Multiple Page/Post

உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மகிந்தவுடன் முக்கிய சந்திப்பு

20090424063601srilanka4.jpgஇலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.   ஜப்பான், அமெரிக்கா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளின் இலங்கையிலுள்ள தூதுவர்களே நேற்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வடக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து பேசியுள்ளனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் அப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றும் போது அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளை வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு 30 வருடங்களுக்கு மேலாக எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத பிரதேசம் என்ற வகையில், இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட மக்களது நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றில் இணைத்தலைமை நாடுகளுடன் சுமுகமாக செயற்படுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இணைத்தலைமை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நோர்வே தூதுவர் றோர் ஹேற்றன், ஜப்பான் தூதுவர் கியூனியோ ஏக்காஹசி, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெவ்னோல்ஸ் சவேஜ், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜோன்ஸ் மோர் ஆகியோருடன், ஐரோப்பிய குழுமத்தின் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி ஹேர்க் மங்கேநஸ்ற், அமைச்சர்களான ரோஹித போகால்லாகம மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் மாணவரை ஊக்குவிக்க விசேட திட்டம்

sri-lankan-schools.jpgஏறாவூர் பிரதேச பாடசாலைகளில் இருந்து இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்¨ச்ககுத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்மொன்றினை ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் கோட்ட கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முன்னோடி புலமைப்பரிசில் பரீட்சையில் 100 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 144 மாணவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த பரிசளிப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். இஸட். ஆப்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வி. அமீர்தீன் தனது கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலமாக மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென சித்திரிப்பதாக பிரிட்டன் ஆயர் விசனம்

uk-london.jpgஇலங் கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சித்திரிப்பதாக பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்துள்ளார்.  லண்டனின் பிரபுக்கள் சபையில் கேள்வி நேரத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே போர்ட்ஸ்மௌத் ஆயர் ஹென்னத் ஸ்ரீவென்சன் ஜனாதிபதி ராஜபக்ஷவை விமர்சித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் புராதன மக்கள். அங்கு அவர்களுக்கு இன, மத ரீதியான முரண்பாடுகள் உள்ளதுடன் இது ஒரு புதிய விடயம் அல்லவெனவும் ஆயர் ஸ்ரீவென்சன் கூறியுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பதமானது நவீன பிதற்றல் முறையின் ஓர் அம்சமென இச்சபையில் உள்ளோரும் வெளியில் உள்ளோரும் நன்கறிவரெனவும் ஆயர் ஸ்ரீவென்சன் தெரிவித்தார்.

இந்நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சக அதிகாரி மல்லோச் பிரௌண்; ஆயரின் கருத்துடன் ஒத்துப்போகும் அதேவேளை, பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற வார்த்தை வழக்கத்துக்கு மாறான சொல் என்பதுடன் தந்திரோபாயச் செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் ஓர் சொற்றொடருமாகும்.

இலங்கையில் புராதன இரு இனங்களிடையேயான சச்சரவே இதுவென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால், இச்சச்சரவு தற்பொழுது வன்முறைகள் அதிகம் நிறைந்த சண்டையாக மாறியுள்ளதுடன் இருதரப்பும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘நமக்காக நாம்’ நிதியத்துக்கு இதுவரை 400 மில்லியன் ரூபா அன்பளிப்பு

waroooo.jpgதாய் நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி வரும் படை வீரர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட நமக்காக நாம் நிதியத்துக்கு இதுவரை 400 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் விலி கமகே தெரிவித்தார்.

தேசிய படை வீரர்கள் மாதத்தை முன்னிட்டு அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு,  ரணவிரு அதிகார சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்லே தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நமக்காக நாம் நிதியத்துக்கு அரசாங்க,  தனியார்துறை,  பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் போன்ற பலதரப்பட்டவர்களினதும் பங்களிப்பினாலேயே இத்தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை 900 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதே அமைச்சின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
 

கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவுக்கூட்டம்

Kalaichelvanகலைச் செல்வனின் 4வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல் மே 10ல் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ்வொன்றுகூடலை உயிர்நிழல் சஞ்சிகை ஏற்பாடு செய்து உள்ளது. பாரிஸில் இருந்து நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இலக்கிய சஞ்சிகை இது என்பதும் இது காலஞ்சென்ற கலைச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொன்றுகூடல் நிகழ்வில் கலைச்செல்வனின் நண்பர்கள் தோழர்கள் உறவுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். காலை 11:00 முதல் மாலை 7:00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்:

11:00 – துன்பம் சூழும் நேரம்: இலங்கை – இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும் – மு. நித்தியானந்தன்

12:30 – மதிய உணவு

13:30 – யாழ்ப்பாணத்து சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் – ச. தில்லைநடேசன்

