- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைப் பற்றிக் கட்டிய விம்பமும் இறுதிப் போர்! இறுதிப் போர்!! என்று முழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஊடகங்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தவறான தகவல்களை அள்ளிவீசி அவர்களை ஒரு மாயை உலகிற்குள் தள்ளிவிட்டிருந்தனர். இன்று இந்த ஊடகங்களில் போர் முழக்கம் இல்லை. ஆனால் வெற்று முழக்கங்களுக்கு குறையுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களினால் யுத்த வலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட வன்னி மக்களது வாழ்வு இன்னமும் கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. மே 18 வரை வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக்கி அவர்கள் வகைதொகையின்றி கொல்லப்படுவதற்கும் வகைதொகையின்றி அங்கவீனர்கள் ஆவதற்கும் தங்கள் பூரண ஆதரவை வழங்கி வந்த புலிசார்பு ஊடகங்களும் தெரிந்தும் தெரியாமலும் புலிசார்பு ஊடகங்களால் வழிநடாத்தப்பட்ட இந்த மக்களது அவலத்திற்குப் பொறுப்பான புலம்பெயர்ந்த மக்களும் மே 18க்குப் பின் அந்த மக்களை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர். பாலியல் வல்லுறவு கொண்டவனையே கணவனாக்கும் தமிழ் தேசிய மரபின் அறத்தினையே புலித் தேசியம் பேசுபவர்கள் வன்னி மக்கள் விடயத்தில் எடுத்துள்ளனர். வன்னி மக்களுக்கு மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்திய அம்மக்களை மானபங்கம் செய்த இலங்கை அரசுதான் அந்த மக்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று இவர்கள் அம்மக்களைத் கைகழுவி விட்டுள்ளனர்.
மே 18க்குப் பின் தற்போது 6 மாதங்கள் ஓடிவிட்டது. இந்த மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளையாவது செய்வது பற்றி தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம் மக்களுடன் நிற்கின்றோம் என்ற எந்த புலம்பெயர் அரசியல் அமைப்புகளும் முன்வரவில்லை. அந்த மக்களைச் சென்று பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை என்று ஒப்பாரி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று பார்த்த பின் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. வன்னி மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் போல் அல்லாது புலிகளின் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் வன்னி மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முன்வரவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பா வந்து யுத்த முழக்கம் இட்டவர்கள் ஏன் மீண்டும் ஒருமுறை லண்டன் வந்து அந்த மக்களின் புனர்வாழ்விற்கு முழக்கம் இடக்கூடாது? அதற்கு யார் தடைவிதித்தனர்?
2004 டிசம்பர் 26 சுனாமி நடைபெற்று 5வது ஆண்டு நிறைவடைகின்றது. இந்த சுனாமி நிதி, கண்ணீர் வெள்ளம் என்றெல்லாம் மக்களிடம் சேர்த்த நிதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. வெண்புறா என்றும் வணங்கா மண் என்றும் தமிழ் சுகாதார அமைப்பு என்றும் பல பெயர்களில் தமிழ் மக்களுக்காகச் சேர்க்கப்பட்ட நிதிக்கு இதுவரை சரியான கணக்குகள் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. வெண்புறா பொதுத்தளத்தில் வைத்த கணக்கு விபரம் சுண்டைக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவிலேயே செலவிழிக்கப்பட்டு உள்ளது. தாயக மக்களின் அவலத்தின் பெயரில் புலிசார்பு அமைப்புகளால் சேகரிக்கப்ட்ட நிதி பெரும்பாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அவ்வமைப்பு சார்ந்தவர்களின் புனர்வாழ்விற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசம் நிவாரணப் பணிகளைச் செய்ய முற்பட்ட போது நிதர்சனம் போன்ற இணையங்கள் அரசின் கைக்கூலிகள் என்ற சேறடித்தன. இன்று வன்னி மக்களுக்கான நிவாரணங்களை தேசம், லிற்றில் எய்ட் மேற்கொண்டபோது அதற்கு சேறடிப்பதற்கு நிதர்சனம் இயங்கவில்லை. அதன் வேலையை வேறு சிலர் (புலி மார்க்ஸிஸட்டுக்கள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இன்று இந்தப் புலம்பெயர் புலிசார்பு அமைப்புகளால் கைவிடப்பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆவர். குறிப்பாக சரணடைந்த சிறுவர் படையணியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான போராளிகளில் ஒரு சிறு பிரிவினர் அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டனர். நவம்பர் 15 உடன் அம்பேபுச புனர்வாழ்வு மையம் மூடப்பட்டு அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். தற்போது இரத்மலானை இந்துக் கல்லூரியில் 277 குழந்தைப் போராளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf
இவர்களது புனர்வாழ்வுக்கான உதவிகளை மேற்கொள்ள இவர்களை யுத்தத்திற்கு அனுப்பிய புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் தவறிவிட்டன. இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே போராட்டத்தில் இணைக்கப்பட்டதால் சாதாரண குழந்தைகளுக்குரிய மனநிலையில் இல்லை. இவர்களுக்கு விசேட உளவியல் பரமாரிப்பு அவசியமாகின்றது. ஆனால் இவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பை புலம்பெயர் அமைப்புகள் ஏற்க மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் பிரச்சினைக்குரியவர்கள், உளவியல் பிரச்சினையுடையவர்கள் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.
