இடைநிறுத்தப்பட்ட வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகளை நடத்த ஏற்பாடு

பெரும்பான்மை யினத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு நடைபெறவுள்ளது.

கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் திங்கட்கிழமை காலை சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. சித்திரா பௌர்ணமி தினமான 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு இப்பூசை நடைபெறுவதுடன், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சௌமிய இந்து கலாசார மண்டபமும் திறந்து வைக்கப்படும்.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. உபதலைவர் எம். மணிமுத்து, ஏ.எம்.டி. இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து ஆலய வழிபாட்டுச் சபையினர் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *