Multiple Page/Post

அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !

அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !

 

அதானி இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமம் வெளியேற்றத்தால் எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 484 மெகாவாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நாட்டின் பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் எனவும், அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பா.உ இராமலிங்கம் சந்திரசேகர் தெரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பா.உ இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து !

 

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவரது உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !

போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !

 

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளதன்படி,

அத்துடன் இந்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குகிறது.

போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பா.உ சிறிதரனை கைது செய்ய வேண்டும் – ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் !

பா.உ சிறிதரனை கைது செய்ய வேண்டும் – ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் !

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – தையிட்டியில் உள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள ஜகத் டயஸ் இந்த சூழ்நிலையில் உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்படத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் துணைவியாரை தேடிச்சென்ற பிரதமர்

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயமளித்த பிரதர் ஹரினி அமரசூரிய வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுழிபுரம் கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தையும் பார்வையிட்டதுடன் அவரின் துணைவியாரையும் சந்தித்து நலன் விசாரித்தார்.

தோழர் கே ஏ சுப்பிரமணியம் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர்.அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர். 1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு

 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று சமூகத்துடன் ஊடாடினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றுக் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மதியம் சமூகமளித்த பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சுழிபுரம் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்

நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது – அமைச்சர் சந்திரசேகர்

நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது – அமைச்சர் சந்திரசேகர்

 

மதுபாவனையில் நுவரெலியாவிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்பாணம் தட்டிப்பறித்துவிட்டது என கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர்,

உலகத்தில் இரண்டாவது குடிகார நாடு இலங்கையாக உள்ளது. ஒரு காலத்தில் இலங்கை என்கின்ற இரண்டாவது குடிகார நாட்டில் கூடுதலான குடிகாரர்கள் நுவரெலியாவில் இருந்தார்கள். அது எங்களுடைய மாவட்டம். ஆனால் இன்றைக்கு எங்களிடமிருந்த முதலாவது ஸ்தானத்தை யாழ்ப்பாணம் தட்டிப் பறித்து விட்டது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்பும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்களின் ஓலம் ஒன்றும் கேட்கின்றது. அன்று 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள்.

அண்மையில் என்னை சந்தித்த அனாதை இல்லம் ஒன்றின் தாயார், எங்களுடைய பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய பண்புகள் பெண் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாங்கள் தவிக்கின்றோம் அவர்கள் சீரழிக்கப்படுகின்றார்கள் என்று கூறினார். கடந்த காலங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் எங்களுடைய பெண்கள் எல்லாரையும் தேடித் தேடி கடன் வழங்கின. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களில் கூடுதலானோர் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான் இன்று எங்களுடைய வட மாகாணம்.

பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களில் 99 வீதமானோர் வாழ்க்கையில் ஒரு நாளாவது பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. அதில் தான் எங்களுடைய மனைவி, தங்கைகள், மகள்கள் பயணிக்கின்றனர். இந்த நிலை நாளைக்கு தொடர வேண்டுமா? அந்த அளவுக்கு நிலைமை சீரழிந்து போயுள்ளது என்றார்

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

ராஜபக்ஷ கோ ஹோம் (go home)’ அன்று ‘யூலி ஜங் கோ ஹோம் (go home)’ இன்று – நாமல் ராஜபக்சவை சந்திக்கின்றார் அமெரிக்க தூதுவர் !

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் பொதுஜன பெரமுன இ கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமெரிக்க தூதர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பும் நடைபெற்றது. சீன சார்பு ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் அமர்த்தியதில் யூலி ஜங்கின் ஈடுபாடு கணிசமானது எனத் அன்று செய்திகள் வெளிவந்திருந்தது.

