அண்மைக் காலமாக ஐபிசி அரசியல் ஆய்வாளர்கள் புதிய அரசியல் கண்டுபிடிப்பொன்றைச் செய்துள்ளனர். அதுதான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளப் போகிறதாம். இந்தப் போரைத் தடுப்பதாயின் இந்தியா இலங்கைத் தமிழரோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்துவிட்டதாகவும் இதை ஈழத் தமிழர்களே தடுக்க முடியும் என்பது போல ஓர் புரளியை கிளப்பிய வண்ணம் உள்ளனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த உடன்படிக்கை இந்திய நலன்சார்ந்த ஒன்று என்றும் இதில் ஈழத் தமிழர்களின் நலன் முற்றாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்றும் இவர்கள் போன்ற புலி ஆய்வாளர்கள் அன்று கூறினார்கள். அதில் ஓரளவு உண்மையும் உண்டு. அப்படியானால் தமிழ் மக்களுக்கு அதனிலும் சிறந்த தீர்வை வென்றெடுக்கும் அரசியல் தகுதி புலிகளிடம் இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக சிறிலங்கா நீதிமன்றம் முடிவெடுத்து விட்டது என்று இதே புலி ஆய்வாளர்கள் ஒப்பாரி வைத்தார்கள். இலங்கை நீதிமன்றம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வடக்கு கிழக்கை யார் இணைத்தது?
1987ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமே வடக்கு கிழக்கு இணைவுக்கு வழி அமைத்தது. இதே ஒப்பந்தத்தைத்தானே ஈழத்தமிழருக்கு ஒன்றுமில்லாத ஒப்பந்தம் என்று அன்று சொன்னார்கள். இன்று அதே ஆய்வாளர்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூழப்போகிறது என்று புதுக்கதை விடுகிறார்கள்.
13 ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் கடந்த ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றி நாட்டையே ஆட்சி செய்தார்கள். அதில் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னும் போராடுகிறார்கள். வேறுபட்ட வழிகளில். அவர்களுடைய போராட்டத்திற்கு அமெரிக்க – இந்திய – சீன ஆகிய நாடுகளின் நலன்கள் தடையாக இருக்கவில்லையா? ஈழப்போராட்டத்திற்கு மட்டும் தான் இவைகள் எல்லாம் தடைகளா? அல்லது நேபாளம் என்ன அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலா இருக்கின்றது?
கொலம்பியாவில் எத்தனை ஆண்டுகள் FARC எனும் கொரில்லா அமைப்பு அந்த அரசுக்கு எதிராக போராடி வருகின்றது. அவர்களை ஏன் எந்த ஏகாதிபத்தியமும் அழிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த அமைப்பின் பிரதித் தலைவரை கொலம்பிய இராணுவம் எல்லை கடந்து சென்று பொலிவிய மண்ணில் வைத்துக் கொலை செய்த போது தென் அமெரிக்கப் பிராந்தியமே கொலம்பிய நாட்டுக்கு எதிராக அணி திரண்டதைப் பார்க்கவில்லையா? அதற்கு என்ன காரணம்?
புலிகளின் உண்மையான அரசியல் வங்குரோத்தை மூடிமறைத்தக் கொண்டு ஈழத்தமிழர்களின் போராட்டம் தோற்றுப் போனதற்கு ஏதோ வல்லரசுகளின் சதி என்றும் பிராந்திய நலன்சார்ந்த அரசியல் பொருளாதார காரணிகளே காரணம் என்றும் இன்றும் கூட உண்மையை மறைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்லி இந்திய மண்ணில் கால் பதித்த போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் அவர்களுக்கு பின்னால் நின்றவர்களும் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டு தான் அந்த மண்ணுக்கு அறிமுகமானார்கள். அன்றே எம்முடைய அரசியல் உலகுக்கு தெரியவந்துவிட்டது. அன்றே எமது உரிமைப் போர் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டது. அத்துடன் ஈழத்தமிழர்களுடைய அரசியல் வங்குரோத்து வெளிச்சத்திற்கு வந்தது. அன்றிலிருந்து வெள்ளை முள்ளிவாய்க்கால் வரை ஒன்றா இரண்டா எத்தனை சகோதரப் படுகொலைகளும் துரோகங்களும் இந்தப் போராட்டத்தில் நடந்தேறின. எதிரியால் அல்லவே.
இலட்சக்கணக்காண இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ள இந்திய மண்ணில் இன்றும் எத்தனை போராடுகின்ற அமைப்புகள் ஆயுதப் போரட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழிக்க முடியாத இந்திய அரசும் அந்த இராணுவ இயந்திரமும் கடல் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்து விட்டதாம். இது இந்திய பலத்தைக் காட்டுகிறதா? அல்லது புலிகளின் அரசியல் வங்குரோத்தைக் காட்டுகிறதா?
