2021

2021

பாகம் 11: புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 11 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 11

தேசம்: புளொட்டின் மத்தியகுழுவில் பெரும்பாலான ஆட்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்படித்தானா?

அசோக்: அப்படியல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்ட ங்களை சேர்ந்தவங்கள்தான் அதிகம்.

இதில் தோழர் ஆதவன் மலையகம், வவுனியாவில் இருந்தவர். தோழர் முரளி வவுனியா. வாசுதேவா, ஈஸ்வரன், நான் மட்டக்களப்பு. பார்த்தன், ரகுமான்ஜான், கேதிஸ்வரன் கேசவன், திருகோணமலை. சலீம் மூதூர், சரோஜினிதேவி கிளிநொச்சி, ஆரம்ப காலம் யாழ்ப்பாணம் ஆக இருக்கலாம், இருக்கிற இடம் கிளிநொச்சி. ராஜன் பரந்தன், கிளிநொச்சி.

தேசம்: செந்தில்…

அசோக்: செந்தில் செட்டிகுளம், வவுனியா.

தேசம்: தீப்பொறியில் இருந்தவரா?

அசோக்: அதுல இல்ல உமா மகேஸ்வரனோடு கடைசி காலங்களில் முரண்பட்டு வெளியேறிவர்களில் இவரும் ஒருவர்.

தேசம்: மாறன்…

அசோக்: மாறன் ஆரம்ப காலத்தில் இருந்தவர். தெல்லிப்பளை என நினைக்கிறன். அவரைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 84 இராணுவத்தால கைது செய்யப்பட்டு ஜெ யிலில் இருந்தவர். பிறகு விடுதலையாகி புளொட்டில் வேலை செய்ததாக அறிந்தேன்.

தேசம்: இதைவிட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர்…கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருக்கிறார்கள்…

அசோக்: முதல் 17 பேர் தான். இது 83 கடைசில உருவாக்கப்படுது. 84 ஜனவரி மத்திய குழுவில் இரண்டுபேர் மேலதிகமாக, நானும் செல்வனும் பிரேரிக்கப்படுறம்…

தேசம்: ரெண்டு பேரையும் உள்ளுக்கு எடுக்கினமோ?

அசோக்: அதுல ஒரு சிக்கல் நடந்தது இரண்டு பேரும் பிரேரிக்கப்பட்டு நான் மட்டும் உள்வாங்கப்பட்டேன். செல்வன் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், செல்வனை சேர்க்கவில்லை. பிற்காலத்தில் நான், ரகுமான் ஜான் தோழரிடம் இதைப்பற்றி கேட்டேன்.

தேசம்: எதைப் பற்றி…

அசோக்: செல்வன் சேர்க்கப்படாததற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதென. ஏன் அவர் சேர்க்கப்பட வில்லை என்பது பற்றி. தற்சமயம் வேண்டாம், அவர் ஒரு பிரச்சனைக்குரிய ஆள் என்று, தோழர் பார்த்தன் கருத்து வைத்ததாகவும், அதனால்தான் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார்.

தேசம்: அவர் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பி வாரார்…

அசோக்: ஓம் திரும்பி வந்துட்டார். ஜனவரி சென்றல் கமிட்டியில் நான் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

தேசம்: இதுல கண்ணாடி சந்திரன் என்பது யார்?

அசோக்: அவர் கழகத்தில் எல்லா அதிகாரங்களுடனும் இருந்தவர். அவரைப்பற்றி பின்னாடி தளம் பற்றி வரும்போது கதைக்க வேண்டும். ஏனென்று கேட்டால், அவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உமாமகேஸ்வரன் விசுவாசி. தளத்தில் நடந்த தன்னிச்சையான பல செயற்பாடுகளுக்கு தவறான போக்குகளுக்கு முழுக்காரணமாக இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். அவருக்கு என்ன பொறுப்பு என்றே சொல்ல முடியாது. எல்லா அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. தளத்தில் ஒரு கட்டத்தில் ராணுவ பொறுப்பாளராக இருந்தார். பார்த்தன் இறந்த பின் இவரைத்தான் கட்டுப்பாட்டுக்குழு தள இராணுவப் பொறுப்பாளராக நியமனம் செய்யுது. எந்தவொரு இராணுவ பயிற்சியும், இராணுவக் கல்வியும் இல்லாத ஒருவர் இராணுவப் பொறுப்பாளாராக தளத்திற்கு நியமிக்கப்படுகின்றார் என்றால், நட்புக்காக அதிகார துபிரயோகம் எப்படி நடந்திருக்கு பார்த்தீங்களா? உலக போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்குமா…?

