April

April

புலிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அமெரிக்க உதவி அமைச்சர் விருப்பம்

richard_boucher0.jpgபுலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே றிட்சார்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் “மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்  என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம்  நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி நாடு திரும்பினார் – 500 மில். டொலர் நிதி உதவி; ஒரு இலட்சம் பேருக்கு வேலை

mahinda-rajapaksha.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார். அவர் லிபிய ஜனாதிபதி கேர்ணல் மு அம்மர் கடாபி, பிரதமர் அல்படாதி அலி அல் முஹம்மதி உட்பட மேலும் பல தலைவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்த விஜயத்தின் போது மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

500 மில்லியன் அமெரிக்க டொலரை நிதி உதவியாக வழங்கவும் சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப் புகளை வழங்கவும் லிபியா இணக்கம் தெரிவித்துள்ளது.

606 பேர் அரச பகுதிக்கு வருகை

_mullai_1.jpgபாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

கடத்தலை தொடரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

caption.jpgஅமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள்,  இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கண் தான தினம் பிரகடனம்

eye.jpgடிசம்பர் மாதம் 18ஆம் திகதியை கண் தான தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.

கண் தான சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான தேசபந்து டொக்டர் ஹட்ஸன் சில்வாவின் பிறந்த தினத்திலேயே இந்த கண் தான தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவர் தனது 48 வருட சேவையில் பார்வையற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண் தானம் வழங்கியுள்ள சேவையை கௌரவிக்கும் வகையிலும் இச்சேவையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே இத்தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர்- பா.நடேசன்

nadesan.jpgஇந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் செய்தியாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பேட்டி அளித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு காலம் (Post-LTTE Scenario), என பலர் கூறுகிறார்களே?
 
இங்கு நான் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை.

இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிங்களப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?
 
சிங்கள மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த  ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.
 
பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்கிற பேச்சு இருக்கிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
சிங்கள அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு  அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.
 
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.
 
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?
 
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

உலகத்திற்கு  உங்களுடைய கோரிக்கை என்ன?
 
அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிங்கள ஆயுதப் படைகளால் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.
 
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் – தேமுதிகவிலும் ஒருவர் மாற்றப்பட்டார்

jaya.jpgதிருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

earth_indo.jpg
இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குனாங் சிடொலி பகுதியில் நேற்று காலை 8.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் – பிரதமர்

army-wanni.jpgபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதனைப் போல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து மக்களும் தமது இன, மத, குல, மொழி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறினார். ஹொரணை ஸ்ரீ.ல.சு. கட்சி காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

கடந்த 30 வருடமாக வட கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த பயங்கரவாதத்தை அழித்து ஒழிக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த  பயங்கரவாதத்தை ஒழிக்க தென்பகுதியிலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோல் நாட்டின் அபிவிருத்தியிலும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். நாட்டின் யுத்தத்தின் போதும் நாட்டின் அபிவிருத்தியின் போதும் மாகாணசபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் பாரிய ஒத்துழைப்பை வழங்கின. அதேபோல் இவைகள் மத்திய அரசிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வடக்கு யுத்தத்தை சுமார் 1/2 மணி நேரத்தில் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஆனால் அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் இந்த யுத்தம் மெது மெதுவாக நடைபெறுகின்றது.

நாவலப்பிட்டி வைத்தியசாலையில் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற பெண்ணுக்கு விளக்கமறியல்

baby.jpgநாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஒன்பது நாள் ஆண் குழந்தையொன்றை கடத்திச் செல்ல முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான பெண்ணை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிவான் லலித் ஏக்கநாயக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நாவலப்பிட்டி வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் அங்கு பிரசவ வார்ட்டில் தங்கியிருந்த பெண்ணுடன் சிநேகிதம் வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அப்பெண்ணின் 9 நாள் ஆண் குழந்தையை இவர் கடந்த 9 ஆம் திகதி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். குழந்தையின் தாயிடம் டாக்டர் அவரை அழைப்பதாகக் கூறி வெளியே அனுப்பிவிட்டே இவர் குழந்தையை கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அங்குவந்த குழந்தையின் தாய் எழுப்பிய கூக்குரலையடுத்து உஷாரடைந்த வைத்தியசாலையின் பணியாளர்கள் குழந்தையைத் தூக்கிச் செல்ல முயன்ற பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டிப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.