May

May

தமிழ் பேசும் மருத்துவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

da-de.gif
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தமிழ் பேசும் மருத்துவர்களை முன்வந்து உதவுமாறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து நலன்புரி நிலையங்களுக்குமான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் குழு பணியாற்றச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பணியில் இணைந்து கொள்ளும் மருத்துவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தையும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்து தருவதற்கும் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி பேசக் கூடிய மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்படும் இம்முயற்சிக்கு மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதுடன் எமது மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் உணவு, உடை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை அவர்களின் மருத்துவத் தேவைகளைப் பொறுத்த வரையில் அதற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம் என்பதை தான் புரிந்து கொண்டுள்ளதாகவும் எனவே இம்மாபெரும் மனித நேயப் பணியில் அனைவரும் உணர்வோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்ற இணைந்து கொள்ளுமாறு தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்

விடுதலைப் புலிகள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட பாரிய ஆயுதங்கள் எங்கிருந்து. எவ்வாறு அங்கு சென்றன என்பது குறித்து விசாரித்தறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பாராளுமன்ற மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவ வெற்றி பெற்ற படையினரை கௌரவிக்கும் முகமான தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் பெருந்தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். படையினர் வசம் இல்லாத பாரிய ஆயுதங்கள் கூட அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் எப்படி, எங்கிருந்து வந்தன, யாரால் வழங்கப்பட்டவை என்பதே இங்கு மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இது தொடர்பாக விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென நான் யோசனை செய்கிறேன்’ என்று பிரதமர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப சகலரும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் – தலதா மாளிகை நிகழ்வில் ஜனாதிபதி

pr-kandy-dala.jpgநாட்டில் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

இரண்டாகப் பிரியும் நிலையில் இருந்த இந்த தாய்நாட்டை ஒரே நாடாக பாதுகாப்புப் படை வீரர்களின் அரும்பெரும் தியாகங்களுடன் மாற்றி அமைத்தோம். இந்நிலையில் இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்க இடமளிக்க மாட்டேன் என்பதை இந்தப் புனித பூமியாகிய தலதா மாளிகை மண்ணில் இருந்து சத்தியம் செய்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார். கண்டி வரலாற்று சிறப்பு மிக்க ‘மகுல் மடுவ’ எனப்படும் கல்யாண மண்டபத்தில் நேற்று அவர் இதனை தெரிவித்தார்.

புலிகளின் தீவிரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரைப் பாராட்டி கெளரவிக்கும் பொருட்டு மல்வத்தை, அஸ்கிரிய ஆகிய பெளத்தபீடங்கள் சார்பில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசிய பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், ஆளுநர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மல்வத்தை பெளத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல சித்தார்த்தர், அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீபுத்தரகித்த தேரர் ஆகியோர் அடங்கிய இணைத் தலைமையின் கீழ் இந்த வைபவம் இடம்பெற்றது.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது, இந்த வரலாற்று மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் எமக்குப் புதிதல்ல. பிளவுபட இருந்த இந்த தாய் நாட்டை மீட்டெடுக்கப் பாடுபட்டோரை பெளத்த பீடங்கள் பாராட்ட எடுத்த முயற்சிகள் குறித்து நாம் பெருமைப்படுகின்றோம். இந்த நாட்டை ஐக்கியப்படுத்த எம்மோடு படைத் தளபதிகள், படை வீரர்கள் எல்லோருமே அருமை பெருமையாக செயல்பட்டிருக்கின்றனர்.

நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மல்வத்தை பெளத்த பீடம் என்னைப் பாராட்டியிருப்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். இந்த நாட்டுக்கு எதிர்காலம் உண்டு என்பதை பெளத்த குருமார்கள் என்னிடம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் நல்லாசீர்வாதமும் ஆலோசனைகளும் எனக்கு துணையாக இருந்தன. அவற்றின் பலனும் எமக்குக் கிடைத்து விட்டது.

