2021

2021

கைப்பந்து வீராங்கனையின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தலிபான்களால் பெண் வீராங்கணை ஒருவர்,  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மகளிர் தேசிய கைப்பந்து அணி வீராங்கணை மஹ்ஜூபின் ஹகிமி. இவர் இந்த மாதம் தொடக்கத்தில் காபுல் நகராட்சி கைப்பந்து கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டில் பங்கேற்றுள்ளார். இதன்பிறகு, மஹ்ஜூபின் ஹகிமி தலிபான்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்துவிட்டதாகவும், இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டதாகவும் கைப்பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, பயிற்சியாளர் மேலும் கூறுகையில், “கைப்பந்து போட்டியில் பங்கேற்ற வீராங்கணை மஹ்ஜூபின் ஹகிமி இந்த மாத (அக்டோபர்) தொடக்கத்தில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதுப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று தலிபான்கள் மிரட்டி வைத்துள்ளனர்.

மஹ்ஜூபின் மட்டும் இல்லாமல், கைப்பந்து விளையாட்டு அணி உள்பட மற்ற விளையாட்டு வீராங்கணைகளையும் தலிபான்கள் வீடு தேடி மிரட்டி வருகின்றனர். வீட்டைவிட்டு வெளியேறி கண்காணாத இடத்திற்கு போய்விடும்படியும் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், வீராங்கணைகள் விரக்தியிலும், பயத்திலும் உள்ளனர்” என்றார்.

பாகம் 12: சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 12

தேசம்: 83 ஜூலைக் கலவரம். இது இலங்கையில் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி. விடுதலை அமைப்புகள் சாதாரண தாக்குதல்களை ஒரு ராணுவத்தையும் போலீசையும் அடித்து துவக்கு பறித்த நிலைமை போய், மிகத் திட்டமிட்ட ஒரு தாக்குதல் 83 ஜூலை 23 இரவு நடக்குது. அந்தத் தாக்குதலில் தான் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய உடல் மறுநாள் மாலை கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து கலவரம் ஆரம்பிக்குது. அந்த காலகட்டத்தில் இந்த விடயங்களை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்? என்ன மாதிரி அந்த காலகட்டத்தில் உங்கள் உணர்வுகள் இருந்தது? எப்படி நீங்கள் அதை உள்வாங்கிக் கொண்டீர்கள்? எங்கே இருந்தீர்கள் நீங்க எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது?

அசோக்: ஜூலை இனக்கலவரம் ,படுகொலைகள் நடக்கும்போது எனது கிராமமான களுதாவளையில்தான் நான் இருந்தேன். அது ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான கவலையான மனநிலையை எங்களுக்கு தந்தது. சிங்கள அரசு மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்த வெரித்தாஸ் வானொலியில் தான் இந்த செய்திகளை அதிகமாகக் கேட்கக்கூடிய தரக்கூடியதாக இருந்தது. வேற வானொலிகளும் இல்ல. ஊடகங்களும் பெருசா இல்லைதானே கிழக்கு மாகாணத்தில். ஒன்றேயொன்று வெரித்தாஸ் வானொலி தான்.

தேசம்: அந்த நேரம் முக்கியமாக இருந்தது வெரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகள்…

அசோக்: அன்றைக்கு இனக்கலவரம் பற்றிய ஒரளவு உண்மையான செய்திகளை கேட்கிறதென்றால் வெரித்தாஸ் வானொலியில் தான் கேட்க வேண்டும். அடுத்தது டாக்டர் ராஜசுந்தரம் படுகொலை என்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் காந்தியத்தில் இருந்தவர்கள். அவரோடு பழகியவர்கள். அந்த வெலிக்கடை படுகொலை என்பது உணர்வுபூர்வமான கவலையை அளித்தது. எங்களுக்கு மனக் கொந்தளிப்பை கொடுத்தது. 53 பேர் கொல்லப்பட்டு, பெயர்களெல்லாம் அறிவித்தார்கள். வெரித்தாஸ் வானொலியில் அதை விவரமாக சொன்னார்கள். ஒரு ஊடகத்தால் எத்தகைய தாக்கத்தை கொடுக்கமுடியும் என்பதை அக்காலங்களில உணர்ந்து கொள்ளமுடிந்தது. உண்மையிலேயே அந்த இரவுதான், நிறைய பேரை இயக்கங்களுக்கு போக வேண்டும் என்ற உணர்வை கொடுத்ததும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக போராட வேண்டும் சிந்தனையை கொடுத்ததும் அதுதான். இந்த படுகொலைகள் எங்க கிராமத்தில் இளைஞர்கள் மக்கள் மத்தியில் பெரிய சோகத்தை கோபத்தை, கொடுத்தது. மற்றக் கிராமங்களைப் பற்றி தெரியல. எங்க கிராமத்தில் அரசியல், இலக்கியம், சமூக அக்கறை கொண்ட குருப் ஒன்று இருந்தது ஆரம்பத்திலிருந்து. அவங்களுக்கு இயக்கங்களுக்கு போவதற்கான தூண்டுதலாக இது இருந்தது. பிறகு எங்கட கிராமத்தில் இருந்து நிறைய தோழர்கள் புளொட்க்கு வந்தார்கள்.

தேசம்: அந்த சம்பவத்துக்குப் பிறகு..