கொலை செய்வதும் பணம் சேர்ப்பதும் தான் போராட்டம் என்றும் உண்மையான போராட்டத்தை வியாபார மயப்படுத்தி (பல போராளிகளைப் பலிகொடுத்து நிலங்களைப் பிடிப்பதும். பின் தேர்தல் காலங்களில் கொழும்பு பண மூட்டைக்காக பிடித்த நிலத்தை இராணுவத்திடம் விட்டுக்கொடுப்பதும் நாம் அறியாத ஒன்றல்ல.) கடந்த 30 ஆண்டுகாலம் தர்பார் ஆட்சி நடத்திய புலிகளையும் அவர்கள் செய்து முடித்த விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தின் உண்மையான காரணங்களையும் கண்டறியாது மீண்டும் மீண்டும் ஆய்வாளர் அரசியல் நிபுணர் என்று ஏதேதோ பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களையும் இந்த ஊடகங்களையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தவது உண்மையாக மக்களை நேசிப்பவர்களுடைய கடமையாகும்.
எந்தவொரு நாடும் குறிப்பாக வல்லரசுகள் தமது நலன்சார்ந்த அரசியலையே முன்னெடுக்கிறார்கள் என்பதை அறிய அரசியல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜோர்ஜியா மீது ரஸ்யா படையெடுத்ததும் பின் சவுத் ஒசெற்றியா அப்ஹாசியாவை தனி நாடாக அங்கிகரித்ததும் அந்த இரு நாட்டு மக்களின் நலன்சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மேற்கு நாடுகள் கொசோவோவை தனிநாடாக அங்கிகரிக்க முடிவெடுக்கப்பட்டதும் கொசோவோவின் நலன்சார்ந்து அல்ல. (ஆனால் அங்கு சவுத் ஒசெற்றியா, அப்ஹாசியா, கொசோவோ மக்கள் நலன் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.)
சீனாவினுடைய பொருளாதார விஸ்தரிப்பு வாதம் இந்திய பொருளாதாரத்தில் ஆளுமையுள்ள அமெரிக்காவையே விழுங்கிவிடுவது போன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திரத்தில் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று ஆய்வுசெய்வது சரியான ரூமச். இலங்கையிலே உருவாகி உள்ள சீனாவினுடைய ஆளுமை இந்திய நலனுக்கு ஆபத்தாக இருந்தால் அதை இந்தியாவும் றோவும் பார்த்துக் கொள்ளட்டும். தங்களது சொந்த மக்களையும் புலிகளின் தலைமையையும் ஆய்வு செய்தே கொன்றொழித்த இந்த ஐபிசி ஆய்வாளர்கள் இந்தியாவிற்காக ஆய்வு செய்து இந்தியாவை அழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. புலிகளின் புலனாய்வு அளவிற்கு றோவை குறைத்து மதிப்பிட முடியாது. நடந்த சம்பவங்கள் அப்படி இருக்கிறது.
எத்தினை பெரிய தியாகங்களைச் செய்து வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டத்தை காப்பாற்ற வக்கில்லாத புலிகளுக்கும் புலி ஆய்வாளர்களுக்கும் இந்திய நலன்களை எப்படிக் காப்பாற்றுவது என்று ராஜதந்திரம் தெரித்திருக்கிறது என்றால் அது எவ்வளவு நகைப்பிற்குரியது. இதற்குள் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஐபிசியில் அட்வைஸ் வேறு. புலிகளிடமும் இந்த ஆய்வாளர்களிடமும் ஒரு தடவை இந்தியாவை ஆட்சி செய்யுங்கள் என்று ஆட்சியை ஒப்படைத்திருந்தால் ஆறு மாதத்தில் அந்த மண்ணில் சிறுபான்மை இனங்களே இருந்திராது. அத்தனை சிறுபான்மையினரும் சீனாவில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பார்கள். முஸ்லிம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கும் பங்களாதேசுக்கும் விரட்டி அடிக்கப்பட்டு இருப்பார்கள். இதற்குள் ராஜதந்திர ஆய்வு செய்கிறார்கள்.
அமெரிக்கா சத்தம் போடாமல் இருக்கவே ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய புலிகளும் அவர்களின் பக்த கோடிகளும் ஒரு பேச்சுக்கு தமிழீழத்துக்கு நாங்கள் ஆதரவு என்று யாராவது ஒரு அமெரிக்க அதிகாரி சொல்லியிருந்தாலே அமெரிக்கா போலந்திலும் செக்குடியரசிலும் நிறுவவுள்ள ஏவுகணை எதிர்ப்பு ராடர்கருவிகளை காங்கேசந்துறையில் பூட்டி இந்தியாவை மட்டுமல்ல அதற்கு மேலேயள்ள சீனாவையும் ஒரு கை பாருங்கள் என்று வெள்ளைத் தாளில் கையொப்பமிட்டு கொடுத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுடைய ஆய்வும் ஆவியும்.