2021

2021

கோட்டபாயராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – கிளாஸ்கோ நகரில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் !

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ஷ கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.

பதவிகளை பணயம் வைத்துள்ளோம் – பதறுகிறார் அமைச்சர் கம்பன்பில

பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகின்றோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய சட்ட அபிவிருத்தி அதிகார சபையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பங்காளிகளுடன் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபடாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தின் பிரச்சினைகள் வெளியில் பேச வேண்டி இருந்தது. தற்போதைய அரசாங்கம் 16 கட்சிகளின் கூட்டமைப்பாகும். உள்ளக பேச்சுவார்த்தைகள் இல்லாத போது பிரச்சினைகள் நிரம்பி வழியும். பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகிறோம். எங்களை விரட்டினால் அந்தப் பதவிகளைப் பெற்றுவிடலாம் என நினைத்தவர்களே எம்மை அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

வயல் வரம்பில் நடக்கத் தெரியாதவர் விவசாய அமைச்சர் – மைத்திரி காட்டம்

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை தொடர்பில் நான் கூறும் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.
பகமூன பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசினாலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதில்லை. விவசாயத்துறை அமைச்சர் வயலில் உள்ள வரம்புகளில் கூட செல்லத் தெரியாதவராவார். சில இராஜாங்க அமைச்சர்கள் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளால் என்னால் பொலன்னறுவை மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளது என்று கூறினேன். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இராஜாங்க அமைச்சர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். எனினும் அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை. நான் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டேன். சேதன உரத்தினைப் பயன்படுத்தி விவசாயத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்றார்.

குவைத்தில் 40 வயதான காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த 24 வயது இலங்கை இளைஞன் !

குவைத்தில் தன்னை விட 16 வயது அதிகமான காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இலங்கையர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 24 வயதான இளைஞனுக்கும், அவரின் 40 வயதான காதலிக்கும் இடையே தனிப்பட்ட தகராறு ஏற்பட்ட நிலையில் Fahaheel பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் வைத்து அப்பெண்ணை கழுத்தை நெரித்து இளைஞன் கொலை செய்திருக்கிறார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டில் 40 வயது காதலியை கொலை செய்த 24 வயது இலங்கை இளைஞன்! திடுக்கிடும்  தகவல் - ஐபிசி தமிழ்

இதையடுத்து இந்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய தகராறின் விளைவாக காதலியை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்பு கொண்டுள்ளார்.

காதலியை கொன்ற பின்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் குறித்த இளைஞன் மீது திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

கோடிக்கணக்கானோர் பாவிக்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டது – மார்க்ஜுக்கர்பெர்க் கூறும் பதில் என்ன.?

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இதனால் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
Facebook's new name is Meta - The Verge

இதையடுத்து தற்போது பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு Meta என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேஸ்புக் ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆனால், அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பாகம் 13: மட்டக்களப்பு சிறை உடைப்பா? சிறைத் திறப்பா?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 13

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறம். நீங்கள் ஆயுதங்கள் எல்லாம் எடுத்து சேகரித்திருந்தா லும் கூட, ஆயுதங்கள் எதுவும் பெரிசா பயன்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சிறைக்குள் என்ன நடந்தது?

அசோக்: ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளுக்குள்ள ரிவால்வர் தான் அனுப்பப்பட்டது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தங்களுக்கு தேவையானதை அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். புளொட்டில் இரண்டு ரிவால்வர் அனுப்பப்பட்டது. வெளியில கூடுதலா சொட் கண்கள்தான். அடுத்தது பால் ரின்னில் கிரானைட் மாதிரி ஜலற்றின் வைத்து செய்யப்பட்ட திரிவைத்த எறி குண்டு. திரியில் நெருப்பு பற்ற வைத்து எறியவேண்டும். ஆனால் இவை எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை.

சிறைக்குள் இருந்தஎல்லோரும் கூட்டாக இணைந்துதான் முயற்சி எடுத்தாங்க ராஜன் டக்ளஸ் தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன் போன்றவங்க முக்கியமானவங்க. பலருக்கும் பொறுப்புக்கள் பிரித்துப் பிரித்து கொடுகப்பட்டன. உதாரணமாக டேவிட் ஐயாவிடமும் , டொக்டர் ஜெயகுலரா ஜாவிடம் மும் கட்டிப்போடப்படும் ஜெலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஒட்டும்வேலை பொறுப்பு கொடுகப்பட்டது. இப்படித்தான் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது.

