பாதுகாப்பு அமைச்சு கூறுகிறதுமுல்லைத்தீவில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் விடுதலைப் புலிகள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றும் கடும் தாக்குதலை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் “ஏ35′ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மிக அருகருகே நடைபெற்ற கடும் சமரையடுத்து அப்பகுதியில் புலிகளால் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ள மண் அணையை 53 ஆவது படையணியினர் தகர்த்துள்ளனர்.
இதையடுத்து, மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் புலிகள் வசம் எஞ்சியிருக்கும் கடைசி 5 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. “ஏ35′ வீதி, முல்லைத்தீவு புதுமாத்தளன் வீதியை இணைக்கும் முக்கிய சந்திக்குத் தெற்கே நந்திக்கடல் வாவிக்கும் “ஏ35′ வீதிக்குமிடையிலுள்ள சிறிய பகுதியில் தற்போது 53 ஆவது படையணி செயற்படுகிறது.
சனிக்கிழமை 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள், புதுமாத்தளன் முல்லைத்தீவு மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் இடையிலுள்ள முக்கிய சந்தியைக்கைப்பற்றியுள்ளது. இந்தக் கடும் சமரின் போது விடுதலைப் புலிகள், தாங்கள் அமைத்திருக்கும் மண் அணையை படையினர் கைப்பற்றுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை புலிகள் இந்தப் பகுதிக்கு பல வாகனங்களில் மேலதிகமாக தங்கள் ஆட்களை அனுப்பி படையினரின் நகர்வுகளை முறியடிக்க பல தடவைகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், புலிகளினால் கண்ணி வெடிகள், மிதி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டு மிகவும் வலுவாக வைத்திருந்த மண் அணையை படையினர் கடும் சமரின் பின்னர் கைப்பற்றியுள்ளதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.
தற்போது எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் சகல முனைகளிலும் முன்னேறி வருவதால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.