அசோக்: எங்கட கிராமத்து பையன்கள் இனவாத தாக்கத்தையோ, இனவாத ஓடுக்குமுறைகளையோ நேரடியாக அனுபவிக்காதவர்கள். கருத்தியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றி அறிந்திருந்தார்களேயொழிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படாத ஆட்கள். அவர்களை சிந்திக்க வைத்தது இப்படியான சம்பவங்கள் தான்.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் நீங்கள் முக்கியமான உறுப்பினராக இருக்கிறீர்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பாரிய தாக்குதல்கள் எதையும் பெரிய அளவில் செய்யவில்லை. நான் நினைக்கிறேன் விமானப்படை தாக்குதல் ஒன்றுதான் தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் செய்தது. அதுவும் திட்டமிடப்படாத தாக்குதல் என்று நினைக்கிறேன்.

அசோக்: யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம், குறிகட்டுவான் கடல்படையினர் மீதான தாக்குதல் ஆரம்பத்தில் நடந்தது. இந்த தாக்குதல்கள் விமர்சனங்களுக்கு உரியவை.

தேசம்: அப்படியான சூழலில விடுதலைப் புலிகள் இப்படி ஒரு பாரிய தாக்குதலை செய்தது சம்பந்தமா கழகத்தில் எப்படி உணரப்பட்டது. கழகமும் இப்படியான தாக்குதல்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுகள் முன்தள்ளப்பட்டதா?

அசோக்: தனிநபர் பயங்கரவாதம், தனிநபர் நடவடிக்கைகள், ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக தெளிவான பார்வை, சுத்த ராணுவக்கண்ணோட்டத்திக்கு எதிரான கருத்தியல் சார்ந்த அரசியல் பார்வை எங்கள் பலரிடம் இருந்தது. இந்தத் தாக்குதல் வெறுமனே அரசாங்கத்தை பலமடையச் செய்யும் என்பதும், எங்களின் போராட்டத்தை பலவீனமடையச் செய்யும் என்பதும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு பயன்படுத் தப்படும் என்பதும் தெரியும். எங்கட போராட்டம் மக்களை அனுசரிப்பதனூடாக, அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கூடாகத்தான் கொண்டு வரவேண்டுமென்று நாங்க விரும்பினம். எங்களுக்கு சீனா, வியட்நாம், கியூபா போராட்டங்களும் படிப்பினைகளும் முன்மாதிரியாக இருந்தது தானே.

தேசம்: அந்த நேரம் இவைகள் பற்றி எல்லாம் நீங்கள் வாசித்திருக்கிறீர்களா…

அசோக்: ஓம். அனேகமாக கழகத்தில் நிறைய தோழர்களிடம் அரசியல் வாசிப்பு இருந்தது. மக்கள் இராணுவம், முண்ணனிப்படை பற்றியெல்லாம் அரசியல் அறிவு ஒரளவு கொண்டவர்களாக நாங்க இருந்தோம். எங்களுக்கு தெரியும் இப்படியான தாக்குதல்கள் அரசாங்கத்தை பலமடைய வைக்கும். எங்களை பலவீனமடைய வைக்கும் என்று. அதுல தெளிவா இருந்தனாங்கள். புலிகள் செய்றதால நாங்களும் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயம் எங்களிடம் இல்லை. ஆனா புளொட்டில் பல தோழர்களிடம் புலிகளைப்போல் தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அடுத்தது மக்கள் போராட்டம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தனாங்கள். காந்தியமும் அதுதானே. மக்கள் மயப்படுத்தல்… காந்தியத்தை புளொட் பயன்படுத்தியதற்கான காரணமும் அதுதானே. காந்தியத்துக்கூடாக துரிதமாக மக்களை அரசியல் மயப்படுத்தலாம், அதை அடிப்படையாக பயன்படுத்தலாம் என்ற போக்குத்தான் எங்களிடம் இருந்தது. இது தவறான போக்கு என்பது வேறு.

இதுபற்றி முன்னமே கதைத்திருக்கிறம். யாழ்ப்பாணம் தாண்டிய ஏனைய பிரதேசங்களில் அரசியல் பாசறைகள் நிறைய நடத்தியிருக்கிறோம். அரசியல் வாசிப்புகள் நிறைய இருந்தது. அப்போ ஓரளவு எங்களுக்கு தெரிந்தது இவ்வாறான தாக்குதல்கள் எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத் தராது என்று. இயக்கங்கள் எல்லாத்தையும் வென்று தரும் என்ற எண்ணப்பாட்டை மக்களிடம் உருவாக்கி, மக்களை வெறும், பார்வையாளர்ளாகவும் ஆக்கிவிடும் என்று நினைத்தோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட முழுமையான போராட்டம் அவசியம் என்பதில் மிகக் கவனம் இருந்தது.

அடுத்தது விடுதலைப்புலிகள் தொடர்பான விமர்சனப் பார்வை எங்களிடம் இருந்தது. இவ்வாறான தாக்குதல்களைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று. அவர்களிடம் மக்களை அரசியல் மயப்படுத்துவது என்ற சிந்தனை இருக்கவில்லை தானே. அவங்கள் சுத்த இராணுவாதம் கொண்ட ஒரு மரபு ரீதியான ராணுவமாகத்தான் வளர்ந்து வந்தார்கள்.

தேசம்: அதை நீங்கள் அந்தக் காலகட்டத்தில் உணர்ந்திருந்தீர்களா?

அசோக்: அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் தெளிவாக உணர்ந்து இருந்தம். புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. புலிகளோடு இருந்த ஆட்கள் தானே, புளொட்டுக்குள்ள இங்கே வந்தவர்கள். அவர்கள் புலிகள் பற்றிய பல விமர்சனங்ளை சம்பவங்களை சொல்வாங்க.

தேசம்: புலிகளுக்கு உள்ளேயே நடந்த கொலைகள் தொடர்பாய் அது சம்பந்தமாக என்ன அறிந்திருந்தீர்கள்?