14:30 – MEDIA & DEMOCRACY – காமினி வியாங்கொட

16:00 தேனீர் இடைவேளை

17:00 – கோணல்களும் நேர்கோடுகளும் – இலங்கையில் இனப்பிரச்சினை வி. சிவலிங்கம்

17:30 – திறந்த விவாதம்: இலங்கையில் இன்றைய யுத்த சூழலும் எதிர்நோக்கும் சவால்களும்

காலம்:
10.05.2009 ஞாயிற்றுக்கிழமை

மண்டபம்:
Salle Heindenhein
1er étage
6, Place du Marché du centre
92110 Clichy

சுவீடனில் நடந்த உண்ணாநிலைப் போராட்டம் நிறைவுபெற்றது

sweedan.jpgசுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் integration minister  – Nyamko Sabuni  தந்த வாக்குறுதியால் நிறைவுபெற்றது. நந்தன் அவர்கள் 9ஆவது நாளாக உண்ணாநிலையை மேற்கொண்டபோது மக்களால் பாராளுமன்ற வாசல் மறிக்கப்பட்டது. மறியல் போராட்டம் செய்தவர்கள் நந்தனின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தாம் அந்த இடத்திலிருந்து கலைந்துசெல்வார்கள் என்று திடமாகமாக நின்றார்கள். காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த பேரம் பேசலில் அமைச்சர் வந்து நந்தனைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

யோரான் திங்வேல் என்ற பாராளுமன்ற உறுப்பினரும் வந்து நந்தனைச் சந்தித்தார். அவர் வெளிநாட்டு அமச்சரான கார்ல் பீல்ட்டை சந்தித்து உரையாட ஒழுங்குசெய்து தருவதாக உறுதிமொழி கூறினார். இதன்பின் உண்ணாநிலைப் போராட்டத்தை நந்தன் முடித்துக்கொண்டார்

நீலிக் கண்ணீர் வடிப்பது புலித்தலைமையை பாதுகாப்பதற்காகவே – விமல் வீரவங்ச

parliament-of-sri-lanka.jpgபிரபாகரன் என்ற நபரின் முடிவை உறுதி செய்யும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புதுவருடத்தை முன்னிட்டு இரண்டு தினங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகளின் பகுதிக்குள்ளிருந்து எவரும் வரவில்லை. இரண்டு தினங்கள் போர் நிறுத்தம் வழங்கப்பட்டும் மக்கள் வரவில்லையானால் ஏழு தினங்கள் வழங்கினாலும் வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் கொல்லப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். உண்மையில் மக்கள் மீது இருக்கும் அன்பில், அக்கறையில் அல்ல. அங்கு சிக்குண்டுள்ள புலித்தலைமையை பாதுகாப்பதற்காகவே பேசுகிறார்கள்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் பிரபாகரனுடன் பின்லாடன் மறைந்திருக்கிறார் என்ற செய்தி அமெரிக்காவுக்கு கிடைத்தால் அங்கு பொதுமக்கள் இருக்கிறார்கள் என்று பாராமல் விமானத் தாக்குதல் நடத்தும். தாக்குதல் நடத்திய பின்னரே எமக்கு அறிவிப்பார்கள்.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்கள் மறைந்திருக்கிறார்கள் என்று கூறி அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது. திருமண வீட்டுக்கு வந்தவர்கள் என்று கூட பாராமல் இறந்தார்கள். தாக்குதல் நடத்திய பின்னர்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவித்தது.

ஆனால் இலங்கையராகிய நாம் அப்படியல்ல. மக்கள் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டுதான் செயற்படுகிறோம். மக்களுடன் மக்களாக, மக்களை கேடயமாக பயன்படுத்தி மறைந்திருக்கும் புலித் தலைமையை தேடி எமது படையினரும் ஊடுருவி செல்கிறார்கள். இந்த நிலையில் கனரக ஆயுதங்களாலும், விமானத் தாக்குதல்களையும் நடத்துவது எப்படி?

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை மீட்பதே அடுத்தகட்ட மனிதாபிமான நடவடிக்கை

nimal-siriiii.jpgபுலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியினால் இன்று வரை சுமார் 1,30,000 தமிழ் மக்களை மீட்டெடுத்திருந்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க முடியாதுள்ளது என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் இறுதியாக கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

பாதுகாப்பு வலயத்திலிருக்கும் அனைத்து மக்களையும் மீட்டெடுத்து புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதுடன், வெகு விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களையும் மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. தயா மாஸ்டர் போன்று, ஜோர்ஜ் மாஸ்டர் போன்று புலிகளின் மிலேச்சத்தனத்தை வெளி உலகுக்கு உணர்த்தும் குழுவினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.

புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தபடி அவர்களின் மிரட்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி இருந்த அந்த மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவருமே புலிகளிடம் கூறவில்லை. அவர்களுக்கு கூறமுடியாது என்பதை நாம் அறிவோம். புலிகளின் ஆயுதங்களுக்கு பயந்திருந்ததுதான் இதற்குக் காரணம். அப்படி கூறியிருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும்.

