![]()
வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண்போராளி ஒருவரது உடலை முழுமையாக நிர்வாணப்படுத்திய சில படையினர் அந்த உடலை மிகவும் மோசமான செயல்களுக்குட்படுத்துவது கையடக்கத் தொலைபேசியிலுள்ள கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
சக படை வீரரொருவரால் வீடியோ படமெடுக்கப்பட்ட இந்த மோசமான செயல் பின்னர் இணையத்தளங்களூடாக உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது. எழுத்துக்களாலோ சொற்களாலோ வர்ணிக்கப்பட முடியாத மிகவும் கேவலமானதொரு செயலென இதனை வர்ணித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தப் பெண்போராளியை சுற்றி நிற்பவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் அவர்கள் கத்திக்கூச்சலிடும் வார்த்தைகளும் அவர்கள் யாரென்பதை அடையாளங்காட்டுவதில் எதுவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் தெரிவித்திருந்தது.
மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமானதும் குரூரமானதுமான செயலென வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்துமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்இதுபற்றி அவர் கூறுகையில்; இதுபோன்ற சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனினும் இவ்வாறான சம்பவங்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவது வரலாறு. ஐந்து இலட்சம் படையினர் மத்தியில் இவ்வாறான சில சில சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதேநேரம் இவ்வாறான சில சம்பவங்களை வீடியோ படங்கள் மூலம் புலிகள் பெரும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் தெரிவித்தார்.