Multiple Page/Post

மூன்றாவது முறையாக செரீனா சாம்பியன்

shereena.jpgவிம்பிள் டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது. வில்லியம்ஸ் சகோதரிகளான அமெரிக்காவின் செரீனாவும், வீனஸும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் 5 முறை சாம்பியனான வீனஸ் தனது தாக்குதலை தொடங்கினார். முதல் செட்டில் இருவரின் செயல்பாடும் சம பலத்துடன் தெரிந்தது. அதாவது தாங்கள் “செர்வ்’ செய்யும் கேமை மட்டுமே வென்றபடி வந்தனர். இதனால் கடைசி வரை (66) சமநிலை நீடித்தது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் செரீனா, வீனஸின் சவாலை முறியடித்து, அந்த செட்டை தனதாக்கினார்.  ஆனால் 2ஆவது செட்டில் கடுமையான போட்டி இல்லை. இந்த செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுக்குள் கொண்டு வந்த செரீனா, அதனை எளிதாக வென்று விம்பிள்டன் பட்டத்துக்கும் சொந்தக்காரியானார்.

மொத்தம் 12 “ஏஸ்’ சர்வீஸ்களை வீசியது அவரது இலக்கை சுலபமாக்கியது. 85 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் செரீனா 7-6, (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, விம்பிள்டன் பட்டத்தை 3 ஆவது முறையாக கைப்பற்றினார். முன்னதாக 2002, 2003 ஆம் ஆண்டுகளிலும் அவர் விம்பிள்டனை முகர்ந்து உள்ளார்.

ஆனால், இந்த மூன்று முறையும் அவர் தனது சகோதரி வீனஸையே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் இது செரீனாவின் 11 ஆவது கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன் 3, அவுஸ்திரேலிய ஓபன் 4, அமெரிக்க ஓபன் 3, பிரெஞ்ச் ஓபன் 1) பட்டமாக அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற செரீனாவுக்கு ரூபா 6 கோடியே 75 இலட்சமும், 2 ஆவது இடம் பிடித்த வீனஸுக்கு ரூபா 3 கோடியே 37 இலட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெற்ற வெற்றியை செரீனா மேலும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார். இது தவிர, வில்லியம்ஸ் சகோதரிகள் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

“ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்த அரசு 320 கோடி ரூபா ஒதுக்கு’

ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் 320 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும் வேட்பாளருமான எம்.ஏ.புத்ததாச தெரிவித்தார்.
ஊவா மாகாணத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;  இன்றைய அரசு நான்கில் மூன்று பங்கு பலத்தைப் பெற்று ஊவாவின் ஆட்சியைக் கைப்பற்றும்.

ஐ.ம.சு.கூ. ஊவா மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அதிக நிதியினை ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அதேவேளை நாட்டை கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டுள்ளது. எனவே இவ்விரு காரணங்களால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது முறையாகவும் ஊவா மாகாண சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே பெறும் என்பதில் ஐயமில்லை. பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ. தலைமை வேட்பாளராக நானும், மொனராகலை தலைமை வேட்பாளராக சசீந்திர ராஜபக்ஷவும் போட்டியிடுவதாலும் நாட்டின் யுத்த வெற்றியை கருத்திற் கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஐ.ம.சு.கூ.வுக்கு ஆதரவாக வாக்களிக்க இணைந்துள்ளனர்.

இன்று ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை நவீனப்படுத்தும் முகமாக ரூபா 320 கோடியினை அரசு ஒதுக்கியுள்ளது. இது தவிரவும் பதுளை பெரியாஸ்பத்திரியினை முழுமையான வைத்திய உபகரணங்கள் வழங்கி அதனை கொழும்பு வைத்தியசாலையின் தரத்திற்குக் கொண்டு வந்தால் இங்குள்ள 15 இலட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

அதுமாத்திரமின்றி கொழும்பில் இருந்து ஊவா மாகாணத்துக்கு, ஊவா மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு மிக குறுகிய நேரத்தில் செல்லும் நீண்ட வீதிகளை செப்பனிட்டுள்ளது. இங்குள்ள தோட்ட வீதிகள், கிராமிய வீதிகள் போன்றவை மகநெகும, கமதிரிய வேலைத்திட்டத்தினூடாக மகிந்த சிந்தனையின் அடிப்படையில் கொங்கிரீட் இடப்பட்டுள்ளது.

