மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்

முன்னாள் குழந்தைப் போராளிகள்தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைப் பற்றிக் கட்டிய விம்பமும் இறுதிப் போர்! இறுதிப் போர்!! என்று முழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஊடகங்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தவறான தகவல்களை அள்ளிவீசி அவர்களை ஒரு மாயை உலகிற்குள் தள்ளிவிட்டிருந்தனர். இன்று இந்த ஊடகங்களில் போர் முழக்கம் இல்லை. ஆனால் வெற்று முழக்கங்களுக்கு குறையுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களினால் யுத்த வலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட வன்னி மக்களது வாழ்வு இன்னமும் கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. மே 18 வரை வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக்கி அவர்கள் வகைதொகையின்றி கொல்லப்படுவதற்கும் வகைதொகையின்றி அங்கவீனர்கள் ஆவதற்கும் தங்கள் பூரண ஆதரவை வழங்கி வந்த புலிசார்பு ஊடகங்களும் தெரிந்தும் தெரியாமலும் புலிசார்பு ஊடகங்களால் வழிநடாத்தப்பட்ட இந்த மக்களது அவலத்திற்குப் பொறுப்பான புலம்பெயர்ந்த மக்களும் மே 18க்குப் பின் அந்த மக்களை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர். பாலியல் வல்லுறவு கொண்டவனையே கணவனாக்கும் தமிழ் தேசிய மரபின் அறத்தினையே புலித் தேசியம் பேசுபவர்கள் வன்னி மக்கள் விடயத்தில் எடுத்துள்ளனர். வன்னி மக்களுக்கு மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்திய அம்மக்களை மானபங்கம் செய்த இலங்கை அரசுதான் அந்த மக்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று இவர்கள் அம்மக்களைத் கைகழுவி விட்டுள்ளனர்.

மே 18க்குப் பின் தற்போது 6 மாதங்கள் ஓடிவிட்டது. இந்த மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளையாவது செய்வது பற்றி தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம் மக்களுடன் நிற்கின்றோம் என்ற எந்த புலம்பெயர் அரசியல் அமைப்புகளும் முன்வரவில்லை. அந்த மக்களைச் சென்று பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை என்று ஒப்பாரி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று பார்த்த பின் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. வன்னி மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் போல் அல்லாது புலிகளின் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் வன்னி மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முன்வரவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பா வந்து யுத்த முழக்கம் இட்டவர்கள் ஏன் மீண்டும் ஒருமுறை லண்டன் வந்து அந்த மக்களின் புனர்வாழ்விற்கு முழக்கம் இடக்கூடாது? அதற்கு யார் தடைவிதித்தனர்?

2004 டிசம்பர் 26 சுனாமி நடைபெற்று 5வது ஆண்டு நிறைவடைகின்றது. இந்த சுனாமி நிதி, கண்ணீர் வெள்ளம் என்றெல்லாம் மக்களிடம் சேர்த்த நிதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. வெண்புறா என்றும் வணங்கா மண் என்றும் தமிழ் சுகாதார அமைப்பு என்றும் பல பெயர்களில் தமிழ் மக்களுக்காகச் சேர்க்கப்பட்ட நிதிக்கு இதுவரை சரியான கணக்குகள் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. வெண்புறா பொதுத்தளத்தில் வைத்த கணக்கு விபரம் சுண்டைக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவிலேயே செலவிழிக்கப்பட்டு உள்ளது. தாயக மக்களின் அவலத்தின் பெயரில் புலிசார்பு அமைப்புகளால் சேகரிக்கப்ட்ட நிதி பெரும்பாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அவ்வமைப்பு சார்ந்தவர்களின் புனர்வாழ்விற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசம் நிவாரணப் பணிகளைச் செய்ய முற்பட்ட போது நிதர்சனம் போன்ற இணையங்கள் அரசின் கைக்கூலிகள் என்ற சேறடித்தன. இன்று வன்னி மக்களுக்கான நிவாரணங்களை தேசம், லிற்றில் எய்ட் மேற்கொண்டபோது அதற்கு சேறடிப்பதற்கு நிதர்சனம் இயங்கவில்லை. அதன் வேலையை வேறு சிலர் (புலி மார்க்ஸிஸட்டுக்கள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்று இந்தப் புலம்பெயர் புலிசார்பு அமைப்புகளால் கைவிடப்பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆவர். குறிப்பாக சரணடைந்த சிறுவர் படையணியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான போராளிகளில் ஒரு சிறு பிரிவினர் அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டனர். நவம்பர் 15 உடன் அம்பேபுச புனர்வாழ்வு மையம் மூடப்பட்டு அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். தற்போது இரத்மலானை இந்துக் கல்லூரியில் 277 குழந்தைப் போராளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