அசோக்: கூடுதலாக புலிகளுக்குள் இருந்து வந்தவர்களுடைய அபிப்பிராயம்… அங்க நடந்த தனிநபர் படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனம் இருந்தது. கணேசய்யர், நாகராஜ் வாத்தி, உமாமகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம், கண்ணன் நிறைய பேரிட்ட கொலைகள் தொடர்பாக மிக அதிருப்தி இருந்தது. புலிகளுடைய தனிப்பட்ட தாக்குதல்கள், தனிநபர் பயங்கரவாதம். பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள்… கொலை செய்யப்பட்ட முறைகள்…

தேசம்: சில கொலைகளை சொல்லுங்கள்

அசோக்: பற்குணம், மட்டக்களப்பு மைல்கல், கண்ணாடி பத்மநாதன்… அது ஒரு நீண்ட கொலை பட்டியல். எல்லாம் சந்தேகத்தின் அடிப்படையிலும், இந்த தனிநபர் தாக்குதலுக்கு ஊடாக, படு கொலைகளுக்கு ஊடாக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தான். அது கடைசி வரைக்கும் நீடிக்குது.

தேசம்: இந்தக் கொலைச் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கேக்கையும் நீங்கள் முதலில் குறிப்பிட்ட மாதிரி ராகவன், நித்தியானந்தன், நிர்மலா எல்லாரும் அப்பவும் விடுதலைப் புலிகளோடு தான் இருக்கினமா?

அசோக்: நித்தியானந்தன், நிர்மலா அந்தக் காலகட்டத்தில் இல்லை. அதுல ராகவன் மாத்திரம்தான் ஆரம்பகால உறுப்பினராக மிக நெருக்கமாக பிரபாகரனோடு இருந்து வாரார். இவர்கள் பிற்காலத்தில்தான். நான் நினைக்கிறேன், 80க்கு பிற்பாடுதான் நிர்மலா, நித்தியானந்தன் எல்லாம் அவர்களுடைய ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள் என. இவர்களும் ஒரு முழுநேர ஊழியர்கள் இல்லை தானே. ஆதரவு தளத்தை வழங்கியவர்கள். பிறகு புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே போனார்களேயொழிய, முழு நேர உறுப்பினர்களாக இருக்கவில்லை. கருத்தியல் சார்ந்து அறிக்கைகள் எழுதுவதற்கு, கருத்தியல் சார்ந்து விளக்கம் கொடுக்கிறதுக்கு, நியாயப்படுத்துவதற்கு, ஒரு கிரவுட் தேவைதானே. அதற்கு இவங்க தேவைப்பட்டாங்க. அந்த நேரத்தில உணர்வுகள் என்ற ஒரு பத்திரிகையும் யாழ்ப்பாணத்தில புலிகள் வெளியிட்டவர்கள். அப்ப அதற்கு கட்டுரை எழுதுவதற்கான தேவையும் இருந்திருக்கும். ஆனா இவர்கள் சிறையில் இருந்து தப்பி இந்தியா சென்ற பின் எல்ரீரீஈயில் முழு நேரமாக வேலை செய்கிறாங்க.

ஒரு சந்தேகம் என்னிடம் உண்டு. அந்த நேரத்தில ஈபிஆர்எல்எப், ஈரோஸ், புளொட் என மார்ச்சியம் பேசிய இயக்கங்கள் இருக்கும் போது, வலதுசாரித்தனமும், தனிநபர் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் தங்கள் அரசியலாக் கொண்ட புலிகளுக்கு இவங்க எப்படி ஆதரவளிச்சாங்க என்று. ராகவனை விட்டுத்தள்ளுங்கள். அவர் அன்று தொடக்கம் இன்று வரை அதிகார நலன்களோடு, அந்த நபர்களோடு கூட்டுச்சேரும் ஒரு அடிமை மனநிலை கொண்டவர். அப்பவும் சரி இப்பவும் சரி நேர்மையற்ற மனிதர் அவர். நான் அவரை அறிந்த வரை சுயமான அரசியல் தேர்வு அவரிடம் இருந்ததில்லை. இதைப்பற்றி முன்னமே கதைத்திருக்கிறன். ஆனா நித்தியானந்தன் சேர் , நிர்மலா அப்படியானவர்கள் அல்ல. அரசியல் கருத்தியல் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் புலிசார்பு நிலையை எடுத்ததிற்கான காரணங்கள் இருக்கக்கூடும். இவர்கள் எல்லோருடனும் உரையாடல் செய்ய வேண்டும். புலிகள் படுகொலைகளையும், அராஜ கங்களையும் செய்த காலங்களில் இவங்க புலிகளோடு இருந்திருக்காங்க.

தேசம்: 83 ஜூலை படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களில் யாரை யாரையெல்லாம் அறிந்து வைத்திருந்தீர்கள்?

அசோக்: டாக்டர் ராஜசுந்தரம் அவருடன் மாத்திரம் நெருக்கம் இருந்தது.

தேசம்: காந்தியத்துடன் இருந்தபடியால்…

அசோக்: ஆனால் நிறைய பேரை கேள்விப்பட்டிருக்கிறோம். நடேசானந்தன், குட்டிமணி, ஜெகன், கிருஷ்ணகுமார் என்று பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நேரடி உறவு இல்லையே ஒழிய, அவங்களுக்கும் எங்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்தது. எங்கட தோழர்கள், போராளிகள், எங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் என்ற உணர்வு ஒன்று இருந்தது. மற்றது படுகொலை செய்யப்பட்ட முறைகளும் வெளிவர வெளிவர பெரிய தாக்கம் வந்தது. குட்டிமணி மீது நடத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலை, அது ஒரு இனவாதத்தின் உச்சகட்டமாக தான் நாங்க பார்த்தோம். இனவாத அரசின், ஒரு அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்த திட்டமிட்ட படுகொலைகள். பேரினவாத அதிகாரவர்க்கத்தின் இனவாத படுகொலையாக தான் பார்த்தோம்.

