13வது அரசியலமைப்பின் கீழ் தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழியை நாம் எல்லாக் காரியங்களிலும் பாவிக்க தமிழ் சமூகம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.
2009ம் ஆண்டுக்கான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் அமரர் அருணாசலம் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதாநந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதிக் கல்வி அமைச்சர், தமிழ் அன்னைக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் மெருகூட்டும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இன ஐக்கியத்திற்கும், ஒற்றுமைக்கும் காவலனாகத் திகழும் மாத்தளை மண்ணில் நடைபெறுவது விசேட அம்சமாகும்.
மாத்தளை மண் தமிழ் காத்தமண் தமிழ் இலக்கிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் உருவாக்கி தமிழ் மொழிக்கு புத்துயிர் ஊட்டியது மாத்தளை மண். தமிழ் சாஹித்திய விழாவுக்கும், இலங்கைத் தமிழருக்கும் நீண்ட வரலாறு இருக்கின்றது. அந்தத் தொடர்பின் பிரதிபலனே இன்று மாத்தளை மண்ணில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நடைபெறுகிறது.
இன்று நாம் இப்படிப்பட்ட விழாக்களை நாட்டில் எந்த மூலையிலும் நடத்தும் ஒரு இனிமையான சூழல் உருவாகியுள்ளதையிட்டு நாம் அகமகிழ வேண்டும். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தும் அளவுக்கு இந்த நாட்டில் அவ்வப்போது தலைதூக்கிய வன்செயல்கள் இடம்கொடுக்கவில்லை. இதனால் எமது தமிழ் இலக்கிய பாரம்பரியங்களை தெளிவாக வெளிக்கொணர முடியாமல் போய்விட்டது.
முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் கலாசார அமைச்சராக செயல்பட்ட போதே இலங்கையில் தமிழ் சாஹித்திய விழா அறிமுகம் செய்யப்பட்டது. இவரே தமிழ் சாஹித்திய விழாவின் கதாநாயகன் அல்லது காவலன் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அவரின் பாரிய முயற்சியும், 13வது அரசியலமைப்பில் தமிழ்மொழி தேசிய மொழியாக பிரகடனம் செய்யப்பட்டதன் பிரதிபலனாகவே இன்று தேசிய ரீதியாக, மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. எனவே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்வி மூலம் நாம் பண்பாடு உள்ள மக்களாக திகழ வேண்டும். எதிர்வரும் ஆண்டை நாம் ஆங்கில மொழி ஆண்டாகவும், தொழில்நுட்ப ஆண்டாகவும் பிரகடனப்படுத்தியுள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மலையகத்தில் பல்துறைகளிலும் முன்னேற்றம் தெரிகிறது. மலையகக் கல்வி வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்த மத்திய மாகாண தமிழ் கல்வி, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் சகல செயல்பாடுகளும வெற்றிகரமாக அமைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.