இவர்களது புனர்வாழ்வுக்கான உதவிகளை மேற்கொள்ள இவர்களை யுத்தத்திற்கு அனுப்பிய புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் தவறிவிட்டன. இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே போராட்டத்தில் இணைக்கப்பட்டதால் சாதாரண குழந்தைகளுக்குரிய மனநிலையில் இல்லை. இவர்களுக்கு விசேட உளவியல் பரமாரிப்பு அவசியமாகின்றது. ஆனால் இவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பை புலம்பெயர் அமைப்புகள் ஏற்க மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் பிரச்சினைக்குரியவர்கள், உளவியல் பிரச்சினையுடையவர்கள் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.

little_aidஇந்த குழந்தைப் போராளிகளை நேரில் சென்று பார்த்து அவர்கள் விரும்பியபடி அவர்களுக்கு லிற்றில் எயட் 1785பவுண்கள் செலவில் இசைக்கருவிகளை வழங்கி அவர்களுக்கு சிறு ஆறுதலை அளிக்க முற்பட்டது. மேலும் லிற்றில் எய்ட் தேசம்நெற் மேற்கொண்ட வன்னிமுகாம் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்திலும் பங்களிப்புச் செய்தது. வன்னி முகாம் குழந்தைகளுக்கான பால்மா, முகாமில் இருந்தவர்களுக்கான துணி வகைகள், மரக்கறிகள் தற்போது மருந்து வகைகள் என லிற்றில் எய்ட் பெயருக்கு ஏற்ற அளவில் முடிந்த அளவில் சிறு உதவிகளை வழங்கியது. இந்த மக்களுக்கு உதவுவதை லிற்றில் எய்ட் தனது கடமையாக சமூகப்பொறுப்பாகக் கருதுகின்றது. தனது கணக்கு விபரம் முழுவதையும் இணையத்தில் பிரசுரித்துள்ள லிற்றில் எய்ட் இதுவரை 5521 பவுண்களை நன்கொடையாகப் பெற்றுள்ளது. ஆனால் 10183 பவுண்களை வன்னி முகாம்களின் உதவிக்கு செலவழித்துள்ளது. 5000 பவுண்கள் வரை லிற்றில் எய்ட் ரஸ்டிகளே பொறுப்பெற்றுள்ளனர். http://littleaid.org.uk/project_reports

இந்த மக்களுக்கு முடிந்த எல்லா வகையிலும் உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த மக்கள் விடயத்திலும் தங்கள் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக அந்த உதவிகளுக்கு உபத்திரவம் விளைவிக்கின்ற ஒருசிலர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வன்னி முகாம்களுக்கு தேசம்நெற் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் உதவிகள் தொடர்பாக சேறடிப்பதில் புலம்பெயர் கீபோட் மார்க்ஸிஸ்டுக்களே முன்னணியில் நின்றனர். தங்கள் மீது மார்க்ஸிட்டுக்கள் என்று விம்பத்தைக் கட்டமைக்கும் இவர்கள் இவ்வாறான உதவிகள் மார்க்ஸிய விரோதமானவை என்றும் மக்கள் விரோதமானவை என்றும் கட்டுரைகளை வரைந்து தள்ளினர். இவர்கள் வன்னி முகாம் மக்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கை அரசுக்கு கைக் கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்று உதவிகள் வழங்குபவர்கள் மீது சேறடித்தனர். வன்னி மாணவர்கள் கல்வியைத் தொடர நூல்களை வழங்கினால் முகாம்களை தொடர்ச்சியாக வைத்திருந்து பிழைப்பு நடத்துவதாக கண்டு பிடிப்புகளைச் செய்தனர்.

இவர்களுக்கிருந்த நோக்கமும் புலிகளுடைய நோக்கமும் பாரிய அளவில் வேறுபடுவதில்லை. புலிகள் மக்களை வருத்தி தங்கள் அரசியலை முன்னெடுத்தனர். இவர்களும் அதே மக்களை வருத்தி துன்பக் கேணியில் தவிக்க விட்டு தாங்கள் அவர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் (கீபோட்டில் கட்டுரை வடிப்பது) ஈடுபடுவதாக றீல் விடுகின்றனர்.