தேசம்: இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து எவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை இயக்கங்கள் கையில் எடுத்தது?

அசோக்: எல்லா மட்டங்களிலும் இலங்கை அரசு மீது இருந்த கோபம், கொந்தளிப்பு இயக்கங்களுக்கு சாதகமாக அமைந்ததுவிட்டது. இளைஞர்கள் மத்தியில், இயக்கங்களின் அரசியல் அற்ற வெறும் உணர்ச்சியூட்டல் நடந்தது. இது இயக்கங்கள் வீங்குவதற்கும், போராளிகளின் எண்ணிக்கை கூட்டுவதற்கும் சாதகமாக போய்விட்டது. அரசியல் சார்ந்து நடக்கவில்லை. வெறும் சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக, ஒரு மனநிலையை கட்டமைக்கிற மாதிரி சில இயக்கங்கள் செய்யத் தொடங்கிற்று. அது இன்னொரு இனவாதம்தானே. இளைஞர்கள் வர வர பின்தளத்திற்கு அனுப்பபட்டடார்களே தவிர தேர்வுகள், பரிசீலனைகள் எதும் இருக்கல்ல. பிறகு இந்தியாவும் டிரெய்னிங் கொடுக்க தொடங்கிவிட்டது.

தேசம்: வெலிக்கடை சிறைச்சாலை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடிக்குது. கொழும்பிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு-கிழக்குக்கு வாரார்கள். அவர்களுடைய பராமரிப்பு அந்த விடயங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது இயக்கங்கள் அவர்களை பராமரிக்கிறதில் புனர்வாழ்வளித்து ஈடுபட்டிருக்கின்றனவா?

அசோக்: ஓம். வவுனியா முல்லைத் தீவுக்கு வந்த நிறையபேருக்கு நாங்கள் பொறுப்பெடுத்து செய்தம்.

தேசம்: எவ்வாறான வேலைத்திட்டங்கள்? நீங்கள் அல்லது அந்த இயக்கங்கள் காந்தியம் ஈடுபட்டு இருக்குதா?

அசோக்: அதுல பிரச்சனை என்னவென்று கேட்டால், வவுனியா முல்லைத்தீவில் காந்தியம் தடை செய்யப்பட்டு விட்டது. வவுனியாவில் நடந்த பிரச்சனைக்கு பிறகு டேவிட் ஐயா ஆட்கள் கைது செய்யப்பட்டவுடன் காந்தியம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எல்லாத்திலயும் தடைசெய்யப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கினது.

அங்க எந்த தடையும் இல்லை. அதற்கு என்ன காரணமோ தெரியல. சிலவேளை, வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோ தெரியல. அங்க இயங்கியது. மட்டக்களப்பில் சகல வேலைத் திட்டங்களும் நடந்தது. குடியேற்றங்கள், சத்துணவு திட்டம், காந்தியத்தின் சகல வேலைத் திட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் நடந்தது. குறிப்பாக மட்டக்களப்பில்.

தேசம்: கிட்டத்தட்ட மட்டக்களப்பில் நடந்த காந்தியத்தின் செயற்பாடு என்பது, புளொட்டின் செயற்பாடு தான்…

அசோக்: ரெண்டும் இணைந்த செயற்பாடு தான். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மட்டக்களப்பு காந்திய செயற்பாடுகளுக்கு நாங்கள் போகவில்லை. நாங்கள் தேடப்படுற ஆட்கள் தானே. நான் தேடப்படுறேன், ஈஸ்வரன் தேடப்படுது. வாசுதேவா மாத்திரம்தான் பிணையில் வரக்கூடியதாக இருந்தது.

தேசம்: வெலிகடை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் தவிர வேற யார் யார் சிறையில் இருந்தவை…

அசோக் : நிறையப் பேர் இருந்தவங்க . எல்லா இயக்கங்களையும் சேர்ந்த போராளிகள், இயக்க ஆதரவாளர்கள், பொதுமக்கள் என கைதுசெய்யப்பட்ட பலரும் இருந்தனர். உயிர் தப்பிய அவங்களைத்தான் மட்டக்களப்பு சிறைக்கு மாத்திராங்க.

தேசம் : அதற்குப் பிறகும் கைதுகள் நடந்தனவா?

அசோக்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நிறைய நடந்தது. வெலிக்கடை படுகொலைகளுக்கு பின்னான காலங்களில்தான் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அதுல முக்கியமான ஆட்கள் யார் யார் கைது செய்யப்படுகினம்?

புளொட்டின் தோழர்கள் சலீம், சத்தியமுர்த்தி, ஜெயகாந்தன், ரமணன், மீரான் மாஸ்டர், லவன், மாறன், சிவா, கல்லாறு சதீஸ், சண் தவராஜா, வைத்தியலிங்கம், சக்தி வடிவேல், மாணிக்கம்பிள்ளை, துரைசிங்கம் இப்படி நிறைய தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் புளொட் தோழர்கள் நிறையப் பேர் கைது செய்யப்ப டாங்க. நல்லீஸ், கராட்டி அரசன், வன்னியசிங்கம், பேரின்பம், சிவஞானம், பூபாலசிங்கம், தில்லையம்பலம் செல்லக்கிளி, கனகசூரியம் இப்படி நிறையத் தோழர்கள். ஆனா இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படவில்லை. பூசா இராணுவ சிறை முகாம்மில்தான் அடைக்கப்பட்டாங்க… தோழர் கராட்டி அரசன் கராட்டியில் பிளாக் வெலிட் எடுத்தவர். திறமையான தோழர். இவரை பூசா சிறையில் வைத்து இராணுவம் அடித்துக் கொன்றது.