இவ்வேளையில், இந்நாட்டு மக்களின் மரியாதையையும் பாராட்டையும் உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன். இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்தும் மீட்டெடுக்க எம்மிடம் மிகுந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாகப் பிளவுபட இருந்த நாட்டை ஒரே நாடாக மீண்டும் கட்டியெழுப்பி விட்டோம். மீண்டும் இந்த நாட்டை பிளவுபட இடமளியேன் என்பதையும் இந்த புனித பூமியில் சத்தியம்செய்து உறுதியளிக்கின்றேன்.

இப்பொழுது எமது கவனம் எல்லாம் நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்வதாகும். நல்லதோர் சமூகத்தை கட்டியெழுப்பவும், பெளத்த பண்புகளுடன் முழு நாட்டையும் முன்னெடுத்துச் செல்லவும் நீங்கள் எல்லோரும் என்னோடு இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

நீங்கள் எம்மை கெளரவித்தமையானது எமது பணிகளை செம்மையாகத் தொடரவும், நாட்டின் கெளரவத்தைப் பேணவும் எனக்குத் துணையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் – தென்மாகாண முதலமைச்சர்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் சமாதானத்தை முழுமையாக நிலை நிறுத்தியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நோபல் பரிசு பெற அருகதையுள்ளவர். எனவே அவரது செயற்பாட்டில் சமாதானத்தை நிரந்தரமாக நிலை நிறுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும். இதற்காக முழு உலக நாடுகளும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா காலியில் வைத்துக் கூறினார்.

கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென் மாகாண சபையினால் காலியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் ஜனாதிபதிக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

நாடு சுதந்திரமடைந்து 61 வருடங்களாகின்றன. எனினும் இதுகாலவரை இனங்களிடையே உண்மையான சமாதானம் ஏற்படவில்லை. சமாதானமாக மக்கள் வாழ்கின்றார்கள் எனக் கூறிய போதும் ஒரு இனம் இன்னொரு இனத்தை சந்தேகங்களுடனேயே நோக்கினர். ஏதாவது ஒரு தீய சக்தி நாட்டையும் இனங்களையும் குழப்பி தவறான வழிநடத்தல்களிலேயே ஈடுபட்டனர். இதற்குக் காரணம் அரசியல் பேராசையேயாகும்.

அதேநேரம் பிரிவினைவாதிகளும் தோன்றி நாட்டை கூறுபோட முனைந்தனர். அதற்காக எந்தப் பயங்கரவாதங்களையும் மேற்கொள்ள அவர்கள் பின் நிற்கவில்லை. உலகமே எதிர்பாராத விதத்தில் இந்த யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த கடந்த மூன்றரை வருட காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரவு பகலாகப் பாடுபட்டார். படையினரும் அவருக்குத் துணையாக நின்றனர்.

இவ்வாறான வெற்றிகளுக்கு நாட்டின் தலைவருக்கு அரசியல் சாணக்கியம் இருக்க வேண்டும். எமது ஜனாதிபதிக்கு அது இருந்ததாலேயே அவர் வெற்றி பெற்று சமாதானத்தை நிலை நாட்டியுள்ளார். அவரது கரிசனை மிக்க உரை நாட்டு மக்களை மேலும் கவர்ந்து விட்டது. இந்த நாட்டில் தேசப்பற்றுள்ள மக்களும் அவ்வாறில்லாத மக்களுமாக இரு வகையான மக்களே இருக்கின்றனர். சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற வார்த்தைகள் என்றோ அகராதியிலிருந்து எடுத்தெறியப்பட்டு விட்டது. இந்த வார்த்தைகளிலிருந்து அவரது பெருந்தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது அவசியமாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

president-with-ban.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம்.

தமிழ் பாடசாலைகளுக்கு வேற்று மொழியில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படுவதால் சிரமம்

கல்வி அமைச்சு மற்றும் சில மாகாணக் கல்வித் திணைக்களங்கள், வலயக் கல்விக் காரியங்களிலிருந்து தமிழ்ப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் தனிச் சிங்களமொழிமூலம் மட்டுமே அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால், மொழி புரியாத அதிபர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, பாடசாலையின் விபரம் மற்றும் கடமையிலுள்ள ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் ஏனைய தரவுகள் தொடர்பாக கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் படிவங்களைப் பூர்த்திசெய்து அனுப்பி வைக்கப்படுகின்ற போதிலும் எவ்வித பயனும் கிடைப்பதில்லையென சில அதிபர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.  இதேவேளை, கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும் மற்றும் விபரங்களைக் கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் ஆங்கிலமொழியிலேயே அனுப்பப்படுகின்றன.

