நாட்டில் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
இரண்டாகப் பிரியும் நிலையில் இருந்த இந்த தாய்நாட்டை ஒரே நாடாக பாதுகாப்புப் படை வீரர்களின் அரும்பெரும் தியாகங்களுடன் மாற்றி அமைத்தோம். இந்நிலையில் இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்க இடமளிக்க மாட்டேன் என்பதை இந்தப் புனித பூமியாகிய தலதா மாளிகை மண்ணில் இருந்து சத்தியம் செய்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார். கண்டி வரலாற்று சிறப்பு மிக்க ‘மகுல் மடுவ’ எனப்படும் கல்யாண மண்டபத்தில் நேற்று அவர் இதனை தெரிவித்தார்.
புலிகளின் தீவிரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரைப் பாராட்டி கெளரவிக்கும் பொருட்டு மல்வத்தை, அஸ்கிரிய ஆகிய பெளத்தபீடங்கள் சார்பில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசிய பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், ஆளுநர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மல்வத்தை பெளத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல சித்தார்த்தர், அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீபுத்தரகித்த தேரர் ஆகியோர் அடங்கிய இணைத் தலைமையின் கீழ் இந்த வைபவம் இடம்பெற்றது.
ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது, இந்த வரலாற்று மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் எமக்குப் புதிதல்ல. பிளவுபட இருந்த இந்த தாய் நாட்டை மீட்டெடுக்கப் பாடுபட்டோரை பெளத்த பீடங்கள் பாராட்ட எடுத்த முயற்சிகள் குறித்து நாம் பெருமைப்படுகின்றோம். இந்த நாட்டை ஐக்கியப்படுத்த எம்மோடு படைத் தளபதிகள், படை வீரர்கள் எல்லோருமே அருமை பெருமையாக செயல்பட்டிருக்கின்றனர்.
நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மல்வத்தை பெளத்த பீடம் என்னைப் பாராட்டியிருப்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். இந்த நாட்டுக்கு எதிர்காலம் உண்டு என்பதை பெளத்த குருமார்கள் என்னிடம் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் நல்லாசீர்வாதமும் ஆலோசனைகளும் எனக்கு துணையாக இருந்தன. அவற்றின் பலனும் எமக்குக் கிடைத்து விட்டது.
இவ்வேளையில், இந்நாட்டு மக்களின் மரியாதையையும் பாராட்டையும் உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறேன். இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்தும் மீட்டெடுக்க எம்மிடம் மிகுந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாகப் பிளவுபட இருந்த நாட்டை ஒரே நாடாக மீண்டும் கட்டியெழுப்பி விட்டோம். மீண்டும் இந்த நாட்டை பிளவுபட இடமளியேன் என்பதையும் இந்த புனித பூமியில் சத்தியம்செய்து உறுதியளிக்கின்றேன்.
இப்பொழுது எமது கவனம் எல்லாம் நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்வதாகும். நல்லதோர் சமூகத்தை கட்டியெழுப்பவும், பெளத்த பண்புகளுடன் முழு நாட்டையும் முன்னெடுத்துச் செல்லவும் நீங்கள் எல்லோரும் என்னோடு இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.
நீங்கள் எம்மை கெளரவித்தமையானது எமது பணிகளை செம்மையாகத் தொடரவும், நாட்டின் கெளரவத்தைப் பேணவும் எனக்குத் துணையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களும் கலந்து கொண்டனர்.