Multiple Page/Post

இலங்கையின் ஆட்சேபனையை ஐ.நா ஏற்கவில்லை. தாமதமின்றி நிபுணர் குழுவை நியமிக்கப்போவதாக அறிவிப்பு – இலங்கையின் நிலையில் மாற்றமில்லை.

un-secretary-general.jpgஇலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்திருப்பதற்கு மத்தியில் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர்கள் குழுவை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அக்குழுவினை தாமதமின்றி நியமிக்கப் போவதாகவும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. வில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கான உரிமை தமக்கிருப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் இந்த நடவடிக்கை பொருத்தமற்றதும் அவசியமில்லாததொன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.

பான் கீ மூன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் உத்தேச நிபுணர் குழுவானது இலங்கையின் இறைமையைப் பாதிக்காது என்றும் தெரிவித்தார். கடந்த மே மாதம் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பான் கீ மூனும் கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையை அடியொற்றியே உத்தேச நிபுணர் குழு அமைக்கப்படும் ஏற்பாடு என்றும் மாதாந்தம் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டின்போது பான் கீ மூன் தெரிவித்ததாக ஐ.நா. செய்திச்சேவை நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

நிபுணர் குழுவை அமைக்கும் நடவடிக்கையானது அழைக்கப்படாததும் பொருத்தமற்றதுமான நடவடிக்கையென ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்த நிபுணர் குழுவை அமைப்பதை நிறுத்துவதற்கான முயற்சியாக பல நாடுகளிடம் இலங்கை ஆதரவை கோரியிருந்தது. கடந்த வாரம் அணிசேரா நாடுகள் அமையத்தின் ஒத்துழைப்பு பிரிவின் தலைவரும் ஐ.நா. விற்கான நிரந்தர பிரதிநிதியுமான கே.அப்டலாடிஸ்,  பான் கீ மூனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். “தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்துச் செயற்படுவதை அணிசேரா அமையம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்த நடவடிக்கை அணிசேரா அமையத்தினதும் ஐ.நா. வினதும் சாசனங்களுக்கு முரணானது எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை,  நியூயோர்க்கில் ஊடகங்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பான் கீ மூன்,  சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பரிகாரம் காண்பதற்காக பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவது தொடர்பான அம்சத்தை கூட்டறிக்கை உள்ளடக்கியுள்ளதெனக் கூறியுள்ளார்.

நான் அமைக்கும் குழுவானது தரம், முக்கியமான விடயங்கள் என்பவை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்கும். சர்வதேச ரீதியாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான வழிகாட்டலை கொண்டதாக இது விளங்கும். இந்தக் குழுவானது எனக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

அதேசமயம்,  நிபுணர்கள் குழுவின் நோக்கத்தின் தன்மை குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தன்மை அணிசேரா அமையத்தின் கடிதத்தில் காணப்படுவதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.”ஐ.நா. வின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் எனக்குள்ள அதிகார எல்லைக்குள் அந்த அமைப்பை ஸ்தாபிப்பதென்ற தீர்மானத்தை நான் கொண்டுள்ளேன். இந்த அமைப்பானது இலங்கையின் இறைமையை எந்த வழியிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.

நிபுணர் குழு அவசியமற்றது உறுதியான நிலைப்பாட்டில் கொழும்பு 

இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதியாகத் தெரிவித்திருக்கும் நிலையில்,  அத்தகையதொரு குழு அவசியமில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான தனதுநிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அறிவித்திருக்கிறது.

ஐ.நா. செயலாளர் நாயகம் தற்போது தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கும் நிலைப்பாடு மாற்றமடையாதென்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

நிபுணர் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பரிசீலனை செய்து வருவதாக ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹண கொழும்புக்கு அறிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டை மட்டுமே நாம் அறிவோம் என்று சமரசிங்க மேலும் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அணிசேரா அமையம் ஆகியன தெரிவித்திருக்கும் ஆட்சேபனைகளின் மத்தியில் நிபுணர் குழுவை அமைப்பதை தான் முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விருப்பு வாக்குகளுக்காக மோதும் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை

m-s.jpgவிருப்பு வாக்குக்காக மோதலில் ஈடுபடும் ஐ.ம.சு முன்னணி வேட்பாளர் களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதல்களில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு தேர்தலின் பின்னர் அமைச்சுப் பதவிகளோ அல்லது வேறு உயர் பதவிகளோ வழங்கப்படமாட் டாது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரி வித்த அமைச்சர், சில மாவட்டங்களில் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் விருப்பு வாக்குக்காக மோதிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எனக்கும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐ. தே. கவின் வேண்டுகோள் தேர்தல் ஆணையரால் நிராகரிப்பு

sri-lanka-elections.jpgஎதிர் வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளை எண்ணும் நிலையங்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்துக்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையாளர் நேற்று நிராகரித்தார்.

நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ததினத்தன்று எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறான வேண்டுகோளை முன்வைக்கவில்லை என்று கூறியே தேர்தல் ஆணையாளர், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களில் நிறுத்தப்படுவதை நிராகரித்துள்ளார்.

சரியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் கோரியிருந்தது.

எனினும், இவ்வாறான வேண்டுகோள் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த தினத்தன்றே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய தேர்தல் ஆணையாளர், அந்த வேண்டுகோளை நிராகரித்தார்.

மலையகத்தில் முழுமையான அபிவிருத்தி பத்தாண்டு கால செயல்திட்டம் பூர்த்தி வெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு

sri-lankas.jpgமலைய கத்தில் சகல துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பத்தாண்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்துறை அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, சுகாதார, கல்வித்துறை மேம்பாடு, விளையாட்டுத்துறை அபிவிருத்தி என முழுமையான செயல் திட்டத்தைக் கொண்ட நகல் வரைவு அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்டு அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், அடுத்த வரவு – செலவுத் திட்டத் துடன் நிதியொதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படு த்தப்படுமென்று கூறினார்.

