நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, இரு நடமாடும் சேவைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்கட்டியெழுப்பும் செயற்திட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை நல்லூர் திவ்விய ஜீவன மண்டபத்திலும், யாழ்.பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
இரு நடமாடும் சேவையின் போது விசேட சட்ட ரீதியான பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்களையும், தேசிய அடையாள அட்டைகள் பெறுவதற்கான நடவடிக்கைகளும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான முறைப்பாடுகள், இலஞ்சம் மற்றும் ஊழல், மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நடமாடும் சேவையில், நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கே.கம்லத் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச மற்றும் பதிவாளர் நாயகம் மற்றும் உதவிப் பதிவாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இச் சேவையில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, ஆட்பதிவு திணைக்களம், இலஞ்சம், ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு, மாகாண காணிகள், பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, மத்தியஸ்த சபை, மீன் பிடித்திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் போன்ற திணைக்களங்களும், அமைச்சுகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.