இந்த நேரத்தில பின் தளத்தில் இராணுவப்பயிற்சி எடுத்த, அரசியல் ரீதியில் வளர்ந்த தோழர்கள் பலர் இருந்தனர். என்ன நடந்தது என்றால், அந்த நேரத்தில் தளப் பொறுப்பாளராக தோழர் கேசவன் இருந்தார். தோழர் கேசவனுக்கும், தோழர் ரகுமான் ஜானுக்கும் கண்ணாடிச் சந்திரன் நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் நடந்தது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் எப்ப இயக்கத்தில் சேர்ந்தவர்?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு பிற்பாடு. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவர் பிறகுதான் இயக்கத்துக்கு வாரார்.

தேசம்: ஜூலைக் கலவரத்தில் வந்து 3 மாதத்திலேயே இயக்கத்தில் சேருகிறாரா?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர் பிறகு படிக்க போயிட்டார் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு. கலவரத்துக்குப் பிறகு அங்கு தொடர்ந்து படிக்கமுடியாத சூழல் வரும் போது, வேலை செய்ய வாரார். வந்து மூன்று நான்கு மாதத்திலேயே மத்திய குழுவில் வந்துட்டார். அவர் மத்திய குழுவுக்கு வந்ததே வியப்புக்குரியது ஏனென்றால், பழைய நீண்டகாலமாக முழு நேரமாக வேலைசெய்த பல தோழர்கள் இருந்தாங்க.

தேசம்: இதுக்குள்ள வேறு யாரும் இப்படி குறுகிய காலத்தில் மத்திய குழுவில் வந்தவர்களா?

அசோக்: இல்லை இவர் தான் முக்கியமானவர். மற்ற ஆட்கள் எல்லாம் நிறைய காலம் இயக்கத்துடன் வேலை செய்தவர்கள். இவர் தெரிவு தொடர்பான விமர்சனங்கள் தளத்தில் இருந்தது.

தேசம்: அது என்ன விமர்சனம்?

அசோக்: எத்தனையோ நீண்ட காலமாக வேலை செய்யும் தோழர்கள் தளத்தில் இருக்கும் போது இவர் தெரிவு செய்யப்பட்டால் விமர்சனங்கள் வரும்தானே. பழைய தோழர்கள் நிறைய பேர் இருந்தவர்கள் தானே. செல்வன் உள்வாங்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர் இருந்தவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். அகஸ்டின் செபமாலை அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் நீண்டகாலமாக. வரதன் மட்டகளப்பு தோழர். இவர்கள் எல்லாம் பழைய தோழர்கள். அவர்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை. மிகத் தீவிரமாக, தங்களுடைய வாழ்க்கையை இழந்து வேலை செய்த தோழர்கள் இவர்கள். அப்படி நிறைய தோழர்கள் இருந்தார்கள். தங்கராஜா தோழர். தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். நீண்ட காலமாக இருந்தவர். இவர்கள் யாரையுமே இவர்கள் தெரிவு செய்யல்ல.

அத்தோடு பெண்கள் பிரதிநித்துவம் மத்திய குழுவில் மிகக்குறைவு. சரோஜினிதேவி மாத்திரமே இருந்தாங்க. ஜென்னியை எடுத்திருக்க முடியும். ஜென்னி தொடர்பாய் பிற்காலத்தில் விமர்சனம் இருக்கலாம். பிற்காலத்தில் எல்லாப் பேர்களை பற்றியும் விமர்சனம் இருக்குத்தானே. ஆனா அன்றைய நேரத்தில ஜென்னி தீவிரமான செயற்பாட்டாளர். காந்தீயத்தின் தொடக்க காலத்திலிருந்து புளொட்டிக்கு வந்தவர். ஆனா விரும்பல்ல. வவுனியா தோழர் செந்தில் என்று. மிகத்தீவிரமாக வேலை செய்தவர். யாழ்ப்பாண யுனிவசிற்றில படித்துக் கொண்டு வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் வேலை செய்தவர். இப்படி நிறைய தோழர்கள் பெயர்கள் ஞாபகம் இல்ல.

