12

12

தேர்தல் முடிவு சர்வதேச சமூகத்திற்கு ஓர் முக்கிய செய்தி – ஜனாதிபதி

121009.jpgஅரசாங் கத்திற்கு எதிராக செயற்படுவோ ருக்கும், சர்வதேச சமூகத்தினருக்கும் தென்பகுதி மக்கள் இத்தேர்தல் முடிவு மூலம் முக்கிய செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெற்றிருப்பதையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தாய்நாட்டின் மீது அன்பு கொண்டிருக்கும் மக்களுக்குக் கிடைத்திருக்கும் பாரிய வெற்றியாகவே தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள அமோக வெற்றியைக் கருதுகின்றேன்.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காகத் தென் மாகாண மக்கள் பாரிய பங்களிப்பு செய்தார்கள்.

இந்த மாகாண சபைத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றிபெறப் பங்களிப்பு செய்திருப்பதன் மூலம் எமது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். இத்தேர்தல் முடிவை தென் மாகாண மக்கள் மஹிந்த சிந்தனைக்கு அளித்திருக்கும் மீள் அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.

அரசாங்கத்திற்கு எதிராகப் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதற்காகச் செயற்படுவோக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் இத்தேர்தல் முடிவின் ஊடாக முக்கியமான செய்தியொன்றை தென் மாகாண மக்கள் வழங்கியுள்ளார்கள்.

நாட்டைப் பாதுகாத்து மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான எங்களது திட்டங்களை மேலும் வலுவான முறையில் முன்னெடுக்க இந்த மக்கள் ஆணை உந்து சக்தியாக அமையும்.

கெளரவமான நாட்டைக் கட்டியெழுப்பும் எமது உன்னத முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

 அரசியல், இன, மத சக்திகளுக்கு உட்படாமல் நாட்டின் சுபீட்சத்திற்காக ஒன்றுபட்ட தென் மாகாண மக்களை நான் இருதயபூர்வமாக நினைவு கூருகிறேன்.

அதேநேரம், அமைதியாகத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உட்பட பொறுப்புடன் செயற்பட்ட நிறுவனங்களுக்கும் இச்சந்தப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் இவ்வாறு ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீனாவும், இந்தியாவும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் – ஐ.நா. எச்சரிக்கை

சீனாவும், இந்தியாவும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தாவிட்டால் இரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகளின உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உயர்நிலைக்கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் இன்றும் நாளையும்  நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 2050-ம் ஆண்டில் உலக நாடுகளின் உணவுத் தேவைக் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
 
சீனா,  இந்தியா ஆகிய நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளிளும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப்; பொருட்;களின் தேவையும் அதிகரிக்கிறது.
 
2050-ம் ஆண்டில் இரு நாடுகளும் அதிகமான உணவுப்; பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டியதிருக்கும். இதற்காக இரு நாடுகளும் விவசாயத் துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியதிருக்கும். இதற்கு இரு நாடுகளும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
விவசாயத் துறை முதலீட்டை அதிகரிக்க இரு நாடுகளும் தற்போதிருந்தே முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாய துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது அவசியம். இது உள்நாட்டு அளவில் மட்டுமல்லாது வெளிநாட்டு அளவிலும் இருக்க வேண்டும்.
 
விவசாயத் துறையில் முதலீட்டுக்குத் தடையாக உள்ள காரணிகளைக் களைந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் எளிமையாக முதலீடு செய்யும் வகையில் சாதகமான சு10ழலை உருவாக்குவது அவசியம்.
 
இதுதவிர்த்து,  சீனா,  இந்தியா இரு நாடுகளுமே உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களின் பலன் அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது முக்கியமானதாகும்.
 
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பாதுகாப்பாகச் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்குகளை அமைத்தல்,  விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தலிலும் இரு நாட்டு அரசுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக எம்.பிக்கள் குழு நிவாரண கிராமங்களுக்கு நேரில் விஜயம்

111009.jpgஇலங்கை வந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றுக் காலை யாழ். நகருக்கும், அங்கிருந்து வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர்.