தேசம்: ராணுவ பாதுகாவலர்கள் மாறுகிற நேரத்தில்தான் சிறை உடைப்பு நடந்தது..

அசோக்: ஓம், . குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவைதான் சிறையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் அல்லது இராணுவம் ரோந்து வரும் . அந்த இடைவெளிக்குள் சிறை உடைப்பு செய்யவேண்டும்.

அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ள நடந் ததால எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்ல. சிறைக்குள்ள பிரச்சனையில்லை. தெரிந்த ஜெயிலர்ஸ் தானே அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தேசம்: அப்போ சிறைப் பாதுகாவலர்கள் சிறைக் கதவுகளின் சாவிகளை உங்களுக்குத் தந்து…..

அசோக்: இல்லை இல்லை உள்ளுக்க ரெண்டு மூன்று ஜெயிலர்ஸ் தான் சப்போர்ட் பண்ணினார்கள். மற்ற ஜெயிலலர்களை பிடித்து கட்டிப்போட்டு அவர்களிடமிருந்த சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. அதனோட நாங்க செய்த சாவிகளும் பயன்படுத்தப்பட்டன முழு ஜெயிலர்சையும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்க இயலாதுதானே.

தேசம்: எல்லாருமே தமிழ் காவலர்களா

அசோக்: சிங்கள காவலர்களும் இருந்தவங்க. சிறை உடைக்கப்பட்டு எல்லாரும் வெளியேறியவுடன், அங்கு சிறை வைக்கப்படடிருந்த சாதாரண கைதிகள் அவங்களும் வெளியேறி தப்பிட்டார்கள். அரசியல் கைதி அல்லாத, வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகள் முழுப்பேரும் வெளியேறி போய்விட்டார்கள். தமிழ்க் கைதிகளுக்கு சிறை இருந்த இடம் பற்றி, அந்த சுற்றாடல் பற்றி ஓரளவு தெரியும். அவங்க தப்பி போயிற்றாங்க. சிங்களக் கைதிகளுக்கு இடம் தெரியாது. மட்டக்களப்பு ஒரு தீவு. மேலிருந்து பார்த்தீர்களென்றால் மட்டக்களப்பு என்பது வாவிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். மட்டக்களப்பை புளியந்தீவு என்றும் சொல்வதுண்டு. மட்டக்களப்பை ஏனைய பிரதேசங்களோடு இணைப்பது பாலங்கள்தான்.

தேசம்: தமிழ் கைதிகள் எல்லோரும்…

அசோக்: தமிழ் கைதிகள் பாலம் எல்லாம் தாண்டி தப்பி போயிட்டாங்க. தோணிகள் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தும் தப்பிவிட்டாங்க. சிங்கள சிறைக் கைதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. போலீஸ் அவங்க முழுப் பேரையும் அரெஸ்ட் பண்ணி விட்டது.

தேசம்: வெளியேறின அரசியல் கைதிகளை எப்படி வெளில கொண்டு போறீங்க

அசோக்: அரசியல் கைதிகளை வெளியில கொண்டு போறதுக்கு ஈபிஆர்எல்எஃப் தோழர் குன்சி தங்களுக்குரிய ஏற்பாட்டை செய்திருந்தார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தங்களுக்குரிய ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். புளொட்டுக்கான ஏற்பாட்டை பார்த்தன் செய்தது. பனிச்சம் கேணியிலிருந்து, இந்தியா கொண்டு போற வரைக்கும் எல்லா பாது காப்பையும் தோழர் பார்த்தன்தான் செய்தார்.

தேசம்: அதாவது சிறை உடைத்த பிறகு வெளியில வந்தவர்களைக் கொண்டு போற வேலைகளைப் பார்த்தன் செய்தது.

அசோக்: பனிச்சம்கேனியிலிருந்து இருந்து திருகோணமலைக்கு கொண்டு போய், அங்க இருந்து இந்தியாவுக்கு அனுப்புற வேலைகளை பார்த்தன், ராதாகிருஷ்ணன், ஜெயகாந்தன், செல்வன் இவங்கதான் செய்தாங்க. நேரடியாக இந்தியா போகவில்லை. பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு, கொஞ்ச கொஞ்ச பேராக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டாங்க. மாதகல் ஊடாகத்தான் அனுப்பப்பட்டாங்க. இதற்கான போக்குவரத்து பொறுப்புக்களை தோழர் குமரன் செய்தார். குமாரதுரை என்று ஒருத்தர் இருந்தவர். கிளிவெட்டியை சேர்ந்தவர். அவருடைய உதவியும் இருந்தது.

