Multiple Page/Post

சனல் 4 காணொளி எதிரொலி: இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப தயக்கம்

ExtraJudicialKillingsஇலங் கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைக்குள்ளாகும் காணொளி வெளியானதையடுத்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல தயக்கம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
1983 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் முதல் அண்மைக்காலம் வரை அடுத்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்கள் 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்தநிலையில், இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்தே அவர்களில் பலர் இலங்கைக்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கைப் படையினர் தமிழர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாக சனல் 4  வீடியோ காட்சி வெளியானதையடுத்து, இந்த அகதிகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்கள். தாம் தொடர்ந்தும் தமிழகத்தில் வாழ்வதையே விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அகதி முகாம்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலாளிமாருடனான பேச்சு தோல்வி; தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

sri-lanka-tea.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை யடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவ முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிலாளர் சார்பான கூட்டு கமிட்டிகளுக்கு மிடையிலான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார் த்தை நேற்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.  இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன கலந்து கொண்டன.

இருபத்திரண்டு தனியார் கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீத அதிகரிப்பை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்று தமது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை காணப்படவே நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருவார கால அவகாசத்தினை தருமாறு முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த வேண்டுகோளை கூட்டு கமிட்டி நிராகரித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க விருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான மு. சிவலிங்கம் கூறினார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உத்தியோகத்தர்கள், பெண் இணைப்பாளர்கள், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்களெனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

“சனல்-4” வீடியோ போலியானது – உதய நாணயக்கார விளக்கம்

ExtraJudicialKillingsஇலங்கை இராணுவம் இளைஞர்கள் சிலரை சுட்டுக்கொல்வது போன்று சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ போலியானது என்பது தமது விசாரணைகள் மூலம்தெரியவந்துள்ளதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வீடியோ போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை தாம் உறுதியாக நம்புவதாக  தெரிவித்துள்ள பிரிகேடியர் உதய நாணயக்கார, விடுதலைப் புலிகளே இதனைச் செய்திருக்கலாம் என்பதற்கான அனைத்து தடயங்களும் புலப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின்மீது  முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு முரணானது பிழையானது என்பது பல விதங்களிலும் தெரியவந்துள்ளது எனக்  கூறியுள்ள பிரிகேடியர், குறிப்பிட்ட வீடியோவில் இலங்கை இராணுவச் சீருடையில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டவர் இராணுவச் சின்னங்கள் எதனையும் சூடியிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர் நீளத் தலைமுடி வளர்த்திருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தலைமுடி வளர்ப்பது இலங்கை இராணுவ ஒழுக்கநெறிக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சுடப்படுபவர்களின் தலைமுடி வெட்டப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்கள் இலங்கை இராணுவத்திலிருந்து காணாமல் போனவர்களாக இருக்கலாம்  என்றும் தெரிவித்துள்ளார்.      

கைவிடப்பட்ட கால் நடைகளைத் தேடிக் கண்டுபிடிக்க அனுமதி!

goats.jpgமட்டக் களப்பு தொப்பிகலை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட கால் நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான  அனுமதியை ஈரளற்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரி.ஏ.விஜயவர்தன இன்று முதல் வழங்கியுள்ளார். இம்மாத முற்பகுதியில் இறுதியாக குடியமர்த்தப்பட்ட ஈரளற்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கால் நடை உரிமையாளர்கள் இது தொடர்பாகப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2006 – 2007 காலப் பகுதிகளில் கிழக்கில் மேற்கொள்ளப்டப்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி தற்போது மீண்டும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதி கிராம சேவை அலுவலர் சின்னத்தம்பி வீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்திச் சங்க அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே,  இராணுவ முகாம் பொறுப்பதிகாரி இந்த அனுமதி பற்றி தெரிவித்தார்.