இதன் பின்னணியில் யூஎஸ்எய்ட் ஓரினச்சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்கியதை கலாச்சாரச் சீரழிவாகக் காட்டி தீவிர சிங்கள தேசியவாதிகள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்போதைய டொனால் ட்ரம்மின் அரசு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை திருப்பி அழைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ‘யூலி ஜங் கோஹோம்’ என்ற பதாகைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, கோட்டபாய ராஜபக்ச பதவியிறக்கப்பட்டதற்குப் பின்னால் அமெரிகத் தூதுவர் யூலி ஜங் நின்றார் என்றும் குற்றச்சாட்டுக்களை போராட்டகாரர்கள் முன்வைத்தனர். இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க தூதுவர் யூலி ஜங் நாமல் ராஜபக்சவை நேற்றுச் சந்தித்துள்ளார். அனுர அரசின் கரங்கள் ராஜபக்சக்களை நெருக்குவதுடன் அவரை தற்போது குடியிருக்கும் வீட்டிலிருந்து கிளப்பவும் அனுர முயற்சி எடுக்கின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

இந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ள USAID நிதியுதவி தொடர்பாகவே இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விடயம் பற்றி பேசுவதற்கு இவர்கள் இருவருக்குமே ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் இவர்கள் வேறு விடயங்களையே பேசியிருக்க வேண்டும் என அவதானிகள் கருதுகின்றனர்.

அத்துடன்இ தங்களுடைய ஆட்சியை கலைத்ததை மனதில் இருத்தி, இச்சந்திப்பில்இ அமெரிக்கா தலையிடாத வெளிநோக்குக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்இ அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் நாமல ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக இலங்கையின் உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் USAIDஉள்ளிட்ட அமெரிக்க தனியார் நிறுவனங்கள் பாரிய தலையீடு செய்ததாகவும் , அவற்றினுடைய கணக்கு வழக்குகளை இலங்கை அரசாங்கம் முறையான விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கோரியிருந்த நிலையில், அமெரிக்க தூதுவரின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

மேலும் பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் பாரிய பேசுபொருளாக நேற்று மாறியிருந்த நிலையில் , அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபையில் குறிப்பிட்டுள்ளார்.

 

10.9: அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் ‘இலங்கை, பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு. எஸ். எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக’ பதிவேற்றம் செய்துள்ளார் என்ற தகவல் உலக நாடுகளிடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தை தேசம்நெற் அரகலய போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது

பேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கம்பேர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்க கோரிக்கை !

பேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கம்பேர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்க கோரிக்கை !

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான மார்க் சுக்கம்பேர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க் கூறியதாவது: உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு உள்ளது. இந்நிலையில் முகம்மது நபியின் ஓவியத்தை பேஸ்புக்கில் யாரோ ஒருவர் வரைந்ததற்காக பாகிஸ்தானில் சிலர், எனக்கு மரண தண்டனை விதிக்க முயன்றனர்.

அது அவர்களின் கலாசாரத்தில் மதத்தை அவமதிக்கும் செயல் என்று கூறினர். இதற்காக என் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தொடங்கினர். நான் பாகிஸ்தானுக்கு செல்ல போவதில்லை. அதனால் அதுபற்றி கவலைப்படவில்லை.

உலகில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பாதுகாக்க அமெரிக்க அரசு உதவ வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று.என்று கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடுவோரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தினால் தெரியப்படுத்துங்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

போராட்டத்தில் ஈடுபடுவோரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தினால் தெரியப்படுத்துங்கள் – அமைச்சர் சந்திரசேகர் !

 

போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்குகின்றனர் எனவும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சந்திரசேகரிடம் ஊடகங்கள் வினவியவேளை, “புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது. புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது அந்தக் காலத்தில் இருந்தது. அவர்களுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது. போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை. அப்படி அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதுவரை நாட்களும் இந்த பட்டதாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா? விளையாட்டாக செயல்படுபவர்களிடம் நீங்கள் இது குறித்து கதைக்காதீர்கள். நாங்கள் உங்களது பிரச்சினைகள் குறித்து நிச்சயமாக உள்வாங்கி செயற்படுவோம்” என தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கூடிய முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பா.உ இராமநாதன் அர்ச்சுனாவை வேலையில்லா பட்டதாரிகள் சந்தித்ததிருந்தனர். இதன் போது வெளிநாட்டில் இருந்தும் முதலீடுகளை வரவழைத்து பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பா.உ அர்ச்சுனா தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.