07

07

அரசின் துரித நடவடிக்கை கண்டு ஜேர்மன் குழு மகிழ்ச்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யவும் புனரமைக்கவும் அரசாங் கம் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கை குறித்து ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பீட்டர் ஏர்னஸ்ட்பேர்கர் தலைமையிலான 6 பேரடங்கிய ஜேர்மன் பாராளுமன்ற உறுப் பினர்கள் குழு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜேர்மன் தூதுக்குழு, தங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பார்வையிட அனுமதி வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கு விசேட நன்றியைத் தெரிவித்தது.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் சவாலை வெற்றிகொள்வதே எமது அடுத்த இலக்கு என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குழுவினரிடம் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பை துரிதப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தல் -சிதம்பரம் தெரிவிப்பு

இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையை இந்தியா கேட்டிருக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஓரங்கமான வீடமைப்புப்பணிகளை விரைவுபடுத்துமாறு இந்தியா கேட்டுள்ள நிலையில் மழைகாலத்தின் பின்னர் இதனை மேற்கொள்வதாக கொழும்பு உறுதியளித்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நேற்று சனிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கோபாலபுரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலைவரம், கூட்டணி விவகாரம், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றப்பிரச்சினை ஆகியவை குறித்து இருவரும் பேசினர். டில்லிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தந்தபோது போரினால் குடிபெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்போது கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருப்பதாலும் மழைக்குப்பின் இந்தப்பணி வேகப்படுத்தப்படும் என்று உறுதியளித்ததாக இச்சந்திப்பின்போது கருணாநிதியிடம் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பின் ஊடாக ‘ஜல்’ சூறாவளி இன்று கரையை கடக்கிறது

jal.jpgவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ‘ஜல்’ சூறாவளியாக உருமாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் வடக்கே தமிழக கரை நோக்கி செல்லும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி யாழ்ப்பாணத்திலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘ஜல்’ சூறாவளி மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியான கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

‘ஜல்’ புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான மழை பெய்வதுடன் கடல் பரப்பிலும் கொந்தளிப்பு ஏற்படும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்வதுடன் அது தொடர்ச்சியான மழையாக இருக்க மாட்டாது.

காலநிலை மந்தமாகவே காணப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு, அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பகுதிகளில் இடைவிடாத கடும் மழை பெய்வதுடன் இடி மின்னலின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது.

‘ஜல்’ புயல் இலங்கையை அண்மிப்பதற்கு முன்னரேயே நேற்று வடக்கு, கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாகவே காணப்பட்டதுடன் மழை பெய்யவும் ஆரம்பித்தது. ‘ஜல்’ புயல் காற்று இலங்கைக்கு வடக்கே நகரும் போது இன்று மாலை அல்லது இரவு வடக்கு, கிழக்கில் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

தமிழகத்தை நோக்கி புயல்காற்று நகர்ந்து செல்வதால் தமிழக வாநிலை அவதான நிலையம் தமிழக மக்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கையில், கடும் புயலாக உருவெடுத்துள்ள ‘ஜல்’ நேற்றுக்காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னையிலிருந்து 650 கி. மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு புதுச்சேரி, நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வாநிலை ஆய்வு நிலையம் கூறுகிறது. இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி. மீ. வரை புயல் காற்று வீசும். புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும். கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.