கல்வி அமைச்சு மற்றும் சில மாகாணக் கல்வித் திணைக்களங்கள், வலயக் கல்விக் காரியங்களிலிருந்து தமிழ்ப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் தனிச் சிங்களமொழிமூலம் மட்டுமே அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால், மொழி புரியாத அதிபர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, பாடசாலையின் விபரம் மற்றும் கடமையிலுள்ள ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் ஏனைய தரவுகள் தொடர்பாக கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் படிவங்களைப் பூர்த்திசெய்து அனுப்பி வைக்கப்படுகின்ற போதிலும் எவ்வித பயனும் கிடைப்பதில்லையென சில அதிபர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதேவேளை, கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும் மற்றும் விபரங்களைக் கேட்டு அனுப்பப்படும் படிவங்களும் ஆங்கிலமொழியிலேயே அனுப்பப்படுகின்றன.
கடந்த 16 ஆம் திகதி பெருந்தோட்டப் பாடசாலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்தினபுரி, பரக்கடுவ மெனேரிப்பிட்டிய கல்வி வள நிலையத்தில் நடைபெற்ற பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களுக்கான முகாமைத்துவ செயலமர்வு பற்றி அனுப்பப்பட்டிருந்த கடிதம் கூட ஆங்கில மொழியிலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில வலயக் காரியாலயங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலையைவிட்டு விலகும் போது வழங்கப்படும் விடுகைப் பத்திரம் கூட தனிச்சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றது.
எனவே, தமிழ்ப் பாடசாலைகளில் கடமைபுரியும் அதிபர்கள் தம் கடமைகளை இலகுவாக மேற்கொள்ள தமிழ்மொழி மூலமே கடிதங்களும் சுற்றுநிருபமும் அனுப்பி வைக்கப்படல் வேண்டுமென அதிபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.