டேவிட் ஐயா சிறைக்குள்ளிருந்து எல்லாரும் போகேக்க அவரால வெளியேற முடியவில்லை. சிறையில் இருந்து வாகனத்தில் இவங்க எல்லாரும் ஏறும்போது, அவரைக் கவனிக்கவில்லை. இவர் ரோட்டில நின்றுட்டார். இவங்க எல்லாரும் போனதற்குப் பிறகு தனிமைப்பட்டுட்டார். பிறகு ஜெயிலில் இருந்து தப்பிய சாதாரண கைதிகள் இரண்டு பேர் , டேவிட் ஐயாவை தற்செயலா கண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் டேவிட் ஐயாவை கொண்டு பாதுகாப்பா வச்சு, ஒரு பாதரிட்ட ஒப்படைத்து பாதர் தான் அனுப்பி வைத்தவர்

தேசம்: இந்தியாவுக்கு அனுப்பி வைத்தவரோ?

அசோக்: இல்ல எங்கட தோழர்களிடம் ஒப்படைத்து நாங்க பொறுப்பெடுத்தம்.

தேசம்: இந்த சிறை உடைப்புக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்த தமிழ் சிறைக்காவலர்கள் இருக்கினம் தானே அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா

அசோக்: ஒரே ஒருத்தருக்கு பிரச்சனை வந்தது, கிருஷ்ணமூர்த்தியை ஐடிடென்டி பண்ணிட்டாங்க. அவர் பிறகு புளொட்டுக்கு வந்துட்டார். பிறகு வெளியிலிருந்து உதவி செய்த மாசிலாமணி அவருக்கும் பிரச்சினை வந்து, அவரும் திரும்ப புளொட்டுக்கு வந்துட்டார். இவர்கள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன்.

அதுல என்னை விசாரித்த டிஎஸ்பி மகேந்திரன் அவரோட உதவியும் கொஞ்சம் இருந்தது. இல்லாட்டி காந்திய வாகனம் எல்லாம் உடனே பிடிபட்டிருக்கும். பிறகு சிங்கள பொலிசாருக்கு தெரிய வந்து, காந்தீயமும் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

தேசம்: சிறை உடைப்பில் காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது

அசோக்: காந்திய வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களை பயன்படுத்திட்டு, அந்தந்த இடத்தில் விட்டுட்டு போயிட்டாங்க. அவற்ற திருப்பி கொண்டு வரவில்லை. அடுத்த நாள் போலீஸ் போகும்போது, டிஎஸ்பி மகேந்திரனுக்கு தெரியும் இது காந்திய வாகனங்கள் என்று. அவர் காந்தியதுக்கு அறிவித்து உடனடியாக வாகனங்களை எடுக்க சொல்லி, பிறகு வாகனங்களை அந்த இடத்திலிருந்து எடுத்தார்கள்.

தேசம்: வேற அமைப்புகளில் இருந்த முக்கியமான ஆட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? குறிப்பாக விடுதலை புலிகள் இருந்த முக்கியமான ஆட்கள்

அசோக்: சென்ற அத்தியாயத்தில இதுபற்றி கதைத்திருக்கிறம். விடுதலைப்புலிகள் என்று அதன் ஆதரவாளர்கள் என்று நித்தியானந்தன், நிர்மலா , டாக்டர் ஜெயகுலரா ஜா பாதர் சிங்கராயர் பாதர் சின்னராஜா, பாதர் ஜெயதிலகராஜா இவங்க இருந்தாங்க. வேறு ஆட்கள் என்று கோவை மகேசன் டாக்டர் .தர்மலிங்கம் பெயர்கள் ஞாபகம் இல்லை இருந்தாங்க. இவங்க முன்று பேரும் சிறை உடைப்புக்கு முன்னரே பிணையில் வெளியில் வந்துட்டாங்க. நான் நினைக்கிறேன் பாதர் சிங்கராஜரும் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் தனித்துவமாக சிறை உடைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். சிறை உடைப்பில் அவங்கள் சப்போர்ட் பண்ணல.

தேசம்: இவர்களெல்லாம் எப்படி புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் ? . இவர்கள் சிறை உடைப்பில் வெளியில் வரவில்லையா?

போராட்ட வரலாற்றை நீங்கள் அவதானித்தால் புலிகள் மோசமான கருத்தியல் கொண்டவர்கள். வலது சாரிய நிலவுடமைச்சிந்தனைகளின் எல்லா எச்சங்களையும் கொண்டவர்கள்.முற்போக்கான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் இருந்ததில்ல. ஆனா இந்த பாதர்களும், நிர்மலா , நித்தியானந்தன் சேர் போன்றவர்கள் புலிகளைத்தான் அதரிச்சாங்க. எல்லாம் வர்க்க கூட்டு. இதைப்பற்றி முன்னர் சொல்லியிருக்கிறன்.