தேசம்: இந்த சென்றல் கமிட்டி உறுப்பினர்களை யார் தெரிவு செய்கின்றார்கள்?

அசோக்: கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த சந்ததியார், உமா மகேஸ்வரன், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் இவங்கதான். இது தனிநபர் அதிகாரங்களுக்கு ஊடாகத்தான் இந்த தெரிவுகள் நடந்தன.

தேசம்: ரகுமான் ஜானுக்கும் அந்த அதிகாரம் இருந்ததா?

அசோக்: ஓம் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஐந்து பேருக்கு தான் அந்த அதிகாரம் இருந்தது. இல்லாட்டி கண்ணாடி சந்திரனை எவ்வாறு கொண்டு வர முடியும்? அதிகாரம் இருந்தபடியால் தானே. இவர்கள்தான் புளொட்டின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். வழிகாட்டிகள். உமா மகேஸ்வரனின் தன்னிச்சையான போக்குகளுக்கு, அதிகார செயற்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக இருந்தவங்க இவர்கள்தான். ஆரம்பத்திலேயே நாம் நேர்மையாக ஐனநாயக மத்தியத்துவ பண்புகளோடு தன்னிச்சையான போக்கு, குழு வாதம் தனிநபர் விசுவாசம், திறமையற்ற நபர்களை உள்வாங்கல் போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டிருந்தால் உமா மகேஸ்வரனின் அதிகாரத்தையும் புளொட்டின் அழிவையும் தடுத்திருக்க முடியும்தானே. புளொட்டின் உட் கொலைகளுக்கும் அதன் சீரழிவுகளுக்கும் காரணமான உமா மகேஸ்வரனினால் பயன்படுத்தப்பட்ட அனேகர் சந்ததியாரல் கொண்டு வரப்பட்ட ஆட்கள்தானே. இவர்களை சரியான வழியில் அரசியல் சிந்தனை கொண்டவர்களாக ஏன் சந்ததியாரல் மாற்றமுடியாமல் போயிற்று?

யோசித்துப்பாருங்க.

தேசம்: அப்படிப் பார்த்தாலும் உமாமகேஸ்வரன், கண்ணன் இவர்கள் இரண்டு பேரும் வேற ஒரு அரசியலில் இருந்து வந்தவர்கள். அங்கால ரகுமான்ஜான், சந்ததியார், சலீம் மூன்று பேரும் கிட்டத்தட்ட தீப்பொறி…

அசோக்: சந்ததியாருக்கும் தீப்பொறி இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பிறகு கதைப்பம். உண்மையில் விமர்சன பூர்வமாக ஆராய்ந்தோமானால் ஆரம்பகால புளொட்டில் அதிகாரம் என்பது உமாமகேஸ்வரன் போன்றவர்களிடம் மட்டும் இருக்கல்ல. சந்ததியார், ரகுமான்ஜான், கேசவன் போன்ற தோழர்களிட மும் இருந்தது. இவர்கள் புளொட்டை இடதுசாரி அரசியல் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பாக வளர்த்தெடுத்து இருக்க முடியும். இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் தானே… ஆரம்ப காலத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உமாமகேஸ்வரன் மீதோ, கண்ணன் மீதோ விமர்சனங்கள் வைக்க முடியாது . சந்ததியார், ரகுமான்ஜான் இவர்களோடு இணைந்துதானே எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானித்துள்ளார்கள்.

உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி தன்னிச்சையான போக்கு கொண்டவர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக உருவாகக் கூடிய சூழலை சந்ததியார், ரகுமான்ஜான் இல்லாமல் செய்திருக்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் ஆளுமைகொண்ட சக்திகளை மத்தியகுழுவில் உள்வாங்கி இருக்க வேண்டும். இவர்களும் நேர்மையாக முன் மாதிரியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது கோஸ்டி சேர்த்ததுதானே. இவர்களே தவறான வழிகாட்டிகளாகத்தானே இருந்திருக்காங்க. சந்ததியார், உமாமகேஸ்வரன் முரண்பாடு வந்ததன் பிறகு தான் உமாமகேஸ்வரன் சுயரூபம் தெரியுது. இந்த மோசமான அதிகாரத்தை தனிநபர் ஆதிக்கத்தை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியதில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இதை முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது உணரமுடிந்தது. ரகுமான் ஜான் தோழர் மிகத்திறமையாவர்.அரசியல் திறனும் இராணுவத்திறனும் கொண்டவர். கேசவன் தோழர் இடதுசாரிய அரசியல் கொண்டவர். சந்ததியாரும் அரசியல் ரீதியில் வளர்ந்தவர். இவர்கள் சரியான வழிகாட்டிகளாக இருந்திருந்தால் பின் தளத்தில் புளொட்டை இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்திருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இவங்களுக்கு நிறைய இருந்தது.

