Multiple Page/Post

இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 63 வது சுதந்திர தின விழா கடந்த 15ம் திகதி டில்லியில் நடந்தது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் பேச்சை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தொடர்பாக தகவல் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.

நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தனது நாட்டு தூதரகம் மூலம் டில்லிக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக நம்பத் தகுந்த தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தங்களது கடுமையான உணர்வுகளையும் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு குரேஷி தனது நாட்டு வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தி கூறினார். எனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்களிடம் கொடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 45 பேர் பலி

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 10 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை 45 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

கடநத 36 மணி நேரத்தில் கர்நாடகத்தில் நால்வர், டில்லியில், குஜராத்தில் தலா இருவர், சென்னையில் இருவர், புனேவில் ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரில் அநேகமானோர் கர்நாடகத்தில்தான் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். இதில் புனேவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்தில் ஐந்து பேரும், தமிழகம், டில்லியில் தலா இருவரும், கேரளத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். மொத்தம் 45 பேர் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டும் 159 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,401 ஆக உயர்ந்துள்ளது.

“குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்’

உள்ளூராட்சி மன்றங்களினால் பல செயற்திட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது என்று அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தெரிவித்தார்.

ஆசிய நிலையமும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் இணைந்து மாகாண உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு “உள்ளூராட்சியில் ஊடகங்களின் வகிபங்கு’ எனும் தலைப்பிலான செயலமர்வு அம்பாறை மொன்டி ஹோட்டலில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் லயனல் குருகே தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தொடர்ந்து பேசுகையில்; உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் தேவைகளை இனங்கண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அச் செயற்பாடுகள் ஏனைய பிரதேச மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, நாட்டிலுள்ள மக்களுக்கு இருக்கின்ற பாரியதும் முக்கியமானதுமான பிரச்சினை குப்பை அகற்றல். அந்தப் பணியை திண்மக்கழிவு முகாமைத்துவம் எனும் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மகாஓயா,தெய்யத்தைகண்டி பிரதேசத்தில் 30 கிராமங்களுக்கு மிகவும் சிறந்த நீர்விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த செயற்திட்டங்கள் இந்த மாவட்ட மக்களுக்கே தெரியாத நிலையுள்ளது. எனவே, இச் செயற்திட்டங்களை மக்களின் முன் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமானால் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களின் சகல செயற்பாடுகளும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆனால், அது கிராமிய மட்ட மக்களுக்கோ ஏனைய பிரதேச மக்களுக்கோ தெளிவுபடுத்தப்படுவதில்லை. இந்த மன்றங்கள் பலதரப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆனால், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமாயின் அவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது.

அந்த வகையில் இந்த மாவட்டத்தில் நூலகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. நாங்கள் நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பல முயற்சி செய்தும் அது பயனளிக்கவில்லை.

இன்று எமது நாட்டை மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகப் பார்த்தால் தொழில்நுட்ப அறிவும் தொடர்பாடல் நிலை மிகவும் விசாலமான முறையில் பரந்துபட்டுள்ளது. ஆனால், கிராமிய மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, கிராமிய மட்டத்திலுள்ள மக்களுக்குத் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கும் செய்திகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை – ரவூப் ஹக்கீம்

akime-2.jpgஇடம் பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக மன்னார் முசொலிப் பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், முஸ்லிம்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. யுத்த காலத்தில் வடக்கு பகுதி முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தற்போது மீளக் குடியமர்த்த முடியும்.

ஆனால், என்ன காரணத்திற்காக முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது புதிராகவே உள்ளது.

பெருந் தொகையான முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்றார். 

தேசிய அடையாள அட்டையில் தவறுகள் இருப்பின் அதனைத் திருத்துவது அவசியம்

ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தேசிய அடையாள அட்டையில் தவறுகள் இருப்பின் அதனைத் திருத்த வேண்டியது அவசியமெனவும் அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரு மாதத்திற்குள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருத்தங்கள் செய்ய முடியுமெனவும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.ஜி.தர்மதாச தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை பற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை ஆவணமாக எமது நாட்டில் தேசிய அடையாள அட்டை குறிப்பிடப்படுகிறது. தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்கள் சரியானவையா என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமானதெனக் கருதப்படுகிறது.

இந்த அடையாள அட்டையில் உள்ள அடையாள அட்டை இலக்கம், வழங்கப்பட்ட திகதி, வைத்திருப்பவரின் பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம், முகவரி ஆகிய தகவல்கள் சரியானவையா எனப் பகுப்பாய்வு செய்துகொள்ள முடியும்.

அடையாள அட்டை வைத்திருப்பவரின் பிறந்த திகதியை அடிப்படையாகக் கொண்டே அவருடைய அடையாள அட்டை இலக்கமானது உருவாக்கப்படுகின்றது. இவ் இலக்கமானது புகைப்படத்திற்கு மேலே இட்டுக்காட்டப்பட்டிருக்கும் அடையாள அட்டை இலக்கத்தில் முதல் இரண்டு இலக்கமும் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுவதுடன், அடுத்து வரும் மூன்று இலக்கமும் பிறந்த மாதத்தினையும் திகதியையும் குறிப்பிடுகிறது. ஆண்களுக்கு வழங்கப்படும் இலக்கமானது 001 இல் இருந்து 366 வரையான 03 இலக்கத்தைக் கொண்டிருக்கும். அதேவேளை, பெண்களுக்கு வழங்கப்படும் இலக்கமானது 501 இல் இருந்து 866 வரையான இலக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கும். உதாரணமாக ஒருநபர் 06.06.1988 இல் பிறந்த ஆணாக இருப்பின் அவருடைய அடையாள அட்டையில் முதல் 05 இலக்கமும் 88/58 என இருக்கும். அதேவேளை, அந்நபர் பெண்ணாக இருப்பின் அடையாள அட்டை இலக்கமானது 88658 என இருக்கும். இறுதி நான்கு இலக்கங்களும் திணைக்களத்தினால் வழங்கப்படுவதாகும்.

அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியானது புகைப்படத்துக்குக் கீழே இடதுபக்க மூலையில் குறித்துக்காட்டப்பட்டிருக்கும். அடையாள அட்டையின் மறுபக்கத்தில் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டதன் பிரகாரம் அடையாள அட்டைக்குரியவரின் பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம் என்பன சுட்டிக்காட்டப்பட்டிருகும். அடையாள அட்டை வைத்திருப்பவரின் முகவரியானது அதைப் பெற்றுக்கொண்ட தினத்திலுள்ள வசிப்பிடமாக கணிக்கப்படும்.

மேலும், குறிப்பிட்ட நபருடைய நிழல் படத்தில் இடதுகாது மட்டும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு இருக்கும். இத் தகவல்களுடன் உங்களுடைய அடையாள அட்டை பொருந்தாதுவிடின் அவை திருத்தம் செய்யப்பட வேண்டும். அடையாள அட்டையில் இலக்கம், பெயர் என்பன சரியான முறையில் குறிக்கப்பட்டிருக்காவிடினும் அவை திருத்தம் செய்யப்பட வேண்டியது அத்தியாவசியமானது. ஏதாவது பிழைகள் இருப்பின் எமது திணைக்களத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரு மாதத்திற்குள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்பட முடியும். இதற்கென வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை.

அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரு மாதங்களின் பின்னர் ஏதாவது திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின், புதிய விண்ணப்பப்படிவமானது கிராமசேவகரினூடாகவோ அல்லது தோட்ட மேற்பார்வையாளரினூடாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டவுடன் அவற்றைச் சரிபார்த்துக் கொள்வதானது அவற்றில் ஏதாவது பிழைகள் இருப்பின் அவற்றினைத் திருத்திக் கொள்வதனை இலகுபடுத்தும்.

முரளிதரன் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்

murali.jpgநியூசி லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெறுவரும் டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் காலி டெஸ்ட் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களைப் பெற்று மற்றுமொரு சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

கே.பியின் உதவியாளர் கைது? : சிங்கள ஊடகம் தகவல்

pathmanathan.jpgபுலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பாதுகாப்புக் காரணங்களை முன் னிட்டு ஆனந்தன் கைது செய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிட முடியாதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கே.பியிடமும் ஆனந்தனிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை பற்றியும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது புலிகளுக்கு முகவர்களாகச் செயற்பட்ட சார்ள்ஸ் ஞானக்கோன், ஜயந்த ஞானக்கோன் ஆகிய இரு சகோதரர்கள் பற்றியும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலியாவிலும், ஜயந்த ஞானக்கோன் கலிபோர்னியாவிலும் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இப்படி அந்த சிங்கள நாளிதழ் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருந்தது

தென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட  உள்ளனர்.

2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

சட்டசபை இடைத் தேர்தல் : தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

karunanidhi-333.jpgசட்டசபை இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் அமோகமாக வென்றுள்ளதன் மூலம் திமுக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது. திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள் இருந்தனர். கம்பம், பர்கூர், இளையான்குடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூரில் வென்றதன் மூலம் காங்கிரஸ் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.

61 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவின் பலம் 58 ஆகக் குறைந்துள்ளது. மதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டு குறைந்து 3 ஆகிவிட்டது.

திமுக கூட்டணியின் பலம் 131 என்பதிலிருந்து 136 ஆக உயர்ந்துள்ளது.

புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு

rajanikanth.jpgசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு விடுதலைப் புலிகள் பணம் கொடுத்ததாக இலங்கை அமைச்சர் கூறுவது சுத்த அபத்தமானது. அப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்த்தும் இல்லை, தமிழ் சினிமாவும் இல்லை என்று தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அளித்த ஒரு பேட்டியில், ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் புலிகள் நிதியுதவி செய்தனர். அந்த லண்டன் தமிழர் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் புலிகள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதை திரையுலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பதியுதீனின் பேச்சை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள்  பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை.

அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

இயக்குநர் அமீர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ல இவ்வாறு பேசியுள்ளார் இலங்கை அமைச்சர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். விடுதலைப் புலிகளை மோசமான முறையில் சித்தரிக்கும் செயல் இது.

முன்பு பங்குச் சந்தை மோசடிப் பேர்வழியான ஹர்ஷத் மேத்தா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்தேன என்று கூறியதைப் போல உள்ளது இலங்கை அமைச்சரின் பேச்சு. இப்படிக் கூறுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றார்.

கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு…

இதற்கிடையே, இலங்கை  அமைச்சரின் பேச்சுக்கு பதிலோ, விளக்கமோ அளிப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். இதை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.