இந்த குழந்தைப் போராளிகளை நேரில் சென்று பார்த்து அவர்கள் விரும்பியபடி அவர்களுக்கு லிற்றில் எயட் 1785பவுண்கள் செலவில் இசைக்கருவிகளை வழங்கி அவர்களுக்கு சிறு ஆறுதலை அளிக்க முற்பட்டது. மேலும் லிற்றில் எய்ட் தேசம்நெற் மேற்கொண்ட வன்னிமுகாம் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்திலும் பங்களிப்புச் செய்தது. வன்னி முகாம் குழந்தைகளுக்கான பால்மா, முகாமில் இருந்தவர்களுக்கான துணி வகைகள், மரக்கறிகள் தற்போது மருந்து வகைகள் என லிற்றில் எய்ட் பெயருக்கு ஏற்ற அளவில் முடிந்த அளவில் சிறு உதவிகளை வழங்கியது. இந்த மக்களுக்கு உதவுவதை லிற்றில் எய்ட் தனது கடமையாக சமூகப்பொறுப்பாகக் கருதுகின்றது. தனது கணக்கு விபரம் முழுவதையும் இணையத்தில் பிரசுரித்துள்ள லிற்றில் எய்ட் இதுவரை 5521 பவுண்களை நன்கொடையாகப் பெற்றுள்ளது. ஆனால் 10183 பவுண்களை வன்னி முகாம்களின் உதவிக்கு செலவழித்துள்ளது. 5000 பவுண்கள் வரை லிற்றில் எய்ட் ரஸ்டிகளே பொறுப்பெற்றுள்ளனர். http://littleaid.org.uk/project_reports
இந்த மக்களுக்கு முடிந்த எல்லா வகையிலும் உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த மக்கள் விடயத்திலும் தங்கள் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக அந்த உதவிகளுக்கு உபத்திரவம் விளைவிக்கின்ற ஒருசிலர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வன்னி முகாம்களுக்கு தேசம்நெற் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் உதவிகள் தொடர்பாக சேறடிப்பதில் புலம்பெயர் கீபோட் மார்க்ஸிஸ்டுக்களே முன்னணியில் நின்றனர். தங்கள் மீது மார்க்ஸிட்டுக்கள் என்று விம்பத்தைக் கட்டமைக்கும் இவர்கள் இவ்வாறான உதவிகள் மார்க்ஸிய விரோதமானவை என்றும் மக்கள் விரோதமானவை என்றும் கட்டுரைகளை வரைந்து தள்ளினர். இவர்கள் வன்னி முகாம் மக்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கை அரசுக்கு கைக் கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்று உதவிகள் வழங்குபவர்கள் மீது சேறடித்தனர். வன்னி மாணவர்கள் கல்வியைத் தொடர நூல்களை வழங்கினால் முகாம்களை தொடர்ச்சியாக வைத்திருந்து பிழைப்பு நடத்துவதாக கண்டு பிடிப்புகளைச் செய்தனர்.
இவர்களுக்கிருந்த நோக்கமும் புலிகளுடைய நோக்கமும் பாரிய அளவில் வேறுபடுவதில்லை. புலிகள் மக்களை வருத்தி தங்கள் அரசியலை முன்னெடுத்தனர். இவர்களும் அதே மக்களை வருத்தி துன்பக் கேணியில் தவிக்க விட்டு தாங்கள் அவர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் (கீபோட்டில் கட்டுரை வடிப்பது) ஈடுபடுவதாக றீல் விடுகின்றனர்.
இவர்களது மனவிகாரங்களுக்கும் பொறாமைகளுக்கும் போக்கிடமாக தங்கள் இணையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைன் பற்றி இவர்கள் எழுதியவை அரசியல் அல்ல வக்கிரம். இந்த வக்கிரச் சொல்லாடல்களை கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் மத்தியில் பொதுவாகக் காணலாம். ஏனெனில் இந்த கீபோட் மட்டைகள் ஊறியது ஒரே குட்டையில். தங்களுக்கு மார்க்ஸிய மகுடம் சூட்டுவதையே இவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள். அதற்குள் தங்களில் யார் மக்களின் பக்கத்தில் என்று இவர்களுக்குள் தற்போது குத்துவெட்டு. அந்தக் குத்து வெட்டுக்கு அணிசேர்க்க ஆளாய்ப் பறக்கின்றனர்.