தேசம்: இந்த மத்திய குழு கட்டுப்பாட்டு குழு தொடர்பாக நீங்கள் முதல் தரம் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது…

அசோக்: இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது. 84 ஜனவரி கேகே நகரில் தான் மீட்டிங் நடக்குது. எனக்கும் ஒரு கற்பனை தானே மீட்டிங் தொடர்பாக. இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எல்லாம் படிச்சுப் போட்டு, இது தொடர்பான கற்பனையோடு, மத்திய குழுக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும், அரசியல் சித்தாந்த விவாதங்கள் நடக்கும் என்று சொல்லி அங்க போனால்…

முதலாவது சென்றல் கமிட்டி மீட்டிங்கில விவாதங்கள் எல்லாம் சம்பவங்களாத்தான் இருந்திச்சு. அதுக்குப் பிறகு நடந்த சென்றல் கமிட்டீ மீட்டிங்கில இந்தியா கொடுத்த ட்ரெய்னிங் தொடர்பாக பேசப்பட்டது. எல்லா இயக்கங்களுக்கும் ட்ரெய்னிங் கொடுக்க இந்தியா முடிவு பண்ணியிருந்த நேரம். புளொட்டுக்கு கொடுக்கபடவில்லை. அப்ப புளொட் ரெயினிங் எடுக்கப்போவதா இல்லையா என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அது அரசியல் கருத்தியல் நடைமுறை சார்ந்த பிரச்சனை தானே.

தேசம்: ஓ.

அசோக்: ஆனால் அந்த விவாதம் கருத்தியல் சார்ந்து பெருசா நடக்கேல. கருத்தியல் சார்ந்து இந்தியா தரும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள் இதில் எதிர்கால சிக்கல்கள் எதைப்பற்றியும் உரையாட வில்லை. அவர்களை என்னென்று கையாளுவது என்பது பற்றி எதுவுமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான ஆட்கள் கட்டாயம் ட்ரெய்னிங் எடுக்கனும் என்ற நிலைப்பாட்டில்தான் கதைத்தாங்க. ரெயினிங் எடுப்பது பிரச்சனை அல்ல. குறைந்தபட்சம் இதை அரசியல் உரையாடலாக கொண்டு போய் இருக்கமுடியும். இவர்கள் யாருமே தயாராக இல்லை. டெலோவும் எடுக்குது. புலிகளும் எடுக்குது. ஈபிஆர்எல்எஃப்பும் எடுக்குது. நாங்களும் எடுக்கப் போவம் என்டு தான் ஒரு முடிவுக்கு வாராங்க. அதுல வார நன்மை தீமை – அதனால வாற பிரச்சனை இது பற்றி யாரும் ஆராயத் தயாராக இல்லை.

தேசம்: இந்த வங்கம் தந்த பாடம் எந்தகால கட்டத்தில வெளியிடப்பட்டது…?

அசோக்: வங்கம் தந்த பாடம் எண்பத்தி மூன்று காலகட்டத்தில் வெளியானது.

தேசம்: அப்படி என்டா நீங்க போன கூட்டத்திற்கு முன்பாகவே அது வெளியிடப்பட்டுட்டு விட்டது?

அசோக்: அதுக்கும் மத்திய குழுவுக்கும் தொடர்பில்லை. அது இலங்கையில் வெளியிடப்பட்டது. அது மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு அது வெளியிடப்பட்டது. நாங்க மாவட்ட அமைப்பாளர்கள் இருந்தம்தானே அந்த காலத்திலேயே அடிக்கப்பட் டது…

தேசம்: அதாவது இதை வெளியிட்ட அவர்களுக்கு ஒரு கருத்தியல் இருக்குதானே…?

அசோக்: ஓ நிச்சயமாக.

