April

April

மேடை சரிந்தது. கீழே விழுந்து அடிபட்டும் ஜோக் அடித்த லாலு

laluprasat.jpgரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சாப்ராவை அடுத்துள்ள டெக்னவாஸ் பஜார் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, திடீரென மேடை சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த லாலு பிரசாத் உட்பட அனைவரும் கீழே சாய்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காயம் இன்றி தப்பிய லாலுபிரசாத் எந்தவித பதற்றமும் இன்றி காணப்பட்டார். அத்துடன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் `ஜோக்’ அடித்து அனைவரையும் கலகலக்க வைத்தார்.

பதற்றத்துடன் வாழும் இடம்பெயர்ந்த மக்களை காப்பாற்றுங்கள்- ஆனந்த சங்கரி

anan-sangari.jpgஇரா ணுவம் தொடர்ந்து முன்னேறுவதை தடுத்து நிறுத்துங்கள் என என்னால் விடப்பட்ட கோரிக்கைகளுக்கு நீங்கள் செவிசாய்க்காமை எனக்கு மிகுந்த மனவருத்தமளிக்கிறது. யுத்தம் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளை விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவிப்பதற்காக சூனியப் பிரதேசத்துக்குள் மக்களுடன் கலந்திருப்பதாலும் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சூனியப் பிரதேசமாகிய புதுமாத்தளன் பகுதியில் வாழும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர் ஊசலாடுகிறது. யுத்த விதிகளுக்கமைய புலிகள் நடப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அரச படைகளால் அது முடியும்.

தமது பல தோழர்களை பலிகொடுத்து மிகச் சிரமப்பட்டு மிகக் குறைந்த மக்களின் பாதிப்போடு நற்பெயரை சம்பாதித்ததோடு இந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் சொற்ப நாட்களில் அந்த நற்பெயரை இழக்கக்கூடிய சுழ்நிலை காணப்படுகிறது. மிகமிக இக்கட்டான நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு போகிற இவ் வேளையில் தங்களின் தாமதமற்ற தலையீடு அவசியமாகிறது. ஒரு நாள் இன்று நடப்பனவற்றை உலகம் அறியும்வேளை முழு உலகும் அரசையும் மக்களையும் குற்றம் சுமத்தும்; இவ் ஆலோசனைகளை நான் தனிப்பட்ட இலாபம் கருதி கூறவில்லை என்பதை நம்புங்கள். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கடிதம் இங்கு முழுமையாகத் தரப்படுகிறது.

பல நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் கிடைத்த செய்திகளின் படி ஏப்ரல் மாதம் 8ம் திகதி மட்டும் 296 பேர் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 47 பேர் குழந்தைகள் உட்பட இறந்துள்ளனர். இந்த யுத்தத்தில் ஒரேநாளில் இறந்தோரின் மிகக் கூடிய தொகை இதுவாகும். மறுநாள் காயமுற்றோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது இறந்தவர்கள் 30 இற்கு மேற்பட்டவர்கள். ஆனால் அன்று போயா தினமாகும். வைத்தியசாலைக்கு வராமலேயே பலர் வெளியில் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. அவற்றிற்கு எதுவித ஆவணங்களும் கிடையாது. இந்த மக்கள் யாருடைய தாக்குதலுக்கு இலக்காகி பலியானார்கள் என சர்வதேச சமூகம் கேட்காது. ஆனால் அரசையே குற்றவாளியாக்கும் சர்வதேச சமூக அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தாம் விரும்புவது போல் கண்டிப்பது எதிர்பார்த்ததற்கு மாறான பலனையே தரும் மனிதாபிமான அடிப்படையிலும் நாட்டின் நற்பெயரையும் காப்பாற்ற வேண்டுமானால் நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை பின்வருவனவாகும் என நான் கருதுகிறேன்.

1. உடனடியாக ஷெல் தாக்குதலை அரச படைகள் நிறுத்த வேண்டும்.

2.விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அல்லாது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு இடத்தை யுத்தத்திற்குள் அடங்காத பகுதியாக பிரகடனப்படுத்தி மக்களை அங்கே வர வைக்க வேண்டும்.

3.ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்தினதே. ஆகவே நான் உங்களை வேண்டுவது ஐக்கிய நாடுகள் சபையில் உதவிகளை பெற்றோ அல்லது நட்பு நாட்டின் அல்லது நாடுகளின் உதவியை நாடலாம். அமெரிக்காவும்,  இந்தியாவும் அத்தகைய உதவியளிக்க முன் வந்ததாக அறிகிறோம். அது உண்மையாயின் அவர்களின் உதவியினூடாக மக்களை மீட்டெடுக்கலாம். ஒரு தனி உயிரை காப்பாற்ற பல நாடுகள் பெரும் தொகை பணத்தை செலவழித்துள்ளன.

