Multiple Page/Post

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் கொழும்பு செல்ல தடை

அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கலாநிதி அனா நெய்ஸ்டற் (Anna Neistat ) சிறிலங்கா செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல சிங்கள நாளேடான ‘திவயின’ இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

குளவி கொட்டி 72 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

sri-lankan-schools.jpgரத்தெல்ல பொதுகுள் விகாரையில் குளவி கொட்டி காயமடைந்த இரத்மலானை புனித அலோசியஸ் கல்லூரியின் மாணவர்கள் 72 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வருமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

ban_ki-moon_.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகளை நேரில் கண்டுகொள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இருவருக்கும் இடையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்

அவ்வாறு விஜயம் செய்தால் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் உண்மை நிலையையும் நன்கு புரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

473 வன்னி குடும்பங்கள் நெல்லியடியில் தங்கவைப்பு

menikfarm.gifவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த 473 குடும்பங்களைச் சேர்ந்த 1,250 பேர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பாடசாலையில் மாணவர்களுக்கு அருகில் உள்ள வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் மாலை நேரங்களில் தற்காலிகமாக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள அகதிகளுக்கு யாழ். அரசாங்க அதிபர் உணவை வழங்கிவருகிறார். ஏனைய உதவிகளை யுனிசெப், யூ.என்.எச்.சி.ஆர்., லீட்ஸ் மற்றும் சேவா லங்கா ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன.

இதேவேளை, இங்கு தங்கியுள்ள சிறுவர்கள், குழந்தைகளுக்கு இராணுவத்தினர் உடுபுடவைகள் வழங்கியுள்ளனர். இங்குள்ள அகதிகளை வெளியார் எவரும் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

சரணடைபவர்களை குடாநட்டு நீதிமன்றங்களில் ஆஜர் செய்யலாம்

saran.jpgயாழ் குடாநாட்டில் உயிர் அச்சுறுத்தலகள் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சரணடைபவர்களை யாழ் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களில் கையளிக்கலாம் என மேல் நிதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரணடைபவர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வாகனத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லாது தனியார் வாகனங்களில் கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் சாவகச்சேரி, பருத்தித்துறை, மல்லாகம், ஊர்காவற்துறை , மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடபகுதி மக்களுக்கு சீன அரசு நிதியுதவி

chinas-great-wall.jpgபயங்கர வாத நடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவில் தலைநகர் பீஜிங்கில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மா ஸொக்சு இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து கவனத்திற்கொண்ட பின்னர் தமது அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார். இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் அமைதியும் சமாதானமும் ஏற்படுவதைக் காண தான் ஆவலாயிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“வன்னி மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனிதாபிமான உதவி கிடைக்க ஆதரவளியுங்கள்”: -விடுதலைப் புலிகள் கோரிக்கை

lttelogo.jpgவன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுள்ளனர்

தடுப்பு முகாம்களில் கொடுமை – பிரித்தானியாவின் ‘சனல் – 4’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

chenal-04.jpg பிரித்தானியாவின் ‘சனல் – 4’ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் வைக்கப்பட்டுள்ள ‘முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன;. குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

பக்கச்சார்பற்ற முறையில் – சுதந்திரமாகப் – படமாக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகளும் முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டர் நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன.

இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முனனெடுக்கப்படும் அதேசமயம், இரட்டை வாய்க்காலுக்கு தெற்காக உள்ள பிரதேசம் மும்முனைகளில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் எஞ்சியுள்ள 4.5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் வேண்டப்படும் புலிகளின் தலைவர்கள் பலர் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக் கடல் கடல் நீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணை ஒன்றை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மேலும் 250 மீற்றர் நீளமான பிரதேசத்தை முன்னேறி கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் மோட்டார், பீரங்கிகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து வடக்காகவும், மேற்காகவும் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது மற்றும் 53 வது படைப் பிரிவினரை இலக்கு வைத்து புலிகள் நேற்றைய தினமும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை வட்டுவாக்கல் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்போது அங்கிருந்து வடக்கு நோக்கி முனனேற ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இரட்டை வேடம்

laxman_yapa_abeywardena.jpg பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அக்கட்சியில் சிலர் அண்மைக் காலங்களாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறி இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகின்றனர். கனரக ஆயுதங்களைப் பாவிக்க வேண்டுமென அவர்கள் கூறுகிறார்களா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

வன்னித் தாக்குதலில் கனரக ஆயுதங்களை உபயோகிக்க வேண்டு மெனவும் பாவிக்கக் கூடாதெனவும் இரு வேறு கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

ஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரங்கே பண்டார அண்மையில் கனரக ஆயுதங்களை உபயோகிக்க வேண்டுமென சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேவேளை அக்கட்சியின் சிரேஷ்ட எம். பி., ஜயலத் ஜயவர்த்தன இதுபற்றிய தமது கவலையை தமிழ் தினசரியொன்றில் தெரிவிக்கிறார்.

மொத்தத்தில் இவர்கள் என்ன கூறவருகிறார்கள் என்பது குழப்பமாகவுள்ளதுடன் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும் கேட்கத் தோன்றுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.