மே 18க்குப் பின் 6 மாதங்கள் கடந்துவிட்டது. தற்போது குழந்தைப் போராளிகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் செஞ்சோலைக் குழந்தைகளும் தங்களுக்கான ஒரு உதவும் அமைப்பைத் தேடுகின்றனர். இச்சிறார்களும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஏனைய சிறுவர் இல்லங்களில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலையுள்ளது. அதற்கு உதவுதற்கு லண்டன் அமைப்பு ஒன்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 65 சிறுவர்களைக் கொண்ட செஞ்சோலை இல்லத்தை லண்டனில் உள்ள இவ்வமைப்பு ஜனவரியில் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழந்தைப் போராளிகளைப் பராமரிப்பதில் காட்டிய அதே தயக்கம் இக்குழந்தைகள் விடயத்திலும் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த 277 குழந்தைப் போராளிகள் 65 செஞ்சோலைச் சிறார்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவி மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. இவ்வுதவிகளை தனிநபர்களாக மட்டும் அல்லது ஒரு சில அமைப்புகளால் மட்டும் மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசிடம் இருந்து இந்த மக்களுக்கு அதிககட்ச உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் இம்மக்களைப் போராளிகளை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் மட்டும் விட்டுவிட்டு அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று நாம் எமது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் இனவாதப் போக்கும் இனவாதத்தை கக்குகின்ற அரச இயந்திரமும் அப்படியே தான் இருக்கின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் புலம்பெயர்ந்த மக்களின் கவனம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
வன்னி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் அரசியலுக்கு அப்பாலும் பலரும் செய்து வருகின்றனர். இருந்தாலும் பெரிய அளவான முயற்சிகளில் ஸ்தாபனங்கள் ஈடுபடுவது அவசியம். இந்த அமைப்புகள் மீது சமூகம் விழிப்பாக இருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம். இவ்வமைப்புகள் மீதான கண்காணிப்பும் விமர்சனமும் மக்களுக்கு உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதைவிடுத்து அம்மக்களை துன்பத்திற்குள் அலையவிட்டு போராட்டத்திற்கு ஆள்பிடிக்க முயற்சிப்பதாக இருக்கத் தேவையில்லை. போராட்டத்திற்கான நேரம் வரும்போது அவர்கள் அதனைச் செய்வார்கள். புலத்து புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள் புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை.
லிற்றில் எய்ட் http://littleaid.org.uk/இன் முதலாவது உதவித் திட்டம் மே 18 2009ல் வன்னி முகாம்களைச் சென்றடைந்தது. ஒக்ரோபர் 12 2009 வரையான காலத்தில் 10 உதவித்திட்டங்களை http://littleaid.org.uk/projects லிற்றில் எய்ட் 9474 பவுண்கள் செலவில் மேற்கொண்டது. இத்திட்டத்தின் ஊடாக டென்மார்க்கில் உள்ள எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு லிற்றில் எய்ட் ஊடாக 1140 கிகி எடையுள்ள மருந்துப் பொருட்களை வவுனியாவிற்கு அனுப்பி வைத்தது. இதன் சந்தைப் பெறுமதி 16000 பவுண்கள். இவற்றை டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய திட்டம் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அவ்வமைப்பு 5500 கிகி எடையுள்ள மருந்துகளை முற்றிலும் இலவசமாக லிற்றில் எய்ட்க்கு தர முன்வந்துள்ளது. இத்தொகுதி மருந்துப் பொருட்களின் சந்தைப் பெறுமதி 40 000 பவுண்களுக்கும் அதிகமாகும். இத்தொகுதி மருந்துப் பொருட்கள் தற்போது கொழும்பைச் சென்றடைந்துள்ளது. முன்னைய திட்டத்தைப் போன்று வன்னிக்கு இம்மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை லிற்றில் எய்ட் ஏற்றுள்ளது. அதற்கு ஒரு சில ஒத்துழைப்புகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றும் உள்ளது. இம்முறை இம்மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் தலைவரும் லிற்றில் எய்ட் சார்பில் கொன்ஸ்ரன்ரைனும் இலங்கை செல்கின்றனர்.
மேலும் டிசம்பர் 20 லிற்றில் எய்ட் அமைப்பின் நிதி சேரிப்பு நடவடிக்கையின் ஓரு முயற்சியாக ஒன்றுகூடல் ஒன்றுக்கும் இராப்போசன நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வு நிதி சேகரிப்புடன் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கான நீண்ட காலத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்த ஆர்வமுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொது வேலைத்திட்டத்துடன் இணைக்கின்ற ஒரு முயற்சியாகவும் அது அமையும்.