இவரின்ர தம்பி அவரை நாங்க செல்லக்கிளி என்றுதான் கூப்பிடுவோம். அவரும் பூசா சிறையில் இருந்தவர். வெளியில் வந்தவுடன் புலிகள் படுகொலை செய்தாங்க.

வன்னியசிங்கமும் பூசா சிறையிலிருந்து வெளிவந்த பின் அவரையும் புலிகள் சுட்டுக் கொன்றாங்க. அவரின் தலையை வெட்டி எடுத்து, அவரின் உடலை தெருத் தெருவாக டிரக்டரில் கட்டி இழுத்தாங்க. செல்வரெத்தினம் என்றொரு தோழர் கைது செய்யப்பட்டு பொலிசாரல் சுட்டுக் கொல்லப்பட்டார். பல தோழர்கள் பயங்கரமான சித்திரவதைகளை அனுபவிச்சாங்க. ரவிராஜ் என்ற தோழர் இன்றைக்கும் இந்த சித்திரவதைகளினால பாதிக்கட்ட நிலையிலதான் வாழ்கிறார்.

யோசித்துப் பாருங்க. எவ்வளவு கொடூரம். இதையெல்லாம் நினைத்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். இந்த தோழர்களையெல்லாம் எங்கேயாவது பதிவு செய்யணும் என எண்ணி இருந்தன். இந்த போராட்டத்தில தங்கட வாழ்கையை இழந்தவங்க இவங்க. இவங்களெல்லாம் தோழர்கள் மாத்திரம் இல்ல, என்னுடைய இளமைக்கால நண்பர்கள் இவங்க.

தேசம்: ஏற்கனவே வெலிக்கடைச் சிறையில் இருந்தவர்களை மாத்திரம்தான் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்களா?

அசோக்: ஓம். மட்டக்களப்புக்கு கொண்டு வரப்படும் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையில் உயிர் தப்பியவர்களைத்தான், பழைய ஆட்களைத்தான் கொண்டு வாறாங்க. வெலிக்கடை சிறையில் படுகொலை நடந்தவுடன், அவங்களுக்கு பாதுகாப்பின்மை இருக்குது. தற்காலிகமாக அவங்களை மட்டக்களப்பு சிறையில் வைத்துக் கொண்டு, இன்னுமொரு சிறைக்கு மாற்றுவதற்கு, அவகாசத்துக்காக மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்கள். இங்க குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடிவு செய்திருந்தார்கள். அதற்குப்பின் வேறு சிறைக்கு மாத்துவது அவர்களின்ர திட்டம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் ட புதிய போராளிகளை, நிறைய தமிழ் மக்களை பூசா சிறையில் தான் அடைத்தார்கள். எங்கட கிராமத்திலேயே நிறைய பேரை கைது செய்திருக்கிறார்கள். பூஸாவில் எங்கட நிறைய தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: இந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக கருதப்பட்ட கனபேர் அந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையில் இருந்திருக்கிறார்கள். நிர்மலா… நித்தியானந்தன்…

அசோக்: டேவிட் ஐயா, ராஜன், டக்ளஸ் தேவானந்தா, சுகுதோழர், வரதராஜபெருமாள், நித்தியானந்தன், பாதர் ஜெயகுலராஜா, தங்க மகேந்திரன்.

தேசம்: வேற யார் யார்…

அசோக்: பனாக்கொடை மகேஸ்வரன், ஈரோஸ் அந்தோனிப்பிள்ளை, புளொட்டில் மாணிக்கதாசன், அற்புதம், வாமதேவன், சுபாஸ், மகேந்திரன் மாமா இவங்களெல்லாம் சிறைக்குள்ள இருந்தவங்க.

தேசம்: இவர்களெல்லாம் வெலிக்கடை சிறையில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்படுகிறார்கள்…

அசோக்: ஓம்…

தேசம்: இவர்கள் இந்த வெலிகடை படுகொலையில் இருந்து தப்பிய ஆட்கள்…

அசோக்: படுகொலையில் இருந்து தப்பி ஆட்கள் அவ்வளவு பேரும் தான், மட்டக்களப்பு சிறை உடைப்புக்குள்ளால வெளியில வாறார்கள்.

வெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றும் போது எல்லா இயக்கங்களை சேர்ந்தவங்களும் அதில் இருக்காங்க. அதுல ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், ஈரோஸ் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆட்கள் இருந்திருக்கிறார்கள், புலிகளின் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: மட்டக்களப்பு சிறையை உடைக்க வேண்டும் என்ற அந்த எண்ணக்கரு எப்படி உருவாகுது?

அசோக்: நான் சொன்னேன் தானே தற்காலிகமாகத்தான் இங்க வைத்திருக்கிறார்கள் என்று.

தேசம்: இதுல முக்கியம் என்னென்றால், வெலிக்கடை சிறையில் இருந்த ஆட்கள் எல்லாரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவங்க. எஞ்சியவர்களும் மிக முக்கியமான ஆட்கள் தான்.

