Multiple Page/Post

2008 ஆம் ஆண்டில் அதிக ஆயுத விற்பனை செய்த நாடு அமெரிக்கா

us-army.jpgகடந்த 2008 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக ஆயுத விற்பனை செய்த நாடாக அமெரிக்காதான் என்று அமெரிக்க நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” வளரும் நாடுகளுக்கான மரபு ஆயுத பரிமாற்றங்கள் ” என்ற தலைப்பின் கீழ் அமெரிக்கா கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொண்ட் ஆயுத விற்பனை குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் மேற்கண்ட விவரம் இடம்பெற்றுள்ளதாகவும், உலகில் விற்பனையான மூன்றில் இரண்டு பங்கு ஆயுதங்களை அமெரிக்காவே விற்பனை செய்துள்ளதாகவும், ஏறக்குறைய 55.2 பில்லியன் டாலருக்கு இந்த் ஆயுத விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இதுவரை ஆயுத விற்பனை செய்து வந்த ரஷ்யாவின் மார்க்கெட்டையும் அமெரிக்கா தற்போது பிடித்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘றுகுணு குமாரி’ கடுகதி ரயில் சேவை நேற்று அஹங்கமையில் தடம்புரள்வு – நண்பகலுடன் சேவை வழமை நிலையில்

rail-070909.jpgமாத்தறை யிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற றுகுணுகுமாரி கடுகதி ரயில் அஹங்கமையில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் தடம்புரண்டது. இதனால் கரையோர ரயில்கள் அஹங்கமை வரை மட்டுப்படுத்தப்பட்டி ருந்ததாகவும், நண்பகலுடன் சேவைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

ரயில் தடம்புரண்டதையடுத்து பயணிகளை காலி வரை பஸ் வண்டியில் அழைத்துச் சென்று காலியிலிருந்து வேறொரு ரயில் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்ல ஒழுங்குகள் மேற்கொண்ட தாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் தெரிவித்தார். ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்று நண்பகலுடன் பூர்த்தியானதும் ரயில் சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளது.

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர்- பிரகாஷ் ராஜ்; சிறந்த படம் – காஞ்சிவரம்

pracas-raj.jpgதிரைப் படத்துறையில், கடந்த 2007ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‘காஞ்சிவரம்’ சிறந்தப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டின் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இயக்குனர் ப்ரியதர்ஷன் இயகிய ‘காஞசிவரம்’ சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இப்படத்தில், கதாநாயகனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். கடந்த 1998ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதையும் ஏற்கனவே பெற்றவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 2003ம் ஆண்டில் சிறப்பு ஜூரி விருதும் பெற்றவர்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு, ‘குலாபி டாக்கிஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்த நடிகை உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாலு பெண்கள் என்ற படத்தை இயக்கிய அடூர் கோபால கிருஷ்ணன், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷாரூக்கான் நடித்த ‘சக்தே இந்தியா’ சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ என்ற திரைப்படம், சிறந்த குடும்பநல திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.

2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கான போட்டியில், ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’வும், அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ம் முதல் இடத்தில் இருந்தன. இந்த இரு படங்களும் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படம் என்பது மட்டுமின்றி, சமூக நலன் மற்றும் தேச நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தன.

இதனால், இந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று, சிறந்த படத்துக்கான விருதை பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரகாஷ் ராஜின் யதார்த்த நடிப்பில், இயல்பான கதையை சொன்ன தமிழ் படமான ‘காஞ்சிவரம்’ சிறந்தப் படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக சித்தரித்திருந்தது.

‘தாரே ஜமீன் பர்’ படத்தில் பாடிய ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தார்ம்’ படத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்துக்கான விருது கிடைக்கவுள்ளது.

‘காந்தி மை ஃபாதர்’ படம் சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளது. அதோடு, சிறந்த திரைக்கதை (பெரோஷ் அப்பாஸ்) மற்றும் சிறந்த துணை நடிகர் ( தர்ஷன் ஷாரிவாலா) ஆகிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது.

‘திங்க்யா’ என்ற மராத்திப் படத்தில் நடித்த சிறுவன் சரத் கோயங்கருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது. விருதுப் பெறுவோர் பட்டியல் கடந்த வாரமே தயாராகி விட்டது. எனினும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக, இதுபற்றிய அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மாகாண சபைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் 5 வருடங்கள் பூர்த்தியானதும் மீள வருவது அவசியம் – அமைச்சர் சரத் அமுனுகம

மத்திய அரச துறையிலிருந்து மாகாண சபைக்குச் சென்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் அங்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியானதும் மீள அரச சேவைக்கு வருவது அவசியமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

இதனை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தலைமையில் குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரச துறையிலிருந்து ஐந்து வருடங்களுக்கென மாகாண சபை சேவைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக அங்கு தங்கி வருவதால் மாகாண சபையிலுள்ளவர்களுக்கான பதவியுயர்வு உட்பட பல சலுகைகள் தடைப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே ஐந்து வருடம் கட்டாயமாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :- மத்திய அரச துறையிலிருந்து மாகாண சபைக்கு சுமார் 300 பேர் சென்றுள்ளனர். இவர்களை மீள அரச சேவைக்குத் திருப்பி அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் சந்திரசிறி கஜதீர; அரச துறைகளை விரிவாக்குவதற்குப் பதிலாக அதனை மட்டுப்படுத்த செயற்பட்ட காலகட்டமொன்று இருந்துள்ளது. தற்போது அரச துறை மேம்பாட்டுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியினை செலவிட்டு வருகிறது. கட்டடங்கள் மட்டுமன்றி அரச துறையின் வெற்றிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் திஸ்ஸ விதாரண எஸ். எல். எஸ். தரச் சான்றிதழ் போன்றே வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களின் தரத்தை தரப்படுத்தவும் தரநிர்ணய நிறுவனமொன்றின் மூலம் நடவடிக்கை உருவாக்கப்படுமென தெரிவித்தார்.