மிதி வெடி அகற்றப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி சான்றிதழ் கிடைத்த 13 இடங்களைக் குறிப்பிட்டுää அந்த இடங்களில் கால் நடைகளைத் தேடிச் செல்லவும் மேய்ச்சலுக்கு விடவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

சுனாமியை கண்டறியும் முதற்கட்ட சோதனை நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

tunami.jpgசுனாமி ஏற்படும் பொழுது அதனை கண்டறியும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட கோபுர தொகுதியை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும்போது வெளிப்படும் ஒலி அலைகள் மற்றும் ஒலிபெருக்கியின் ஊடாக மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களுக்கு மக்கள் இன்று அச்சங்கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் நிமால் வேரகம தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரங்கள் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை முதல் கட்டம் கட்டமாகப் பரிசோதிக்கப்படவுள்ளன. இந்த பரிசோதனை நடவடிக்கைகள் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்த கோபுர தொகுதி செயல்பட ஆரம்பித்ததும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் சுனாமி சுறாவளி மற்றும் அசாதாரண இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்னரே அறிந்து அது குறித்த எச்சரிக்கையை மக்களுக்கு உடனடியாக அறிவிக்க முடியும் எனவும் நிமால் வேரகம மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ

sajith_premadasa.jpgஅரசாங் கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தென் மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பல்வேறு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் தென் மாகாணசபையின் தேர்தல்கள் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் வன்முறைகள் இடம் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தென் மாகாணசபைத் தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயங்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. செயலாளருடன் சொல்ஹெய்ம் பேச்சு

banki-moon.jpgநோர் வேக்கு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பான் கீ மூனுக்கு நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விவகாரம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பினையடுத்து ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூனும் நோர்வேயின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க்கும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினர்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் இலங்கை குறித்து ஐ.நா.வின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து ஐ.நா. பணியாற்றி வருகின்றது. நோர்வேயும் இதில் பங்காற்றி வருகின்றது. சர்வதேச சட்டங்களை இலங்கை மீறக்கூடாது. மனித உரிமை நியமனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். இலங்கை விவகாரம் தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். தொலைபேசியில் நான் பல தடவை அவருடன் பேசியுள்ளேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கிய அரசியல் ர்வு முன்வைக்கப்பட வேண்டும். இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும் அரசியல்ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இந்தச் சந்திப்பை நடத்திய ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று நோர்வேயின் வடதுருவப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளார்.

லிபியாவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு!

president_libiya_.jpgலிபியாவின் 40ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

லிபியத் தலைவர் கேர்னல் முஅம்மர் அல்கடாபியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதியை அந்நாட்டின் திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீத் அல்-ஸ்லாட்னி திரிபோலி நகரிலுள்ள மடிகா விமானநிலையத்தில் வரவேற்றார். இந்த நிகழ்வில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவர் அன்ஸாரும் கலந்துகொண்டார்.
 
ஜனாதிபதி அண்மையில் லிபியாவுக்குச் சென்றிருந்தபோது இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு அவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிபியாவின் 40ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையில் சர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சியகம்

daladamaligawa.jpgசர்வதேச பௌத்த தொல்பொருள் காட்சி நிலையம் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ,ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.
 
13 சர்வதேச பௌத்த நாடுகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த நிலையத்தில் பௌத்த மதத்தின் தோற்றம் உட்பட பௌத்த மதம் தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

கதிர்காமம் தேவாலயங்களின் ரன்தோலிப் பெரஹர இன்று ஆரம்பம்!

வரலாற்றுப் பெருமைமிக்க கதிர்காமம் எம்பெக்க தேவாலயம் மற்றும் தேவத பண்டார தேவாலயம் ஆகியவற்றின் முதலாவது ரன்தோலிப் பெரஹர இன்று ஆரம்பமாகவுள்ளதாக இரு தேவாலயங்களினதும் பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை தினமும் நடைபெறவுள்ள இப்பெரஹர நிகழ்வுகளில் புராதன கண்டி ஓவியங்கள் மற்றும் நடனம் ஆகியவற்றுடன் காவடி ஆட்டம் மற்றும் யானைகளின் வீதி அணிவகுப்பு என்பனவும் இடம்பெறவுள்ளன. இப்பெரஹரவின் இறுதி வைபவம் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளுடன் முடிவடையவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கதிர்காமம் எம்பெக்க தேவாலயத்தில் மூன்றாம் விக்ரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட மரத்தினாலான கட்டிடக் கலை அம்சங்கள் காணப்படுவதால் இந்த தேவாலயம் உலகப் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.