Multiple Page/Post

முல்லை, கிளிநொச்சியிலிருந்து வருவோருக்கு சகல வசதிகளையும் வழங்க ஜனாதிபதி பணிப்பு

mahi.jpgபயங்கர வாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு வசந்தம் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்காக இவ்வருடத்திற்கென 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக மீள் குடியேற்ற அமைச்சு 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. வடக்கில் துரித அபிவிருத்தியை மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் செயலகம் தெரிவித்தது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கென வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இரண்டு அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம் முகாம்களில் தற்போது 750 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான பாதுகாப்பு உணவு, மருந்து பொருட்கள், உட்பட அடிப்படைத் தேவைகளை வவுனியா மாவட்டச்செயலகத்தினரும் பிரதேச பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து வழங்கி வருகின்றனர்.

வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் – அமைச்சர் ஜனக பண்டார

vote.jpgபயங் கரவாதத்திடமிருந்து மீட்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அவர், இது தொடர்பிலான சட்ட மூலத்தில் ஏற்கனவே திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் எவ்வித சிக்கலுமின்றி இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

வடக்கின் பெரும்பாலான பகுதிகள் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அங்கு இயல்பான நிர்வாகத்தை ஏற்படுத்தி மக்கள் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து ஓமந்தை வரைக்குமான நேரடி பஸ் சேவையை நடாத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது கொழும்பிலிருந்து மதவாச்சி வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ள இ. போ. ச. பஸ் சேவையை ஓமந்தை வரை விரிவுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக இ. போ. ச. பிரதம நிறைவேற்று அதிகாரி எம். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இச்சேவை நீடிப்பைத் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பரந்தனில் மும்முனைகளில் படையினரின் முன்நகர்வை முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு

0301-ltte.jpgபரந்தன் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 60க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், நூறு படையினர் வரை காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து “புதினம்’ இணையத்தளம் கூறுகையில்;

பரந்தனிலிருந்து இரண்டாம் கட்டை நோக்கி படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவே இரு தரப்புக்கும் இடையே சமர் நடைபெற்றது. கடும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். எனினும், பிற்பகல் வரை புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். இந்த முறியடிப்புச் சமரில் 60 படையினர் கொல்லப்பட்டதுடன், நூறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இதன் போது படையினரின் சடலங்களும் இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பி.கே.எல். எம்.ஜி.1, ஏ.கே.எல்.எம்.ஜி.1, ஆர்.பி.ஜி1, ரி. 56 ரகத் துப்பாக்கிகள்4 உட்பட பல ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன?

05-raja.jpgஇலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றாததன் மூலம், இலங்கை தமிழர்களின் நலனுக்கு மீண்டும் இனியாவது, இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றியமைத்து, பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன, போர் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடிவு செய்து இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தி, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும். போரை தொடர்வதுதான் தீர்வு என்று ராஜபக்சே அரசு கருதக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். தமிழர்கள் அங்கு அமைதியுடன் வாழ்வதற்கும், அவர்களுடைய சட்டபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

வன்னியில் விமானத் தாக்குதலை நிறுத்த உதவுமாறு ஐ.நா.செயலருக்கு அவசர கடிதம்

mi24-1912.jpgவன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நோக்கிய நகர்வில் 50,000 படையினர் ஈடுபடுவர்

kili-05.jpgமுல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ள படையினர் தங்கள் முன் நகர்வு முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களைப் படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம் இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களைப் பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.57 ஆவது, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றைச் சேர்ந்த 100 பற்றாலியன்களைக் கொண்ட 50,000 படையினருடன் இறுதிக் கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையணிகள் முல்லைத்தீவை நோக்கிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அடர்ந்த காடுகளுக்குள் விஷேட படையணிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மரபு வழிப் போரிடும் ஆற்றலை படையினர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் முறியடித்து விடுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

புலித் தலைவர் பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டது – கிழக்கு மாகாண முதலமைச்சர்

cm.jpgபுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (04)  மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், புலிகளது நிருவாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம். ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என நான் கருதுகின்றேன்.

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கி கொலை செய்த பிரபாகரன் தானும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த வெற்றியினூடாக வடபகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்குண்டு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படும்.

கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஒரு ஜனநாய சமூகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமானதொரு அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இதற்காகவே தான் ஜனாதிபதியும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வெற்றியானது அண்மைக்கால இராணுவ முன்னேற்றங்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு பாரிய வெற்றியைக் காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரபு நாடுகளில் 30,000 இலங்கையர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

kkhaliya.jpgஅரபு நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தமது வேலைவாய்ப்பை அந்நாடுகளில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். அரபு நாடுகளிலும் தென்கொரியாவிலும் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற 18 ஆயிரம் இலங்கையர்கள் அவர்களது தொழில் ஒப்பந்தங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது நீக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 15 நாடுகளின் தொழிலாளர்களில் இலங்கையரும் அடங்குவர். தென்கொரியாவிலும் நிதி நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அவர்களின் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமன்றி உயர்பதவி வகிப்பவர்களும் உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரபு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் சுமார் 2 இலட்சத்து 38 ஆயிரம் இலங்கையர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர் ஆண்களாவர். இவர்களில் அநேகமானவர்கள் கட்டிட நிர்மாணத் தொழிற்துறைகளிலேயே தொழில் புரிகின்றனர்.

அவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மாத்திரமன்றி நில அளவையாளர்கள் , படவரைஞர்கள் மற்றும் பொறியியலாளர்களும் அடங்குவர். பல கட்டிட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்பது சிரமமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அரபு நாடுகள் வேலைவாய்ப்புகான விஸா வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக கட்டார் போன்ற நாடுகளின் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

டியூசன் வகுப்பு குரோதம்- அதிபரை டியூசன் ஆசிரியர் அடித்துக் கொலை

இரத்தினபுரி கிலிமலே சமனல மகா வித்தியாலய அதிபர் (04) பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாடசாலையில் வைத்து இடம் பெற்றுள்ளது. பாடசாலையில் சிரமதான வேலையில் ஈடுபட்டிருந்த அதிபரை அங் கிருந்த ஒருவர் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான அதிபர் பாடசாலை காரியாலயத்திற்கு காயத்துடன் சென்று விழுந்து இறந்துள்ளார்.

அதிபரை பொல்லால் தாக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினரென தெரிய வந்திருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது கிலிமலே இந்துருவயை வசிப்பிடமாகக் கொண்ட குணபால பெரேரா (46) என்பவரே இறந்தவராவார்.  டியூசன் வகுப்பு சம்பந்தமாக நீண்டகாலமாக நிலவி வந்த குரோதமே இக்கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்கு காரணமான நபர் தறைமறைவாகியுள்ளார். இவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் தினத்தில் நாமும் பட்டாசு கொளுத்தி மகிழ்வோம் – மனோகணேசன்

mano_ganesan.jpgஆயுத போராட்டத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ள தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சினைக்கு நேர்மையான அதிகார பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் தினத்தன்று இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோம். அந்த கொண்டாட்டத்தை தலைநகர தமிழர்களின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கொழும்பு மாநகரில் நானே நேரடியாக நின்று பட்டாசு கொளுத்தி, தெருக்கள் எங்கும் ஊர்வலம் நடத்தி கொண்டாடுவேன். அன்றைய தினமே நேரடி அரசியலிருந்து நான் விடைபெறும் தினமாகவும் அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தொடர்பிலும் இது காரணமாக நாடெங்கும் நடைபெற்றுள்ள கொண்டாட்டங்கள் தொடர்பிலும் தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது; கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் வெற்றியுமல்ல வடக்கிற்கு எதிரான தெற்கின் வெற்றியுமல்ல என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால், இந்த கருத்துகள் நடைமுறையுடன் பொருந்தவேண்டும். வடக்கிலே இன்று ஒரு போராட்டக்களம் இருக்குமானால் கிழக்கிலே ஒரு அரசியல் போராட்டக்களம் இருக்கின்றது. அதுதான் உங்களது கிழக்கு மாகாணசபையாகும். மாகாணசபை முறைமை தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வாகாது. இருந்தாலும் அது இன்று அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தமாகும். ஆனால், நீங்கள் இந்த திருத்தம் என்ற சட்டத்தையும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.

உங்களது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் சொல்வதையும் நீங்கள் கேட்கவில்லை. அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான உங்களது சர்வகட்சி கடையையும் இன்று மூடிவிட்டீர்கள். அரசாங்கம் யுத்த களத்தில் வெற்றிகளை குவிப்பதாக கூறுகின்றது. அது எங்களுக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அரசியல் களத்தில் எதையுமே பார்க்கமுடியவில்லை என்பதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அதிலும் இந்த அரைகுறை மாகாணசபை செயற்பாடுகளையும்கூட அரசாங்கத்தின் சில செல்வாக்குமிக்க பிரிவினர் எதிர்க்கின்றார்கள் இது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கின்றது.

இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி, மலாய் ஆகிய அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சொந்தமானது என ஜனாதிபதி சொல்கிறார். ஆனால், இன்னொரு பிரிவினர் இந்நாடு பெரும்பான்மை இன, மதத்தவருக்கு மாத்திரமே சொந்தமானது என கூறுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது முழுமையான இராணுவ தீர்விற்கு பிறகு நடைமுறையாகும் என்ற கருத்தை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கருத்தை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இதுதான் இன்றைய மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.