அசோக்: அவர்களும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருந்தால், போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமான ஆட்கள் இவங்க… காலப்போக்கில் பிற்காலத்தில் அவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அன்றைய காலகட்டத்தில் சிறைக்குள் இருந்த அவ்வளவு பேரும் மிக மிக முக்கியமான ஆட்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள். அவர்கள் இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டு இன்னொரு படுகொலை நடந்திருந்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறு அன்றைக்கு அழிந்து போயிருக்கும். அப்போ இன்னொரு சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் இவங்களை வெளியில் எடுக்க வேண்டிய தேவை எல்லா இயக்கங்களுக்கும் இருந்தது. புளொட்டுக்கும் அந்த ஐடியா இருந்தது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் அந்த ஐடியா இருந்தது. புளொட் குறிப்பிட்ட காலத்துக்குள்ள அதை செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளை தொடங்கினது. அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு எப்ப நடக்குது…

அசோக்: 83 செப்டம்பர். எங்களிட்ட ஆயுதங்கள் இல்லை. குறிப்பிட்ட சில ஆயுதங்கள் தான் இருந்தது. ரகுமான் ஜான் தோழர் ஆயுதங்கள் எடுத்து வருவதற்கு இந்தியாவுக்கு போறார். போயிட்டு, அவர் வெறும் கையோடுதான் வாறார். வந்து சொல்லுறார் அங்க ஆயுதங்கள் இல்லை என்று. ரகுமான்ஜான் தோழர் மன்னாரில் வந்திறங்கிய போது கடற்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி, நேரடியா எங்கட வீட்ட தான் வாறார் களுதாவளைக்கு. அன்றிரவு எங்கட வீடு பொலிசால் ரவுண்டப் பண்ணுப்படுது. அன்று இரவு நானும் ரகுமான்ஜானும் வீட்டில் தங்கியிருந்தா நாங்களும் மாட்டுப்பட்டு இருப்போம்.

தேசம்: ஏற்கனவே நீங்கள் தேடப்படுற ஒரு ஆளாக இருந்தபடியால்…

அசோக்: எப்படியோ பொலிசிக்கு தெரிந்து விட்டது. அன்றைக்கு வேறு ஒரு வீட்டில இருந்தபடியால் தப்பி விட்டோம். பின் தளத்திலிருந்து ஆயுதங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு தோழர் ரகுமான் ஜான் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னது ஏமாற்றமாக இருந்தது. குறிப்பிட்ட காலத்தினுள் சிறை உடைப்பு செய்ய வேண்டும். காலம் போனால், வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். பிறகு ஒன்றும் செய்ய இயலாது. பிறகு ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் இது சம்பந்தமாக ஆர்வம் இருக்கின்றபடியால் அவங்களோட தொடர்பு கொள்கிறோம். குறிப்பாக யோகராஜ் என்று எங்களுக்கு நெருங்கிய தோழராக இருந்தவர். அவரோடதான் முதலில் தொடர்பு கொள்ளுகிறேன். அவர் சொல்கிறார் எங்களிட்ட ஆயுதம் இருக்கு சேர்ந்து செய்யலாம் என்று.

அடுத்தது சிவலிங்கம் என்று ஒரு தோழர். அருமையான தோழர். தோழர் பாலா, தோழர் கணேஸ் இவர்கள் எல்லாம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள். அதில் குன்சி தான் முக்கியமானவர். குன்சியோடு வாசுதேவா தொடர்பு கொள்கிறார். குன்சிக்கும் வாசுதேவாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது சேர்ந்து செய்யலாம் என்று சொல்லி.

தேசம்: புளொட்டில் மட்டக்களப்பு சிறை உடைப்பை மேற்கொள்வதில் யார் முன்னுக்கு நின்று செயற்பட்ட ஆட்கள்…

அசோக்: முக்கியமாக தோழர் வாசுதேவாதான். மற்றது தோழர் பார்த்தன். சிறையிலிருந்து வந்தவங்களை பாதுகாத்து, இந்தியாவுக்கு கொண்டு சென்றதில் தோழர் பார்த்தனின் பங்களிப்பு முக்கியமானது.

வாசுதேவா மட்டக்களப்பில் சிங்கள வாடி என்ற இடத்தை சேர்ந்தவர். அங்க இருக்கிற பல பேர் மட்டக்களப்பு சிறையில் ஜெயிலராக இருக்கிறார்கள். இயல்பாகவே வாசுதேவுக்கும் இந்த ஜெயிலர்களுக்கும் இடையில் உறவு ஒன்று இருந்தது. சிறையில் நடக்குற எல்லாம் இந்த தமிழ் ஜெயிலர்களுக்கூடாக தெரியவரும். அதில முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி என்றவர். அவர்
வாசுதேவாவின் நல்ல ஃப்ரெண்ட். சிறை உடைப்புக்கு பிற்பாடு இவரும் புளொட்டிக்கு வந்து, பி எல் ஒ ட்ரெயினிங் எடுத்தவர். தோழர் பிரசாத் என்று சொல்றது. புலிகள் தான் அவரை பிறகு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். மிகத் திறமையான தோழர். உண்மையிலேயே அந்த ஜெயில் உடைப்புக்கு பெரும் உதவியாக இருந்தவர் இவர்தான்.#

இவருக்கூடாகத்தான் உள்ளே இருந்தவர்கள் தப்புவதற்கான தற்காப்பு ஆயுதங்கள், இரண்டு ரிவோல்வர்கள், வடிமைக்கப்பட்ட மெசின் கன், சாவிகள் கொடுக்கப்பட்டன.

