May

May

கொழும்பு மற்றும் ஸ்ரீஜயவாதனபுர கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

students1.jpgகொழும்பு மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுபற்றி கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் எமது இணையத்துக்குத் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டெடுத்த படைவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தை முன்னிட்டே இப்பாடசாலைகள் மூடப்படவுள்ளன எனக் கூறினார்.

பாகிஸ்தானில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ சர்வதேச நிதியுதவி தேவை: பாகிஸ்தான் பிரதமர்

raza_gilani.jpgபாகிஸ் தானில், தாலிபான் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது போரின் காரணமாக இடம் பெயர்ந்துள்ள பெருமளவிலான பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமக்கு அவசரமாக 600 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தமக்கு நிதியுதவி தேவைப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடமேற்கே தாலிபான் ஆயுததாரிகளை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக 15 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது மிகவும் அவசியமானது என்று நிதியுதவி வழங்குவோரின் சர்வதேச மாநாட்டிலேயே பாகிஸ்தானிய பிரதமர் கீலானி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் அமைதியும் வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 240 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான நிதி உதவி வழங்க கொடையாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தகவல் திணைக்களத்தின் துரித குறுந்தகவல் செய்தி ஜனரஞ்சகம் பெற்றுள்ளது

directoinformation_.jpgஅரசாங்க தகவல் திணைக்களம் டயலொக் டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகின்ற துரித குறுந்தகவல் செய்திச் சேவை ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்களுக்குள் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் அதனுடன் இணைந்துள்ளதாக தகவல் திணைக்களப் பணிப்பாளர் அநுஷபெல்பிட்ட தெரிவித்தார்.

இத்துரித குறுந்தகவல் செய்திச் சேவையினூடாக தேசிய ரீதியான முக்கிய மற்றும் சூடான செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களை இச்செய்தியின் தரமும் அதன் வேகமும் கவர்ந்துள்ளதன் காரணமாகவே இச்சேவைiயில் இணைவோரின் தொகை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த துரித குறுந்தகவல் சேவையை ‘இன்போ’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு 678 எனும் இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

சர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’ – புன்னியாமீன்

international-day-for-biological-diversity.jpgஇன்று மே 22 சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day)  தினமாகும்.

உயிரியல் சம்பந்தமான பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.  உயிரியல் என்பது ‘உயிர் வாழ்வன’ பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும்,  சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும் அவை எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் கவனத்திற் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும்,  விளக்கங்களையும் முன்வைப்பதாகும்.

‘உயிரியல்’ விரிவுபட்ட அதேநேரம், தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்விச் செயற்பாடுகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த அடிப்படையில்  உயிர்வாழ்வன பற்றி ஆய்வு செய்கின்றன.

இத்தகைய ஆய்வுகள் அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டத்தில், மூலகூற்று உயிரியல், உயிர்வேதியியல் ஊடாகவும்,  களங்கள் (cell) மட்டத்தில் களங்கள் உயிரியல் ஊடாகவும், கள மட்டத்தில் உடற்கூற்றியல்,  மற்றும் கள அமைப்பியல் ஊடாகவும்,  தனிப்பட்ட உயிரினத்தின் விருத்தி அல்லது ontogeny மட்டத்தில் விருத்தி உயிரியல் ஊடாகவும்,  பெற்றோர், offspring  இடையிலான பரம்பரைத் தொடர்புகள் மட்டத்தில் பரம்பரையியல் ஊடாகவும்,  குழு நடத்தைகள் மட்டத்தில் நடத்தையியல் ethology ஊடாகவும்,  முழு population மட்டத்தில் தொகை மரபியல் population genetics ஊடாகவும்,  பல்வகை உயிரினங்களில் lineages மட்டத்தில் முறைப்பாடியல் ஊடாகவும்,  ஒன்றிலொன்று சார்ந்துள்ள populations மற்றும் அவைகளின் வாழிடங்கள் மட்டத்தில், இயற்கை இயல் மற்றும் பரிணாம உயிரியல் ஊடாகவும், பூமிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்தில், xenobiology ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இது ஒரு விரிவான துறையாகும்.