நிகழ்வு விபரம்:
Doors Open – 8 :00pm – till late
32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA
Contact: 07886530996
வன்னி மக்களின் நல்வாழ்வில் அக்கறையுடன் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இங்கு லிற்றில் எய்ட் பற்றி எழுதியதன் மூலம் அவர்களது உதவிகளை குறைத்து மதிப்பிட முடியாது. லிற்றில் எய்ட் மூலம் அம்மக்களின் தேவைகளை தனித்து நின்று செய்துவிட முடியாது. புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த நம்பகமான அமைப்புகளுடாகவோ அல்லது தனித்தோ தங்களால் ஆன உதவிகளை மேற்கொண்டு அம்மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அம்மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களாக பயன்படுத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது.
டிசம்பர் 26 2009ல் சுனாமியால் தன்னுயிரை இழந்த அனாமிகா பாலகுமாரின் நினைவு நிகழ்வு கிழக்கு லண்டனில் இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்களின் இழப்புகளில் அனாமிகா போன்ற ஒரு சில இழப்புகளே அவரது பெற்றோர் லண்டனில் உள்ளதால் நினைவுகூரப்படுகின்றது. ஏனைய இழப்புகள் மறக்கப்பட்டு விட்டன. ஆனால் அந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளைத் தாங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடருகின்றனர். இந்நிலையே வன்னி அவலத்தில் இருந்து மீண்ட மக்களுக்கும். தம் அன்புக்குரியவர்களை தம் அங்கங்களை இழந்தவர்கள் என்று இவர்களது எதிர்காலம் கடினமானதாக அமையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் திரையில் வன்னி மக்களின் முகங்கள் வராது, வானலைகளில் அவர்களின் குரல்கள் ஒலிக்காது, பத்திரிகை இணையங்களிலும் அவர்களது பதிவுகள் வராது. இம்மக்களுக்கான நலத்திட்டங்களை இப்போது ஆரம்பிக்காதுவிட்டால் இன்னும் சில மாதங்களில் இவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள்.
நாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தகவல்கள் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அவர்களுக்கு தகவல்கள் பலவழிகளிலும் கிடைத்தது. தகவல்களைப் பெறுவதற்கான பலவழிகளும் இருந்தது. ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்கள் உண்மைகளைத் தவறவிட்டன. தம் விருப்பு வெறுப்புகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப தகவல்களை வடிகட்டிக் கொடுத்தனர். மக்களை மாயைக்குள் வைத்திருந்தனர்.
நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவினமான நிலையில் இருந்தனர், பலவந்தமாக இளைஞர் யுவதிகளை படையணியில் சேர்த்தனர், மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர், தமது சொந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் என்ற விடயங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வன்னியில் இருந்தும் வந்திருந்த போதும் புல்ம்பெயர்ந்த தேசங்களில் இருந்த புலிசார்பு ஊடகங்கள் இந்த உண்மைகளைக் கண்டுகொள்ள மறுத்தனர். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது விம்பங்களைக் கட்டமைத்தனர். அதனாலேயே மே 18 2009 காலையில் மக்கள் நித்திரையால் எழும்பியபோது ‘சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது’ போன்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களில் பலர் இன்னமும் அதன் தாக்கத்தில் இருந்து மீளவில்லை.
இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் மிகப்பெரும் மனித அவலம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த போதும் 20 000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் மக்கள் கொல்லப்பட்ட போதும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவதற்குப் பதில் தமது அரசியல் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே தகவல்களைச் சமைத்துக் கொண்டனர். இதன் மூலம் தாயகத்தில் இருந்து 6000 மைல்களுக்கும் அப்பால் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு மாயையைச் சூழலை புலத்தில் உருவாக்கியது. இன்றும் பலர் அச்சூழலிலேயே வாழ்கின்றனர்.
தகவல்கள், தகவல்களின் நம்பகத்தன்மை, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளல் என்பன பொதுத் தளங்களில் தகவல்களைப் பரிமாறுபவர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயமான பொறுப்பு. விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களைக் கட்டமைப்பதும் உண்மைகளைத் திரிபுபடுத்துவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாரதூரமானவை.
இன்றும் சிலர் இதனை உணர மறுக்கின்றனர். அந்த வரிசையில் தமிழரங்கம் பி இரயாகரனும் குறிப்பிடத்தக்க ஒருவர். அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து:
“வட்டுக்கோட்டை தீர்மானம்”, “நாடு கடந்த தமிழீழம்”, “மே 18 இயக்கம்” .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து எப்படி நிகழ்கால அரசியலை செய்ய முனைகின்றனரோ, அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். மொத்தத்தில் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.”
பி.இரயாகரன் Tuesday, 15 December 2009 11:22
வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், மே 18 இயக்கம் என்ற மூன்றையும் இரயாகரன் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த கி பி அரவிந்தனும் நாடுகடந்த தமிழீழத்தை முன்னெடுக்கும் விஸ்வானந்தன் உருத்திரகுமாரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பவர்கள். இவை இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலின் தொடர்ச்சி என்பது பொதுவாக நிறுவப்பட்ட உண்மை.
மே 18 இயக்கம் தீப்பொறி அமைப்பின் தொடர்ச்சி என்பதும் வியூகம் இதழ் உயிர்ப்பின் தொடர்ச்சி எனபதும் சுயவிமர்சனங்களுக்கு ஊடாகவே தாங்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளப் போவதாகவும் வியூகம் சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை டிசம்பர் 9ல் மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன் என்ற தலைப்பில் தேசம்நெற்ல் வெளியாகி இருந்தது. ரொறன்ரோவில் டிசம்பர் 13ல் இடம்பெற்ற வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ‘விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை வியூகம் ஆசிரியர் தலைப்புக் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேலாக வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மட்டுமல்ல ‘விடுதலைப் போராட்டமும் புலிகளும்’ என்ற பிரதான கட்டுரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
— On Mon, 14/12/09, Tamil Circle <tamil_circle@yahoo.no> wrote:
> From: Tamil Circle <tamil_circle@yahoo.no>
> Subject:
> To: tamil_circle@yahoo.no
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM
> கடுமையாக
> விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் – பார்வைக்கு
>
> தமிழரங்கம்
> இணையத்தளம் கருத்து
> மக்களைப் பற்றிக்
> கொண்டால் அது மாபெரும்
> சக்தியாக
> உருவெடுக்கும்
>
> www.tamilcircle.net
>
> வர்க்கம், அரசியல்,
> சாதியம், பெண்ணியம்,
> தேசியம், நிறம், மதம்,
> பண்பாடு, கலாச்சாரம்,
> இசை, சுற்றுச்சூழல் …
> என அனைத்து
> விடையங்களையும்
> இத்தளத்தில் நீங்கள்
>
> காணமுடியும்.
>
> மின்னஞ்சல் tamilcircle@tamilcircle.net
> tamil_circle@yahoo.no
அதாவது மே 18 இயக்கம் புலி சார்பானது என இரயாகரன் எழுதுவதற்கு முதல்நாளே வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனிடம் இருந்துள்ளது. tamil_circle@yahoo.no என்ற மின் அஞ்சல் முகவரியில் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அப்படி இருக்கையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், அமைப்புகளுடன் மே 18 இயக்கத்தையும் இணைத்து மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்பு என்று இரயாகரன் முத்திரை குத்துவது எதற்கு? இதற்கு இரு காரணங்கள் இருக்க முடியும்.
1. தவறான தகவல் : வழமை போல் இரயாகரன் எவ்வித உறுதிப்படுத்தலும் நம்பகத்தன்மையும் இல்லாத தகவலைக் கொண்டு மே 18 இயக்கம் – வியூகம் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
2. தகவலை மறைப்பது : இரயாகரன் உண்மையை அறிந்திருந்த போதும் தகவல்களை வடிகட்டி தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதனைத் திரிபுபடுத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.
இரயாகரன் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது இரயாகரனுக்கு மட்டுமுள்ள குறைபாடும் அல்ல. இது கீ போட் மாஸ்க்ஸிஸ்டுக்களுக்குள்ள பொதுவான குறைபாடு. இவர்கள் தகவல்களைச் சேகரிப்பது உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. தங்கள் உழைப்பைச் செலுத்துவதும் இல்லை. ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிட்டுக்கள். இவர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதனால் இவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மூலங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடிகின்றது. தங்கள் அரசியலுக்கு வலுச் சேர்க்கும் தகவல்கள் எதனையும் எவ்வித விசாரணையும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்துவார்கள்.
இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இரயாகரன் அறுதியிட்டு சரியென வெளியிட்ட செய்திகள் எப்படி முற்றிலும் தவறான செய்திகளாக அமைந்தது என்பது உதாரணங்களுடன் மிக விரிவாக எழுதப்பட்டு உள்ளது. அதனால் தவறான தகவல்கள் அடிப்படையில் இராயாகரன் கட்டுரையை எழுதி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பானது என இரயாகரன் எழுதியது தவறான செய்திகளின் அடிப்படையில் அல்ல. ஏனெனில் இரயாகரன் மே 18 இயக்கம் அதன் பின்னணி பற்றிய தகவல்களை அறிந்த ஒருவர். யூலை இறுதிப் பகுதியில் அரசியல் நட்பு சக்திகளுடன் உரையாடலை ஆரம்பிக்கு முகமாக ஐரோப்பா வந்த ரகுமான் யான் ஓகஸ்ட் 1ல் பாரிஸில் இரயாகரனைச் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தமிழரங்கத்தில் கட்டுரை எழுதிய இரயாகரன் பின்வரும் அழைப்பை நட்புசக்திகளுக்கு விடுத்தார். ”மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!? இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை.” இரயாகரன் தீப்பொறி அல்லது ரகுமான் யான் புலிகள் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றால் ஏன் இந்த விமர்சனத்தை அன்று வைக்கவில்லை.
