இலங்கை இராணுவம் இளைஞர்கள் சிலரை சுட்டுக்கொல்வது போன்று சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ போலியானது என்பது தமது விசாரணைகள் மூலம்தெரியவந்துள்ளதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வீடியோ போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ள பிரிகேடியர் உதய நாணயக்கார, விடுதலைப் புலிகளே இதனைச் செய்திருக்கலாம் என்பதற்கான அனைத்து தடயங்களும் புலப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை இராணுவத்தின்மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு முரணானது பிழையானது என்பது பல விதங்களிலும் தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ள பிரிகேடியர், குறிப்பிட்ட வீடியோவில் இலங்கை இராணுவச் சீருடையில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டவர் இராணுவச் சின்னங்கள் எதனையும் சூடியிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர் நீளத் தலைமுடி வளர்த்திருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தலைமுடி வளர்ப்பது இலங்கை இராணுவ ஒழுக்கநெறிக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சுடப்படுபவர்களின் தலைமுடி வெட்டப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்கள் இலங்கை இராணுவத்திலிருந்து காணாமல் போனவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.