19

19

பிரபாகரனது போல் தென்படும் சடலத்தை இலங்கை தொலைக்காட்சி காண்பித்தது – பீபீஸி செய்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கொரில்லாக்களின் உடையணிந்த சடலம் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பகுதி ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்தப் பகுதியில் காயத்தை மறைப்பதற்காக அது இருக்கலாம்.

அந்த சடலத்தின் மரபணுச் சோததனைகள், அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
 
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்… போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
 
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார். அது போலத்தான் இப்போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.

பிரபாகரன் மரண செய்தி: வெளிநாடுகளில் தமிழர்கள் கொந்தளிப்பு

Pirabakaran_V விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் முன்னணி தளபதிகள் அனைவரையும் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
 
இது உலகம் முழுவதும் தமிழர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற தமிழர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர். அவர்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
லண்டனில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து பாராளுமன்றம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
 
சுவிட்சர்லாந்தில் ஐ.நா. சபை அலுவலகம் எதிரே ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் காவலை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
 
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பும் போராட்டம் நடந்தது. இதில் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.  இதேபோல பிரான்சு, கனடா, ஜெர்மனி, ஆஸ்தி ரேலியா, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் தமிழர்கள் தெருக்களில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அனைத்து இடங்களிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தோடு கூடி இருந்தனர். அவர்களில் பலர் கதறி அழுதனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். அவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அனைத்து நாடுகளிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஐ.நா. செயலர் பான் கீ மூன் 22ஆம் திகதி கொழும்பு வருகிறார்

ban_ki_moon_.jpgஐ.நா. செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பையேற்றே ஐ.நா. செயலர் 22 ஆம் திகதி கொழும்பு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜே நம்பியாரை நேற்று திங்கட்கிழமை போகொல்லாகம சந்தித்த போதே விஜே நம்பியார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த படையினரின் வெற்றி நாளாக 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் பான் கீ மூன் இலங்கை வரவுள்ளார்.

இதற்கிடையில், வன்னியில் அண்மைக்காலமாக படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையானது மனிதாபிமான நடவடிக்கையெனவும் இந்த மனித நேயப் பணியின் வெற்றியை அங்கீகரிக்குமாறும் ஐ.நா. சபையிடம் இலங்கை அரசு கேட்டுள்ளது.

விஜே நம்பியாருடனான சந்திப்பிலேயே அமைச்சர் போகொல்லாகம இதனைக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையான தகவல்களைச் சேகரித்து அவற்றை வெளியிடுவதே ஊடகவியலாளர்களின் முக்கிய கடமை

உண்மையான தகவல்களைச் சேகரித்து அவற்றை வெளியிடுவதே ஊடகவியலாளர்களின் கடமையென உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கானப் புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான வதிவிடக் கருத்தரங்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மக்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகக் கிடைக்கும் தகவல்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையாகும்.

மேலும்,தகவல்களினைப் பெறும் போது முழுமையானதும் உண்மையானதும் உறுதிப்படுத்தப்பட்டதுமானவற்றை திரட்டி செய்திகளை வெளியிட வேண்டியது எமது கடமையாகும் என்றார்.

அந்நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சி ஹேவா உரையாற்றுகையில்;ஒரு நாட்டில் அரசாங்கம் இல்லாவிட்டாலும் செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகள் அத்தியாவசியம். அப்பத்திரிகைகளினூடாக நாட்டின் மூலை முடுக்குகளில் இடம்பெறும் தகவல்களையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இதன்மூலம் நாட்டில் இடம்பெறும் அநீதியான செயல்களை வெளிக்கொணர்ந்து நாட்டைப் பாதுகாக்கவும் முடியும்.ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இருக்கும் வரை நாட்டையும் நாட்டில் இடம்பெறும் நல்லது, கெட்டது போன்ற தகவல்களை வெளியிட்டு நாட்டைப் பாதுகாக்க முடியும்.

மேலும், 14 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஒருவருக்குத் தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் கருத்தை வெளியிடுவதற்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அத்துடன் உண்மையான தகவல்களை எழுதுவதன் மூலம் நாட்டின் ஆட்சியை மாற்றமுடியும் என்றார்.

இந்த வதிவிடக் கருத்தரங்கில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய இலத்திரனியலுக்கு எவ்வாறு செய்திகள் எழுதுவது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

Pirabakaran_V விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்  உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.

தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.

மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.

பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது  புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.

புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.

அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.

இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை- நோர்வே

eric-solheim.jpgவிடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறினாலும் கூட போர் இன்னும் முடியவில்லை என்று நோர்வே அமைச்சரும், முன்னாள் அமைதி முயற்சிக்கான தூதுவருமான எரிக் சொல்ஹீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் மூன்றாவது தரப்பிடம் ஆயுதங்களைக் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இலங்கை அரசை மூன்றாவது தரப்பினரை போர்ப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

தற்பொழுது போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவு பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்”: செ.பத்மநாதன்

Selvarasa_Pathmanathan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது” எனவும் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும்,  இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

‘விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்’ எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாளை தேசிய விடுமுறை தினம்

sri-lankan-government.jpgயுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக நாளை 20.5.2009  பொது தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.

பிரபாகரன் மரணம் அடைந்தமைக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் தேடும் இந்தியா

புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் கோரியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரி இவ்வாறு கோரியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பிரதான எதிரிகளாக பிரபாகரனும் பொட்டம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மரணித்து விட்டமைக்கு விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நாம் இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.