அரபு நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தமது வேலைவாய்ப்பை அந்நாடுகளில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். அரபு நாடுகளிலும் தென்கொரியாவிலும் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற 18 ஆயிரம் இலங்கையர்கள் அவர்களது தொழில் ஒப்பந்தங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது நீக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 15 நாடுகளின் தொழிலாளர்களில் இலங்கையரும் அடங்குவர். தென்கொரியாவிலும் நிதி நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அவர்களின் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமன்றி உயர்பதவி வகிப்பவர்களும் உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரபு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் சுமார் 2 இலட்சத்து 38 ஆயிரம் இலங்கையர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர் ஆண்களாவர். இவர்களில் அநேகமானவர்கள் கட்டிட நிர்மாணத் தொழிற்துறைகளிலேயே தொழில் புரிகின்றனர்.
அவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மாத்திரமன்றி நில அளவையாளர்கள் , படவரைஞர்கள் மற்றும் பொறியியலாளர்களும் அடங்குவர். பல கட்டிட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்பது சிரமமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அரபு நாடுகள் வேலைவாய்ப்புகான விஸா வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக கட்டார் போன்ற நாடுகளின் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.