இத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1993ஆம் ஆண்டில் ஐ. நாடுகள் பொதுச் சபையின் இரண்டாம் குழுவினால் இத்தினம் பிரகடனப்படுத்தட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை டிசம்பர் 29ஆம் திகதிகளிலேயே அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. 2000ஆம் ஆண்டு நடை பெற்ற ‘ரயோ ஏர்த”; மகாநாட்டின்போது “டிசம்பர் மாதத்தில்  விடுமுறைகள் அதிகமாக இருப்பதால்” சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day)  தினத்தை மே 22ல் அனுஸ்டிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட “மிலேனியம் எக்கோ சிஸ்டம்” (M.A) மதிப்பீட்டின்படி இந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உயிர்ப் பல்வகைமை Biological Diversity (or World Biodiversity)  இழப்புக்கு காலநிலை மாற்றமானது நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

2100 ஆண்டளவில் வெப்பநிலையனாது 1.4 பாகை செல்சியஸிலிருந்து 5.8 பாகை செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கால நிலை மாற்றமானது விநியோக மாற்றங்கள், அழிவு அதிகரிப்பு விகிதங்கள்,  இனப் பெருக்கத்தில் பாதிப்பு  போன்றவற்றுடன்  தாவரங்களின் வளர்ச்சியில் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

இம்மாற்றங்களின் காரணமாக ஒரு மில்லியனுக்கு கூடிய இனங்கள் அழிவுறும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  தாவர இனங்களின் அழிவையும், காலநிலை மாற்றத்தையும் முறைப்படி எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்குச் செயற்படின் அடுத்து வரும் காலங்களில் இந்நிலையை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும்.

இவ்விடத்தில் பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக சிறிது ஆராய்தல் அவசியம்.

பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)] எனும் அறிஞர் “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. புவியின் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து  129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டிப்படைந்துள்ளது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். எதிர்பார்த்ததை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”  – கிரிஸ்டொபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

மேலும், “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி அதிகமாக வெப்பமடைந்ததால்  மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினங்கள் கூட அழிந்தன என்றும், அதே நேரத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை ஏற்படுகின்றது.” மேற்படி கருத்துக்களைப் பார்க்குமிடத்து புவி வெப்பமடைவதும், இதனால் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் எம்மால் தீர்மானிக்கக்கூடியதே.

“உலகத்தின் சனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது’. அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு.

சில தசாப்தங்களுக்குள் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவுமில்லாமல் போகலாம் எனவும்  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேநேரம், சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன,  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின, அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிமலைகள் உருகிக் கரைந்து விட்டன,  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மக்களை புலப்பெயர்ச்சி செய்து விட்டது,  வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை கால நிலையும் அதைவிடப் பயங்கரமானதே.

இவ்விடத்தில் புவிச் சூடேற்றம் என்றால் என்ன என்பதையும் சிறிது விளங்கிக் கொள்ள வேண்டும்.

புவி என்று நாம் கூறும்போது மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பை [Temperature Range] ஏற்படுத்திக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும்,  பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி வெப்ப அதிகரிப்பு இடம் பெற்று விடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் அனைத்துமே பாதிக்கப்படும்

பச்சை வீட்டு  வாயுக்கள் (கார்பனீர்ஒக்சைட், மீதேன் போன்ற வாயுக்கள்) பூமியில்  உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணை போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் பச்சை வீட்டு வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூமியின் வெப்பம் வேகமாக உயர்கின்றது.

