26

26

ஒத்தி வைக்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம்- நாளை மறுதினம்

pm-manmogan.jpgகடந்த வெள்ளிக்கிழமை மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. திமுகவுடன் ஏற்பட்ட பதவி ஒதுக்கீடு குழப்பம் தொடர்பாக 19 கேபினட் அமைச்சர்கள் மட்டும் பிரதமருடன் பதவியேற்றனர்.

இந் நிலையில், திமுகவை சமரசப்படுத்த முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக அமைச்சரவையில் சேர திமுக சம்மதம் தெரிவித்து விட்டது. அக்கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் தரப்படவுள்ளன.

இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இது நாளை மறுதினம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் பாடநூல்கள் -சுசில் தலைமையிலான குழு 5இல் வவுனியா பயணம்

susil_prem_minister.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள 60,000 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், பாடநூல்கள் மற்றும் பாடசாலை உடைகளுடன் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையிலான அதிகாரிகள் குழு எதிர்வரும் ஜூன் 5ம் திகதி வவுனியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளது.

இம் மாணவர்களுக்கான க. பொ. த. சாதாரணதர பரீட்சை, ஐந்தாமாண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது-

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தயாராகி வரும் நிலையில் உடனடித் தேவைகளைக் கருத்திற்கொண்டு சீருடை நிறத்திலான டீ சேர்ட், காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கான உடைகளும் இவ்விஜயத்தின் போது பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று வன்னி சென்று நலன்புரி நிலையங்களில் உள்ள மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நிலை குறித்து ஆராய்ந்துள்ளதுடன் அவர்களுக்கான உடனடித் தேவைகளைக் கண்டறிந்துள்ளது.

நலன்புரி நிலையங்களில் வாழும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உடனடி உபகரணத் தேவைகள் குறித்தும் அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் முதற் கட்டமாக மாணவர்களுக்கு சீருடையை ஒத்ததான 25,000 உடைகள், 500 மேசைகள், 500 வாங்குகள், மேலதிக வாசிப்புக்கான ஐந்து இலட்சம் பாடநூல்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் எதிர்வரும் ஜூன் 5ம் திகதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

ஐந்து நிவாரணக் கிராமங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம் – அடிப்படை வசதிகளை கவனிக்கவும் அதிகாரிகள் நியமிப்பு

Wanni_War_Welfare_Campவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடையின்றி துரிதமாக சகல வசதிகளையும் வழங்குவதற்காக 5 நிவாரணக் கிராமங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடைய தேவைகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தமைலமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி உணவு, நீர் வசதிகளுக்கு ஒரு அதிகாரியும், பராமரிப்பு, நலன்புரி நடவடிக்கைகளுக்கு ஒரு அதிகாரியும், ஆற்றல் அபிவிருத்திக்கென ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

இது தவிர ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராம உத்தியோகத்தர், கள அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரும் நியமிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவை அமைச்சு தெரிவித்தது.

இந்த உயர்மட்ட மாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, நீர், மின்சாரம், பராமரிப்பு பணிகள், தங்குமிட வசதி, கல்வி நடவடிக்கை என்பன குறித்து முக்கியமாக ஆராயப்பட்டன. மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இதன் போது வவுனியாவில் இயங்கும் சகல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினதும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை துரிதமாக வழங்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கேட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை 5 நிவாரணக் கிராமங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறும் இடம்பெயர்ந்த மக்களுக்கு துரிதமாக உரிய வசதிகளை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொலைபேசி வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இந்தக் கூட்டத்தில் திட்ட மற்றும் செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளர் லலந்த அபேகுணவர்தன, பிரிகேடியர் சி. சி. பெரேரா, அரச, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், நீர்ப்பாசன, மின்சார சபை பிரதிநிதிகள் உட்பட பல அரச நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

டெங்கு நோயை பரப்பக்கூடிய சூழலை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக ஜூன் முதல் அபராதம்

mosquito_preventionss.jpgடெங்கு நோயை பரப்பக் கூடிய சுற்றுச் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அபராதம் அறவிடவும், தண்டனை விதிக்கவுமுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை தண்டமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயினால் கூடுதலானோர் பாதிக்கப்பட்டனர். கடந்த வருடம் 27 பேர் டெங்கினால் இறந்ததோடு கடந்த 5 மாதத்தில் மாத்திரம் 70 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து டெங்கு நோய் தொடர்பாக சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் மக்களை தெளிவுபடுத்தி வருவதோடு பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. டெங்கு நுளம்புகளை பெருக்கக் கூடிய இடங்களை வைத்திருக்கும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றுக்கு எதிராகவும் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்.

இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்

chitambaram.jpg இலங்கையில் சகஜநிலை திரும்பியதும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு கோரப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது,  இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டுவிட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சிதம்பரம், சகஜநிலை திரும்பினால் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அகதிகளே ஆர்வமாய் இருப்பார்கள் என்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்போது அகதிகள் கண்டிப்பாகத் திரும்பிச் செல்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், இலங்கை அரசே அதை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், பிரபாகரன் மரணம் தொடர்பாக ஐயப்பாடுகளை எழுப்பத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

தமிழகக் கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதலளித்த சிதம்பரம், அது தொடர்பாக தமிழக அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், மாநில அரசும் அதை ஏற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதால் ஊடுருவல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக புலிகள் அறிவிப்பு : கோத்தபாய நிராகரிப்பு

gotabaya1.jpgஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். “பலவருட காலங்களாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலை புலிகள் இயக்கம் ஜனநாயக நீரோட்டத்தில் இணைவார்கள் என நான் நினைக்கவில்லை” என பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளைத் தான் விரும்பவில்லை என தொலைபேசி நேர்காணலின் போது பி.பிசிக்குத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  பிபிசி தமிழோசைக்கு செல்வராசா பத்மநாதன் வழங்கிய நேர்காணலில், இராணுவ ரீதியில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால், தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக ரீதியில், அகிம்சா வழியில் இணையப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும். : வீ. ஆனந்தசங்கரி – தலைவர் த.வி.கூ

Anandasangaree V _ TULF Leaderமேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.

தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும்  தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.

2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென  இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.

நன்றி,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தியில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு

cb_ratnayaka.pngவடக்கு கிழக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தில் பங்கு எடுத்துக்கொள்ளும் வகையில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு பல திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட பிரதேசங்களில் பால் பண்ணைக் கிராமங்களை அமைக்கவும் பால் பண்ணையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் புதிய பால்சார்நத தொழிற்சாலைகளை அமைக்கவும் கால் நடை வளர்ப்பை அபிவிருத்தி செய்யவும் அமைச்சு எதிர்பார்க்கின்றது.

இத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் கால் நடைகளுக்கான புற் தரைகளை ஒதுக்கவும் அவற்றை மேலும் அபிவிருத்தி செய்யவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதேவேளை கால்நடை அபிவிருத்தி அமைச்சும் அதன்கீழ் உள்ள திணைக்களங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளன.

அதன்படி இடம்பெயர்ந்துள்ள சிறுவர்களுக்குத் தேவையான பாலுடன் தொடர்புடைய உணவுப்பொருட்களை சேகரித்து வருவதுடன் அவற்றை எதிர்வரும் 28 ஆம் திகதி ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஸீ.பீ.ரத்னாயக்க தலைமையிலன குழவினர் இவற்றைக் கையளிக்கும் நிழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தை குறித்து தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் – பிரகாஷ் கணேசன் கூறுகிறார்

sri-lanka-upcountry.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிற தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டொப்பந்தம் காலாவதியாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை புதிய கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய கூட்டொப்பந்தம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தாது இரகசியம் காத்து வருகின்றன. இது கூட்டொப்பந்தத்தில் பங்குபற்றாத தொழிற்சங்கங்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளன. தமது நாளாந்த வாழ்க்கையைக்கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென அரசாங்கத்தின் எந்தவொரு நிவாரணத் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைப்பதாகவில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தமது உழைப்பையே நம்பி வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தினையே தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.

எனவே இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வொன்று தற்போது உடனடியாகத் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெறுமனே காலந்தாமதிக்காமல் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பல திட்டங்கள்

batticaloa-sri-lanka.jpgநாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதற்கான  பல திட்டங்களை செயல்படுத்த சுற்றுலாத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட  ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கமிடையிலான சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கையைப் பிரபல்யப்படுத்த விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அடுத்த வருடம் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்த சு10ழல் காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்பின்னர் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்றும் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதைத்  தடுக்க வகை செய்ய வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மைக்கள் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் சீகிரியா மற்றும ஹிக்கடுவை போன்ற பிரதேசங்களுக்குச் செல்வதை கூடுதலான சுற்றுலாப்பயணிகள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் இதன்பின்னர் இவ்வாறான நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுககொண்டுள்ளார்.