விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ளதாக இலங்கை அரசு கூறிவரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(மக்கள் பிரிவு) தலைவர் மங்கள சமரவீர எம்.பி.யின் வீட்டில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் பல்வேறு விபரங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, இராணுவ வெற்றியின் பின் நாட்டு நிலைமை, இராணுவ வெற்றியை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்துவது, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் நிலை, இந்த விடயங்களிலெல்லாம் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் பல்வேறு அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ramesh
றனில், இலங்கையில் பிரச்சினை முடிந்து விட்டது. அடுத்தகட்டம் என்னவென்று ஆராயும் பொழுது முதலில் உங்கள் ஆட்சியில் அநியாயமாக கைது செய்யப்பட்டு, விடுதலைப்புலிகள் என்று முத்திரை பதிக்கப்பட்டு, எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு எந்த நல்ல காரியத்தைத்தான் உங்களால் செய்யமுடியும்?
பார்த்திபன்
உங்களால் எனி இப்படியான ஆராய்வுகளைத் தான் நடத்த முடியும்…