May

May

சோனியாகாந்திக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை

india-election.jpgஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை தீவுத்திடலில் இன்று(புதன்கிழமை) நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்பட ஏராளமான பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – அமைச்சர் அநுர பிரிதர்ஷன யாப்பா

20090424063601srilanka4.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் இதில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊடக தகவல்துறை,  முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக கட்டுகம்பளை தேர்தல் தொகுதி மக்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அப்பிரதேச மக்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

குறிப்பிட்ட பொருட்களைக் கையேற்று உரை நிகழ்த்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான  குடிநீர் போத்தல்கள், பிஸ்கட், பால்மா,  அரிசி, பருப்பு, சீனி மற்றும் துணிவகைகள் போன்றவை இந்நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன.

இடைநிறுத்தப்பட்ட வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகளை நடத்த ஏற்பாடு

பெரும்பான்மை யினத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு நடைபெறவுள்ளது.

கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் திங்கட்கிழமை காலை சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. சித்திரா பௌர்ணமி தினமான 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு இப்பூசை நடைபெறுவதுடன், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சௌமிய இந்து கலாசார மண்டபமும் திறந்து வைக்கப்படும்.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. உபதலைவர் எம். மணிமுத்து, ஏ.எம்.டி. இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து ஆலய வழிபாட்டுச் சபையினர் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

புதிய திட்டங்களை விரிவுபடுத்த கூடாது: நவீன் சாவ்லா

iindias-election.jpg தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் குரேஷி, சம்பத் ஆகியோர் சென்னை வந்தனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் நரேஷ் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீன் சாவ்லா,

தேர்தலையொட்டி புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அரசியல் நோக்கத்துடன் யாரையும் கைதுசெய்ய கூடாது என்றும் வலியுறுத்தினார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று கூறினார்.

இலங்கையில் ஐ.நா.புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா – இரு தரப்புக்குமிடையே இராஜதந்திரப் போர்

_sri_lanka_sat_any.gif ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருப்பதையடுத்து இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக்கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா.சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து இலங்கை அரசாங்கம் கடும் சீற்றமடைந்திருக்கின்றது.  இந்தச் செயற்பாட்டின் மூலமாக ஐ.நா.சபை தன்னுடைய வழமையான செயற்பாடுகளின் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது.

உறுப்பு நாடு ஒன்றின் தகவல்களை இரகசியமான முறையில் பெற்று, அந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அந்தத் தகவல்களை பின்னர் ஏனைய நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் கசிய விடுவதற்கான உரிமை ஐ.நா.வுக்கு உள்ளதா என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  “ஐ.நா.வின் ஒரு பிரிவோ அல்லது ஐ.நா.வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தனிநபரோ உறுப்பு நாடு ஒன்றில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரித்து பின்னர் அவற்றைத் தெரிவு செய்யப்பட்ட சில தூதரகங்களுக்கு கசியவிடுவது அல்லது இணையத்தளத்தில் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.  உலகில் போர்ப்பகுதிகளாக பல இடங்கள் உள்ளன எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கோஹன. இந்த இடங்களில் எல்லாம் உளவு பார்ப்பதற்கான உத்தேசம் ஐ.நா.சபைக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்துக்குச் சங்கடமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த செய்மதிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிடும் கோஹன, இவ்வாறான நடவடிக்கை சர்வதேச உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதுடன், சக்தியற்ற மூன்றாம் உலக நாடகளுக்கு விடுக்கப்படும் ஒரு மிரட்டலாகவுமே கருதவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பு

parliament-of-sri-lanka.jpgவிடுதலைப் புலிகளை சிறுபகுதிக்குள் ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவரும் நிலையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

pr-tam-deli.jpgதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (05) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. அதேநேரம் இச்சந்திப்பில் த.தே.கூட்டமைப்பினரும் கலந்துகொள்ள இருந்ததாகவும் அவர்கள் அத்தீர்மானத்தை கடைசி நேரத்தில் ரத்துச்செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

