வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணந்திருப்பது அவசியம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாணசபைகள் திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக இணைந்த மாகாணங்களாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே, இம்மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட்டு அவற்றிற்கு பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே தீர்வினைக்காண முடியும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறை தவறானது என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர அவற்றைப் பிரிக்கும்படி உத்தரவிடவில்லை அரசாங்கமே இம்மாகாணங்களைப் பிரித்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததாலேயே இந்த நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.