தேசம்: கிட்டத்தட்ட ஜெயில் உடைப்பு என்பது திறந்துவிடப்பட்டது மாதிரித்தான்…

அசோக்: ஆனால், அதற்கான தயாரிப்புகள் நிறையச் செய்யப்ப ட்டது. எங்களிடம் ஆ யுதங்கள் இல்லை. ரிவோல்வர்கள் இருந்தன. இவற்றை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக சொன்னாங்க. பிறகுதான் தெரியும் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்று. ஆயுதம் இல்லாதபடியால், குறைந்தபட்சம் ஆயுதம் தேடவேண்டும் என்று சொல்லி கிராமங்களிலிருந்து சோட் கண்களை எடுத்தோம். அதுல வரதன், வைத்திலிங்கம், விஜி, ஜீவா அகஸ்டின், நிறைய தோழர்கள் ஈடுபட்டார்கள்.

தேசம்: அதுல ஈஸ்வரனும்…

அசோக்: ஈஸ்வரன், கராட்டி அரசன், நான் சில இடங்களில் ஆயுதங்களை சேகரித்தோம். அதற்குப் பிறகு அரசாங்கம் மிகக் கடுமையாக சொல்லிவிட்டது விவசாயிகள் இருக்கிற ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று.

தேசம்: நீங்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயற்சித்தீர்கள்.

அசோக்: அது ஒரு பிழையான காரியம்தான். அன்றைய நேரத்தில் அதைப்பற்றி யோசிக்கவில்லை. சிறையிலிருப்பவர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கம்தான் முக்கியமாகபட்டது.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பில் நான், ஈஸ்வரன் நேரடியாக பங்கு கொள்ளவில்லை… அப்போது நாங்கள் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தோம்… முழுக்க முழுக்க ஈடுபட்டது வாசுதேவாதான். இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியின் பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.

அவர் லேத் மெசின் கராஜ் வைத்திருந்தார். அவர் கடைசியாக புளொட்டில வந்துட்டார். இப்ப கனடாவில இருக்கிறார் என்று நினைக்கிறேன். தப்பிச் செல்வதற்கு காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது பின்னர் பொலிசிக்கு தெரியவந்து மட்டக்களப்பு காந்தியத்தை தடைசெய்துவிட்டாங்க. பொறுப்பாக இருந்த சின்னத்துரை மாஸ்ரரும், துரைசிங்கமும் கைது செய்யப்பட்டாங்க.

இந்த சிறை உடைப்பில், தோழர்கள் சக்தி வடிவேல், சங்கர், வரதன், வைத்திலிங்கம் கணன், கராட்டி அரசன், விஜீ போன்றோர் முக்கியமானவங்க. ஈபிஆர்எல்எப் தோழர்களும் மிகமுக்கியமானவங்க. குறிப்பாக தோழர் குன்சி. இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது. பிறகு தோழர்கள் சக்தி வடிவேல், வைத்தியலிங்கம், மாணிக்கம்பிள்ளை போன்றவங்ககளும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டாங்க…

தேசம்: அந்த நேரத்தில் புளொட் தாம் செய்ததாக உரிமை கோரி அறிக்கை விட்டதென நினைக்கிறேன்.

அசோக்: புளொட் முழுக்க உரிமை கோர இயலாது. அது உண்மையிலேயே புளொட்டும், ஈபிஆர்எல்எஃப் பும், சேர்ந்து செய்த சிறை உடைப்பு தான். யாழ்ப்பாணத்தில் புளொட் அறிக்கை விட்டு, பின்பு ஈபிஆர்எல்எஃப் ஒரு அறிக்கை விட, முரண்பாடு வந்து அறிக்கைப் போராகவே மாறிவிட்டது. இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும்.

புளொட் தலைமையினால் அது முடியாமல் போயிற்று. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது.

தேசம்: இவ்வாறான பல முரண்பாடுகள் உரிமை கோரல்கள் பல எழுந்திருக்கு…

அசோக்: அது எனக்கு ஒரு பெரிய மனவருத்தம். இப்படியான சம்பவங்களை வடிவா பேசித் தீர்த்துக்கலாம். ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் உரையாடலுக்கு தகுதியற்ற ஆட்கள் இல்லை தானே. எங்களைவிட அவங்களிட்ட ஜனநாயகப் பண்பு இருந்திருக்கு. அவங்களோட உரையாடல் செய்து இருக்கலாம். இது புளொட்டில் நடந்த பெரிய தவறு.

உதாரணமாக மட்டக்களப்புகச்சேரி துப்பாக்கி பறிமுதல் சம்பவம். அது எனக்குத் தெரிந்த நண்பர்களால் செய்யப்பட்டது. அதற்கு நான் தனிப்பட்ட வகையில் ஒத்துழைப்பு கொடுத்தனேயொழிய, அதற்கும் புளொட்டிக்கும் தொடர்பு இல்லை. பிறகு அவங்க எல்.ரீ. ரீ . ரீக்கு போயிட்டார்கள். மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு, இதை நாங்கள் செய்யத்தான் இருந்தோம். செய்யுறதுக்கு அதற்கான ஆட்பலம் இல்லாமல் போய்விட்டது. நானும் ஈஸ்வரனும் தான் மட்டக்களப்பில் இருந்தோம். மிச்ச எல்லோரும் சிறை உடைப்போட அப்படியே இந்தியாவுக்கு போயிட்டார்கள். அதால செய்ய முடியாமல் போயிற்று. கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் புளொட்தான் செய்திருக்கும் என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.

தனது கணக்குகளை முடக்கிய சமூகவலைத்தளங்களுக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள பதிலடி – வருகிறது Truth Social !