தேசம்: அப்ப இந்தியா தொடர்பான அரசியல் மற்ற ஆபத்துகள் பற்றி விவாதிக்கப்படலையா..?

அசோக்: தமிழ் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் எங்களிடம் சரியான அரசியல் பார்வை இருந்தது. அதன்ற வெளிப்பாடுதான் வங்கம் தந்த பாடம். எங்களிடம் இருந்த தெளிவு மத்திய குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. மத்தியகுழு எப்படி உருவாக்கட்டது என்று முன்னமே கதைத்திருக்கிறம். புளொட்டில் ஆரம்ப காலங்களில் இருந்த லும்பன்களும், கடடுப்பாட்டுக்குழுவில் இருந்த உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான்ஜான் விசுவாசிகளும்தானே மத்தியகுழுக்கு தெரிவு செய்யப்பட்டவங்க. அரசியல் கோட்பாட்டு நடைமுறை கொண்ட நேர்மையான தோழர்கள், எந்த முடிவெடுக்கும் அதிகாரமற்றவர்களாக வெளியில்தானே இருந்தாங்க.

மாவட்ட அமைப்புகளில் ஏனைய பொறுப்புக்களில் ஈழத்தில் இருந்த தோழர்கள் கருத்தியல் சார்ந்து வளர்ந்தவர்கள். இந்த மாவட்ட அமைப்பாளர்கள் எல்லாரும் மத்திய குழுவுக்கு போ கவில்லைத்தானே. மத்திய குழுவில் சிறை உடைப்பிலிருந்து வெளியே வந்தாக்கள்தான் அதிகம் பேர்.

தேசம்: இதில மாவட்ட பிரதிநிதிகளோ – மாவட்ட அமைப்பாளர்களோ இந்த மத்திய குழு அமைப்பில இருக்கல…? ஒராள் ரெண்டு பேர் இருந்திருக்கலாம்…?

அசோக்: முரளி, ஈஸ்வரன், குமரன் நான் எல்லாம் இருந்தனாங்க. எங்களை விட வளர்ந்த வேறு தோழர்கள் இருந்தார்கள். அவர்களையும் உள்வாங்கி இருந்திருக்கலாம்.

தேசம்: இந்தியாட்ட பயிற்சி பெறுவதா…? இல்லையா …? என்ற விவாதம் வங்கம் தந்த பாடம் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு கருத்தியல் ரீதியான விவாதமா அங்க நடைபெறல..?

அசோக்: இது ஒரு நல்ல கேள்வி. வங்கம் தந்த பாடம் இந்தியாவுக்கு, அதனுடைய செயற்பாடுகளுக்கு எதிரான புத்தகம். வங்களாதேசில் இந்தியாவினுடைய வருகையும், அதனுடைய ஆக்கிரமிப்பு பற்றிய அது தொடர்பான ஒரு புத்தகம். வங்கம் தந்த பாடம் புத்தகத்தை நாங்க படிச்சிருப்பம் தானே. எனவே இது தொடர்பான பார்வையும், இந்தியா தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தானே வேணும். அது எங்கேயும் வரலை. அப்படிப் பார்த்தால் புளோட்டா இந்த புத்தகம் அடிச்சது என்ற ஒரு கேள்வி தான் வரும் உங்க கிட்ட. அதுக்குப் பிறகு நான் கலந்து கொண்ட மத்திய குழுக் கூட்டம் எதுலயும் இந்த இந்திய ஆபத்து தொடர்பா பெருசா பேசப்படல. இந்த வங்கம் தந்த பாடம் எங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கணும். அது எப்பவுமே நடக்கல.

தேசம்: அந்த வங்கம் தந்த பாடத்தை யார் வெளியிட்டது. ?

அசோக்: 83ல் வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். தோழர் சந்ததியார், ரகுமான் ஜான், கேசவன் முக்கியமானவர்கள். இது மொழிபெயர்ப்பு புத்தகம். பங்களாதேஷ் இராணுவத்தில் இருந்த அபுதாகிர் என்கிற இராணுவத் தளபதி வெளியேறி J.S.D. என்ற கட்சி உருவாக்கினாங்க… மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி இது. அபுதாகிர் பங்களாதேசில் இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சதியையும் அம்பலபடுத்தினார். அமெரிக்க C.I.A யும், இந்தியாவும் சேர்ந்து அவரை தூக்கில போட்டுவிட்டது. அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவின் தமிழாக்ககம்தான் இது.