மேலும் அன்று இரயாகரன் எழுதியது ”எம்முடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், இயல்பாக தம்முள் பாட்டாளி வர்க்கத்தை மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுடன்தான், தம்மை முன்னிறுத்த முனைகின்றனர்.’‘ இந்த வரிகளின் மூலம் இரயாகரன் தனது நோக்கத்தை அம்மணமாகத் தெரிவிக்கிறார். “Over time it’s going to be important for nations to know they will be held accountable for inactivity,You’re either with us or against us in the fight against terror.” நவம்பர் 6 2009ல் இதனைத் தெரிவித்தது வேறு யாருமல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ். இதே கருத்துப்படவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் நடந்து கொண்டார். தனது வழியே சரியானது என்றும் அந்தவழியில் பயணிக்காதவர்கள் தமிழ் தேசியத்தின் துரோகிகள் என்றும் சுட்டுக்கொன்றார். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது வழியில் பயணிக்காதவர்களை நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்கள் என்று வைகின்றார்.
தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From: tamilcircle@tamilcircle.net
To: ashokyogan@hotmail.com
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000
”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”
2007 டிசம்பர் பிற்பகுதியிலும் 2008 ஜனவரியிலும் என்எல்எப்ரி யின் ஹற்றன் நஸனல் வங்கிக்கொள்ளை தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் பலரும் இரயாகரனிடம் கேள்வி எழுப்பினர். தன்னிடம் அவ்வாறான ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கே பொங்கியெழுந்து பல கட்டுரைகளை எழுதிய இரயாகரன் குறிப்பிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பாக எந்தப் பதிலையும் கூறவில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ”அசோக், நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப் பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்று இரயாகரன் மிரட்டுகின்றார். இரயாகரனின் இந்த அரசியல் நேர்மையை என்னவென்பது.
இரயாகரனும் இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் மார்க்ஸிஸத்தில் புலிகள் அல்ல. இவர்கள் புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள்.
மே 18 இயக்கம் மீதும் ரகுமான் யான் மீதும் புலி முத்திரை குத்துவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது இரயாகரனுடைய முன்னைய கட்டுரை மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. ரகுமான் யான் தன்னுடன் பாரிஸ்க்கு கதைக்க வந்ததை ”எமது வழிதான் சரியானது என்பது, தெளிவாக அரசியல் ரீதியாக உணரப்படுகின்றது.” என்று புல்லரித்துக் கொண்ட இரயாகரன் ரகுமான் யான் மே 18 இயக்கத்தை ஆரம்பிக்கிறார் என்ற செய்தி உறுதியானதும் பல்டி அடித்துக் கொண்டார். ”கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.” என்று ஒரு குற்றச்சாட்டை போட்டு வைக்கின்றார். மற்றவர்களை மக்களுடன் நிற்காதவர்கள் என்று எழுதும் இரயாகரன் ”எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது.” என்று மக்களை மந்தைகள் என்று திட்டித் தீர்க்கின்றார். ”ஆறாவது அறிவை இழந்த மந்தைகள்” என்று மேலதிக விளக்கமும் கொடுக்கின்றார். ‘தமிழ் சமூகத்தில் ஆறறிவுள்ள ஒரே அரசியல் விலங்கு ‘அண்ணன் இரயா’ மட்டும் தான் என்பதனை இந்த தமிழ் சமூகம் அறிந்திருந்தால் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஒரு பட்டாசு வெடியுடனேயே முடித்திருக்கலாம்.’ என்ற கணக்கில் தான் இரயாகரன் தன்னைப் பற்றிய விம்பத்தைக் கட்டமைக்கின்றார்.
இராயாகரன் தன்னைப்பற்றிக் கொடுக்கும் மற்றுமொரு பில்ட்அப் ”இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன் சமூக விடயங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;….. எனது சொந்த உழைப்பில் தான் எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன். கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. …. இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன்.”