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார். இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் சமூக வலைதளங்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் இவரது கணக்குகளை முடக்கின. ஆகவே, சமூக வலைதளங்களுக்கும் டிரம்பிற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.
TRUTH Social: Donald Trump to launch social network, saying 'your favourite  president has been silenced' | World News | Sky News
இந்த நிலையில் தனி சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு Truth Social (உண்மை சமூகம்) எனப் பெயரிட்டுள்ளார். இதன் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலிபான்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் செயல்முறையில் இருக்கையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க ஜனாதிபதி அமைதியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

“குறைவடைய ஆரம்பித்துள்ள கொரோனா பரவல்.” – உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி, உலக அளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 21.17 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக அளவில் மக்களுக்குச் செலுத்தப்படுவதன் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ´´கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு இதுவாகும். உலக நாடுகள் அளித்த கணக்கின்படி 50 ஆயிரம், ஆனால், உண்மையில் உயிரிழப்பு அதிகமாகக் கூட இருக்கலாம்.

ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது´´ எனத் தெரிவித்தார்.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சாதனைகள் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

பன்றியின் சிறுநீரகம் அவரின் இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது. சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் – முழுமையாக எரிக்கப்பட்ட இந்துக்களின் வீடுகள் !

பங்களாதேஷில் இந்துக்கள் குறைவான தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.  இதனால் அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பங்களாதேஷின் குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கோவில் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் இந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமம் உள்ளது. இது மீனவ கிராமம் ஆகும். அங்கு வசிக்கும் அனைவரும் இந்துக்கள் ஆவர். அவர்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக பேஸ்புக் மூலமாக தகவல் பரவியது.

இதையடுத்து பக்கத்து பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 20 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மேலும் 66 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.

ஏராளமானவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடினார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டார்கள். இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே பங்களாதேஷில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளித்து வங்காள தேசம் செயல்பட வேண்டும். அவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதை கண்டிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

கிராமத்துக்குள் நுழைந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள் – நைஜீரியாவில் சம்பவம் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ,ராணுவம் போராடி வருகிறது. இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

பிரித்தானியாவில் பயங்கரவாதத்தாக்குதல் – கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் !

பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 69 வயதுடைய சேர் டேவிட் அமேஸ் என்பவரே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்தவராவார்.

இன்று வெள்ளிக்கிழமை பகல் எசெக்ஸ் தென்மேற்குப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயத்திற்கு உள்ளாகிய அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 25 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கத்தி ஒன்றை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். அரசியலில் “கனிவான” ஒருவரை இழந்ததற்கு “எங்கள் இதயங்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

சேர் டேவிட் அமேஸ்,திருமணம் முடித்து ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாவார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதில், ‘இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல்’ இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. கொலைச் சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

பணமோசடியில் ஈடுபட்ட இரு லண்டன் தமிழர்களுக்கு பதினொரு ஆண்டுகள் தண்டனை!

 

லண்டன் குயின்ஸ்வே யில் செவர்னியர் – லண்டன் நகர் அழகியல் பொருட்களை விற்ககும் கடையில் பணமாற்றுச் சேவையை மேற்கொண்டவரும் அங்கு பணியாற்றியவரும் மொத்தமாக 11 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 2016 முதுல் 2018 வரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்கள் நாணய மாற்றை இவர்கள் செய்துள்ளனர். கடையை நடாத்தி வந்த ரவிராஜ் கணேஸ்பரன் (61) மற்றும் அவருடைய கடையில் பணியாற்றிய நிரோஜன் பாலசிங்கம் ஆகியோருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கணேஸ்பரன் கடையை நடாத்த நிரோஜன் பாலசிங்கம் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் அவருக்கான மோசடி வாடிக்கையாளர்களைத் தேடிக்கொடுத்து வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

லுல்சிம் புலாக்கி என்பவர் பணக்கட்டுக்கள் கொண்ட முதுகப்பையோடு கடைக்குள் நுழைவதை நோட்டமிட்ட பொலிஸார் கடையை முற்றுகையிட்டதில் கடையினுள் £140,000 பவுண்கள் இருந்துள்ளது. ஈஸ்ற்ஹாமில் வாழும் ரவிராஜ் கணேஸ்பரனுக்கு 5 ஆண்டுகளும் ஈலிங்கில் வாழும் நிரோஜன் பாலசிங்கத்திற்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு சவுத்வார்க் கிரவுன்கோர்ட்டில் நடைபெற்றது.

உலகின் கருப்பு பணம் அதிகம் உலாவுமிடங்களில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது. உலகின் மிகப்பெரும் மோசடியாளர்களின் கூடாரமாகவும் பிரித்தானியா இருக்கின்றது. உலகின் வெவ்வேற நாடுகளில் பணமோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிரித்தானியா புகலிடமாக இருக்கின்றது. சென்றவாரம் வெளியான பன்டோரா அறிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் பிரித்தானியாவில் இருப்பதுமட்டுமல்ல பிரித்தானிய அரசின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறான பணமோசடி காரணமாக பிரித்தானிய வீதிகளில் கத்திக்குத்துகளும் கொலைகளும் இடம்பெற்று வருகின்றது. பணத்தின் மீது வெறிகொண்டு பணத்தைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்படுவதன் விளைவுகள் பாரதூரமாகிவிடுகின்றது.

பங்களாதேஷிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் – 4 பேர்பலி – 22 பேர் படுகாயம் !

பங்களாதேஷிலுள்ள இந்துக் கோவில்கள் மீது நேற்று (14) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் கொமில்லா இந்து கோவிலில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றவேளையில் இனந்தெரியாத குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதேபோல் கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களை கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு படையினர் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலே இந்த கலவரம் ஏற்பட காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.