pr-tam-deli.jpg

தினுஷிக்காவின் கொலை சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை

batticalo_0505.jpg
மட்டக்களப்பு பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா (8 வயது) என்ற சிறுமியில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 3 பேர் இன்று (05.05.2009) அதிகாலை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வியங்காடு பாரதி ஒழுங்கை பகுதியை சேர்ந்தவர்களான மகிந்ததாஸ் மயூரன் (வயது 24), எட்வேர்ட் ஜூலியட் ஸ்டனிஸ்லோஸ் (வயது 20), ஏரன்ஸ் ஒழுங்கையைச் செர்ந்த சம்பா எனப்படும் சோமசுந்தரம் அனுஷன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி மயூரன் என்பவரது வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லண்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையரின் வழக்கு வெற்றி

uk-200.jpg
இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் குடியேற்றத்துறை இவ்விண்ணப்பத்தை ஏற்கவில்லை. மேலும் இருவரையும் நாடு கடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இருவரும் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தங்களை நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செட்லி, ஆர்டன், மோசஸ் ஆகியோர், “இருவரையும் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். மேலும் நாமே அவர்களைக் கொன்றது போலவும் ஆகிவிடும். இது ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டுப் பிரகடனத்திற்கு விரோதமானது” என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் சகோதர, சகோதரிகள் இங்கிலாந்திலேயே தங்கவும் அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இங்கிலாந்து அரசுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றப் பிரிவுத்துறை அமைச்சர் பில் ஊலஸ் கூறுகையில், “இது பொது அறிவே இல்லாத தீர்ப்பு. எதிர்காலத்தில் இங்கிலாந்துக்குச் சட்டவிரோதமாக வருவோரும், அகதிகளும் இந்தத் தீர்ப்பைக் காட்டி இங்கேயே தங்க முயற்சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் லார்ட்ஸ் சபையில் மனு தாக்கல் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

புலிகள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியை நோக்கிப் பல முனைகளிலும் படைநகர்வு

waroooo.jpgபாதுகாப்பு அமைச்சு கூறுகிறதுமுல்லைத்தீவில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் விடுதலைப் புலிகள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றும் கடும் தாக்குதலை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் “ஏ35′ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மிக அருகருகே நடைபெற்ற கடும் சமரையடுத்து அப்பகுதியில் புலிகளால் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ள மண் அணையை 53 ஆவது படையணியினர் தகர்த்துள்ளனர்.

இதையடுத்து, மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் புலிகள் வசம் எஞ்சியிருக்கும் கடைசி 5 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  “ஏ35′ வீதி, முல்லைத்தீவு புதுமாத்தளன் வீதியை இணைக்கும் முக்கிய சந்திக்குத் தெற்கே நந்திக்கடல் வாவிக்கும் “ஏ35′ வீதிக்குமிடையிலுள்ள சிறிய பகுதியில் தற்போது 53 ஆவது படையணி செயற்படுகிறது.

சனிக்கிழமை 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள், புதுமாத்தளன் முல்லைத்தீவு மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் இடையிலுள்ள முக்கிய சந்தியைக்கைப்பற்றியுள்ளது.  இந்தக் கடும் சமரின் போது விடுதலைப் புலிகள், தாங்கள் அமைத்திருக்கும் மண் அணையை படையினர் கைப்பற்றுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை புலிகள் இந்தப் பகுதிக்கு பல வாகனங்களில் மேலதிகமாக தங்கள் ஆட்களை அனுப்பி படையினரின் நகர்வுகளை முறியடிக்க பல தடவைகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.  எனினும், புலிகளினால் கண்ணி வெடிகள், மிதி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டு மிகவும் வலுவாக வைத்திருந்த மண் அணையை படையினர் கடும் சமரின் பின்னர் கைப்பற்றியுள்ளதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.

தற்போது எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் சகல முனைகளிலும் முன்னேறி வருவதால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.