இதேவேளை, மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்கான மூலதனத்தை வெளிநாடுகளிலிருந்து நேரடியாகப் பெறுவதற்கும் வழிவகைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. அந்த வகையில் யூ. என். டி. பீ. 20 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள தென்றும் பிரதியமைச்சர் கூறினார்.

தவிரவும், இந்திய அரசாங்கமும் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதியளித் துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். மலையகத்தில் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக இந்திய பல்கலைக்கழக ங்களின் கிளைகளை மலையகத்தில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குறுதி அளித்ததற்கமைய 500 வீடுகளைக் கூடிய விரைவில் நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அநேநேரம், மலையகத்தில் போக்குவரத்துத் துறையில் நிலவும் சிரமங்களைக் களையும் பொருட்டு மேலும் 30 பஸ் வண்டிகளை விரைவில் பெற்றுக் கொடுக்கவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே, 20 பஸ் வண்டிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிற்துறையில் எதிர்காலத்தில் 10%ற்கும் குறைவானவர்களே தொழில்புரியும் நிலை உருவாகும். அதற்கு ஏற்றவாறு பெருந்தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக மாற்றும் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டு மென்றும் பிரதியமைச்சர் கூறினார்.
 

3 தினங்களுக்குள் 50 வீத சுவரொட்டிகள், பதாகைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன. பிரதி பொலிஸ் அதிபர் காமினி நவரட்ண கூறுகிறார்

கடந்த மூன்று தினங்களுக்குள் ஐம்பது வீதமான தேர்தல் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்டவுட்டுகளை பொலிஸார் அகற்றியுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

எஞ்சியுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைகளுக்கு அமைய பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகளை பொலிஸார் கண்டிப்பாக அமுல்படுத்தி வருவ தாக தெரிவித்த அவர், இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். துரிதமாக அகற்றும் பணிகளில் 1320 தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 106 முறைப் பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளமையை காண முடிகின்றது என்றார். இதேநேரம், இதுவரை பாரிய அசம் பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தனுன திலகரத்னவுக்கு பிடியாணை!

danuna-son-in-law-sarath.jpgசரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவுக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. ‘ஹைகோப்” விசாரணை இன்று ஆரம்பித்தபோது தனுன திலகரத்ன இன்னும் இலங்கையில்தான் தலைமறைவாக உள்ளார் என்று இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்வதற்காக தான் வெளிநாட்டில் உள்ளதாக பொய் வதந்திகளை தனுன பரப்பிவருகிறார் என்றும் இரகசியப் பொலிஸார் நீதின்றில் குற்றஞ்சாட்டினர்.

பொன்சேகாமீதான விசாரணை காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

sarath_fonseka-02.jpgஇராணுவச் சட்டங்களை மீறி நடந்தாரென்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணை இன்று காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதிமன்றம் நேற்று முதன்முறையாகக் கூடியபோது அதன் விசாரணைகள் எதிர்வரும் எப்பரல் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

அதே நீதிபதிகள் தலைமையில் இன்று இரண்டாவது நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமானபோது, ஜெனரல் பொன்சேகா சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிபதிகள் தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் விசாரணைகளை காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளனர்.

மின்னல் தாக்குதல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!

lightning.jpgநாளை நாட்டின் சில பகுதிகளில் இடிமுழக்கத்துடன் மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்ள பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நாளை கடுங்காற்றுடன் மழைபெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ மாகாணம்,  மத்திய மாகாணம், மேல் மாகாணம், மற்றும் தென்மாகாணங்களுக்கும் பரவும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு

lttelogo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, தற்போது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என சில இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவரால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது. தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.  தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தாம் போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என்று பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதாகவும், புலிக்கொடியேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம்  Unit G11, Lombard Business Park
2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. புலிகளின் அந்த அரசியல் கட்சியின் தலைவராக மாத்தையாவின் பெயரே பதியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி அவர்கள் விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் செயலாளராகராக நியமிக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி இலங்கைத் தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்து.

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 1ம் திகதி வரை நடைபெற்றது.

1990ம் ஆண்டு ஆரம்பமான 2ம் கட்ட ஈழ யுத்தத்தைத் தொடர்ந்து இந்தக் கட்சியின் செயற்பாடு முற்றாகவே இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தடம்புரண்ட ரயிலை திருத்தச் சென்ற ரயில் மோதி விபத்து: 13 பணியாளர்கள் காயம்

railway.jpgதடம் புரண்ட ரயிலைத் திருத்துவதற்குச் சென்ற ரயில் அந்த ரயிலோடு மோதியதில் 13 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று கண்டி கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் கடுகண்ணாவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அத்தியட்சகர் விஜய அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, கண்டி கடுகண்ணாவ- பிலிமத்தலாவ ரயில் நிலையங்களுக்கிடை யில் நேற்று முன்தினம் ரயிலொன்று தடம்புரண்டதால் அதனைச் சீரமைக்கும் பணிகள் முடிவடையும் வரை கண்டி, பதுளைக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி ரயில் கடுகண்ணாவ பகுதியில் தடம் புரண்டது. கொழும்பிலிருந்து விசேட பணிகளுக்காக ‘ப்ரேக் டவுன்’ ரயிலொன்று பணியாளர்களுடன் அனுப்பப்பட்டது. அந்த ரயிலே மோதியுள்ளது.கொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் கடுகண்ணாவை வரையே செல்லுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.