07

07

இலங்கைக்கான உதவித் தொகையை அதிகரித்தது கனடா

canada_min.jpg இலங்கையில் மோதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை கனடா 7.5 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியுள்ளது. கனடாவின் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜே.ஒடாவின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மனிதநேய உதவிகள் குறித்து கனேடிய அமைச்சர்,  இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமையக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான உணவு,  நீர்,  தற்காலிக கூடாரங்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருள்களுக்கான மேலதிக நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறினார். மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் அனைத்துத் தரப்பிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன்,  உடனடி உதவிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 16,283 குடும்பங்களுக்கு மின்சார வசதி

இரத்தினபுரி மாவட்டத்தில் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் ஒரு வருட காலப் பகுதியில் 297 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டு 16,283 குடும்பங்களுக்கு மின்சார வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மின் சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்னவினால் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலுமுள்ள 2 இலட்சத்து 57 ஆயிரத்து 709 வீடுகளுக்கும் மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக 5100 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது

உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மகிந்தவுடன் முக்கிய சந்திப்பு

20090424063601srilanka4.jpgஇலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.   ஜப்பான், அமெரிக்கா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளின் இலங்கையிலுள்ள தூதுவர்களே நேற்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வடக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து பேசியுள்ளனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் அப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றும் போது அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளை வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு 30 வருடங்களுக்கு மேலாக எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத பிரதேசம் என்ற வகையில், இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட மக்களது நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றில் இணைத்தலைமை நாடுகளுடன் சுமுகமாக செயற்படுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இணைத்தலைமை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நோர்வே தூதுவர் றோர் ஹேற்றன், ஜப்பான் தூதுவர் கியூனியோ ஏக்காஹசி, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெவ்னோல்ஸ் சவேஜ், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜோன்ஸ் மோர் ஆகியோருடன், ஐரோப்பிய குழுமத்தின் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி ஹேர்க் மங்கேநஸ்ற், அமைச்சர்களான ரோஹித போகால்லாகம மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் மாணவரை ஊக்குவிக்க விசேட திட்டம்

sri-lankan-schools.jpgஏறாவூர் பிரதேச பாடசாலைகளில் இருந்து இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்¨ச்ககுத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்மொன்றினை ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் கோட்ட கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முன்னோடி புலமைப்பரிசில் பரீட்சையில் 100 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 144 மாணவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த பரிசளிப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். இஸட். ஆப்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வி. அமீர்தீன் தனது கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலமாக மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென சித்திரிப்பதாக பிரிட்டன் ஆயர் விசனம்

uk-london.jpgஇலங் கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சித்திரிப்பதாக பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்துள்ளார்.  லண்டனின் பிரபுக்கள் சபையில் கேள்வி நேரத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே போர்ட்ஸ்மௌத் ஆயர் ஹென்னத் ஸ்ரீவென்சன் ஜனாதிபதி ராஜபக்ஷவை விமர்சித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் புராதன மக்கள். அங்கு அவர்களுக்கு இன, மத ரீதியான முரண்பாடுகள் உள்ளதுடன் இது ஒரு புதிய விடயம் அல்லவெனவும் ஆயர் ஸ்ரீவென்சன் கூறியுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பதமானது நவீன பிதற்றல் முறையின் ஓர் அம்சமென இச்சபையில் உள்ளோரும் வெளியில் உள்ளோரும் நன்கறிவரெனவும் ஆயர் ஸ்ரீவென்சன் தெரிவித்தார்.

இந்நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சக அதிகாரி மல்லோச் பிரௌண்; ஆயரின் கருத்துடன் ஒத்துப்போகும் அதேவேளை, பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற வார்த்தை வழக்கத்துக்கு மாறான சொல் என்பதுடன் தந்திரோபாயச் செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் ஓர் சொற்றொடருமாகும்.

இலங்கையில் புராதன இரு இனங்களிடையேயான சச்சரவே இதுவென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால், இச்சச்சரவு தற்பொழுது வன்முறைகள் அதிகம் நிறைந்த சண்டையாக மாறியுள்ளதுடன் இருதரப்பும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘நமக்காக நாம்’ நிதியத்துக்கு இதுவரை 400 மில்லியன் ரூபா அன்பளிப்பு

waroooo.jpgதாய் நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி வரும் படை வீரர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட நமக்காக நாம் நிதியத்துக்கு இதுவரை 400 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் விலி கமகே தெரிவித்தார்.

தேசிய படை வீரர்கள் மாதத்தை முன்னிட்டு அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு,  ரணவிரு அதிகார சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்லே தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நமக்காக நாம் நிதியத்துக்கு அரசாங்க,  தனியார்துறை,  பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் போன்ற பலதரப்பட்டவர்களினதும் பங்களிப்பினாலேயே இத்தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை 900 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதே அமைச்சின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.