பிரபாகரனுக்கு இனிமேலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவரது கோழைத்தனமான செயல்களுக்கு இனிமேல் இடமில்லை. சம்பந்தன் எம்.பி. க்கள் போன்றோர் அரசியல் தீர்வொன்றுக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள்தான். நாமும் அரசியல் தீர்வையே விரும்புகிறோம். எனினும் பிரபாகரன் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க முடியாது. பிரபாகரன் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க விடமாட்டார். பிரபாகரனை ஒழித்த பின்னர் எமது நாட்டுக்கேயுரிய அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றார்.

சாட்சியம் இல்லாத மனிதப் பேரவலம் உலகில் எங்குமே இல்லாத கொடுமை – பாராளுமன்றத்தில் சம்பந்தன்

samthan-2.jpg“வன்னியில் மிகப்பாரதூரமான மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளதுடன், சாவுகளும் அழிவுகளும் பெருந்தொகையில் இடம்பெறுகின்றன. வன்னியில் இடம்பெறுவது போன்ற மனிதப் பேரவலம் உலகில் வேறெந்த நாடுகளிலும் இடம்பெற்றிருக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். வன்னியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. அரசு இவ்வாறு கூறும் பகுதிகளில் ஒரு மனிதரோ, ஒரு வீடுகளோ கூட இல்லாத நிலையில், அரசு எதை விடுவித்ததாகக் கூறுகின்றதெனவும் சம்பந்தன் மேலும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது; வன்னியில் மிகமோசமான முறையில் விமானக் குண்டு வீச்சுகளும் ஷெல் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. இதனால், மக்கள் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்ந்த மக்கள் இன்று அனைத்தையும் இழந்து படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பலர் பட்டினியில் வாடுகின்றனர். அடிப்படை வசதிகளின்றி அவலப்படுகின்றனர். இன்று அவர்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். வன்னியில் 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகவே அரசு கூறி வந்தது. அதற்களவான வகையிலேயே உணவு அனுப்பியது. ஆனால், இன்று வன்னியிலிருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் மக்கள் அரச பகுதிக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றது.

எமது கணிப்பின்படி இன்னும் ஒன்றரை லட்சம் மக்கள் வன்னியில் உள்ளனர். அவ்வாறானால் அரசு இவ்வளவு காலமும் வன்னி மக்களை திட்டமிட்ட வகையில் பட்டினி போட்டு வந்துள்ளது என்பது நிரூபணமாகிறது. வன்னியில் மிகப் பெரும்மனிதப் பேரவலம் இடம்பெற்று வருகின்றது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த அவலங்களுக்கு எந்த சாட்சியமும் இல்லை. இவ்வாறான அவலங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு எவரும் செல்லமுடியாது என்பதன் மூலம் அரசு இரகசியத்தைப் பேண முற்படுகின்றது.

தற்போதைய இந்த அவலநிலை இனிமேலும் தொடரக்கூடாதென நாம் அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.  தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பசில் ராஜபக்ஷ இந்திய அரசுக்கு வாக்குறுதி கொடுத்த பின்னரே பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வன்னியில் இடம்பெறும் படுகொலைகள், தாக்குதல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் மிகவும் துலாம்பரமான திட்டவட்டமான தகவல்களை கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு யுத்தத்தில் என்ன நடந்ததென்பதை அந்த அறிக்கை மிகவும் தெளிவாக விளக்குகின்றது. வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோர் வவுனியாவில் உள்ள தங்குமிடமுகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். முட்கம்பி வேலிகளுக்குள் அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிமுகாம்களுக்கு ஊடகவியலளர்கள், சர்வதேச மனித உரிமை முகவர் அமைப்புகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதன் மூலம் அங்குள்ள உண்மை நிலையை வெளிக்கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் அலுவலகத்தை இலங்கையில் திறக்குமாறு லூயில் ஆர்பர் கோரிக்கை விடுத்தார். ஆனால்,இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சட்டத்தின் அனுமதியுடன் அதிகளவில் நடப்பதால் அதற்கு அரசாங்கம் இணங்கவில்லை என்றார்.

தேசியப் பட்டியல் மூலம் தயா மாஸ்டருக்கு நாடாளுமன்றம்? வழங்கக் கூடாது : கருணா

dayamaster.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவருமே அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மக்களுடன் நெருக்கமுடைய நபர்களை அரசியல் தலைவர்களாக நியமிப்பதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என அரசாங்கம் கருதுவதாகவும், இதன் காரணமாக தயா மாஸ்டரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. தயா மாஸ்டரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதன் மூலம் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை சரணடையத் தூண்ட முடியும் என அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறினும் தயா மாஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வேண்டுமானால் ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலக வேண்டும் எனவும், இவ்வாறு பதவி விலகும் நபருக்கு பெருந் தொகையான பணமும் ஏனைய சலுகைகளையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.