இவற்றிலிருந்து மே 18 இயக்கம் புலிகள் சார்பான அமைப்பு என்ற இரயாகரனின் குறிப்பு இரயாகரன் மிகத் திட்டமிட்டு தனது அரசியல் விம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சேறடிப்பே என்ற முடிவுக்கே வர முடிகின்றது. சேறடிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத இரயாகரன் தங்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்கள் இடையேயான பனிப் போரில் அதனுடன் சம்பந்தப்படாத ரகுமான் யான் இராணுவச் சீருடையில் நிற்கின்ற படத்தைப் போட்டுள்ளார். கட்டுரையுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்புகைப்படம் அதில் பிரசுரிக்கப்பட்டது யாருக்கு ரகுமான் யானை காட்டிக்கொடுக்கும் முயற்சி? இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுத்தலே. ஒரு போராளி அவனுடைய சமூகத்தின் உடமை. அவனைக் காட்டிக்கொடுக்கின்ற உரிமையை இரயாகரன் எங்கிருந்து பெற்றார். இந்தக் காட்டிக் கொடுப்பு இரயாகரன் மக்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக்குகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த லண்டன் வந்திருந்த போது அவருடன் ஒரு நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தேன். அப்போது தனது தாடி பற்றி நகைச்சுவையாகத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த தனக்கு பிடல் கஸ்ரோ மீது மிகுந்த அபிமானம் என்றும் அவரளவுக்கு வர முடியாவிட்டாலும் அவர் போன்று தாடியை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இப்படி வாழ்க்கையில் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும். அப்படித்தான் இரயாகரனுக்கும் புரட்சி செய்ய முடியாவிட்டாலும் புரட்சிக்காரன் போல் இராணுவச் சீருடையும் தொப்பியும் அணிந்து செல்ல விருப்பம் மட்டுமல்ல டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ஸ்ரண்ட் காட்டுவதற்குப் படம் தேவைப்பட்டால் உங்களுடைய இந்தப் படத்தையே போட்டிருக்கலாமே. எதற்காக சம்பந்தப்படாத ரகுமான் யானின் படத்தை அவ்விடத்தில் போட வேண்டும். கீ போட் புரட்சியாளர்களுக்கு தலைமறைவு வாழ்வின் யதார்த்தத்தை அவ்வளவு இலகுவில் புரிய வைத்திட முடியாது.
எது எப்படியானாலும் இரயாகரனும் அவர் ஊறிய அதே குட்டையில் ஊறிய கீ போட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் தங்கள் வெற்றுக் கோசங்களால் மக்களை மட்டுமல்ல அவர்களுடைய மக்களையும் வென்றெடுக்க முடியாது. இவர்கள் தங்களை மாஓயிஸ்ட்டுக்கள் என்பதால் மாஓவின் மொழியில் காகிதப் புரட்சியாளர்கள் என்பதே வெகுபொருத்தமானது. இவர்கள் ”நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. ” என்று கட்டுரை எழுதுவதற்கே லாயக்கு. இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மீது விமர்சனம் வைப்பது ஒரு வகையில் பாலவர்ணம் சிவக்குமார் மீது கல் எறிந்ததற்குச் சமனாகும். இவர்களை அனுதாபத்துடன் அணுகுவதே முறை. குழந்தைகளின் மனநிலையை அறிய அவர்களிடம் வெள்ளைத் தாளையும் பேனையையும் கொடுத்து கீறச் சொல்வார்கள். வளர்ந்தவர்களுக்கு கீ போட்டைக் கொடுத்து எழுதச் சொல்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை மொழி உளவியல் நிபுணரிடம் கொடுத்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள். இதனை ‘கீபோர்ட்-மார்க்ஸ்-சின்ட்ரம்’ என வகைப்படுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
குறிப்பு: நண்பர் இரயாகரன் எப்படியும் நீங்கள் இக்கட்டுரைக்கு சில கட்டுரைத் தொடர்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுதுவது தான் உங்கள் உளநலத்திற்கும் நல்லது. ஒரு சிறு வேண்டுகோள் வழமையாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை தொகுப்பாக வெளியிடுவது உங்கள் வழக்கம். அதனால் ஏற்கனவே நீங்கள் தேசம்நெற் பற்றி எழுதிய கட்டுரைகளையும் இனிமேல் எழுதப் போகின்ற கட்டுரைகளயும் தொகுத்து ஒரு புத்தகமாக்க முடியுமா என்று பாருங்கள். இப்பொழுது எனக்கு வாசிக்க நேரமில்லை. புத்தகமாக இருந்தால் வயதான காலத்தில் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு உந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். ஒத்துழைப்பிற்கு நன்றி.
சரத் பொன்சேகா படை வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தெரிவித்த கூற்று தொடர்பில் எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இவருக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும். இவர் தொடர்பாக சி. ஐ. டி. யினூடாக விசாரணை நடத்த சட்ட மா அதிபர் பணித்தால் அவரிடம் வாக்கு மூலம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். இம்மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 377 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் தங்கி இருப்பதாக மட்டு. மாவட்ட இணைப்பாளர் கே. விமலராசா கூறினார்.
திருமலை மாவட்டத்தில் சுமார் 5600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக திருமலை மாவட்ட இணைப்பாளர் எம். எஸ். எம். ரிஸ்வி கூறினார். இத்தொடர் மழையின் விளைவாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் சுமார் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மாவ ட்ட செயலாளர் சுனில் கன்னங்கர கூறினார்.
தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகனேரி, றூகம், நவகிரி, புனாணை, உன்னிச்சை குளங்களின் அணைகள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவற்றின் சில வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.
மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற் கொண்டுள்ளது. இது தொடர்பான அறி வுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாகரை, காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் சில குடும்பங்கள் பொதுக் கட்டடங்களிலும் தங்கியுள்ளன.
பல கிராமங்களின் தொடர்பு வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பாதைகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வாகனங்கள், பயணிகள் பயணிக்க முடியாதுள்ளது.
கல்விப் பொதுத்தராதரப் சாதாரன தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையில், கூடுதலாக 22 சினூக் ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தாங்கள் வாங்கவுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு தேவையான பணத்துக்காக இதர இராணுவ செலவினங்களை குறைக்க பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்களில் முதலாவது 2013 ஆண்டில் செயற்படத் தொடங்கும்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் அதன் இராணுவ வீரர்களுக்கு போதிய அளவில் ஹெலிகாப்டர்கள் வழங்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அங்கு பிரிட்டிஷ் இராணுவத்தினர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருக்கும் சாலையோர வெடிகுண்டுகளை எதிர்த்து சமாளிப்பதற்கு மேலும் கூடுதலாக 250 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக மேலும் 08 பேர் நேற்று (15) கட்டுப்பணம் செலுத்தினர்.
சுயேச்சை வேட்பாளர்களாக மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா, கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் டபிள்யு. எம். யு. பி. விஜேகோன் ஆகியோரும் கட்சிகளின் சார்பாக கெ. ஜி. ஆர். எல். பெரேரா, எம். சி. எம். இஸ்மாயில், ஒஸ்வர்ட் அருணடி சொய்ஸா, சனத் பினதுவ, அதுரகே செனரத்ன சில்வாவும் நேற்று தேர்தல்கள் திணைக்களத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தினர்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் 17 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 04 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்படும் என சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரண்டு தொழிலாளர் வீதம் இணைக்க ப்பட்டு 864 தொழிலாளர்களின் உதவியுடன் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
தேர்தல் சட்டத்திற்கமைய வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து மேற்படி பெனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள் அகற்றப்படுதல் வேண்டும்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘வார்ட்’ புயல் சின்னம் வலுவிழுந்து இன்று இலங்கைக்கு மேல் திருகோணமலை ஊடாக மன்னார் குடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.
காற்றழுத்தம் மிகவும் வலுவிழந்துள்ளதால் இலங்கையை கடந்து செல்வது தாமதமாகிறது. இதனால் வடக்கு கிழக்கு, வட மத்திய வடமேல் மாகாண, மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இலங்கைக்கு மேல் மேகக் கூட்டங்கள் அதிகளவு காணப்படும். அத்துடன் மன்னார், வளைகுடா பகுதி வடக்கு கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கிறது. முதலில் தமிழகத்தின் நாகப்பட்டினம் கரையை இலக்காகக் கொண்டு நகர்ந்த வார்ட் புயல் சின்னம் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து. பின்னர் இலங்கைக்கு கிழக்கே திருகோணமலையை நோக்கி நகரத் தொடங்கியது.
நேற்று முன்தினம் இலங்கை கரையை அண்மித்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டால் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இலங்கையை கடந்து சென்று விடும். எனினும் தற்போதைய நிலவரப்படி மிகவும் குறைந்த வேகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காணப்படுவதால் மெதுவாகவே நகர்ந்து செல்கிறது. வடக்கு, கிழக்கு வட மத்திய பகுதிகளில் கன மழை பெய்தாலும் ஏனைய பகுதிகளில் காலநிலை மந்தமாக காணப்படுவதுடன் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினமான நாளை 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் தேர்தல் திணை க்களம் அமைந்துள்ள ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் திணைக்களம் அமைந்துள்ள சரண மாவத்தைப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுவதுடன் தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.
பொரளைச் சந்தி முதல் கொட்டா வீதியூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனநாயக்கா சந்தி முதல் பாராளுமன்ற பாதையூடாக வெலிக்கடை பொலிஸ் வரையி லான வீதி ஆகியன நாளை காலை 9.00 மணி முதல் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை க்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கரு தியே காலை 9.00 மணிக்குப் பின்னர் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் முடிந்த வரையில் நாளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாளை காலை 9.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகள் குறித்த ஒத்திகையொன்று இன்று 16ஆம் திகதி கலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மேற்குறிப்பிடப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தாது மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி வேட்பாளரும் அவரது இரண்டு பிரதிநிதிகளும், அவருடன் மேலும் 10 பேர் மட்டுமே சரண மாவத்தையூடாக அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு வாகன தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வந்து பின்னர் திரும்பிச் செல்லும் வரையில் இந்த போக்குவரத்து ஏற்பாடு அமுலில் இருக்கும் என்றும் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.
போக்குவரத்து பிரிவின் உதவி பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வரைபடங்கள் மூலம் விளக்கினார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.