கடந்த 16 ஆம் திகதி பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்தினபுரி, பரக்கடுவ மெனேரிப்பிட்டிய கல்வி வள நிலையத்தில் நடைபெற்ற பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான முகாமைத்துவ செயலமர்வு பற்றி அனுப்பப்பட்டிருந்த கடிதம் கூட ஆங்கில மொழியிலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில வலயக் காரியாலயங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலையைவிட்டு விலகும் போது வழங்கப்படும் விடுகைப் பத்திரம் கூட தனிச்சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றது.

எனவே, தமிழ்ப் பாடசாலைகளில் கடமைபுரியும் அதிபர்கள் தம் கடமைகளை இலகுவாக மேற்கொள்ள தமிழ்மொழி மூலமே கடிதங்களும் சுற்றுநிருபமும் அனுப்பி வைக்கப்படல் வேண்டுமென அதிபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி -பாங்கீ மூன்

u_n__secretarygeneral-visits-idp.jpgவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் இலங்கை அரசுக்கு பாராட்டுக்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் விசேட ஹெலிகொப்டர் மூலம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை தங்க வைத்துள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் ஐ.நா. மனித உரிமைக்கான பிரதிச் செயலாளர் நாயகம் கலாநிதி ஜோன் ஹோம்ஸ், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஐ.நா. செயலக தலைமை அதிகாரி விஜே நம்பியாருடனும் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றார். அங்குள்ள மக்களுடனும் அவர் உரையாடினார்.

நிவாரணக் கிராமங்களில் மக்களை சுதந்திரமாக வசதியுடன் தங்க வைத்திருப்பது குறித்து செயலாளர் நாயகம் தனது திருப்தியை வெளியிட்டார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் ஆகியோருடன் சென்று நிவாரணக் கிராமங்களை ஐ. நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் பார்வையிட்டார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் புறப்பட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் இறுதியாக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு, புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டார். ஹெலிக்கொப்டரில் தாழப் பறந்தவாறு பாதுகாப்பு வலயப் பகுதி என பிரகடனப்படுத்தியிருந்த பகுதிகளையும் பாங்கீமூன் பார்வையிட்டார்.

அங்கிருந்து நேரடியாக கண்டிக்கு வந்த ஐ. நா. செயலாளர் நாயகம் நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

பிரதி கல்வியமைச்சர் மெளலவிமார் சந்திப்பு

பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தனுடன் மெனலவிமார்களுக்கான சந்திப்பு நாளை கல்முனையில் நடைபெறவுள்ளது.

உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் மெளலவி ஆசிரிய நியமனம் சம்பந்தமாக இது வரையில் எடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் பற்றி பிரதி கல்வி அமைச்சர், மெளலவி மற்றும் மெளலவியாக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மெளலவி ஆசிரிய விண்ணப்பதாரிகள் அனைவரும் கலந்துகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 0712946509 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

சமூக சேவையாளரும், கடற்றொழில் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எச். அமீரின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்யும் பிரதியமைச்சர் கல்முனை ஸாஹிரா, கல்முனை பாத்திமா கல்லூரிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தென்கொரிய முன்னாள் அதிபர் தற்கொலை

_roh_mourninggetty.jpgதென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில் இருந்த ரோ உயிரிழந்தமையை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அது பெரும் கவலையைத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு மலை முகட்டிலிருந்து கீழே விழுந்ததில் ரோ உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று பொலிசார் கூறுகின்றனர்.

ரோ ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி சென்று படித்ததில்லை, ஊழலற்ற ஆட்சி, வடகொரியாவுடன் சமாதானம் போன்றவற்றை முன்னிறுத்தி நாட்டின் அதிபரானவர் அவர். அண்மைய மாதங்களாக அவர் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அவர் மறுத்திருந்தார்.

மட்டு. மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் 74 பேர் இணைப்பு

2000 தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பெண்கள் உட்பட 74 பேர் நேர்முகப் பரீட்சையூடாக பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.