போதைப்பொருள் , குற்றச்செயல்கள் தொடர்பாக 30000 பேர் கைது !
பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளதன்படி,
அத்துடன் இந்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குகிறது.
போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.