நேற்றுக் காலை விமானப் படை விமானம் மூலம் இரத்மலானையிலிருந்து யாழ். நகரைச் சென்றடைந்த குழுவினர் பலாலி விமானத் தளத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். கோட்டையை சென்றடைந்தனர். காலை 9.45 மணியளவில் யாழ். கோட்டையை வந்தடைந்த குழுவினரை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் கணேஸ் ஆகியோர் வரவேற்றதுடன் தந்தை செல்வா நினைவுத் தூபி அருகே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.

தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தபின்னர் பேண்ட், மற்றும் நாதஸ்வர மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக யாழ். பொது நூலகத்துக்கு குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் தமிழக குழுவினர் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக குழுவின் தலைவர் ரி. ஆர். பாலுவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். யாழ். மேயர் பதவிக்கு தெரிவாகியுள்ள திருமதி யோகேஸ்வரி கவிஞர் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த நிகழ்வுகளின் பின்னர் யாழ். நூலகத்துக்கு முன் குழுமியிருந்த மக்களுடனும் தமிழக் குழுவினர் உரையாற்றினர்.

தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் யாழ். ஆயரும், செல்வநாயகம் ஞாபகார்த்த அறங்காவல் குழுவின் தலைவருமான பேராயர் வணக்கத்துக்குரிய ஜெபநேசன் அடிகளாரும் தமிழக குழுவினருடன் பேசினார். யாழ். நிகழ்வுகளை முடித்துக் கொண்ட தமிழக குழுவினர் ஹெலிகொப்டர்களில் காலை 11.30க்கு வவுனியா புறப்பட்டனர்.

வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தை அண்டியுள்ள ஹெலிக்கொப்டர் நிறுத்துமிடத்துக்கு பகல் 12.15 மணியளவில் வந்து சேர்ந்த தமிழக குழுவினர் மனிக்பாம் நிவாரணக் கிராமத்தின் வலயம் 1, வலயம் 2 என்பவற்றுக்கு விஜயம் செய்தனர்.

நிவாரணக் கிராமத்திலுள்ள பாடசாலைகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் தமிழக குழுவில் அங்கம் வகிக்கும் கலைஞர் கருணாநிதியின் புதல்வி கவிஞர் கனிமொழியையே பெரும்பாலும் சூழந்துகொண்டனர்.

கதிர்காமர், அருணாசலம், இராமநாதன் வலயம் 4, 5 போன்ற நிவாரணக் கிராமங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்தனர். சில நிவாரணக் கிராமங்களின் உள்ளே சென்று மக்களுடன் உரையாடினர். சில கிராமங்களை வாகனத்தில் சென்றபடியே பார்வையிட்டனர்.

சென்னையிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி உயர் ஸ்தானிகர் வீ. கிருஷ்ணமூர்த்தி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் காரியவசம், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் தமிழக குழுவினருடன் சென்றுள்ளனர். வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து தமிழக குழுவினர் நேற்று மாலை 4.00 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்பினர்.

260 இலங்கையர்கள் இந்தோனேஷிய கடலில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் படகில் சென்றுகொண்டிருந்த 260 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இந்தோனேஷியப் பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர்.

ஜாவாவுக்கும் சுமாத்திராவுக்கும் இடையிலுள்ள சுண்டா நீரிணையில் மரப்படகொன்றில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் இந்தோனேஷிய கடற் படையினரும் அதிகாலை வேளையில் இவர்களை கைது செய்தனர். இவர்களில் பெண்களும் சிறுவர்களும் இருந்தனரெனத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, விசாரணைக்காக இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரெனக் கூறி னார்.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களை அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுசெல்வதற்குரிய முக்கியதளமாக இந்தோனேஷியா திகழ்கிறது.  இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தோனேஷியாவைப் பயன்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட 260 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சான், ஹேமால், இந்திகவுக்கு கூடுதலான விருப்பு வாக்குகள்

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஐ. ம. சு. முன்னணி சார்பாக போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் மூவரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, காலி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வாவும், மாத்தறை மாவட்டத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் ஹேமால் குணசேகரவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் வி. ஜே. இந்திகவும் அதிக விரும்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