அண்மையில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டு காலமாக பனிப்படலங்களிலிருந்தும் சேமிப்பாய் உள்ள மீதேன் புவியின் வெப்ப நிலை அதிகரிப்பினால் அதிகமாக வெளியேரலாம் என எச்சரித்துள்ளது. மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்பட்டுள்ளது. புவிச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பனீர் ஒக்சைட்டை விட 23 மடங்கு அதிகம் எனப்படுகின்றது. உலகில் அதிகமான  விஞ்ஞானிகள் புவிச் சூடேற்றத்தை உண்மையென ஏற்றுக் கொண்டாலும் அம்மாறுதலை ஏற்றுக் கொள்ளாத அறிஞர்களும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புவிச் சூடேற்றத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் உண்மையாகவே உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் காலநிலைக் கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள்,எரிமலை வெடிப்புகள், போன்றவற்றைக்காண்கின்றோம்.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது. உதாரணத்திற்காக அண்மைக்காலங்களாக காலநிலைமாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகளை நோக்குவோம். கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன, குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன, 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

மேலும் தொடர்ந்தும் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் கீழ்க்காணும் அபத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு, அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும், கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம், 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம், 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம், வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம், நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சனைகளை நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமையாகவும் உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும்,  மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் இப்போது வந்துவிட்டது. புவிச் சூடேற்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தாவிடின் இன்னும் சில தசாப்தங்களில் பாரிய உயிரின இழப்புகள் ஏற்பட இடமுண்டு. இதனை இத்தினத்தில் நினைவிற் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0522-the-international-day-for-biological-diversit.html

பிரதமர் பதவியேற்பு விழா: கலைஞர் புறக்கணிப்பு?

karunanithi.jpg மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.

காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,  காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார்.  அவர் மேலும்,  ‘’நாளை சென்னையில் திமுக செயற்குழு கூடுகிறது’’ என்று தெரிவித்தார்.

டெல்லியில் நாளை மன்மோகன்சிங் பிரதமாரக பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் சென்னையில் திமுக செயற்குழு கூடுவதால் முதல்வர் கருணாநிதி பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று பேசப்படுகிறது.

பிரபாகரன் இருந்தாலும் மறைந்தாலும் விடுதலை போரை வழிநடத்துவார்: திருமாவளவன்

Pirabakaran_Vஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது என்றும் இருந்தாலும் மறைந்தாலும் பிரபாகரன் விடுதலை போரை வழிநடத்துவார் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ, சர்வதேச சமூகமோ எமது ஈழத் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது.

உச்சக்கட்டமாக எமது மக்களின் ஒரே பாதுகாவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உலகத் தமிழினத்தை தலை நிமிரச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்துவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் படுகொலையானாரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடி மறைப்பதற்காகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்த கொடூரமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பதுதான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாக உள்ளது.

ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றவர்களை மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

இந்த நிலையில் மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும், ஈழ விடுதலைப்போரை அழிக்க முடியாது.

இருந்தாலும், மறைந்தாலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்.

திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது:காங்கிரஸ்

manmohan_soniya.jpgமத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.

காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,  காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்,  ’’அமைச்சரவையில் திமுகவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமானது.  அதனால், திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

காங். போக்கால் அதிருப்தி – வெளியிலிருந்து ஆதரவு தர திமுக முடிவு

karunanithi.jpg கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது. திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.

தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வந்தது

தீவிரவாதம் இனி தலைதூக்க முடியாதவாறு மூல வித்தை நாம் அழித்துள்ளோம் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anurapriyadarsanayapa.jpgதீவிரவாதத்தின் மூலவித்தை நாம் அழித்துள்ளோம். எனவே எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் அறவே இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபேதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகார தலைவர் கே.பத்மநாபன் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாம் அலட்சியம் செய்கிறோம். அவர் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளுடன் இலங்கையும் கையொப்பம் இட்டுள்ளது. எனவே இவ்வாறானவர்களுக்கு எதிராக இலங்ககை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்பதிவு ஆரம்பம்

muslim-society.jpgவடக்கு மாகாணத்தில் இருந்து 1990ம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு தற்பொழுது புத்தளம் மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் உள்ள முஸ்லீம் மக்களின் மீள்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்தநிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பானது இன்று (21.05.2009) ஆரம்பிக்கப்பட்டு நாளையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட வேலைகள் முந்தல் பிரதேச செயலர் எம் ஆர் எம் அலி தலைமையில் குறித்த பிரதேசசபையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஏனைய பிரதேச சபைகளில் உள்ளவர்களும் கணக்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.