ஐ.தே.கட்சியின் பிரபல பிரதேச சபை உறுப்பினர்கள் அறுவர் உட்பட 6,000 பேர் இணைந்து ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிக்கவுள்ளனர். இதனால் ஜே.வி.பி. மற்றும் தமிழ், முஸ்லிம் பெயர்களைத் தாங்கி வரும் கட்சிகளிலிருந்து ஒரு உறுப்பினராவது ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகுவது சந்தேகமே. இவற்றினை ஊவாவில் வாழும் மக்கள் நன்கு புரிந்துள்ளனர் என்றனர்.

சப்ரகமுவ ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமனம்

sabaragamuwa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷவினால் சப்ரகமுவ மாகாண ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ் ஆளுனராக இருந்த மொஹான் சாலிய எல்லாவல உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

வவுனியா நலன்புரி முகாம்களில் உளவள ஆலோசனைச் சேவை

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கல்வியமைச்சின் இரண்டாம் கட்ட உளவள ஆலோசனைச் சேவை செயற்திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தில் முதலாம் கட்டம் கடந்த மே மாதம் திருகோணமலை மாவட்ட நலன்புரி நிலையங்களில் நடைபெற்றன.

யுத்தச் சூழலிலிருந்து மீண்டும் வந்துள்ள மக்களின் மனோநிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டே இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் செயற்திட்டத்திற்கு நாட்டின் அரச பாடசாலைகளில் உளவள ஆலோசனைச் சேவையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும் ஆசிரியர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு செல்லவுள்ளனர்.

முதலீட்டுச்சபை கிளை யாழ்நகரில் திறக்கப்படும்

jaffna.jpgயாழ்.  மாவட்டத்தில் இலங்கை முதலீட்டுச்சபை பணியகக்கிளை நிறுவப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் நிர்வாக நிறைவேற்றுப் பணிப்பாளர் டபிள்யூ.பியசேன தெரிவித்துள்ளார். யாழ்.செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் முதலீட்டுச் சபையின் தொழில்நுட்ப நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.பி.எல்.டி.சில்வா, தலைமைச் செயலகப் பணிப்பாளர் திருமதி ரேணுகா வீரக்கோன், சிவாணி பெஞ்ஜமின் ஆகியோரும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷம் கலந்துகொண்டனர்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் சர்வதேசப் பாடசாலைகள், தனியார் வைத்தியசாலைகள், மருத்துவக் கல்லூரி, ஹோட்டல்கள், தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு முதலீட்டுச்சபை அங்கீகாரம் வழங்கவுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 300 தொன் நிவாரண பொருள் – குவைத் அரசு அனுப்பிவைப்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்காக குவைத் அரசாங்கம் 300 தொன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குவைத் நாட்டுக்கான பிரதிநிதி இந்நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

குவைத் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்களுள் 4 ஆயிரம் கூடாரங்கள், 4 ஆயிரம் போர்வைகள், 4 ஆயிரம் உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமயலறை உபகரணங்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிவாரணப் பொருட்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக இலங்கை வந்துள்ள அந்நாட்டுப் பிரதிநிதியினால் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்நகரில் இருநாள் நடமாடும் சேவை அமைச்சுகள், திணைக்களங்கள் பங்கேற்கும்

jaffna_town.jpgநீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, இரு நடமாடும் சேவைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.  கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்கட்டியெழுப்பும் செயற்திட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை நல்லூர் திவ்விய ஜீவன மண்டபத்திலும், யாழ்.பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

இரு நடமாடும் சேவையின் போது விசேட சட்ட ரீதியான பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்களையும், தேசிய அடையாள அட்டைகள் பெறுவதற்கான நடவடிக்கைகளும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான முறைப்பாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழல், மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நடமாடும் சேவையில், நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கே.கம்லத் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச மற்றும் பதிவாளர் நாயகம் மற்றும் உதவிப் பதிவாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இச் சேவையில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, ஆட்பதிவு திணைக்களம், இலஞ்சம், ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு, மாகாண காணிகள், பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, மத்தியஸ்த சபை, மீன் பிடித்திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் போன்ற திணைக்களங்களும், அமைச்சுகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