தேசம்: இது வெளியிடப்பட்டது உமா மகேஸ்வரனுக்கு தெரியுமா..?

அசோக்: தெரியும். தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் இது அச்சிடப்பட்டது.

தெரியாமல் செய்திருந்தால், பிரச்சனை வார காலத்தில் அது ஒரு பெரிய குற்றச்சாட்டா எங்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் தானே. அப்ப அது எங்கேயும் யாருக்கும் எதிராக வைக்கப்படல. ஆனா சந்ததியார் தொடர்பாக இந்தியா ரோவிடம் சந்ததியார்தான் இதனை வெளியிட்டவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக அறிந்தேன். எங்களுக்கு எதிராக குறிப்பாக எனக்கு, தங்கராஜா தோழர், சண்முகலிங்கம் போன்றவர்களுக்கு எதிராக நாங்க JVP யில் இருந்து போனபடியால், சீனாச்சார்பானவர்கள் என்றகுற்றச்சாட்டு ரோவிடம் சொல்லப்பட்டது.

அதிகாலையில் பற்றியெரிந்த 13 மாடி கட்டிடம் – 46 பேர் உடல் கருகி பலி !

தெற்கு தைவானில் உள்ள கயோசியுங் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் வசித்து வந்த 13 மாடி அப்பார்ட்மென்ட் கட்டிடத்தின் ஒரு பகுதியில்  இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல தீ கட்டிடம் முழுவதும் பரவியது.
13 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 46 பேர் உடல் கருகி துடிதுடித்து  உயிரிழந்த பரிதாபம்..! | southern Taiwan Kaohsiung city fire...46 people dead
அதிகாலை என்பதால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். தீ வேகமாக பரவ அவர்களால் எளிதாக தப்பிக்க முடியவில்லை. 100-க்கும் மேற்பட்டோர தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
55 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியாத நிலையில், அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீட்புப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி – தமிழக அரசுக்கு பா.ஜ.க எச்சரிக்கை !

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற நபர் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் அண்மையில், சென்னையில் கைது செய்யப்பட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாகி வருவதாகவும் தி.மு.க அரசு கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை உட்பட 12 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி கூடங்கள் மற்றும் மறைவிடங்களில், தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையிட்டு வருகிறது.  ஆகவே  தமிழக அரசும், காவல் துறையும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து, இந்த தீய சக்திகளை அடையாளம் கண்டு முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அண்மையில் கைது செய்யப்பட்ட சபேசன் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இயக்க முயற்சி செய்ததாக தேசிய புலனாய்வு நிறுவனம் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது. சமீப காலமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்ற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ் தேசியம், தனி ஈழம் பேசும் பிரிவினைவாத அமைப்புகளும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மாவோயிச தீவிரவாத இயக்கங்கள் பலவும் தி.மு.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே எனவும் பதிவிட்டள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“வடகொரியாவின் இராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்’’ – வடகொரியா சூளுரை !

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது இந்த பதற்றத்துக்கு மத்தியில் அண்மை காலமாக வடகொரியா தனது இராணுவ திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அண்டை நாடுகளை அதிரவைத்தது.

இந்த நிலையில் தனது ராணுவபலத்தை உலகுக்கு காட்டும் வகையில் மிகவும் அரிதான ஆயுத கண்காட்சியை வடகொரியா நடத்தியது.

தலைநகர் பியாங்யாங்கில் நடந்த இந்த கண்காட்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் உள்பட பல முக்கியமான ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ‘‘அமெரிக்காவின் விரோதபோக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்’’ என சூளுரைத்தார்.

திருகோணமலையிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது !

திருகோணமலை விடுதி ஒன்றிலிருந்த சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கிடையில் பேச்சு – அமெரிக்கா எங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என தலிபான்கள் வலியுறுத்தல் !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதை  அடுத்து கடந்த ஓகஸ்ட மாதம்  தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களது ஆட்சி அங்கு வந்துள்ளது. ஏற்கனவே 5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது பல்வேறு கொடூர செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான், சவுதி அரேபியா தவிர எந்த நாடுகளும் அப்போது தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

ஆனால் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் பழைய காலத்தை போல மோசமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அறிவித்தார்கள்.

