ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த பாடசாலை அதிபர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (25.05.2009) கொழும்பில் நடைபெறுகின்றது. இதற்கென 1050 மில்லியன் ரூபா நிதியினை ஆசிய அபிவருத்தி வங்கி வழங்கவுள்ளது.
25
25
பாகிஸ்தான் இராணுவத்தினர் தாலிபான் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் சுவாத் பள்ளத்தாக்கின் பிரதான நகரமான மிங்கோராவில் தலிபான் போராளிகளைத் தேடியொழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் தெருத் தெருவாக, வீடு வீடாகத் தேடி மோதி வருவதாக பாக்கிஸ்தான ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நகரத்தில் இருந்து தலிபான் போராளிகளை விரட்டியடிக்க சனிக்கிழமை தாக்குதலை ஆரம்பித்த ராணுவம் தற்போது நகரின் மத்தியை புறநகரோடு இணைக்கின்ற வீதியையும், நகரின் முக்கியமான ஐந்து குறுக்குத் தெருக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது என ராணுவத்தின் சார்பில் பேசிய அதிகாரி தெரிவித்தார்.
மிங்கோரா நகரத்தில் ஞாயிறன்று 5 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் என்றும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். சுவாத் பள்ளத்தாக்குக்குள் ராணுவம் ஒரு மாதம் முன்னதாக புகுந்ததில் இருந்து இது வரை நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
மருத்துவ மனையில் சீக்கிய மதத்தின் இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தின் எதிரொலியாக, பஞ்சாப் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்திரியா மோதல் சம்பவத்தில் அந்நாட்டின் தேரா சச்கந்த் என்ற அமைப்பின் தலைவர் நிரஞ்சன் தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இந்நிலையில் அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு பஞ்சாப் மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், ’’ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். சகிப்புதன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றையே சீக்கிய மதம் போதிக்கிறது. அனைத்து சீக்கிய மத குருக்களும் சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றையே போதிக்கின்றனர்.
பஞ்சாபில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், சீக்கிய மதகுருக்களின் போதனைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் இருப்பது அவசியம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்னுடைய இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பஞ்சாப் மக்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’’தெரிவித்துள்ளார்.
“கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், இராணுவத்துக்கு தொடர் வெற்றி கிடைத்தது. இது விடுதலைப்புலி முன்கள வீரர்களிடம் கடும் சோர்வை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர்கள் சரணடையத் தொடங்கினர் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
மோதல் தீவிரமானபோது, முன்கள வீரர்கள் 2 ஆயிரத்து 65 பேர் தாமாக முன் வந்து சரண் அடைந்தனர். ஈழத்துக்காகத் தாம் போரிடவல்ல; தலைவர்கள் உயிரை காப்பாற்றவே தம்மை முன்னால் நிறுத்தி உள்ளனர் என்பதை உணர்ந்து அவர்கள் சரணடைந்தனர். கடைசிக் கட்ட தாக்குதல் நடந்தபோது பொது மக்களுடன் சேர்ந்து 2 ஆயிரத்து 379 விடுதலைப்புலிகள் ஊடுருவி இருந்தனர்.
விசாரணை நடந்தபோது அவர்களும் சரண் அடைந்தனர். மொத்தத்தில் பத்தாயிரம் விடுதலைப்புலிகள் எமது இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 202 விடுதலைப்புலிகள் எல்லா வகை ஆயுதங்களையும் பயன்படுத்த நன்கு பயிற்சி பெற்றவர்களாவர். கரும்புலிகளும் சரண் அடைந்துள்ளனர். அதிகப் பயிற்சிகளுடன் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள் தனித்தனி இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 ஆயிரத்து 237 விடுதலைப்புலிகள் பல்வேறு முகாம்களில் மறுவாழ்வு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1600 பேர் பெண் மற்றும் சிறு வயது புலிகளும் இனம் காணப்பட்டு முகாம்களில் பிரிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவிரப்போர் ஆரம்பமானது. அன்று முதல் போர் முடிவதற்குள் 22 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்றிருக்கிறோம்.
