10

10

மட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட100 குடும்பங்களுக்கு இழப்பீடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இக்குடும்பங்களுக்கு 12மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடுகள் எதிர்வரும் 12ஆம் திகதி குறித்த மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெறும் எனவும், இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் புளியங்குளம், முல்லைத்தீவு, நெடுங்கேணி, அகிய பிரதேசங்களில் உள்ள சேதமுற்ற 250 வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்மராட்சி அல்லாரையில் முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்களினால் வீடொன்றில் கொள்ளை!

தென்மராட்சி அல்லாரைப் பகுதி வீடொன்றில் ஆயுதமனையில் 10 இலட்ச ருபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் சகிதம் முகமூடி அணிந்த எட்டுப்பேர் குறித்த வீட்டிற்குள் புகுந்து அவ்வீட்டிலிருந்த தந்தை, மகன் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவ்வீட்டிலிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததோடு, வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அல்லாரையைச் சேர்ந்த சிவகுரு பாலசிங்கம் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 பவுண் தங்கநகை, 25ஆயிரம் ரூபா பணம், கமரா, தொலைபேசி உட்பட 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.