காலி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா 92,294 விருப்பு வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, ஐ. தே. க. சார்பாக நிசாந்த புஷ்பகுமார 52,371 விருப்பு வாக்குகளை பெற்று முதலாமிடத்தை கைப்பற்றியுள்ளார். அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வரான ரந்திம கமகே 77,418 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் மாகாண அமைச்சர் ஹேமால் குணசேகர 63,323 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளதோடு, அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரரான சரத் யாப்பா 45,882 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இது தவிர அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் மகனான காஞ்சன விஜேசேகர, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (ஐ. தே. க.) ஜெஸ்ரின் கலப்பத்தி ஆகியோரும் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுள்ளனர். ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவின் சகோதரன் சரத் வீரவன்ச தோல்வி அடைந்துள்ளார்.

ஐ. தே. க. சார்பாக ஐ. தே. க. முதன்மை வேட்பாளரான புத்திக பதிரன 57,802 வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி. கே. இந்திக 61,855 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஐ. தே. க. தரப்பில் கமகே தென்னகோன் நிலமே 23,894 வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இன ஐக்கியத்திற்கு காவலனாக திகழும் – பிரதி அமைச்சர் சச்சிதானந்தன்

13வது அரசியலமைப்பின் கீழ் தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழியை நாம் எல்லாக் காரியங்களிலும் பாவிக்க தமிழ் சமூகம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

2009ம் ஆண்டுக்கான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் அமரர் அருணாசலம் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதாநந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதிக் கல்வி அமைச்சர், தமிழ் அன்னைக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் மெருகூட்டும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இன ஐக்கியத்திற்கும், ஒற்றுமைக்கும் காவலனாகத் திகழும் மாத்தளை மண்ணில் நடைபெறுவது விசேட அம்சமாகும்.

மாத்தளை மண் தமிழ் காத்தமண் தமிழ் இலக்கிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் உருவாக்கி தமிழ் மொழிக்கு புத்துயிர் ஊட்டியது மாத்தளை மண். தமிழ் சாஹித்திய விழாவுக்கும், இலங்கைத் தமிழருக்கும் நீண்ட வரலாறு இருக்கின்றது. அந்தத் தொடர்பின் பிரதிபலனே இன்று மாத்தளை மண்ணில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நடைபெறுகிறது.

இன்று நாம் இப்படிப்பட்ட விழாக்களை நாட்டில் எந்த மூலையிலும் நடத்தும் ஒரு இனிமையான சூழல் உருவாகியுள்ளதையிட்டு நாம் அகமகிழ வேண்டும். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தும் அளவுக்கு இந்த நாட்டில் அவ்வப்போது தலைதூக்கிய வன்செயல்கள் இடம்கொடுக்கவில்லை. இதனால் எமது தமிழ் இலக்கிய பாரம்பரியங்களை தெளிவாக வெளிக்கொணர முடியாமல் போய்விட்டது.

முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் கலாசார அமைச்சராக செயல்பட்ட போதே இலங்கையில் தமிழ் சாஹித்திய விழா அறிமுகம் செய்யப்பட்டது.  இவரே தமிழ் சாஹித்திய விழாவின் கதாநாயகன் அல்லது காவலன் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அவரின் பாரிய முயற்சியும், 13வது அரசியலமைப்பில் தமிழ்மொழி தேசிய மொழியாக பிரகடனம் செய்யப்பட்டதன் பிரதிபலனாகவே இன்று தேசிய ரீதியாக, மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக நடைபெற்று வருகிறது.

இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. எனவே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்வி மூலம் நாம் பண்பாடு உள்ள மக்களாக திகழ வேண்டும். எதிர்வரும் ஆண்டை நாம் ஆங்கில மொழி ஆண்டாகவும், தொழில்நுட்ப ஆண்டாகவும் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலையகத்தில் பல்துறைகளிலும் முன்னேற்றம் தெரிகிறது. மலையகக் கல்வி வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்த மத்திய மாகாண தமிழ் கல்வி, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் சகல செயல்பாடுகளும வெற்றிகரமாக அமைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.