இவர்களது மனவிகாரங்களுக்கும் பொறாமைகளுக்கும் போக்கிடமாக தங்கள் இணையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைன் பற்றி இவர்கள் எழுதியவை அரசியல் அல்ல வக்கிரம். இந்த வக்கிரச் சொல்லாடல்களை கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் மத்தியில் பொதுவாகக் காணலாம். ஏனெனில் இந்த கீபோட் மட்டைகள் ஊறியது ஒரே குட்டையில். தங்களுக்கு மார்க்ஸிய மகுடம் சூட்டுவதையே இவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள். அதற்குள் தங்களில் யார் மக்களின் பக்கத்தில் என்று இவர்களுக்குள் தற்போது குத்துவெட்டு. அந்தக் குத்து வெட்டுக்கு அணிசேர்க்க ஆளாய்ப் பறக்கின்றனர்.

மே 18க்குப் பின் 6 மாதங்கள் கடந்துவிட்டது. தற்போது குழந்தைப் போராளிகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் செஞ்சோலைக் குழந்தைகளும் தங்களுக்கான ஒரு உதவும் அமைப்பைத் தேடுகின்றனர். இச்சிறார்களும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஏனைய சிறுவர் இல்லங்களில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலையுள்ளது. அதற்கு உதவுதற்கு லண்டன் அமைப்பு ஒன்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 65 சிறுவர்களைக் கொண்ட செஞ்சோலை இல்லத்தை லண்டனில் உள்ள இவ்வமைப்பு ஜனவரியில் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழந்தைப் போராளிகளைப் பராமரிப்பதில் காட்டிய அதே தயக்கம் இக்குழந்தைகள் விடயத்திலும் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த 277 குழந்தைப் போராளிகள் 65 செஞ்சோலைச் சிறார்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவி மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. இவ்வுதவிகளை தனிநபர்களாக மட்டும் அல்லது ஒரு சில அமைப்புகளால் மட்டும் மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசிடம் இருந்து இந்த மக்களுக்கு அதிககட்ச உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் இம்மக்களைப் போராளிகளை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் மட்டும் விட்டுவிட்டு அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று நாம் எமது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் இனவாதப் போக்கும் இனவாதத்தை கக்குகின்ற அரச இயந்திரமும் அப்படியே தான் இருக்கின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் புலம்பெயர்ந்த மக்களின் கவனம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

வன்னி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் அரசியலுக்கு அப்பாலும் பலரும் செய்து வருகின்றனர். இருந்தாலும் பெரிய அளவான முயற்சிகளில் ஸ்தாபனங்கள் ஈடுபடுவது அவசியம். இந்த அமைப்புகள் மீது சமூகம் விழிப்பாக இருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம். இவ்வமைப்புகள் மீதான கண்காணிப்பும் விமர்சனமும் மக்களுக்கு உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதைவிடுத்து அம்மக்களை துன்பத்திற்குள் அலையவிட்டு போராட்டத்திற்கு ஆள்பிடிக்க முயற்சிப்பதாக இருக்கத் தேவையில்லை. போராட்டத்திற்கான நேரம் வரும்போது அவர்கள் அதனைச் செய்வார்கள். புலத்து புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள் புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை.

லிற்றில் எய்ட் http://littleaid.org.uk/இன் முதலாவது உதவித் திட்டம் மே 18 2009ல் வன்னி முகாம்களைச் சென்றடைந்தது. ஒக்ரோபர் 12 2009 வரையான காலத்தில் 10 உதவித்திட்டங்களை http://littleaid.org.uk/projects லிற்றில் எய்ட் 9474 பவுண்கள் செலவில் மேற்கொண்டது. இத்திட்டத்தின் ஊடாக டென்மார்க்கில் உள்ள எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு லிற்றில் எய்ட் ஊடாக 1140 கிகி எடையுள்ள மருந்துப் பொருட்களை வவுனியாவிற்கு அனுப்பி வைத்தது. இதன் சந்தைப் பெறுமதி 16000 பவுண்கள். இவற்றை டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய திட்டம் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அவ்வமைப்பு 5500 கிகி எடையுள்ள மருந்துகளை முற்றிலும் இலவசமாக லிற்றில் எய்ட்க்கு தர முன்வந்துள்ளது. இத்தொகுதி மருந்துப் பொருட்களின் சந்தைப் பெறுமதி 40 000 பவுண்களுக்கும் அதிகமாகும். இத்தொகுதி மருந்துப் பொருட்கள் தற்போது கொழும்பைச் சென்றடைந்துள்ளது. முன்னைய திட்டத்தைப் போன்று வன்னிக்கு இம்மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை லிற்றில் எய்ட் ஏற்றுள்ளது. அதற்கு ஒரு சில ஒத்துழைப்புகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றும் உள்ளது. இம்முறை இம்மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் தலைவரும் லிற்றில் எய்ட் சார்பில் கொன்ஸ்ரன்ரைனும் இலங்கை செல்கின்றனர்.

