கறிஞர், தன்வீரின் மனநிலை நலமாக இருப்பதாக சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

இதன் காரணமாக தற்போது மதநிந்தனை வழக்கில் தன்வீருக்குத் தூக்கு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மன்சூர் அகமத் தீர்ப்பு வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை மதநிந்தனை  தொடர்பான மத விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக மத விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன. 1987ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1,800க்கும் அதிகமானவர்கள் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனால், தனிப்பட்ட விரோதங்களுக்குப் பழிவாங்குவதற்காக மத நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா !

ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார்.

2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார்.

முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீச்சு !

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி வலென்ஸின் நகர மையத்தில் பார்வையாளர்களை சந்தித்த போது அதிபர் இமானுவேல் மக்ரனை ஒருவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏறு்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது Lyon நகரில் வைத்து முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளது.

நகரில் இடம்பெற்ற உணவகம் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமக்கு எதிராக செயற்பட்டவரின் குழந்தையை சுட்டுக்கொலை செய்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்கள் எதிர்ப்புப் படையில் இருந்த போராளியின் குழந்தையைத் தலிபான்கள் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானில் ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், நாளுக்கு நாள் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரைக் கொன்று பொதுவெளியில் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.

இந்த நிலையில் பஞ்ச்ஷிர் பகுதியில்,  தலிபான்கள் எதிர்ப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த போராளியின் மகனைத் துப்பாக்கியில் தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கன் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தலிபான்கள்  கட்டவிழ்த்துள்ளனர்.

முடிவுக்கு வந்தது ஏமன் நாட்டின் பூதக்கிணறு தொடர்பான மர்மங்கள் !

ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு என அழைக்கின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது.
அதிசய கிணறு மரமம் வௌியானது - உள்ளே அற்புதங்கள்
இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழுவினர் துணிச்சலுடன் அந்தக் கிணற்றில் இறங்கி ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் கூறுகையில், இந்தக் கிணறு குகைபோல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. மேலும் அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் இருக்கின்றன. இங்கு எந்த பூதமும் இல்லை என தெரிவித்தார்.
பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுகிறது. இது பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என மதிப்பிட்டுள்ளோம். இந்த கிணறு ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புகிறோம். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

16 வருடங்களின் பின் ஜேர்மனியில் ஏஞ்சலா மெர்கலின் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்கிறது ஜனநாயக யூனியன் கட்சி !

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ  ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்தார்.
இதற்கிடையே, அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் ஏஞ்சல் மெர்கல் போட்டியிடவில்லை. அவருக்கு பதில் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் சார்பில் ஆர்மின் லஷெட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரி கட்சியான ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஒலாப் ஷோல்ட்ஸ் போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு நேற்று காலை முடிவுகள் வெளியாக தொடங்கின.
இதில் ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி நாட்டில் 16 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை சிறிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி 29.5 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், இரு கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் ஆட்சி அமைக்க தங்களுக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

“ஆப்கானில் ஆண்கள் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ தடை.” – தலிபான்களின் புதிய சட்டம் !

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று முடி திருத்துவோருக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என முதலில் தெரிவித்த நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்தனர்.

மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறந்த தலிபான்கள், மாணவிகள் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. உயர்கல்விக் கூடங்களில் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பறையும், இருதரப்பும் பார்க்காத வகையில் திரையிடப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 1996-ம் ஆண்டுதலிபான்கள் ஆட்சி வருமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்கள் தாடியை மழிக்கவோ அல்லது தாடியை ட்ரிம் செய்யவோ கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்குத் தலிபான்கள்உத்தரவிட்டுள்ளனர். தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சலூன் கடைக்காரர்கள், முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் ஆலோசனை நடத்தினோம்.

அந்தக் கூட்டத்தின் முடிவில் ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்கக் கூடாது. அவர்களின் தாடியை ட்ரிம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

தலிபான்கள் நடத்தும் ஆட்சியில் தொடர்ந்து ஏராளமான மனித உரிமைகள் நடந்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐ.நா., யுனெஸ்கோ போன்றவை கண்டித்து வருகின்றன . ஆனால், தலிபான்களின் செயல்கள் தொடர்கின்றன.