ஆனாலும் கடுமையான அடக்குமுறைகளை தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரண தண்டனை உள்ளிட்ட கொடூர தண்டனைகளையும் வழங்கி வருகிறார்கள். இதனால் மற்ற நாடுகள் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்க தயங்கி வருகின்றன.

இந்தநிலையில் பரம எதிரியான அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள தலிபான்கள் முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கட்டார் நாட்டில் உள்ள டோகாவில் இருதரப்பு பிரதிநிதிகளும் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள் தலிபான்கள்.

அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமையும்,நேற்றும் இரு தரப்பினருக்கும் இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இதை ஏற்றுக் கொள்ள தலிபான்கள் மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது. அதிலும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் செயல்படாதது போல் ஒடுக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாகும்.

ஆனால் தலிபான்கள் தங்கள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு அமெரிக்கா செய்யவில்லை என்றால் ஐ.எஸ். பயங்கரவாதிகளையும் மற்ற பயங்கரவாதிகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று தலிபான்கள் எச்சரித்தார்கள்.

எனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன வி‌ஷயங்கள் பேசப்பட்டது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது? என்பது பற்றி அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

“டெல்லியை அழிக்க 5 நிமிடம் போதும்.” – பாகிஸ்தான் அணுகுண்டு தந்தையின் உயிரை காவுவாங்கிய கொரோனா !

பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டவர் அப்துல் காதிர்கான். இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, எதிலும் இந்தியாவுடன் போட்டி போடும் பாகிஸ்தானும் அணுகுண்டு உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அப்போது, பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கியதால், அந்நாட்டினர் இவரை பெருமையுடன் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைத்து வந்தனர்.

85 வயதான அப்துல் காதிர்கான் சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, உயிருக்கு போராடினார். இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் அப்துல் காதிர்.
இவரது மறைவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் அப்துல் காதிர் கான் அளித்த பேட்டியில், ராவல் பிண்டி நகலிருந்து வெறும் 5 நிமிடங்களில் டெல்லி தாக்கி அழிக்க முடியும் அதற்கான வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை.” – தாய்வான் அறிவிப்பு !

சீனா  அமைதியான முறையில் தாய்வானுடன் ஒன்றிணைய விரும்புகிறது. தாய்வான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. சீனா  தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும். “ என சீன ஜனாதிபதி அண்மையில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை என தாய்வான் அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.

தாய்வான் தேசிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய்வான் செய்யும் சாதனைகள் அதிகரிக்க அதிகரிக்க, சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் அதிகரிப்பதாக கூறினார்.

மேலும் சீனாவுடன் சுமுகமான உறவை விரும்புவதாக தெரிவித்த சாய் இங்-வென் அதேசமயம் சீனாவின் அழுத்தத்துக்கு தாய்வான் மக்கள் அடிபணிவார்கள் என்ற மாயை இருக்கக்கூடாது என்றார்.

டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை !

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவரல் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஒட்டங்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ஓட்டங்கள் எடுத்தார். ஹெட்மையர் 37 ஓட்டங்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார்.
சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிளசிஸ் ஒரு ஓட்டத்தில் ஆட்ட்மிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ரொபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஓட்டமெதுவும் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 70 ஓட்டங்களில் வெளியேறினார். தோனி ஆடுகளம் வந்த போது அப்போது சென்னை அணிக்கு 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, இறுதியில் டோனி 6 பந்துகளில் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க
இறுதியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வழங்கப்பட்டது.

கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் தொடரும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு – அதிருப்தியில் சமூக ஆர்வலர்கள் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் தொடரும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 6 வாரங்கள் நிரம்பிய பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபடக் கூடாது என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தை ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்த இந்தச் சட்டம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள், பெண் அமைப்புகள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தின. மேலும், இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை வியாழக்கிழமையன்று விசாரித்த நீதிபதி ராபர்ட் பிட்மேன், பெண்கள் தங்கள் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது சட்டவிரோதமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான மேல்முறையீடு டெக்சாஸ் மாகாணம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நியூ ஒர்லியன்ஸ் நீதிமன்றம் கருக்கலைப்புக்கு எதிரான தடை தற்காலிகமாகத் தொடரும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.