யு.எஸ். ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

venus-williams.jpgஅமெரிக் காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்தார்.

நடந்து முடிந்த இப்போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ், வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் கிளிஸ்டர்ஸ் வென்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 6-0 என்ற புள்ளிக்கணக்கில் 2வது செட்டை வீனஸ் கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் இறுதி செட் ஆட்டத்தில் கிளிஸ்டர்ஸ் சிறப்பாக விளையாடி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, வீனஸை வீழ்த்தினார்.

குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கிளிஸ்டர்ஸ், இந்த யு.எஸ். ஓபன் தொடரில் மீண்டும் களமிறங்கினார். வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு பாடசாலை: பாடப் புத்தகங்களை இம்மாத இறுதியில் அனுப்ப நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் இந்த மாத இறுதியில் அப்பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக அனுப்பப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

2010 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 30 லொறிகளில் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருவதோடு இதுவரை மேற்கு, தென், மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புஷ்பகுமார தெரிவித்தார்.

வட பகுதிக்கான நூல்கள் 15 கொள்கலன்களில் அனுப்பப்படவுள்ளன.

2010 க்கான பாடநூல்களை அச்சிட 2700 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. பாடநூல் விநியோகப் பணிகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளதோடு டிசம்பர் 7 ஆம் திகதி முதல் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இருபது-20 போட்டி: பாண்டிங் ஓய்வு அறிவிப்பு

iricky-ponting.jpgசர்வதேச இருபது-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். சிட்னியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், இருபது-20 போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலிய அணியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்றார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இன்று இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக பாண்டிங் தனது அறிவிப்பை வெளியிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்ட்ரேலியா தோல்வியுற்றது. இதையடுத்து துவங்கிய ஒருநாள் தொடரில் பங்கேற்காமல், ஓய்வு பெறுவதற்காக பாண்டிங் ஆஸ்ட்ரேலியா திரும்பியதால், துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் தலைமைப் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய 4 பெயர்களில் நடமாடிய புலி உறுப்பினர் நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் கைது

முக்கியஸ் தர்களை இலக்கு வைத்து அவர்களை கொலை செய்வதற்காக நான்கு பெயர்களில் நடமாடிய புலி இயக்க முக்கிய உறுப்பினர் ஒருவரை புலிகளின் அடையாள இலக்க விபரங்களுடன் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி கெட்டம்புலா தோட்ட பிரதேசத்தில் விறகு மடுவமொன்றுக்குள் ஒழிந்திருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, நீர்கொழும்பு மட்டக்குழி போன்ற இடங்களில் தற்காலிகமாக வசித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. பெனடி சுஜான், கொலம்பஸ், டரிகுமார் மற்றும் கே. வை. என நான்கு பெயர்களில் இவர் நடமாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதங்களுடன் கொல்கட்டாவில் தரையிறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்!

abu-dhabi-flight.jpgகொல் கட்டாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த அந்த விமானமும், அதன் விமானி மற்றும் ஊழியர்களும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அபு தாபியில் இருந்து சீனாவிற்குப் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக கொல்கட்டா நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் விமான நிலையத்தில் தரையிருங்க அனுமதி கோரியது. விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லையென்று உறுதியளித்தால் தரையிரங்க அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை விமானி ஏற்றுக் கொண்டதையடுத்து, கொல்கட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.

தரையிருங்கிய பிறகு விமானத்தில் ஆயுதங்கள் உள்ளதென தலைமை விமானி கூற, சோதனையிடச் சென்ற இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் அதில் ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விமானத்தை ஒடுகளத்திலேயே பிடித்து வைத்தனர். விமானியும், மற்ற ஊழியர்களும் தங்கியிருந்த விடுதியிலேயே பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் தரையிறங்கியதற்காக ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்திய விமான தள ஆணையம், சுங்கத் துறை, குடியேற்றத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அபு தாபியில் இருந்து சீனத்தின் ஹான்யாங் நகருக்கு அந்த விமானம் செல்லவிருந்தது.

வவுனியா நலன்புரி நிலையம்: க. பொ. த. சா/த மாணவர்க்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள்

வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள க. பொ. த. சாதாரண தரப் பரீசைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் விசேட வகுப்புகள் நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

இவர்களுக்கு பாட நூல்கள், பாடக் குறிப்புகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் இந்த விசேட வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விசேட பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளதாக தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எஸ். ரோனிஸ் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் க. பொ. த. உயர்தர மாணவர்கள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆகியோருக்கும் இவ்வாறான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டன.