மேலும் டிசம்பர் 20 லிற்றில் எய்ட் அமைப்பின் நிதி சேரிப்பு நடவடிக்கையின் ஓரு முயற்சியாக ஒன்றுகூடல் ஒன்றுக்கும் இராப்போசன நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வு நிதி சேகரிப்புடன் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கான நீண்ட காலத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்த ஆர்வமுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொது வேலைத்திட்டத்துடன் இணைக்கின்ற ஒரு முயற்சியாகவும் அது அமையும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 8 :00pm – till late
32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA
Contact: 07886530996

வன்னி மக்களின் நல்வாழ்வில் அக்கறையுடன் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இங்கு லிற்றில் எய்ட் பற்றி எழுதியதன் மூலம் அவர்களது உதவிகளை குறைத்து மதிப்பிட முடியாது. லிற்றில் எய்ட் மூலம் அம்மக்களின் தேவைகளை தனித்து நின்று செய்துவிட முடியாது. புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த நம்பகமான அமைப்புகளுடாகவோ அல்லது தனித்தோ தங்களால் ஆன உதவிகளை மேற்கொண்டு அம்மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அம்மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களாக பயன்படுத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது.

டிசம்பர் 26 2009ல் சுனாமியால் தன்னுயிரை இழந்த அனாமிகா பாலகுமாரின் நினைவு நிகழ்வு கிழக்கு லண்டனில் இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்களின் இழப்புகளில் அனாமிகா போன்ற ஒரு சில இழப்புகளே அவரது பெற்றோர் லண்டனில் உள்ளதால் நினைவுகூரப்படுகின்றது. ஏனைய இழப்புகள் மறக்கப்பட்டு விட்டன. ஆனால் அந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளைத் தாங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடருகின்றனர். இந்நிலையே வன்னி அவலத்தில் இருந்து மீண்ட மக்களுக்கும். தம் அன்புக்குரியவர்களை தம் அங்கங்களை இழந்தவர்கள் என்று இவர்களது எதிர்காலம் கடினமானதாக அமையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் திரையில் வன்னி மக்களின் முகங்கள் வராது, வானலைகளில் அவர்களின் குரல்கள் ஒலிக்காது, பத்திரிகை இணையங்களிலும் அவர்களது பதிவுகள் வராது. இம்மக்களுக்கான நலத்திட்டங்களை இப்போது ஆரம்பிக்காதுவிட்டால் இன்னும் சில மாதங்களில் இவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • வாசு
    வாசு

    மகிந்தாவா? சரத்தா? மே பதினெட்டா பத்தொன்பதா? வட்டுக்கோட்டையா? நேர்வேயா என்ற தலைப்புகளுக்கு வரும் பின்னோட்டங்கள் 50ஐ கூட தாண்டுகிறது! ஆனால் காலத்தின் தேவையை கருதி வெளியான இந்த கட்டுரைக்கு ஒரு பின்னோட்டம் கூட வரவில்லை! வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கேட்பது தம் தொலைத்த வாழ்வையே! அவர்களின் மீழ் குடியேற்றத்திற்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் குறைந்த பட்ச உதவியையே அவர்கள் எதிர் நோக்கி நிற்கிறார்கள்! அவர்கள் தேர்தலில் அக்கறை செலுத்தவில்லை! அவர்கள் இன்னுமொரு அமைப்பை கட்டும் நினைப்பில் வாழவில்லை! தமது மீழ் குடியேற்றம் பற்றிய கவலையே அவர்களின் இன்றைய கவலை! புலிகளுக்கு ஆட்லறியையும் விமானங்களையும் வாங்கி குவிக்க உதவிய புலம் பெயர் மக்கள் அந்த பங்கில் ஒரு சிறு தொகைளை கொடுத்தால் போதும் இந்த மக்கள் தம் வாழ்வை மிக தரமாக உயர்த்த முடியும்! இது நடக்குமா? இல்லை வெறுமனே கதைத்தது காலத்தை கழிக்கப் போகிறோமா?

