Multiple Page/Post

பிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது!

Stop_the_War_on_Asylumபிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு  தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தமிழ் வர்த்தகர்கள் கைது!

கடந்த 16ம் திகதி கொக்குவில் பகுதியில் முன்று சிங்கள வர்த்தகர்கள் வாள்வெட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மூவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிங்கள வர்த்தகர்கள் யாழப்பாணத்திற்கு வந்து இங்குள்ள வர்த்தகர் ஒருவருக்கு மொத்தாமாக தளபாடங்களை விற்பனை செய்து விட்டு அந்த வர்த்தகருக்குத் தெரியாமல் பாவனையாளர்களுக்கும் தளபாடங்களை நேரடியாக விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பிற்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்தே சிங்கள வாத்தகர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றது.

முன்னைய செய்தி:  யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

இதே வேளை, கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதிகளில் படையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் நேற்று புதன்கிழமையும் காலை தொடக்கம் இரவுவரை சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர். அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களும் சோதனைகளுக்குள்ளாகின.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் யாழ்.விஜயம்.

Asian_Development_Bankஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் சியாவோயூ சாவோ இன்று 19-08-2010 காலை யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருக்கும் இவர் இன்று யாழ். கோட்டை, பொது நூலகம் அகியவற்றைப் பார்வையிடுவதோடு, பிற்பகல் 4 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.

நாளை சாவகச்சேரியில் மின்விநியோக நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து வைப்பதுடன். கிளிநொச்சிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிதிட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

வன்னியில் பெற்றோர் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னிப் பிரதேசத்தில் பெற்றோரின் பராமரிப்பற்ற நிலையில் உள்ள 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண அளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரவித்துள்ளார். கிளிநொச்சி. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட இச்சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற நான்கு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட 1200 சிறுவர்களும் எதிர்வரும் september மாதத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர். 12 வயதுக்கட்பட்ட இச்சிறுவர்களின் பாராமரிப்புச் செலவிற்கான நிதியை வடமாகாணசபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானித்துள்ளதாக வடமகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Vavuniya_SriAhilandeswariArulaham(படத்திலுள்ள குழந்தைகள் மார்ச் 2010ல் படம் எடுக்கப்பட்ட போது 10 மாதங்களையே கடந்திருந்தன. இக்குழந்தைகள் யுத்தத்தின் காரணமாக அனாதரவானவர்கள். தற்போது வவுனியாவில் உள்ள சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான உதவிகளை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.)

இது இவ்வாறிருக்க. வன்னியில் நடைபெற்ற போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்களின் தொகை மேலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

100% அபராதமும் 1 போட்டித் தடை

randiv.gifவீரேந்திர செவாக்கின் சதம் பெறுவதை தடுக்கும் விதமாக வீசப்பட்ட “நோபோல்” பந்து வீச்சிற்கான, சுராஜ் ரண்டீவ் குறித்து இடம்பெற்ற சர்ச்சை காரணமாக இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவரது கொடுப்பனவில் 100% அபராதமும் 1 போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு,  திலகரத்ன டில்ஷானிற்கு கொடுப்பனவுகளில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அபிவிருத்தி முன்னெடுப்பு: அரச அதிபர்கள், பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருநாள் மாநாடு

வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரச நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களுக்கு விளக்கமளிக்கும் இரு நாள் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 6,7ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதுடன், நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாகவும் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கான மாநாடாகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டுள் ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். செப்டம்பர் 6ம் திகதி நாடளாவிய மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாக வும், மறுநாள் 7ம் திகதி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களுக்கான மாநாடாகவும் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

இம்மாநாடு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கட்டடத்தில் இடம்பெறுவதுடன், யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கின் அரச நிர்வாகக் குறைபாடுகள், மீள்குடியேற்றப் பிரதேசங்களின் குறைநிறைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

வடபகுதி தமிழ் மக்கள் மீது அரசாங்கத்திற்கு அதிக பட்ச சந்தேகம் உள்ளது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

go-ra.jpgவடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்கழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரணடையாத விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என எமக்குத் தெரியாது. அடையாளம் காணப்படாமல் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் தெரியாது. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கணிசமான இராணுவத்தினரை அங்கு கடமையிலீடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

கே.பி பற்றி அவர் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் மூத்த உப்பினரான கே.பியின் மனதை மாற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது எனவும்  அரசுடன் இணைந்து ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியதை பலரும் வரவேற்கின்றனர். இது முக்கியமானதோர் விடயம் எனவும்  குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் சில வருடங்கள் பின்தங்கியுள்ளதாக மாகாண கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு வருடங்களில் மட்டும் யுத்தம் காரணமாக 36 ஆயிரம் மாணவர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக வடமாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கபட்டுள்ளது. யுத்த காலங்களில கல்விச்செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாலும், மாணவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்த காரணத்தினாலும் கற்றல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamபாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என வடமாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 தற்போது மீள்குடியமர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், சுமார் நான்காயிரம் மாணவர்கள் இன்னமும் முகாம்களிலேயே வசிக்கின்றனர் என்பதும், மக்கள் மீள்குடியேற்றபட்ட வன்னிப் பகுதிகளின் பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள போதும் அப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்துப் பாதைகள் புனரமைக்கப்படுகின்றன.

jaffna_rail_stationயாழ் ரயில் போக்கவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவிற்கு அப்பால் சில மைல்கள் தூரம் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீண்ட காலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த பகுதிகளிலுள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ரயில் பாதை அமைந்திருந்த பகுதிகள் காடாகிப் போயுள்ளதால் அவற்றைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

jaffna_rail_stationஇந்த ரயில்பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ரயில் தண்டவாளப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் அங்கிருந்த வெளியேறி ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தினம் இம்முறை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ். அரச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும், பொதுமக்கள் விழிப்பணர்வு நிலைய பணிப்பாளர் நந்தரட்ண தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்;.

எதிர்வரும் 26ம் தகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இக்கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளை நடத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. பாதகாப்பு தொடர்பான விடயங்கள் பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. 

இந்த நிகழ்வுக்கான பூரண ஒத்துழைப்பை அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், ஆகியவற்றிடம் எதிர்பார்ப்பதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அரச அதிபர், மேலதிக அரசஅதிபர், பிரதேசச் செயலர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.