4. அங்கே மக்கள் பட்டினி சாவை எதிர் நோக்குகின்றனர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அம் மக்களுக்கு போதிய உணவை அனுப்பி வையுங்கள. தாய்மார் பிள்ளைகளுக்கு பாலூட்ட சக்தியற்றவர்களாக தேநீர் பருக கொடுக்கின்றனர். பிள்ளைகளுக்கு வேண்டிய பால்மா ஆகாயமார்க்கமாக அனுப்பி வைக்கவும்

5. உடனடியாக ஐக்கிய நாடுகள் குழு ஒன்றை அனுப்பி அங்குள்ள மக்களின் எண்ணிக்கை தேவைகளை கண்டறிய வையுங்கள்.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு

amuthap.jpgசாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார் என வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் தெரிவித்துள்ளது. கடந்த 31.03.2009 அன்று இவர் மரணமடைந்ததாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் ஊரடங்கு நீக்கம்.

jaffna_a9.jpgபுத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டில் இன்றும் நாளையும் இரவுநேர ஊரடங்கு நீக்கப்படுவதாக பலாலி படைத்  தலைமையகம்  அறிவித்துள்ளது. புதுவருடத்தை ஒட்டி இந்துக்கள் ஆலயங்களில் இடம்பெறும் பூசை மற்றும் சமய நிகழ்வுகளில் பங்குபற்ற வசதியாக ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அறிவிப்பை ஐ நா வரவேற்றுள்ளது.

un-logo.jpg
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 48 மணிநேர தற்காலிக மோதல் தவிர்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் வரவேற்றுள்ளார். இது குறுகிய காலமாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

புதுமாத்தளனிலிருந்து 440 பேர் அழைத்துவரப்பட்டனர்

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து, மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்களும் நோயாளர்களும் புல்மோட்டைக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கிறீன் ஓசன் கப்பல் மூலமாக காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 440 பேர் இன்று (13.04.2009) புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தல தாக்குதல்: இறந்தோர் எண்ணிக்கை ஒன்பது

மொனராகலை,  புத்தல பிரதேசத்தில் நேற்றிரவு (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்படடவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகிரித்துள்ளது.புத்தல,  மஹகொடயாய கிராமத்துக்குள் திடீரெனப் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறு என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது கொல்லப்பட்டோர் ஒன்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயலில் வேலை செய்து விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திருப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.கொல்லப்பட்டவர்களில் 3 பெண்களும் 3 சிறுவர்களும் அடங்குவர். ஓரு வயோதிப பெண் காயமடைந்தார்.  இந்தத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்தது.
 

கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலித் தலைமைத்துவம் பணிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் பொது மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலிகளின் தலைமைத்துவம் தங்களது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்க புலிகளின் தலைமைத்துவம் இந்த உத்தரவை விடுத்துள்ளமைக்கான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும், புலனாய்வு துறையினருக்கும் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

தப்பிவரும் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் பாதுகாப்பு வலய எல்லையில் ஆயுதம் தாங்கிய புலிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்தி ற்கு மத்தியிலும் நேற்றைய தினம் மேலும் 270 பொது மக்கள் அம்பலவன்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.

இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ள இவர்களுள் 86 ஆண்களும், 77 பெண்கள், 48 சிறுவர்கள் மற்றும் 59 சிறுமிகள் அடங்குவர். இவ்வாறு தப்பி வரும் போது புலிகளின் துப்பா க்கிச் சூட்டில் காயமடை ந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

67,280 பொது மக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்

protest_afp.jpgதாய்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பாங்காங்கின் பிரதான வீதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து வருகின்றனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், உள்துறை அமைச்சகத்திற்குள் உட்புகுந்ததோடு, தற்போதைய பிரதமர் பயணித்ததாக கருதப்படும் வாகனம் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசி எறிந்தனர். வீதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இது வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரயில் தடம் புரண்டதில் 11,400 லீட்டர் எரிபொருள் கசிவு – தம்புத்தேகமவில் சம்பவம்

கொலன்னாவையில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் வண்டியொன்று தம்புத்தேகம பகுதியில் நேற்று (12) அதிகாலை தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இந்த ரயிலில் 32,800 லீட்டர் எரிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதோடு 5 பெட்டிகள் தடம்புரண்டதால் பெருமளவு எரிபொருள் கசிந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

தடம்புரண்ட பெட்டிகளுள் சுமார் 11,400 லீட்டர் எரிபொருள் இருந்ததாகவும் அவர் கூறினார். மேற்படி ரயில் இரவு 10 மணிக்கு கொலன்னாவயில் இருந்து பயணமானதோடு அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலில் இருந்து கசியும் எரிபொருட்களை அருகில் உள்ள கிராம மக்கள் நேற்றுக்காலை (12) முதல் எடுத்துச் செல்வதாகவும் அறிவிக்கப்படுகிறது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றவும் ரயில் பாதையை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டதையடுத்து யாழ். தேவி ரயில் சேவை கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.