நிர்மலா தவிர்ந்த மற்ற இவங்க எல்லோரும் சிறை உடைப்பில் வெளியில் வந்துட்டாங்க. நிர்மலா வரவில்லை. . புலிகள் சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு செல்லும் பொறுப்பை பரமதேவா, புளோட் வாசுதேவாவின்ற தம்பி, இவர் புலிகளில் இருந்தார். மட்டக்களப்பு சிறையில் இருந்து சிறை உடைப்புக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்திருந்தார். இவர்தான் பொறுப்பெடுத்தவர். இவர்களை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பியதில் தம்பிரா ஜா அண்ணரும் முக்கியம் என நினைக்கிறன். இப்போது லண்டனில் இருக்கிறார்.சிறைக்குள் நிர்மலாவை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் பொறுப்பை எடுத்தவர் புளொட் வாமதேவன். அவர் விட்ட தவறினால் , அவங்க வெளியேற முடியல்ல.
பிறகுதான் புலிகள் தனியாக அவரை மீட்டாங்க.

தேசம்: அதற்குப் பிறகுதான் உங்கட மத்தியகுழு உருவாக்கப்பட்டது.

வடகொரியாவில் மிகப்பெரும் பஞ்சம் – குறைவாக சாப்பிடுமாறு கிம் ஜோங் உன் கோரிக்கை !

உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது’ என கிம் கூறியுள்ளார்.

பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடகொரியா, அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீனாவுடனான தனது எல்லையை மூடியது. இதனால், வடகொரியாவில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இதனிடையே 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே அரசாங்கம் தங்களுக்குத் தேவையான தானியங்களை தாங்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது.

இந்தநிலையில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையம், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்கியோங்கில் ஆபத்தான நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேசத் தடைகளால் ஏற்கனவே நலிவடைந்துள்ள தனிமைப் பொருளாதாரத்தின் நெருக்கடி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், இந்த சந்திப்பு வந்தது.

முன்னதாக, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம், ‘வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஒகஸ்ட் தொடங்கி ஒக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 860,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும்’ என எச்சரித்திருந்தது.

1990ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் பிரிந்தது. அதுவரையில் சோவியத் ஒன்றியத்திடம் இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது. இந்த பஞ்சத்தின்போது மக்கள் எலிகளையும் புல்லின் சாரையும் உண்டனர்.அத்துடன், சுமார் 3 மில்லியன் வட கொரியர்கள் உயிரிழந்தனர்.

இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவுக்கான அரசாணை வெளியீடு.!

இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை நியமித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்..

இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில்  வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதோடு அந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின், வழக்கறிஞர் மனு  உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பால்வெளிக்கு வெளியே முதல் கோளை கண்டுபிடித்தது நாசா !

விண்வெளியில் ஏராளமான கோள்கள் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை சுற்றுவதை போல இந்த புறகோள்கள் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. அவைகள் நாம் வாழும் பால்வெளி கெலக்சிக்கு உள்ளே தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது ஒருகோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும்.

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் நியா இமாரா கூறும்போது, ‘நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை பார்க்கிறோம் என்பது உறுதிப்படுத்த சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

சுற்றுப்பாதைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் அதை எப்போது பார்க்க முடியும் என்பது எங்களுக்கு தெரியாது’ என்றார்.

“உலக அமைதியை நிலை நிறுத்துவோம்.” – சீனா அறிவிப்பு !

சீனா அனைத்து வகையான மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியல், ஒருதலைப்பட்சத்தை எதிர்கிறது” என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி, மேம்பாடு, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மதிப்புகளை ஊக்குவிக்குமாறு அனைத்து நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாய்வான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவைப்பட்டால் தாய்வானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். தொடர்ந்து தாய்வான் சீனாவுடன் இணையும் என்று அவர் தெரிவித்து வந்தார்.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் தாய்வானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தாய்வான் இடையிலான எல்லையைக் கடந்துள்ளன என்றும், அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தாய்வான் அதிபர் சாய் இங்-வென் கூறி இருந்தார்.

சீனா தைவானை தாக்கினால் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் உலக அமைதியை நிலை நிறுத்துவோம் என்று சீனா  கூறியுள்ளது.