இவ்வருடத்தின் 2வது சந்திரகிரகணம் இன்று – சூரிய கிரகணம் 22இல்

இந்த வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று 6ம் திகதி தோன்றும் என்று நவீன தொழில்நுட்ப வியலாளர்களுக்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2.03 மணிக்கு ஆரம்பமாகும் இச்சந்திர கிரகணம் மாலை 4.14 மணி வரை இருக்கும். இது பகல் வேளையில் இடம்பெறுவதால் இக்கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் எதிர்வரும் 22ம் திகதி இலங்கை நேரப்படி சூரிய உதயம் முதல் காலை 7.12 வரையும் சூரியக் கிரகணம் ஏற்படவிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் இவ்வருடத்தில் மேலும் இரண்டு சந்திர கிரணங்கள் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் சீன இந்திய உறவுகள் ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே

18rohitha_bogollagama_.jpgசீனாவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்பால் இந்தியாவுடனான தனித்துவமான உறவுகளுக்குத் தடையில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சீனா,  இந்தியா மற்றும் இலங்கை ஆகிய  3 நாடுகளுக்கும் இடையிலான உறவு சாதகமான முறையில் இருக்கின்றது,  ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே இந்த இரு நாடுகளுடமான இலங்கையின் உறவாகும். மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார முதலீட்டை அதிகரிக்கவேண்டும்.

இலங்கையுடன் ஏற்கனவே துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் கேந்திர உறவுகளை சீனா மேலும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம அழைப்பு விடுத்தார்.
 
கேந்திர ரீதியிலும்,  பொருளாதார ரீதியிலும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு விரிவடைந்திருக்கும் நிலையில்,  அமைச்சர் ரோஹித்த போகல்லாகம நான்கு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றிருக்கிறார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 24 கோடி ரூபா கிடைத்தது

schoolgirls-sri-lanka.jpgவடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்காக அரசு 240.02 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.  யாழ். அரச அதிபர் மாவட்டச் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச அதிபர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக அரசாங்கம் 240.02 மில்லியன் ரூபாவை ஒடுக்கியுள்ளது.

இதில் யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள் கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 45 மில்லியன் ரூபாவும் யாழ். பல்கலைக்ககழகத்திற்கு 43 மில்லியன் ரூபாவும் இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளுக்கும் 36.42 மில்லியன் ரூபாவும் கைதடி சித்த வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மற்றும் வடமராட்சி வலயங்களில் தலா 6 பாடசாலைகளும் வலிகாமம் வலயத்தில் 4 பாடசாலைகளும் தென்மராட்சி வலயத்தில் 2 பாடசாலைகளும் தீவக வலயத்தில் ஒரு பாடசாலையும் புனரமைக்கப்படவுள்ளன.  இப் பாடசாலைக் கட்டிட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிதி வசதி இன்மையால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.அதனை முன்னெடுக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மீசாலைவரணி வீதி,புங்குடுதீவு வீதி, சங்கரத்தை குளக்கட்டு வீதி, கெற்பெலிஉசன் வீதி, சுழிபுரம் பறாளாய் வீதி, காரைநகர் பாலாவோடை ஊரி வீதி, கச்சாய்கெற்பெலி வீதி,ஏழாலை கட்டுவன் வீதி, கோண்டாவில் இருபாலை வீதி மற்றும் அல்லைப்பிட்டி வீதி போன்றன புனரமைக்கப்படவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பொது உள்ளக விளையாட்டு அரங்குகளை விருத்தி செய்தல் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்தல் போன்றன மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளிலும் 70 பேருந்துகள் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கைதடி சித்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் அங்கு மூன்று விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

இவ் வேலைகள் அனைத்தும் மாவட்டச் செயலகத்தின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படவுள்ளனவென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.