இரத்தினபுரி கிலிமலே சமனல மகா வித்தியாலய அதிபர் (04) பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாடசாலையில் வைத்து இடம் பெற்றுள்ளது. பாடசாலையில் சிரமதான வேலையில் ஈடுபட்டிருந்த அதிபரை அங் கிருந்த ஒருவர் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான அதிபர் பாடசாலை காரியாலயத்திற்கு காயத்துடன் சென்று விழுந்து இறந்துள்ளார்.
அதிபரை பொல்லால் தாக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினரென தெரிய வந்திருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது கிலிமலே இந்துருவயை வசிப்பிடமாகக் கொண்ட குணபால பெரேரா (46) என்பவரே இறந்தவராவார். டியூசன் வகுப்பு சம்பந்தமாக நீண்டகாலமாக நிலவி வந்த குரோதமே இக்கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்கு காரணமான நபர் தறைமறைவாகியுள்ளார். இவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.