ஆயுத போராட்டத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ள தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சினைக்கு நேர்மையான அதிகார பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் தினத்தன்று இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோம். அந்த கொண்டாட்டத்தை தலைநகர தமிழர்களின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கொழும்பு மாநகரில் நானே நேரடியாக நின்று பட்டாசு கொளுத்தி, தெருக்கள் எங்கும் ஊர்வலம் நடத்தி கொண்டாடுவேன். அன்றைய தினமே நேரடி அரசியலிருந்து நான் விடைபெறும் தினமாகவும் அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தொடர்பிலும் இது காரணமாக நாடெங்கும் நடைபெற்றுள்ள கொண்டாட்டங்கள் தொடர்பிலும் தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது; கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் வெற்றியுமல்ல வடக்கிற்கு எதிரான தெற்கின் வெற்றியுமல்ல என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால், இந்த கருத்துகள் நடைமுறையுடன் பொருந்தவேண்டும். வடக்கிலே இன்று ஒரு போராட்டக்களம் இருக்குமானால் கிழக்கிலே ஒரு அரசியல் போராட்டக்களம் இருக்கின்றது. அதுதான் உங்களது கிழக்கு மாகாணசபையாகும். மாகாணசபை முறைமை தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வாகாது. இருந்தாலும் அது இன்று அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தமாகும். ஆனால், நீங்கள் இந்த திருத்தம் என்ற சட்டத்தையும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.
உங்களது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் சொல்வதையும் நீங்கள் கேட்கவில்லை. அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான உங்களது சர்வகட்சி கடையையும் இன்று மூடிவிட்டீர்கள். அரசாங்கம் யுத்த களத்தில் வெற்றிகளை குவிப்பதாக கூறுகின்றது. அது எங்களுக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அரசியல் களத்தில் எதையுமே பார்க்கமுடியவில்லை என்பதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அதிலும் இந்த அரைகுறை மாகாணசபை செயற்பாடுகளையும்கூட அரசாங்கத்தின் சில செல்வாக்குமிக்க பிரிவினர் எதிர்க்கின்றார்கள் இது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கின்றது.
இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி, மலாய் ஆகிய அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சொந்தமானது என ஜனாதிபதி சொல்கிறார். ஆனால், இன்னொரு பிரிவினர் இந்நாடு பெரும்பான்மை இன, மதத்தவருக்கு மாத்திரமே சொந்தமானது என கூறுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது முழுமையான இராணுவ தீர்விற்கு பிறகு நடைமுறையாகும் என்ற கருத்தை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கருத்தை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இதுதான் இன்றைய மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.