இராணுவத் தரப்பில் 6261 பேர் பலியானார்கள். 29 ஆயிரத்து 551 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 2 ஆயிரத்து 556 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஊனமடைந்து விட்டனர். பொது மக்களில் ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். போர் காரணமாக தமிழர்களில் 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 29 இடங்களில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இலங்கை வடக்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும்.
அதுவரை அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். முகாம்களில் அவர்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ளதாக இலங்கை அரசு கூறிவரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(மக்கள் பிரிவு) தலைவர் மங்கள சமரவீர எம்.பி.யின் வீட்டில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் பல்வேறு விபரங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, இராணுவ வெற்றியின் பின் நாட்டு நிலைமை, இராணுவ வெற்றியை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்துவது, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் நிலை, இந்த விடயங்களிலெல்லாம் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் பல்வேறு அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு முகாம்களில் ஒன்றான வவுனியா மனிக் பார்ம் முகாமில் 200,000க்கும் அதிகமான மக்கள் தமது எதிர்ப்பார்ப்புகள் தகர்க்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘த டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வவுனியா தடுப்பு முகாமுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவருடன் சென்றிருந்த ‘த டைம்ஸி’ன் செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மனிக் பார்ம் முகாமை, முகாம் என்பதை விட சிறை அல்லது காட்சிக் கூடம் என்றே அழைக்க வேண்டும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் முட்கம்பிகளுக்கு இடையில் மக்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் இணைப்பாளர் ஜெர்சன் பரான்டோ தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சீக்கிய மதகுரு சந்த்ராம் நந்த் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறைக்கு
இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவம் விரைந்துள்ளது. கொல்லப்பட்ட சந்த்ராம் நந்த் மற்றும் குருசந்த் நிரஞ்சன் தாஸ் என்ற மதகுருவும் இணைந்து குருத்வாராவில் ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென 6 பேர் உள்ளே நுழைந்து கத்திகள், துப்பாக்கிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வியன்னாவில் நடந்த தாக்குதல் பஞ்சாபில் எதிரொலித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கலவரம் மூண்டுள்ளது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஜலந்தரில் பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் வேன்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. அங்கு துணை ராணுவப்படை விரைந்துள்ளது. ராணுவமும் விரைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லம்ப்ரா கிராமத்தில், ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல ஜலந்தர் கன்டோன்மென்ட் பகுதியில், போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பக்வாரா பகுதி வழியாக சென்ற கன்னியாகுமரி – ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து போய் விட்டன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ. தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10 நாள் விஜயத்தை கடந்த 14 ஆம் திகதி மேற்கொண்ட நிலையிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.
இந்த விஜயந்தின்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக எடுத்துரைத்துள்ளதுடன் நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் ஏற்படுத்துமாறு அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை விமான நிலைய சரக்குப் பிரிவு வளாகத்திற்குள் இன்று காலை 3 ஆயுதம் தாங்கிய கும்பல் உள்ளே நுழைந்து சரமாரியாக சுட்டது.இதில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் காரில் வந்ததாக தெரிகிறது. யார் அவர்கள், எதற்காக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
![]()
திருகோணமலையில் வெவ்வேறு இடங்களிலிருந்து கடந்த சனிக்கிழமை பெருந்தொகை வெடிப்பொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாரும் படையினரும் நேற்று தெரிவித்தனர்.
கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் எனும் பகுதியிலிருந்து 126- ரி 56 துப்பாக்கி ரவைகள் 01- மெக்சின், 01- சயனைற் குப்பி, 04- கிரனேற் கைக்குண்டுகள் ஆகியன கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை சனிக்கிழமை மாலை கிண்ணியாவிலிருந்து படையினரால் 01-ரி 56 துப்பாக்கி, 04-மெகசின்கள், 127- ரி 56 ரவைகள், 15 – டெட்டனேட்டர்கள், 02- டெட்டனேட்டர் கோட்கள், 02- கண்ணி வெடிகள், 05- அமுக்க வெடிகள், 02- ரிமோட்கள், 02- மின்கலங்கள், 02- சயனைற் குப்பிகள், 03- கிரனேற்றுகள், 02- கிளேமோர்கள் ஆகியன படையினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.