தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிற தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டொப்பந்தம் காலாவதியாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை புதிய கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய கூட்டொப்பந்தம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தாது இரகசியம் காத்து வருகின்றன. இது கூட்டொப்பந்தத்தில் பங்குபற்றாத தொழிற்சங்கங்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளன. தமது நாளாந்த வாழ்க்கையைக்கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென அரசாங்கத்தின் எந்தவொரு நிவாரணத் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைப்பதாகவில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தமது உழைப்பையே நம்பி வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தினையே தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.
எனவே இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வொன்று தற்போது உடனடியாகத் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெறுமனே காலந்தாமதிக்காமல் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றார்.