    Reply
  • sivam
    sivam

    வாசு எழுதியதில் உண்மை இருக்கின்றது, நேர்மை இருக்கின்றது.

    எனினும் Little Aid தொடர்பாக புலம் பெயர்ந்தோர் கவலையீனமாக இருப்பதற்கு அவர்கள் மேல் குறை சொல்ல்வது முழுக்க பிழை. தேசம் நெட்டிட்கும், little Aid அமைப்புக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். அதே மாதிரி தேசம் நெட்டின் ஆசிரியர் குழுவின் கொள்கையும் தெரியும்.

    இந்த இணையதளத்தில் எதோ முறையில் யாரும் எழுதலாம். கட்டுரைகளும் அதற்கான கருத்துக்களும் வாசகர்களுக்கு ஒரு தெளிவான பாதையினை காட்டுவதில்லை. இதில் வரும் கட்டுரைகளும், கருத்துகளும் அரசுக்கு அதரவாக இருக்கும் அதே நேரத்தில் எதிராக இருக்கும். புலிக்கு அதரவாக இருக்கும் புலி எதிர்ப்பின் மிகவும் மலிவான கருத்துக்களை பிரசுரிக்கும். புதிய இயக்கம் தேவை என்றும் அதே நேரத்தில் தேவை இல்லை என்றும் கட்டுரை வரும்.

    இதனை ரசிப்பவர்கள் அல்லது இதனை அரசியல் முன்னோக்கு என்று கருதும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்தக் குழப்பத்தை விளங்குவார்கள். இன்னும் சிலர் தங்களது சொந்தக் கடைகளை இந்த இணையத்தின் செலவில் நடத்துவார்கள்.

    தேசம் நெட்டினை Little Aid உடன் இனம் காணும் பெரும்பான்மையான வாசகர்கள் இந்த கதம்ப அரசியலை அகதிகளுக்கு உதவி செய்வதுடன் கலக்கும் போது நம்பிக்கையினை இழக்கின்றனர்.

    Little Aid வெற்றிகரமாக அகதிகளுக்கான சேவை செய்யவேண்டுமென்றால் தேசம் நெட்டின் நோக்கம் என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    In other words question of crediblity.

    Reply
  • பல்லி
    பல்லி

    வாசு விமர்சனம் என்பது தவறான விடயங்கள் மீது மட்டுமே அதிகரிக்கும்; திருடர்கள் உள்ள இடத்துக்குதான் பொலிஸ் நிலயமும் அதிகம் தேவை என்பார்கள், அது போல்தான் தவறான விடயஙள் வரும்போது விமர்சனங்களும் (பின்னோட்டம்) அதிகம் வருகிறது, ஆனால் மேலே உள்ள கட்டுரை ஒரு தகவல் போல்தான், இங்கே உதவிகள்தான் முன்னிக்கின்றன, அதில் பலர் இருப்பார்கள் எனதான் நினைக்கிறேன், பின்னோட்டம் இடும் பலர் தம்மால் முடிந்ததை மக்களுக்கு விளம்பரம் இன்றி செய்கிறார்கள்,

    சிவம் உங்கள் ஆதங்கம் சரியாக பல்லிக்கு படவில்லை; தேசம் ஒரு அமைப்பல்ல; அது ஒரு ஊடகம் மட்டுமே, அதனால் அது எந்த வியாபார நோக்கத்துடனும் உதவியமைப்பை செய்யாது என நம்பலாம்; ஆனால் உங்கள் பின்னோட்டம் சிறு உதவியமைப்பின் மீது உள்ள அக்கறையா,? அல்லது தேசத்தின் மீது உள்ள கசப்பான நிலைப்பாடா என்பது புரியவில்லை; தேசம் தவறு விட்டாலும் பல்லி போல் பலர் சுட்டி காட்டுவார்கள் என்பதை கடந்தகால நிலைப்பாட்டில் காணலாம்; இருப்பினும் உங்கள் இருவரது பின்னோட்டத்தையும் தேச நண்பர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே பல்லியின் நிலை;

    Reply